Search This Blog

18.12.08

பீடை மாதமான மார்கழியில் நடந்த திருமணத்தில் கலைஞர் அறிவுரை



குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் சூட்டுங்கள்! திராவிட இயக்கம் தமிழ் வாழ - வளர எடுத்த முயற்சிகள் சாதாரணமானவைகள் அல்ல!

பேராசிரியர் பெ.ஜெகதீசன் இல்ல மணவிழாவில் முதல்வர் கலைஞர் உரை




மாநில திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் பெ.ஜெகதீசன் இல்ல மணவிழாவை நடத்திவைத்து உரையாற்றிய முதல்வர் கலைஞர் அவர்கள் "தமிழ் வாழ - வளர திராவிட இயக்கம் எடுத்த முயற்சிகள் சாதாரணமானவைகள் அல்ல. எனவே குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது தமிழிலேயே பெயர் சூட்டுங்கள்’’ என்று கூறினார்.

நேற்று சென்னை - அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற மாநில திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் பெ.ஜெகதீசன் இல்ல மணவிழாவில் முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை :

இன்றைய தினம் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தினுடைய முன்னாள் துணை வேந்தரும், தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினருமான பேராசிரியர் ஜெகதீசன், கல்லூரி கல்வி இணை இயக்குநர் பேராசிரியர் திருமதி.தமிழ்க்கொடி ஆகியோரது மகன் செல்வன் கதிரவனுக்கும், திரு.பாலச்சந்திரன்-திருமதி லலிதா பாலச்சந்திரன் ஆகியோரது மகள் செல்வி.கிருஷ்ணகுமாரி என்கின்ற ஜனனிக்கும் நிறைவேறியுள்ள இந்த இனிய திருமண விழாவில் தலைமையேற்று மணமக்களை வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.

இந்தத் திருமணம் நடைபெறுகின்ற மாதத்தைப் பற்றி நம்முடைய நாகநாதன் தொடங்கி பேராசிரியர் வரையிலே குறிப்பிட்டார்கள் - பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவே; - "மாதங்களில் மார்கழியும் நானே" என்று சொன்னதாக ஒரு வாசகம் இடம் பெற்றிருக்கின்றது. எதை நல்ல மாதம் அல்ல - பீடை மாதம் என்று புராணிகர்கள் வர்ணிக்கிறார்களோ, அதே புராணிகர்கள் ஏற்றுக்கொண்ட கிருஷ்ணபரமாத்மா, ‘மாதங்களில் மார்கழியும் நான்தான்’ என்று சொல்லி மார்கழியோடு தன்னை ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை புராணங்கள் சொல்கின்றன.

ஒருவேளை நம்முடைய ஜெகதீசன் அவர்கள் வேண்டுமென்றே இந்த மாதத்தில்தான் திருமணத்தை வைக்க வேண்டும் என்று எண்ணினாரோ - அல்லது ஒருவேளை என்னிடத்திலே கிடைத்த தேதிதான் இந்த மாதத்திலே கிடைத்ததோ எனக்குத் தெரியாது.
எப்படியோ மணவிழா மிகச்சிறப்பாக நம்முடைய நண்பர் ஜெகதீசன் அவர்கள் கருதியவாறு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சுயமரியாதைத் திருமணங்கள் பல்லாயிரக்கணக்கில்
நடைபெற்றுள்ளன


இதுபோன்ற திருமணங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; நூற்றுக்கணக்கான திருமணங்கள் இந்த மண்டபத்திலே நடைபெற்றிருக்கின்றன. மாநிலத்தில் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைக்கத் தொடங்கிய அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவ்வளவு திருமணங்கள் நடைபெற்று, அந்தத் திருமணங்களுக்கெல்லாம் இங்கே வீற்றிருக்கின்ற உங்களிலே பலர் வாழ்த்த வந்திருக்கிறீர்கள் - அந்தத் திருமணங்கள் நடைபெற்ற செய்தியை ஏடுகள் மூலமாக அறிந்திருக்கின்றீர்கள் - அந்தத் திருமணங்கள் எல்லாம் சுயமரியாதைத் திருமணங்களாக நடைபெற்றன என்ற தகவலையும் பத்திரிகைகள் வாயிலாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

ஆனாலும்கூட, இவ்வளவு ஆயிரம் திருமணங்கள், இத்தனை அறிஞர் பெருமக்கள், பெரியாரைப் போன்ற சீர்திருத்தவாதிகள், பகுத்தறிவுவாதிகள், நம்முடைய பேராசிரியரைப் போன்ற அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு நடத்திய இந்தத் திருமணங்கள் நல்ல முறையிலே நடைபெற்றன என்பதும், அந்த வகையில் திருமணம் புரிந்துகொண்ட மணமக்கள் நன்றாகத்தான் வாழ்கிறார்கள் என்பதை அனுபவரீதியாக தெரிந்து கொண்ட பின்னரும்கூட, இன்னும் பலர் நம்முடைய சமுதாயத்தில் இந்தத் திருமண முறையைக் கண்டு நடுங்குகிறார்கள் - சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறார்கள் - ஒருவேளை இத்தகைய திருமணத்தை கருணாநிதியை அழைத்து, பேராசிரியரை அழைத்து நடத்தினால் குடும்பத்திற்கு ஆகுமா? அது நல்லதா? என்கின்ற இந்தக் கேள்விகளுக்கு இடம் கொடுத்து, அதுமாத்திர மல்லாமல் தன்னுடைய உற்றார் உறவினர் - சம்மதிப் பார்களா? என்ற ஐயப்பாட்டிற்கு இடம்கொடுத்து, இவைகளை தவிர்த்து வருகின்ற தமிழ் மக்களும் தமிழ்நாட்டிலே உண்டு.

எத்தனை ஆண்டுகால உழைப்பு, எத்தனை ஆண்டுகால சுயமரியாதைப் பிரச்சாரம், எத்தனை ஆண்டுகால அனுபவம் - இதுபோன்ற திருமணங்கள் நடத்திக் கொண்டவர்கள் யாரும் கெட்டுப் போகவில்லை. நன்றாகத்தான் இருக்கின்றார்கள் என்கின்ற அந்தச் சான்றுகள் கிடைத்த பிறகும்கூட, அந்த உத்தரவாதங்கள் கிடைத்த பிறகும்கூட இன்னும் சந்தேகத்தோடு - என்ன ஆகுமோ - ஏதாகுமோ - இது கடவுளுக்கு ஆகுமோ, ஆகாதோ - நம்முடைய குலதெய்வம் கோபித்துக் கொள்ளுமோ என்றெல்லாம் எண்ணி இந்தத் திருமண முறையைத் தவிர்ப்பவர்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

அதனால்தான் இதுபோன்ற திருமணங்களில் மணமக்களை வாழ்த்துகிற நாங்கள் வாழ்த்துவதோடு அமையாமல், வேறுசில கருத்துக்களையும் - பழங்காலத்திலே தமிழகத்திலே தமிழர்கள் எவ்வாறு தங்களுடைய திருமண விழாக்களை நடத்திக் கொண்டார்கள் என்பதையும், "புராணிக முறைப்படி திருமணம் நடந்தால்தான் மணமக்கள் வாழ்வார்கள் - இல்லாவிட்டால் அவர்களுடைய வாழ்க்கையிலே சங்கடங்கள் ஏற்படும்" என்பது எவ்வளவு தவறான வாதம் என்பதையும் எடுத்துக் கூறுகின்ற வகையில் பிரச்சாரம் நடைபெறுவதற்குக் காரணமே, இங்கு வந்திருக்கிற உங்களிலே ஒரு நூறு பேரைப் பொறுக்கி எடுத்தால் அவர்கள்தான் பழுத்த பகுத்தறிவுவாதிகளாக - சுத்த சுயமரியாதைக்காரர்களாக - நம்முடைய இல்லத்திலும், நம்முடைய பிள்ளைகளுக்கு, பெண்களுக்கு இதைப்போலத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணி, அதை நிறைவேற்றுபவர்களாக இருக்க முடியும். மற்றவர்கள் - நான் உண்மையிலேயே சொல்லுகின்றேன் - ஏன் நமக்கு வம்பு - நம்முடைய முன்னோர்கள் செய்ததையே நாமும் செய்துவிட்டுப் போவோம் என்று கருதுகிற நிலையிலே இருப்பவர்களை நான் நன்றாக அறிவேன்.

இளைய சமுதாயம் எப்படி திருந்த முடியும்?

இன்னும்கூட ஒன்று சொல்லுகின்றேன் - வெளிப்படையாகவே சொல்லு கின்றேன் - சுயமரியாதை இயக்கத்திலே ஊறித் திளைத்து - திராவிட இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக் கொண்டு, உழைத்து, பணியாற்றி, பதவிகளைக்கூட பெற்று - திராவிட இயக்கத்தால் கிடைத்த பதவி, கிடைத்த ஆதாயம் இது என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள், சொல்லிக் கொண்டிருப்பவர்கள்கூட தங்களுடைய வீட்டிலே திருமணங்கள் என்றால், எனக்கே கொண்டுவந்து திருமணப் பத்திரிகை கொடுக்கிறார்கள் - பிள்ளையார் படம் போட்ட திருமணப் பத்திரிகை - திருப்பதி வெங்கடாசலபதி படம் போட்ட திருமணப் பத்திரிகை இவைகளைக் கொடுத்துவிட்டு, பெண் வீட்டார் கேட்கவில்லை, மறுக்கிறார்கள், நான் என்ன செய்வது? மன்னித்துக் கொள்ளுங்கள் என்று என்னிடத்திலேயே மன்னிப்பு கேட்பவர்கள் பலர் உண்டு. இவையெல்லாம் தேவையில்லாத பயம்; புரிந்துகொள்ளாத நிலை.

இந்த நிலையிலே இருந்து திராவிட இயக்கத்தார் என்று தங்களைச் சொல்லிக் கொள்கின்றவர்கள் - பெரியாருடைய பகுத்தறிவுப் பாதையிலே நடைபோடத் துணிந்து, அந்தப் பாதையிலே நடந்து கொண்டிருப்பவர்கள், அண்ணாவினுடைய அறிவு வழியைப் பின்பற்றியவர்கள் - அவர்களே தங்களைச் சில நேரங்களிலே இதுபோல இழந்துவிடுகிறார்கள் என்றால் - எதிர்காலத்திலே இளைய சமுதாயம் எப்படித் திருந்த முடியும்? எப்படி முன்போல பகுத்தறிவு பெற்றவர்களாக, அறிவு தழைப்பவர்களாக விளங்க முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இப்போதேகூட, வருத்தத்தோடு நானும் பேராசிரியரும் பேசிக் கொள்வதுண்டு - இந்த இயக்கம் தொடங்கியபிறகு, தமிழ் வாழ, தமிழ் பரவிட, தமிழ் மொழிக்கு ஆக்கம் கொழிக்க, இந்த இயக்கத்தின் சார்பாக எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள் சாதாரணமானவைகள் அல்ல.
நம்முடைய வீட்டிலே பிறக்கின்ற குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு, அத்தகைய பெயர்களைச் சூட்டுகிறோம்.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு வடமொழி- ஆங்கிலப்
பெயர் வைப்பதற்கு பஞ்சமில்லை


இங்கே பேராசிரியர் ஜெகதீசன் அவர்களுடைய செல்வன்கூட ‘கதிரவன்’ என்கின்ற பெயருக்குரிய வராகத்தான் அழைப்பிதழிலே போடப்பட்டிருக்கிறது. ஆனால், அடுத்தத் தலைமுறை என்ன ஆகுமோ என்ற கவலை என் போன்றாருக்கு, நம்முடைய பேராசிரியர் போன்றவர்களுக்கு இப்பொழுதே ஏற்படுவதற்குக் காரணம் - அதற்குச் சில சான்றுகள் இருக்கின்றன.

இன்றைக்கு கதிரவன் என்கின்ற பெயர் இந்தத் தலைமுறையில் தமிழ்ப் பெயராக வைக்கிறோம். ஆனால், அடுத்து கதிரவனுக்குப் பிறக்கின்ற குழந்தை தமிழ்ப் பெயரோடு விளங்குமா? வீட்டிலே உள்ளவர்கள் வைத்து விட்டார்கள், நான் என்ன செய்வது? ஆண்குழந்தையாக இருந்தால் அதற்கு வடமொழிப் பெயர், பெண்குழந்தையாக இருந்தாலும் அதற்கு ஒரு ஆங்கிலப் பெயர் என்று அப்படி பெயர்களை வைப்பதற்கு தமிழ்நாட்டிலே இன்றைக்கு பஞ்சம் இல்லை. அப்படிப் பல பெயர்களை நான் பார்க்கிறேன் - வருந்துகிறேன்.

தமிழிலே பெயர் வை உன்னுடைய பிள்ளைக்கு - தமிழ் மொழியைத்தவிர வேறு மொழியில் பெயர் வைக்காதே என்று அறுதியிட்டு உறுதியோடு மேடைக்கு மேடை முழங்கியவர் நம்முடைய முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள். ஆனால், அவருடைய இல்லத்தில் அவருடைய பேத்திக்குப் பெயர் ஜெயஸ்ரீ தான். நான் முத்தமிழ்க் காவலர் விசுவநாதன் அவர்களுடைய தமிழ்ப் பற்றை, தமிழ் ஆர்வத்தை, தமிழர்களுக்காக அவர் சிறை சென்றதை குறைத்து மதிப்பிட மாட்டேன். ஆனால் அடுத்த தலைமுறை வரும்போது ஜெயஸ்ரீயாக மாறி விடுகிறதே; இந்த மாற்றம் எங்கே போய் நிற்கும்? இப்போதே ஜெயஸ்ரீ என்றால், அதற்கடுத்த தலைமுறை எந்தப் பெயரில் வரும் என்பதையெல்லாம் தயவுசெய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இப்படி சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தால், பகுத்தறிவு இயக்கத்தின் தாக்கத்தால், தமிழ் இயக்கத்தின் தாக்கத்தால் உருவான இந்தப் பெயர்கள் - நம்முடைய காலத்திலேயே, நம்முடைய கண்ணுக்கு நேராகவே மாறுகின்றன; மாற்றப்படுகின்றன என்றால், எதிர்காலம் என்ன ஆகுமோ என்கின்ற கவலை எங்களுக்கெல்லாம் இருக்கின்றது.

ஆகவே, அந்தக் கவலையைப் போக்கும் வகையில் கதிரவனும், ஜனனியும் எத்தனை குழந்தை பெறப் போகிறார்கள் என்று நம்முடைய வீராசாமி கவலைப்பட்டார். அவர்கள் எத்தனை குழந்தைகளைப் பெற்றாலும் சரி, அத்தனை குழந்தைகளுக்கும் தமிழிலே பெயர் வையுங்கள் என்று மாத்திரம் நான் கேட்டுக்கொண்டு; ஒரு பத்து குழந்தை பிறந்து பத்துக்கும் தமிழ்ப் பெயர்கள் என்றால் - பத்து குழந்தைகள் மூலமாக தமிழ் பரவட்டும்! (கைதட்டல்) என்று நான் அவர்களை வாழ்த்தி நம்முடைய ஜெகதீசன் அவர்கள் எவ்வளவு அடக்கமானவர், அன்பானவர், பண்பானவர், திறமை படைத்தவர், அவருடைய தலைமையின் காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலே துணை வேந்தராக இருந்து அவர் ஆற்றிய அரும்பணிகளையெல்லாம் நான் மிகநன்றாக அறிவேன். அவ்வப்போது அவருக்கு அங்கே ஏற்பட்ட சங்கடங்கள், இன்னல்கள், இடையூறுகள் இவைகளை எல்லாம் போக்குவதற்கு என்னால் இயன்ற அளவுக்கு துணை புரிந்திருக்கின்றேன். அவருடைய இல்லத்திலே இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த மங்கல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதில் மிகுந்த பெருமைகொண்டு, வாழ்க மணமக்கள் என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

------------------நன்றி: "முரசொலி" 18-12-2008

0 comments: