Search This Blog

28.12.08

தடை செய்யப்பட்ட எந்த இயக்கத்தைப்பற்றியும் பேசுவது சட்டப்படி குற்றமல்ல.




மத்திய அமைச்சர் அந்துலே பதவி விலகக் கூடாது
காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேச்சு கண்டனத்திற்குரியது
தஞ்சை செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி


காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு பேச்சு கண்டனத்திற்குரியது. மத்திய அமைச்சர் ஏ.ஆர். அந்துலே - பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று பேட்டியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தஞ்சையில் (22-12-2008) செய்தியாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

மும்பையில் நடைபெற்ற சம்பவம்


மும்பையில் நடைபெற்ற 60 மணிநேர தீவிரவாதப் போராட்டம் என்பது நம்முடைய நாட்டிலுள்ள அனைவரும் அதிரக் கூடிய, உலுக்கிய மிகப்பெரிய மனித நேயத்திற்கு மாறான ஒரு செயல். அதில் உயிர் நீத்த அனைவருக்கும் மரியாதை காட்டு வதிலிருந்து, வீர வணக்கம் செலுத்துவதிலிருந்து அதிலே கட்சி, மதம், ஜாதி வேறுபாடு இல்லாமல் நம்முடைய நாடே ஒன்று பட்டது என்கிற அளவுக்கு - அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையிலே முக்கியமாக கருதவேண்டியது என்னவென்று சொன்னால், அதிலே பல கருத்துகள் சொல்லப்பட்டிருக்கிறது. விசாரணை நடைபெற்றிருக்கிறது.

பாகிஸ்தான்மீது உலகப் பொருளாதாரத் தடை

பாகிஸ்தான்காரர்கள் அதில் இன்னும் சரியாக இல்லை. உடனடியாக போர் என்று சொல்லக்கூடிய எல்லைக்குப் போகாமல் அவர்கள்மீது உலக ரீதியாகப் பொருளாதாரத் தடை அமெரிக்கா போன்ற உலகநாடுகள் செய்து வந்தாலே பாகிஸ்தான் வழிக்கு வரக்கூடிய வாய்ப்புக்கு வரலாம்.

அண்டை நாட்டோடு என்னதான் நாம் சுமூகமாக இருந்தாலும் அது ஒரு வழிப் பாதையாக இருக்கமுடியாது. இரு தரப்பாக இருந்தால்தான் சரியாக இருக்கும் என்று சொல்கின்ற இந்த நேரத்திலே காங்கிரஸ் கட்சியினுடைய மிக முக்கியமான அமைச்சராக இருக்கக்கூடிய மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அந்துலே அவர்கள் ஒரு நல்ல கருத்தைச் சொன்னார்.


பல குண்டு வெடிப்பு சம்பவங்கள்

ஆர்.எஸ்.எஸ். குண்டுவெடிப்பு மாலேவ்கான் என்று சொல்லக்கூடிய அந்த இடத்திலும் மற்ற இடத்திலும் நடந்ததற்கு ராணுவ ஊடுருவல் இருந்தது. இராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் இருந்தது. புரோகித், சாத்வி பிரக்யாசிங் தாக்கூர் என்ற அந்த அம்மையார் சாமியார். அதேபோல மகந்து தாயானந்த பாண்டே சங்கராச்சாரியார் ஆனது. இதுமாதிரி வழக்குகள் வந்தபொழுது ஒரு 500 பேருக்கு பாசறையில் பயிற்சி கொடுத்தது போன்ற அத்தனை செய்திகளையும் வெளியே கொண்டு வந்தவர் கார்கரேதான்.


கார்கரே ஏன் சுடப்பட்டார்?


இறந்துபோன கார்கரே அவர்கள் சம்பவம் நடந்தபொழுது கார்கரே அவர்கள் மருத்துவமனைக்குப் போயிருக்கிறார். அங்கே தான் அவர் சுடப்பட்டிருக்கின்றார். அவரை அங்கே யார் சுட்டது? எதற்காக அவர் போனார்? அவரை அங்கே போகச் சொன்னதென்ன?
பல செய்திகளை கொண்டுவந்த காலகட்டத்திலே கார்கரே குறிவைக்கப்பட்டிருக்கின்றார். அவரை குறிவைத்தவர்கள் யார்? அவர் அங்கே செல்லவேண்டிய அவசியம் என்ன? மும்பையில் தாஜ் ஓட்டல் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த பகுதிக்கு வராமல் தலைமை அதிகாரியான அவர் ஏன் மருத்துவமனைக்குச் சென்றார்?

யார் அவரை திசை திருப்பியது?


யார் அவரை அங்கே அனுப்பியது என்ற விவரங்களை ஆராய வேண்டும் என்ற ஒரு கருத்தை மத்திய அமைச்சர் அந்துலே அவர்கள் சொன்னார்கள்.

இதைப்பற்றியும் விசாரணையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று சொன்னார். இந்தக் கருத்து நியாயமான கருத்து. வரவேற்கவேண்டிய ஒரு கருத்து. அவர் ஒரு முஸ்லிம். அதைவிட்டுவிட்டு அவர் ஏதோ பாகிஸ்தானுக்கு ஆதரவாகவோ அல்லது அங்கிருந்து வந்த தீவிரவாதிக்கு ஆதரவாகவோ கருத்து சொன்னார் என்று வேண்டுமென்றே இந்த பிரச்சினையில் பாரதீய ஜனதா அவரைப்பற்றி நாடாளுமன்றத்திலே ஏகப்பட்ட கூச்சலை போட்டு அவர் இப்படிச் சொல்லலாமா? அதெல்லாம் சரியா? என்பதுபோன்ற ஒரு நிலையை அவர்கள் உருவாக்கினார்கள்.

அந்துலே கருத்து சரியானது


திடீரென்று அதிர்ச்சியான காங்கிரஸ் தலைமைகூட அவர்களிடத்திலே கூட ராஜினாமா வாங்கியிருக்கிறார்கள் என்பது போன்ற ஒரு செய்தி. அவர் கருத்து எங்கள் கருத்தல்ல என்றெல்லாம் திடீரென்று அவசரப்பட்டு சொல்லவேண்டிய அவசியமே இல்லை.
அவர் கருத்தை சொல்லுகிறார். அவர் சிறுபான்மை சமுதாயத்திற்கு ஒரு அமைச்சராகவும் இருக்கின்றார். இந்தக் கருத்து தவறு என்று சொல்லுவதற்கு யாரும் தயாராக இல்லை. அந்த கருத்தை காங்கிரசிலே இருக்கக்கூடிய திக் விஜய் சிங் ஆதரிக்கிறார்.
காங்கிரசார் பலர் ஆதரிக்கிறார்கள். அந்துலே இப்பொழுதும் சொல்லுகிறார். என்னுடைய கருத்து சரியாக இருந்தது. நான் யாருக்காகவும் அதைப் பின் வாங்கிக் கொள்ள மாட்டேன் என்று சொல்லியிருக்கின்றார்.

அவர் சிறுபான்மை சமுதாயத்திற்காக இருக்கக்கூடிய ஒரு அமைச்சர். எனவே சிறுபான்மை சமுதாயத்தையே காங்கிரஸ் விரோதித்துக் கொள்ளக்கூடிய ஒரு ராஜதந்திரமற்ற போக்கு அதனாலே ஏற்படக்கூடும்.

வீரமணியையும் சேர்த்து கைது பண்ணு

செய்தியாளர்: தொல்திருமாவளவனை கைது செய்யவேண்டும் என்று சொல்லுகிறார்களே?

தமிழர் தலைவர்: தொல் திருமாவளவனை மட்டுமல்ல, வீரமணியையும் சேர்த்து கைது பண்ண வேண்டும் என்றுதான் சொல்கின்றார்கள். அதாவது கைது பண்ணுகிற அதிகாரம் காங்கிரசிற்கு முழுக்க வந்து விட்டால் எப்படியிருக்கும் என்பதற்கு இதுதான் அடையாளம்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சியே தங்கள் கையில் வந்துவிட்டதாக கருதுகிறார்கள். அவரை கைது பண்ணுங்கள், இவரை கைது பண்ணுங்கள் என்று சொல்கிறார்கள். கைது பண்ண வேண்டிய பொறுப்பு முதல்வரைச் சார்ந்ததே தவிர, வேறு யாருக்கும் கிடையாது.

நானோ அல்லது இன்னொருவரோ அவரை கைது பண்ணுங்கள். இவரை கைது பண்ணுங்கள் என்று சொல்லி நாட்டையே சிறைச்சாலையாக்குவது அவசியமா என்ன? எந்த அடிப் படையிலே அவர்கள் சொல்லுகின்றார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது


நேற்றுகூட, நான் செய்தியாளர்களிடம் சொன்னேன். யாரும் சட்டத்தை அவர்களுடைய கையிலே எடுத்துக்கொள்ளக் கூடாது. திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையிலே எந்தப் போராட்டமாக இருந்தாலும், அறிவித்து விட்டுத்தான் செய்வோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய தலைவராக இருக்கக்கூடிய பொறுப்புள்ள ஒருவர் - தங்கபாலு அவர்களே, திராவிடர் கழகம் செய்தது, திராவிடர் கழகம் செய்தது என்று சொல்லுகின்றார்.

தமிழ்நாட்டிலே எத்தனை கட்சி இருக்கிறது?
இதுகூட தெரியாத காங்கிரஸ் தலைவர்


திராவிடர் கழகம் வேறு. பெரியார் திராவிடர் கழகம் வேறு என்றுகூட தெரிந்து கொள்ளக்கூட தயாராக இல்லாதவர் எப்படி அதை சொல்லுகிறார் என்று எனக்கு விளங்கவில்லை. ரொம்ப வேதனைக்குரியது. கண்டிக்கத்தகுந்தது. திராவிடர் கழகத்திற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஆகவே திராவிடர் கழகம் என்ற சொல்லை தோழர் தங்கபாலு பயன்படுத்தலாமா? அது எவ்வளவு பெரிய விபரீதமாகும்.

தலைவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்

அதற்காக நாங்களும் எதிர்த்துக் கொண்டு உடனே தங்கபாலு கொடும்பாவியை எரிப்போம் என்று இறங்கமாட்டோம். உணர்ச்சிவசப்படக்கூடாது. தலைவர்களாக இருக்கக் கூடிய வர்கள் மற்றவர்களுக்கு வழி காட்டியாக இருக்கவேண்டும்.

முதல்வருடன் பேசியிருக்கலாம்

இவர் தோழமைக் கட்சியினுடைய மிக முக்கியமான ஒரு தலைவர்.
இவருக்கு அப்படியே அசம்பாவிதம் நடந்தது என்று ஒரு செய்தி வந்தால் உடனடியாக முதல்வர் அவர்களோடு தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம். அதுதான் அவர் செய்திருக்க வேண்டிய வேலை.

முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு இதுவரை எப்பொழுதும் தயங்கியதே இல்லை. அவருக்கு சரி என்று பட்டால் அவருக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்.

நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வன்முறை, கலவரம் தூண்டுதல் பேச்சு கைது செய்யுங்கள் என்று சொல்லுவது இவைகள் எல்லாம் ஒருவழிப்பாதை அல்ல.
அதை முடிவு செய்யவேண்டிய பொறுப்பு கடமை அரசுக்கு உண்டே தவிர, நான் போய் அவரை கைது பண்ணுங்கள், இவரை கைது பண்ணாதீர்கள் என்று சொல்லுவதற்கு உரிமை இல்லை.

தி.மு.க. - காங்கிரஸ் உறவைப் பிரிக்க

இப்படி சொல்லுவதினுடைய நோக்கம் இரண்டேதான். காங்கிரஸ் - தி.மு.க. உறவு குலையவேண்டும். அது எப்படியாவது மாற வேண்டும் என்பதற்காக இதுவரையிலே சென்று சிலர் படை எடுத்தார்கள்.

அதிலே அவர்களாலே வெற்றிபெற முடியவில்லை. ஆகவே காங்கிரசினுடைய தொண்டர்கள், தோழர்களைக் குழப்பலாம் என்ற பல் குழுவும் வைத்திருக்கக்கூடிய இந்த நிலைக்கு ஈடுபடுகிறார்கள்.

இது விரும்பத்தக்கதல்ல. இந்த போக்குக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

நடுநிலையாளர்களின் வேண்டுகோள்

காங்கிரசினுடைய நலன் கருதியும் சொல்லுகின்றோம். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு எங்களைப்போன்றவர்களுடைய நடுநிலை வேண்டுகோளாகும்.

தடை செய்யப்பட்ட இயக்கத்தைப்பற்றி பேசுவது...

செய்தியாளர்: கைது செய்யப்பட்டவர்கள்பற்றி...

தமிழர் தலைவர்
: நீதிமன்றத்தீர்ப்பு என்ன என்பது தெரியாததினால் வந்த விளைவு. நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு தெளிவாகவே என்னுடைய கையிலே இருக்கிறது.
தடை செய்யப்பட்ட எந்த இயக்கத்தைப்பற்றியும் பேசுவது சட்டப்படி குற்றமல்ல.

உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு.

அந்தப் பேச்சின் மூலமாகத் தீய விளைவுகள் ஏற்பட்டிருந்தாலொழிய யாரையும் கைது செய்யவேண்டிய அவசியம் இல்லை. சென்னை - உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்திலே பழைய வழக்குகள் நெடுமாறன் அவர்கள்மீது, சுப வீரபாண்டியன் அவர்கள் மீது, வைகோ அவர்கள்மீது போடப்பட்ட வழக்குகள்மீது கொடுக்கப்பட்ட தீர்ப்பு. எனவே, நீதிமன்றத் தீர்ப்புகளை சரியாகப் படிக்காததினுடைய விளைவு இந்த ஆபத்து.

யாருடைய பேச்சு தூண்டுதலாக...

இரண்டாவது அரசாங்கத்திற்குத் தெரியாத விளைவுகள் அல்ல. அவர்களுக்கு யாருடைய பேச்சு தூண்டுதலாக இருக்கிறது. விளைவுகள் என்ன? என்பதைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டியது அரசாங்கத்தினுடைய சட்ட இலாகா; உள்துறை இலாகா. தெருவிலே போகக்கூடியவர்கள் அல்ல.
சும்மா யாரை வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதற்கு உதாரணம்தான் வீரமணியையும் சேர்த்துக் கைது பண்ணுங்கள் என்று சொல்கின்றார்கள். திராவிடர் கழகம் என்று சொல்கின்றார்கள்.
கைதுக்குப் பயப்படக் கூடியவர்கள் அல்லவே நாங்கள்!
எந்த நேரத்திலும் நாங்கள் அதற்குத் தயாராகத்தான் இருக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் - கைதானவர்கள் வழக்கு நடத்தினால், அரசாங்கம் அதிலே வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை இருக்குமே தவிர, நீதிமன்றத்திலே தோற்றுப் போகக்கூடிய நிலை இருந்தால் என்ன ஆகும்?

அதை அரசாங்கத்தினுடைய சட்ட இலாகா ஆய்வு செய்துதானே - யாரை கைது செய்ய வேண்டும்? எந்த செக்சன் மீது போடவேண்டும் என்பதை செய்வார்கள்.

ஆகவே, நான் வழக்கறிஞன் என்ற முறையிலும் சொல்கின்றேன். சட்டம் தெரிந்தவன் என்ற முறையிலும் சொல்கிறேன்.

விடுதலைப்புலிகளை ராஜபக்சே அரசே
தடை செய்யவில்லையே!


விடுதலைப்புலிகள் இயக்கத்தை ராஜபக்சே அரசு இன்னும் தடை செய்யவில்லை. அது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது.
தடை செய்யலாமா? என்று இப்பொழுது யோசிக்கிறார்கள். ஏனென்றால், தடை செய்துவிட்டால், பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று கருதுகிறார்கள்.
எங்கே விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லையோ, அங்கே எல்லாம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இது ஒரு விசித்திரம்

இது ஒரு விசித்திரம். எங்கே விடுதலைப்புலிகள் போராடிக் கொண்டிருக்கின்றார்களோ - எங்கே இராணுவத்தை திக்கு முக்காட வைக்கிறார்களோ - அங்கே இன்னமும் கிளி நொச்சியைப் பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

இதே இடத்திலே ஒரு மாதத்திற்கு முன்னால் உங்களை சந்திக்கும்பொழுது சொன்னோம்.
அதன் உண்மை என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

கிளிநொச்சியைப் பிடித்துவிடுவோம் என்று...


கிளிநொச்சியைப் பிடித்து விடுவோம், பிடித்துவிடுவோம் என்று சொல்கின்றார்கள். இப்பொழுதுகூட ஏழு, எட்டு நாடுகளை கலந்து கிளிநொச்சியைப் பிடிப்போம் என்று அவர்கள் சொல்வதிலிருந்தே, அதிலிருந்தே அவர்களுடைய தெளிவு என்ன என்பது தெரிந்திருக்கும்.
இப்படி சில பிரச்சினைகளை கிளப்புவதே தமிழ்நாட்டிலே ஈழத் தமிழர்களுக்குப் பெருகி வருகின்ற திசை திருப்பவேண்டும் என்ற சில சக்திகள் - அவர்களுடைய திட்டமிட்ட சில செயல்கள்.

கைது தேவையா? இல்லையா?

செய்தியாளர்: கைது தேவையா?

தமிழர் தலைவர்: கைது தேவையா?

தேவையில்லையா? என்று முடிவு செய்யவேண்டிய பொறுப்பு ஒரு அரசுக்கு உண்டு. எனக்கோ அல்லது இன்னொரு கட்சிக்காரருக்கோ அல்ல. அவரை கைது செய்யுங்கள். இவரை கைது செய்யுங்கள் என்பது வேண்டுமானால் - கருத்தை கருத்தால் மதியுங்கள். மறுத்து சொல்லுங்கள். அதே மாதிரி வன்முறையை யாரும் எந்தக் கட்சியும் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதே மாதிரி சில தலைவர்களுடைய உருவப்பொம்மை எரிப்பு என்பதிருக்கிறதே அது தேவையற்றது. ஏனென்றால், தலைவர்களுடைய உருவப்பொம்மையை எரித்தால் எந்தத் தொண்டர்களும் சும்மா இருக்கமாட்டார்கள். ஆத்திரம் வரலாம்.

தலைவர்களுக்கு அந்தப் பொறுப்பு

அப்படி ஆத்திரம் வரும்பொழுதுகூட - அதைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு அந்தந்த கட்சித் தலைவர்களுக்கு உண்டே தவிர, எரிவதை அணைப்பதற்கு, தண்ணீரை ஊற்ற வேண்டும். மணலைக் கொட்டவேண்டுமே தவிர, பெட்ரோல் ஊற்றி அணைப்போம் என்று சொல்வதா? தலைவர்களுக்கு பொறுப்பு உண்டு.

பொதுவாக தி.மு.க. அரசுக்கு இக்கட்டான ஒரு சூழ்நிலையை உண்டாக்க சிலர் திட்டமிட்டு செய்கிறார்கள். இதன் விளைவுகள் தெரியாமலேயே செய்கிறார்கள். எப்படி செய்தாலும் விளைவு ஒன்றுதான். அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

------------ இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி பேட்டி அளித்தார்.

------------------------நன்றி: "விடுதலை" 28-12-2008

0 comments: