Search This Blog

30.12.08

திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் - ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்


பெரியார் - அண்ணா கண்ட அறிவியக்கம்;
கடுகளவும் தடம் மாறாமல் நடந்தாகவேண்டும்
திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் -
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

இதனைச் செயலால் நிரூபித்த கலைஞருக்கு ஆயிரம் வாழ்த்துகள்!

தமிழர் தலைவரின் நெகிழ்ச்சியான பாராட்டுரை


பெரியார், அண்ணா கண்ட இயக்கத்தின் தடம் மாறாமல் நடந்தாகவேண்டும் என்கிற உறுதியை மேற்கொண்டிட, தி.மு. கழகத்தினர்க்கு அறிவுறுத்திய கலைஞர் அவர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

கடந்த 27.12.2008 (மூன்று நாள்களுக்குமுன்) தி.மு. கழகப் பொதுக்குழு சென்னை அறிவாலயத்தில் நடைபெற்று, தலைவராக 10 ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பின்பு, அதன் தலைவரும், திராவிடர் இனத் தலைவரும், திராவிடப் பேரியக்கக் குடும்பத்தின் தலைவருமாக விளங்கிடும் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை தி.மு. கழகத்தின் உடன்பிறப்புகளுக்கு - நிகழ்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகளைப் பிரகடனம் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவுரை - இடித்துரை எல்லாம் அடங்கிய பேருரையாகும்!

கலைஞரின் அறிவுரை

இது அரசியல் இயக்கமாக மாத்திரமல்லாமல், இந்த இயக்கம் சமுதாயப் பேரியக்கமாகவும், இருந்த இயக்கமும், இருக்க வேண்டிய இயக்கமும் - என்று இரண்டு சொற்றொடர்களை நான் இங்கே பயன்படுத்துகிறேன். சமுதாயப் பேரியக்கமாக இருந்த இயக்கம்; இருக்கவேண்டிய இயக்கம் என்று இரண்டு சொற்றொடர்கள். இப்படிச் சொல்வதால், இப்பொழுது சமுதாயப் பேரியக்கமாக இருக்கிற இயக்கமா? என்ற அந்தக் கேள்விக்கு முழுமையாக விடையளிக்க முடியாத நிலை நமக்கிருக்கிறது. ஏனென்றால், இன்னமும் சில பேர், நம்முடைய இயக்கத்திலே உள்ளவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கிளையிலோ அல்லது ஒன்றியத்திலோ அல்லது மாவட்டத்திலோ அல்லது சட்டப் பேரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ இருப்பவர்கள் சுத்த சுயம்பிரகாச சுயமரியாதைக்காரர்களாக, மூட நம்பிக்கையை எதிர்த்து சமுதாயத்திலே புரட்சி செய்யக் கூடியவர்களாக இருக்கிறோமா? என்றால் இல்லை. நாம் அதை வேதனையோடு அல்லது வெட்கத்தோடு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனால்தான், இன்றைக்குச் சில பேருக்கு நம்முடைய இயக்கத்தைப் பற்றி இளக்காரம் தோன்றியிருக்கிறது.

தினமலரின் கணிப்பு

இன்றைக்குக் காலையிலே தினமலர் பத்திரிகையைப் பார்த்தேன். அதிலே, மிகவும் நல்ல நாளில் இன்று தி.மு.க. பொதுக் குழு கூடுகிறது என்று தலைப்பு. 27ஆம் தேதி பல்வேறு வகையில் மிகவும் நல்ல நாள் என ஜோதிடர்கள் கணித்துள்ளார்கள். நாள் முழுவதும் மூல நட்சத்திரம் உள்ளது; சிறப்பு வாய்ந்த அமாவாசை; அனுமான் ஜெயந்தி நாளான இன்று காலை 9.00 மணி முதல் 9.45 மணி வரையில் மகர லக்னம் உள்ளது. இந்த நேரத்திற்குள் எந்தக் காரியத்தைத் துவக்கினாலும் வெற்றி நிச்சயம் என்றிருக்கிறது. நானோ, பேராசிரியரோ, வீராசாமியோ, யாரும் உட்கார்ந்து, எந்த நாளிலே இந்தப் பொதுக் குழுவை வைத்துக் கொள்ளலாம்; இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தை, தேர்தலை நடத்தலாம் என்று பஞ்சாங்கம் பார்த்து இந்தத் தேதியைக் குறிப்பிடவில்லை. எது வசதியான தேதியோ, எந்தத் தேதியிலே இதை நடத்தினால் எல்லோருக்கும் வசதியாக இருக்குமோ அந்தத் தேதியை மட்டும்தான் பார்த்தோம். வேண்டும் என்றே நல்ல நேரம் கடந்து...

ஆனால், தினமலர் பத்திரிகைக்கு இது நல்ல நாள் என்று தோன்றியிருக்கிறது; ஜோதிடர்கள் கணித்துள்ள தேதி என்று தோன்றியிருக்கிறது. நாள் முழுவதும் மூல நட்சத்திரம் என்று தோன்றியிருக்கிறது. சிறப்பு வாய்ந்த அமாவாசை, அனுமார் ஜெயந்தி நாள் இன்று காலை 9.45 மணி வரை மகர லக்னம், இந்த நேரத்திலே எந்தக் காரியத்தைத் துவக்கினாலும் வெற்றி நிச்சயம். நான் வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு அய்ந்து நிமிடங்களுக்கு முன்னால் வந்துவிடுவது வழக்கம். இதைக் காலையிலே படித்துப் பார்த்துவிட்டு, வேண்டுமென்றே 10.15 மணிக்கு வந்தேன். (கைதட்டல்). 9.45 மணி வரையிலே நல்ல நாள். அதிலே நீங்கள் ஒரு காரியத்தைச் செய்தால்தான் நல்லது நடக்கும் என்று ஜோதிடர்கள் சொல்லியிருக்கிற காரணத்தால், அதற்கு மாறாக இன்று 10.15 மணிக்குப் போய்ப் பார்ப்போம் என்று வந்து சேர்ந்தோம். நான் சொல்வதற்குக்காரணம், நான் மாத்திரம் கடைப்பிடிக்கவேண்டும் என்பதற்காக அல்ல, நீங்களும் இதைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று உங்களுக்கெல்லாம் சொல்வதற்காகத்தான். இன்னமும் நாம் சமுதாயத்துறையிலே முன்னேறவேண்டிய அளவிற்கு முன்னேறவில்லை.

காற்றிலே விட்டுவிட்டதால்...

இந்த இயக்கம், திராவிட இயக்கம், தமிழ் இயக்கம், சுயமரியாதை இயக்கம் தோன்றிய அந்தக் காலத்திலேயே நாம் சில விஷயங்களை எவ்வளவு அழுத்தந்திருத்தமாக, பிடிவாதமாக அந்தக் கொள்கைகளைப் பின்பற்றினோம் என்பதையும், நாளாவட்டத்தில் அவைகளையெல்லாம் எப்படி மெல்ல காற்றிலே பறக்க விட்டுவிட்டோம் என்பதையும் நம்மைவிட நன்றாக தினமலர் போன்ற பத்திரிகைகள் அறிந்திருக்கிற காரணத்தால்தான், இப்போது கேலி செய்கின்ற அளவிற்கு நல்ல நாள் பார்த்து இந்தப் பொதுக்குழுத் தேர்தலை தி.மு.கழகம் வைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இதற்கு நாம் இடம் தராமல், பகுத்தறிவு இயக்கமாக நாம் பரிமளித்தவர்கள்; சுயமரியாதை இயக்க மாகச் சுடர் விட்டவர்கள். தந்தை பெரியார் வழியில், அறிஞர் அண்ணா அவர்களுடைய அறிவியக்க வழியில் நடைபோட்டவர்கள். அதிலிருந்து ஓர் அங்குலம்கூட, ஒரு துளிகூட, ஒரு கடுகளவு கூட நாம் தடம் மாறாமல், நடந்தாக வேண்டும் என்ற உறுதியை மேற்கொள்ள வேண்டுமென்று உங்கள் அனைவரையும் இந்த நேரத்திலே நான் கேட்டுக் கொள்கின்றேன்.

பத்தோடு பதினொன்று அல்ல!

திராவிட முன்னேற்றக்கழகம் அரசியல் கட்சி என்றாலும்கூட, அது பத்தோடு பதினொன்று; அத்தோடு இது ஒன்று என்று கூறப்படும் கட்சி அல்ல. திராவிடர் கழகம் என்ற சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் இணைந்து உருவான இயக்கத்தின் கருவில் வளர்ந்து, திராவிடர் கழகத்தின் நிறுவனரான தந்தை பெரியார் என்ற தாயின் மடியில் வளர்ந்த இயக்கம் என்பதால்தான், இடையில் மனக்கசப்புகள் இருந்ததற்குப் பின்னரும், குடும்ப உறவுகள், பாசப்பிணைப்புகள் காரணமாக மீண்டும் ஒருமனதாகி இரட்டைக்குழல்களாக, ஒரு நாணயத் தின் இரண்டு பக்கங்களாக தத்தம் தொண்டினைத் தொய்வின்றித் தொடர முடிகிறது!

அரசியல் பதவிகளைக் குறி வைத்து, கொள்கைகள்பற்றிக் கவலைப்படாமல், இந்த இயக்கத்தில் இருக்க முடியாது - இருக்கக் கூடாது என்பதைத்தான் கலைஞர் அவர்கள் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்!

பார்ப்பன ஏடுகளின் எழுத்துகளைப் புறந்தள்ளி...

ஜாதி உணர்வுக்கு ஆளாவதோ, நெற்றிக்குறிகளைப் போட்டு, பார்ப்பனியப் பண்பாட்டு அடிமைத்தளைகளை விரும்பிப் பூட்டிக்கொண்டு வீதிவலம் வரக்கூடாது என்பதை எடுத்துக்காட்டி, இது பகுத்தறிவுக் கொள்கை உள்ள பெரியார் - அண்ணா கண்ட இயக்கம் ஆகும் என்பதை மிக அருமையாகச் சுட்டியுள்ளார்.

பார்ப்பன ஊடகங்கள், ஏடுகள் பிழைக்க, வயிறு கழுவ ஏதாவது எழுதினால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று செயலால் நிரூபித்த நமது கலைஞருக்கு ஆயிரம் வாழ்த்துகளை அள்ளித் தெளித்து மகிழ்கிறோம்.


-------------- நன்றி: "விடுதலை" 30.12.2008

0 comments: