Search This Blog

29.12.08

பெரியார் ஒரு மாபெரும் புரட்சியாளர். அடிப்படையில் அவர் ஒரு போராளி.




அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம்,
பகுத்தறிவு கருத்துகள் பெரியார் 1927-இல் சொன்னவை
- 1976-இல் அரசியல் சட்டத்தில் இடம் பெற்றது

குப்பம் திராவிடப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் பெருமிதம்


அறிவியல் மனப்பான்மை மனித நேயம் பகுத்தறிவு கருத்துகளை 1927-ஆம் ஆண்டே தந்தை பெரியார் அவர்கள் மக்களிடம் பரப்பினார். பெரியார் வலியுறுத்திய அந்த அடிப்படைக் கடமைகள் கருத்து 1976-ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற்றது என்று தந்தை பெரியாரின் கொள்கைகளை எடுத்துக்கூறி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கமளித்தார்.

குப்பம் (ஆந்திரா) திராவிடப் பல்கலைக் கழகத்தில் 26-12-2008 அன்று நடைபெற்ற பெரியார் சிந்தனைகள் கருத்தரங்கில் கலந்துகொண்டு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

தெலுங்கு மொழியில் தமிழர் தலைவர் வணக்கம்

திராவிடப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கடப்பா ரமணய்யா அவர்களே! தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் விவேகானந்த கோபால் அவர்களே! பல்கலைக்கழகத்தின் டீன் பொறுப்பில் இருக்கும் முனைவர் இராஜேந்திர பிரசாத் அவர்களே! இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து வழங்கி நன்றியுரை ஆற்ற இருக்கும் முனைவர் பூலோகரம்பை அவர்களே! வருகை தந்துள்ள சகோதரர்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எங்களது அன்பான வணக்கங்கள் - வாழ்த்துகள் (அந்தரிக்கு வந்தனம் என தெலுங்கு மொழியிலும் வணக்கத்தினை தெரிவித்தார் தமிழர் தலைவர்).

திராவிட இனத்தில் பல சகோதார மொழிகள் இருந்தாலும், திராவிடர் பண்பாடு மற்றும் இலக்கியங்களைப் போற்றிக் காத்து வருவதில் ஆந்திர மாநிலம் - குறிப்பாக திராவிடப் பல்கலைக் கழகம் அக்கறை காட்டிவரும் நிலை மிகுந்த பாராட்டுக்குரியது.

முதலாவதாக, குப்பத்தில், அமைதியான கிராமச் சூழலில் இந்த திராவிடப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு உழைத்திட்ட தமிழறிஞர் முனைவர் வி.அய். சுப்பிரமணியம் அவர்களை நன்றிப் பெருக்குடன் பாராட்டுகிறோம். இங்கு பணியாற்றும் ஆசிரியர் பெரு மக்களையும், இதர பணியாளர்களையும் போற்றிப் பெருமைப்படுத்துறோம். கிராமத்து மாணவர்களுக்கு அவர்களுடைய ஏழ்மை நிலையில், குறைந்த கல்விக் கட்டணத்தில், அவர்களுக்கு கல்வி அளித்து வரும் திராவிடப் பல்கலைக் கழகத்தினைப் பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

பெரியாரின் மாணவன்

பெரியார் சிந்தனைகள் பற்றிய இந்த கருத்தரங்கில் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டிருக்கும் என்னை பெரியாரின் சீடர் என்று கூறினர். பெரியாரின் மாணவனாகவே என்னை நான் கருதுகிறேன். பெரியார் தனித்துவமானவர். பெரியாரை மக்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. பெரியாரை, அவருடைய லட்சிய நோக்கம் என்னவென்று கேட்ட பொழுது, மற்ற இனங்களைப் போல திராவிட இனமும் மானமும் அறிவும் மிக்கதாக விளங்கவேண்டும் - என்றார்.

பெரியார் சிந்தனைகள் இரட்டை அடிப்படைக் கட்டமைப்பில் அமைந்துள்ளது. ஒன்று சுயமரியாதை; மற்றது பகுத்தறிவு. பகுத்தறிவுச் சிந்தனையினைப் பயன்படுத்தி ஒவ்வொரு மனிதரும் சுயமரியதையுடன் வாழ வேண்டும். அனைத்து மாந்தருக்கும் இந்த அடிப்படை பொருந்த வேண்டும்.

சிந்தனைகள் வெறும் சிந்தனைகளாக இருந்து விடக்கூடாது. எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரது அறிவு ஜீவித்தனம் மக்களுக்குப் பயன்படும் விதத்தில் அமையவில்லை என்றால் - அந்த அறிவுஜீவித்தனம் வீணானதே. அந்த வகையில் பெரியார் முழுமையான பயன்பாட்டு வாதியாக (Utilitarian) தனது சிந்தனைகள் முழுவதும் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் வாழ்ந்தார். ஒரு மனிதருக்கு வயதும் வாழ்நாளும் பெரிதல்ல. அவர் வாழ்நாளில் எப்படி இருந்தார் - சமுதாயத்தின் அடித்தள மக்களை மேம்படுத்த எப்படி பாடுபட்டார் என்பதைப் பொறுத்தே அவரது வாழ்ந்தநாள் மதிப்பீடு அமையும்.

சுயமரியாதை என்றால் என்ன? சுயமரியாதையின் அவசியம், தேவை ஏன்? சுயமரியாதை இல்லாத மனிதன் அடிமை என்றே அழைக்கப்படவேண்டும். ஒரு நாடு அரசியல் விடுதலை பெற்ற நாடு என்றாலே அதன் குடிமக்கள் அனைவரும் சமூக விடுதலை அடைந்த மக்களாக கருதப்பட முடியாது. ஒரு நாட்டின் விடுதலை என்பது அந்நாட்டு மக்களின் விடுதலை என்ற நிலையிலிருந்து மாறுபட்டது. பெரியார் இந்த நோக்கில் சிந்தித்தார்.

சமூக நீதியை காப்பதற்காகவே 1926 ஆம் ஆண்டு காங்கிரசு பேரியக்கத்தினை விட்டு பெரியார் வெளியேறினார். சமூக நீதிக்காகவே வாழ்ந்தார். தான் வாழ்ந்த 95 ஆண்டுகளில் மீண்டும் அவர் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் சமூக நீதிக்காகவே உழைத்தார். சமுதாயத்திற்காகவே உழைத்தார்;. அடித்தள மக்களின் மேம்பாட்டுக்காகவே பாடுபட்டார். தனக்கு அளிக்கப் பட்ட எந்த அரசியல் அதிகாரப் பதவிகளையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. முதலமைச்சர் பதவியினை அவருக்கு அளிக்க அந்நாளில் முன்வந்த பொழுது அதனையும் மறுத்துவிட்டார். தன்னலம் கருதாமல் சமுதாயப் பணியில் ஈடுபட்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

பெரியார் முழுமையாக முறை சார்ந்த கல்வியைப் பெற்றவர் இல்லை. கல்லூரி வாயிலுக்கு கல்வி கற்க அவர் சென்றது கிடையாது. முறையான கல்வியைக் கற்றிருந்தால் அவரது சிந்தனைகள் ஒரே நிலையில் வரன்முறைப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு மாறாக பெரியாரது சிந்தனைகள் பரந்து பட்டு, அனைத்து நிலைகளிலும் சென்றடைந்து தாக்கத்தினை இன்று ஏற்படுத்தி உள்ளது.

பெரியார் ஒரு மாபெரும் புரட்சியாளர். அடிப்படையில் அவர் ஒரு போராளி. சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியதால்தான் பின்னாளில் சமூகப் புரட்சியாளராக அவர் மாற நேர்ந்தது. பெரியாரது புரட்சியாளர் நிலைக்கு அவரது போராட்டக் குணமே அடிப்படையாக அமைந்தது.

இந்தியாவின் குடிமக்கள் பலர் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் பொழுது, நீதி மன்றத்திற்குச் சென்று முறையீடு செய்து, தங்களது உரிமைகளை நிலைநாட்டலாம். அந்த அரசமைப்புச் சட்டத்தில் குடிமக்களின் அடிப்படைக் கடமைகளும் வலியுறுத்தப் பட்டுள்ளன. 1976 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் திருத்தப் பட்டு, குடி மக்களின் அடிப்படைக் கடமைகள் அதில் சேர்க்கப் பட்டன. ஒரு நாட்டின் குடிமக்களின் உரிமைகளும் கடமைகளும் நெருங்கிய தொடர்புடையன. இரண்டும் நடைமுறைப்படுத்தப் பட்டால்தான் நாடு நலம் பெற முடியும்.

குடிமக்களின் அடிப்படைக் கடமைகளைப் பற்றி நீண்ட காலத்திற்கு முன்பே - அரசமைப்புச் சட்டம் திருத்தப்படுவதற்கு முன்பே - தொலை நோக்குடன் சிந்தித்துச் செயல்படுத்தியவர் தந்தை பெரியார். எதையும் கேள்வி கேட்டு, அதன் அடிப் படையில் சிந்தித்து ஏற்றுக் கொள்ள வேண்டியவற்றை ஏற்று, புறந்தள்ள வேண்டியதை மறுத்து சுயமரியாதை உள்ள மக்களாக வாழ வேண்டும் என பெரியார் கருதி உழைத்தார். சுயமரியாதையும், பகுத்தறிவுமே அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரமாகும். அதுவே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் என பெரியார் கருதினார். அதனைப் பரப்ப அரும்பாடுபட்டார்.

அவரது சிந்தனைகள் குடிமக்களின் அடிப்படைக் கடமைகளாக - அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் (Developing Scientific Temper), மனிதநேயம் (Humanism) - எதையும் ஆராய்ந்து அறியும் மனப்பக்குவம் மற்றும் சீர்திருத்தம் (Spirit of enquiry and reform) என அரசமைப்புச் சட்டத்தில் விதி 51-A(H) என்பதாக அரசியலமைப்புச் சட்டத்தில் பின்னாளில் இடம் பெற்றன. 1927ஆம் ஆண்டிலேயே பெரியார் வலியுறுத்திய அடிப்படைக் கடமைகள் 1976 ஆம் ஆண்டில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றன. பொதுமக்கள் கருத்து முன்னோக்கிச் செல்லும், சட்டவடிவம் பின்தொடர்ந்தே வரும” (Public opinion marches ahead; Legal enactment limbs behind) என்னும் புரட்சிகர மொழிக்கு ஏற்ப பெரியாரின் சிந்தனைகள் செயல்வடிவம் பெற்றன. பெரியார் எத்தகைய முற்போக்கு - தொலைநோக்குச் சிந்தனையாளர் - செயல் வித்தகர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

உலகில் மனிதர்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் மனிதநேயம் பெருகவேண்டும். அதற்கு பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துகள் பரவிட வேண்டும்.

மனிதநேயம்

மனிதநேயம் தழைக்க அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும். எதையும் ஆராய்ந்து, கேள்வி கேட்டு ஏற்றுக் கொள்ளும் நிலை உருவாக வேண்டும். கடவுள் பெயரால் செய்யப்படும் செயல்களையும் ஆராயும் மனப்பான்மை, அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகவேண்டும். நமது நிலைக்கு உடன்பாடு இல்லை என்றால் தயக்கமின்றி ஒதுக்கித் தள்ளவேண்டும். கடவுள் சொன்னதான செயல்களை மறுத்தால் நரகம்தான் கிடைக்கும் என்பதை நம்பத் தேவையில்லை. காரணம் - நரகம் என்பதே இல்லை. அறிவியல் மனப்பான்மை கொண்டு சிந்தித்தால் இது விளங்கும். பெரியாரின் சிந்தனைகள் இந்த நிலையினைத்தான் வலியுறுத்துகின்றன. பெரியார் ஒரு சுயசிந்தனையாளர், சுயமாக சிந்தித்து மனிதனை, உண்மையான மனிதனாக மாற்ற - மானமும் அறிவும் உள்ள மனிதனாக மாற்றப் பாடுபட்டார். பள்ளிப் படிப்பை முழுவதுமாக முடிக்காத, கல்லூரியில் படிக்க அதன் வாயிலில்கூட நுழையாத பெரியார் சுயசிந்தனையாளராக பரிணமித்தார். முறையான கல்வி கல்லாமை அவருக்கு ஒரு முடக்கமாக அமையவில்லை. அதுவே அவரை ஒரு சுய சிந்தனையாளராக, பரந்து பட்ட சிந்தனையாளர் என்ற நிலைக்கு மாற்றி - முடங்கிக் கிடந்த மக்களை முன்னேற்று வதில் பயன்பட்டது.

உலகளாவுக்கு சகோதரத்துவம் பேணப் பட வேண்டிய 21 ஆம் நூற்றாண்டுச் சூழலில், பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் நிலை எப்படி தொடரமுடியும்? பிறப்பின் அடிப் படையில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது எப்படி நியாய மாக இருக்க முடியும்? எத்தனையோ சட்ட வடிவங்கள், எத்தனையோ சட்டத் திருத்தங்கள் தீண்டாமை ஒழிப்பிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னும், இன்றும் கிராமங்களில் - தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை பயன்படுத்துவது நடை முறையில் இருந்தே வருகிறது. ஒரு குவளை- பொதுவானது. மற்ற குவளை ஒதுக்கீட்டிற்கு உள்ளது. இதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

மனிதன்தான் வளர்க்கும் நாயை, பூனையை தொட்டுப் பழகலாம்; ஆனால் உடன் இருக்கும் மனிதனை தொட்டால் தீட்டு, பாவம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? பெரியார் இந்த வழியில்தான் சிந்தித்தார். இந்த சமுதாய பேதங்களைக் கண்டு எப்படி ஊமைகளாக இருக்கமுடியும் என போராடினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த அண்ணல் அம்பேத்கர், தான் நடத்திய இதழுக்கு முக் நாயக் ஊமையர்கள் எனும் பொருள்பட பெயர் வைத்தது, சமுதாய நிலையைப் படம் பிடித்துக் காட்டத்தான்.

இந்நிலையினை மாற்றிட, சிந்தனை விடுதலையடைந்து சகோதரத்துவம் பெருக வேண்டும் என்றார் பெரியார். இப்படிப் பட்ட அவரது சிந்தனை சுயமரியாதைக் கொள்கைகளாக மலர்ந்தன. இன்று உலகலாவிய தத்துவங்களாக பரவியுள்ளன. பெரியாரின் சிந்தனைகள் வெகுவாக பரவியுள்ள நிலையின் அடிப்படையில் சென்ற ஆண்டாயிரத்தின் (Millenium) தலை சிறந்த தலைவர்களில் ஒருவர் என பெரியார் அடையாளப்படுத்தப் பட்டுள்ளார். ஒத்த கருத்து உள்ளவர்களால் பாராட்டப்படுவது இயல்பு. ஆனால் மாறுபட்ட கருத்து உள்ள முகாமிலிருந்து அவர் பாராட்டப்பட்டுள்ளார். பெரியார் சமூகப் புரட்சியாளர் என்பதை எற்றுக் கொள்ளாத அணியினர் அவரை அடையாளம் கண்டு சிறந்த தலைவர் என பாராட்டியுள்ளது சிறப்பிற்குரியது.

இந்தியா 2000 (India 2000 Millenium) எனும் தலைப்பில் (1001-2000) பற்றிய செய்திகளை உள்ளடக்கி இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிப்பகத்தார் புத்தகம் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டாயி ரத்தின் தலை சிறந்த 100 இந்தியத் தலைவர்கள் - ஆண்டாயிரம் கண்டவர்கள் (Makers of Millenium) எனும் தலைப்பில் சமூகக் களத்தில், வெற்றி பெற்ற இரண்டு தலைவர்களைக் குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர். மற்றவர் தந்தை பெரியார். சமுதாயத்தில் சவுகரியங்களையும், சலுகைகளையும் பார்ப்பனர்கள் அனுபவித்த நிலை - அதைபற்றி கேள்வி கேட்பாரற்ற நிலை - சூறாவளிக் காற்றாப் புறப்பட்ட -கடவுள் சிலை உடைப்பாளர் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் (1879-1973) மாற்றப்பட்டது என அப்புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும், தற்பொழுதும் நிலவும் தீவிரவாதத் திற்கும், மதவெறிக்கும் அடிப்படைக் காரணங்கள் கடவுள் தத்துவமும், மதங்களும்தான். அண்மையில் மும்பையில் நடந்த தீவிரவாதக் கொடுமை, மனித உயிர்கள் இழப்பினை மனிதநேயம் போற்றும் யாருமே ஏற்றுக் கொள்ளமுடியாது. அனைத்துக் கொடுமைகளும் மதம், கடவுள் அடிப்படையில் உருவானவை. மதவெறி, தீவிரவாதம் அடிப்படையில் மனிதனைப் பிரிக்கின்றன. கடவுள் மனிதனைப் பிரிக்கின்றார். மனிதர்களை ஒற்றுமைப் படுத்த, இணைக்க உலகலாவிய சகோதரத்துவமே தீர்வு. தீவிரவாதத்தை, மதவெறியை உருவாக்கும் கடவுள் தத்துவம் ஒழிக்கப்பட வேண்டும் என பெரியார் விரும்பினார் - செயல்பட்டார். பெரியார் பேணிய சகோதரத்துவம், மனிதநேயம் மதிக்கப்பட வேண்டும். மனிதரிடம் காட்டப்படவேண்டிய பரிவு (Empathetic approach) மாண்படையவேண்டும்.

தேசியம் என்பதைப் பற்றிய பெரியாரது கருத்து சற்று வேறுபாடானது. வெறும் புவியியல் எல்லைகள் சார்ந்தது அல்ல தேசியம். தேசியம் என்பது மனித நேயம் சார்ந்தது. மனிதன் உலகளாவியவன். மனிதநேயம் உலகலாவியது. உலகளாவிய மனித நேயப் பண்பை ஏன் புவியியல் எல்லைகளுக்குள் வரைமுறைப் படுத்த வேண்டும்? அன்னியன் என்ற சொற்றொடர் பெரியாரது சிந்தனையில் புதுவிதமான பொருள் தரும். அன்னியன் என்பது தேசியத்தின் எல்லைகளின் அடிப்படையில் அமைந்தது அல்ல; எல்லையற்ற புரட்சிகரமான சிந்தனைகள் அவை!

மக்களைச் சந்திக்கக்கூடிய - மக்களிடம் நேரடியாகப் பேசக்கூடிய தலைவராக பெரியார் திகழ்ந்தார். நூற்றாண்டு விழா நாயகரான பேரறிஞர் அண்ணா அவர்கள் பெரியார் மக்களைச் சந்தித்து கலந்துறவாடுவதைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்தான் என அழகாகக் குறிப்பிட்டார். அந்த பெரியாரின் வகுப்புகள் மாலை நேரங்களில்தான் மக்களிடம் தொடங்கும்; கிராமங்கள், நகரங்கள் என பலதரப்பட்ட இடங்களிலும் தொடங்கும் என அண்ணா குறிப்பிடுவார். எளிமையாகப் பேசுவார் பெரியார் - மக்களிடம் பேசுபவர் - மக்களின் மனங்களிடம் பேசுவதை விட மக்களின் இதயங்களுடன் உறவாடுபவர்.

அன்னியன் என்பவன் யார்? பெரியார் விளக்க மளிக்கிறார். எனது பக்கத்து வீட்டில் ஒருவன் குடி இருக்கிறான். அவனது தோளைத் தொட்டு நான் பேசியவுடன், உடனே தனது வீட்டிற்குள் சென்று முழுமையாக குளித்துவிட்டு வந்து, நான் தொட்டதால் ஏற்பட்ட தீட்டைக் கழித்துவிட்டதாக் கூறுகிறான். ஆனால் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், பிரிட்டன், அமெரிக்க நாட்டிலிருந்து வரும் வெளிநாட்டவர் என்னைப் பார்த்து, என்னுடன் கைகுலுக்கி நலம் விசாரிக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் வெளிநாட்டவரை விட எனது பக்கத்து வீட்டுக்காரரைத்தான் நான் அன்னியன் என கருத வேண்டியுள்ளது. (அன்னியன் பற்றி பெரியார் கூறியதை சுவைபட தமிழர் தலைவர் எடுத்துக் கூறியவுடன் அதை ஆமோதிக்கும் விதமாக பெரும் மகிழ்ச்சியில் அரங்கத்தினர் கரவொலி எழுப்பினர்.)


மனிதரின் சுயமரியாதை மதிக்கப்படவேண்டும். பிறப்பால் பேதம் கற்பிக்கும் மனுதர்மம் எதிர்க்கப்பட வேண்டும், அழிக் கப்பட வேண்டும், பெண்ணடிமையை வலியுறுத்தும் மனுதர்ம அநீதிகள் நீக்கப்படவேண்டும். சமுதாயத்தில் பெண்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆண்களைச் சார்ந்தே இருக்கின்றனர். குழந்தை நிலையில் தந்தையைச் சார்ந்து வளர்கின்றனர். திருமணம் ஆனபின்பு கணவரைச் சார்ந்து வாழ்கின்றனர். வயதான நிலையில் புத்திரனைச் சார்ந்து இருக்கின்றனர். ஒரு மனித உயிர் பெண்ணாகப் பிறப்பதற்குக் கூட இச் சமுதாயத்தில் இடமில்லை. பெண் குழந்தை பிறந்துவிட்டால் தாய்ப்பாலுக்குப் பதில் கள்ளிப்பால் கொடுத்து அதனை சாகடிக்கும் வழக்கம் இன்றும் சில பகுதிகளில் நடைமுறையில் இருப்பது பெரிதும் வருத்தத்திற்குரியது. பெண் மக்களை விட ஆண்மக்கள் மேலான வர்கள் எனும் கருத்திலேயே மகனை புத்திரன் என அழைக்கும் நிலை. புத் என்றால் நரகம். தந்தையை நரகத்திற்குச் செல்லாமல் காப்பவன் புத்திரன் என்று ஆண்மகன் அழக்கப்படுகிறான்.

பெரியார் சாதியற்ற சமுத்துவ சமுதாயத்தை அமைக்கப் பாடுபட்டார். இந்த சமுதாயத்தில் நிலவும் சாதிவேறுபாடு சற்று விநோதமானது. ஜாதிகளுக்குள் உயர்ந்தது - தாழ்ந்தது என வேறுபாடுகள் போல் இல்லாமல் வேறுபாடுகளும் பல அடுக்குகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒரு ஜாதியை விட இன்னொரு ஜாதி உயர்ந்தது என தரம் பிரிக்கப்பட்ட - சமத்துவமின்மை (Graded inequality) நிலவுகிறது. ஏணிப்படியை ஒத்த சமத்துவமின்மை என அண்ணல் அம்பேத்கர் எளிமையாக எடுத்துரைப்பார். சமுதாயத்தில் நிலவும் ஜாதியக் கொடுமைகளைக் காக்கும் கட்டமைப்பைத் தகர்க்க கடுமையாக உழைத்தவர் பெரியார். அனைவருக்கும் சம வாய்ப்புள்ள சமுதாயத்தை அமைக்கப்பாடுபட்டார்.

கடவுள் கற்பனை

வெளிநாட்டு பகுத்தறிவாளர் சார்லஸ் டாக்கின்ஸ் எழுதிய கடவுள் ஒரு பொய் நம்பிக்கை (God Delusion) எனும் புத்தகம் அது. புத்தக உலகில் ஒரு புதிய பரிணாமத்தை உருவாக்கியது. மனித மனங்களில் புரட்சியை ஏற்படுத்திய புத்தகம். அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் தந்தை பெரியாரின் சிந்தனைகளை பிரதிபலிப்பவையாக உள்ளன.

பேராசிரியர் பெருமக்களில் பலர் படித்திருப்பீர்கள் - ஜான் வீவன் எழுதிய கற்பனை செய்து பாருங்கள் - மதங்கள் இல்லா உலகை (Imagin- A world without religon) எனும் புத்தகம், மதங்கள் இல்லாவிட்டால் உலகம் எவ்வளவு அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கும் என எடுத்துரைக்கிறது.

அறிவு என்பது வெறும் அறிவு நிலையில் மட்டுமே அமைந்திடக் கூடாது; அது செயலாக மாற்றம் பெற வேண்டும். பெரியாரின் அறிவு செயல்வடிவம் கண்டது. அதன் காரணமாக ஒடுக்கப் பட்ட மக்கள் உரிமை பெற்று வருகின்றனர். நாடு விடுதலை அடைந்து 60 ஆண்டுகள் கழித்து, உயர்கல்வி அமைப்புகளான அய்.அய்.டி., அய்.அய்.எம். நிறுவனங்களில் அடித்தளத்தட்டு மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. மண்டல் குழு பரிந்துரையின்படி நடைமுறையில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான இந்திரா சகானி வழக்கில், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன், தனது தனித் தீர்ப்புக் குறிப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தந்தை பெரியார் எடுத்த முயற்சிகள் பற்றி பதிவு செய்துள்ளார்.

மண்டல் குழு பரிந்துரையினை நடைமுறைக்குக் கொண்டு வந்த மறைந்த முன்னாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பாராளுமன்றத்தில் பேசும் போது பாரத் ரத்னா அண்ணல் அம்பேத்கர், பெரியார் ராமசாமி ஆகியோரின் கனவுகள் நனவாகின்றன என பாராளுமன்றக் குறிப்பாக பதிவு செய்தார். ஜனநாயகத்தின் தூண்களாக விளங்குகின்ற சட்ட மன்றம், நீதித்துறை, நிர்வாகத் துறை என பல தலங்களிலும் பெரியாரின் பணி பதிவு செய்யப்பட்ட விதம் பெரியாரின் சிந்தனைகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

பெண்ணை அடிமைப்படுத்தும் சின்னமான தாலியை நீக்கி திருமணம் செய்து கொள்ளும் சுயமரியாதைத் திருமணம் பெரியார் அவர்களின் முழு உழைப்பில் நடைமுறை வடிவம் கண்டது. நானும் எனது துணைவியாரும் தாலி நீக்கிய சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டோம். ராகு காலத்தில் திருமணம் நடைபெற்றது. இன்றுவரை பிள்ளைகளுடன் இன்பமாக, மகிழ்ச்சியாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அப்பொழுது சுயமரியாதைத் திருமணம் சட்ட அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை. சட்டத்திற்குப் புறம்பான திருமணம் என்று எங்களது திருமணத்தை விமர்சனம் செய்தனர். பின்னாளில் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. பொது மக்கள் கருத்து முன்னோக்கிச் செல்லும் - சட்ட வடிவம் தத்தி தத்தித்தான் வரும் எனும் ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப அனைத்து சுயமரியாதைத் திரு மணங்களுக்கும் - நடந்தவை - நடக்க இருப்பவை அனைத்துக்கும் சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

இவ்வாறு ஜனநாயகத்தின் பல்வேறு துறைகளிலும், நீதி, சட்டமன்றம், நிர்வாகம், பத்திரிகை என அனைத்துத் துறை களிலும் கொள்கையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக ஆகிவிட்டார் பெரியார். 21 ஆம் நூற்றாண்டின் மாபெரும் தலைவராக விளங்குகின்றார். வாழ்க பெரியார்!

இவ்வாறு பேசினார்.

---------------------நன்றி: "விடுதலை" 29-12-2008

0 comments: