Search This Blog

5.12.08

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சீரிய கவனத்துக்கும், உரிய நடவடிக்கைக்கும்!


மெட்ரிக் பள்ளிகளில் இந்தித் திணிப்பு


சமீபத்தில் நெருங்கிய நண்பர்கள் இருவர் அளித்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒருவர் ஈரோடைச் சேர்ந்தவர். மற்றொருவர் உடுமலையைச் சேர்ந்தவர். அவர்கள் படித்த மெட்ரிக் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பாக இந்தி ஒரு பாடமாக எடுத்து பயின்றே ஆகவேண்டுமாம். ஒரு பள்ளியின் பெயர் கலைமகள் கல்வி நிலையம்; இன்னொன்று சிறீனிவாச வித்யாலயா. இது எனக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

அவர்களின் கூற்றுப்படி இது நிறைய பள்ளிகளில் இப்பொழுது வழக்கமாக இருக்கிறதாம்.

தமிழை ஒரு பாடமாக எடுத்துப் பயிலாமலேயே தமிழ்நாட்டில் கல்லூரிப் படிப்பை முடித்துவிடலாம். இந்தியோ, பிரெஞ்சோ ஒரு மாற்றுப் பாடமாக எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு இந்தியோ, பிரெஞ்சோ எடுத்துப் பயின்றால், கூடுதல் மதிப்பெண் கிடைக்குமென கேள்விப்பட்டிருக்கிறேன். இது பிட்ஸ் பிலானி அல்லது rec போன்ற வெளிமாநிலக் கல்லூரிகளில் இடம் கிடைக்க ஏதுவாக இருக்குமாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை தமிழ் மதிப்பெண்களில் எந்தக் குறைபாடும் வைக்கவில்லை.

எனக்குத் தெரிந்தவரையில் தமிழைக்கூட இன்னும் கட்டாயப் பாடமாக ஆக்கவில்லை. ஆனால், இதுபோன்ற பள்ளிகள் இந்தியை கட்டாயப் பாடமாக ஆக்கியிருப்பது என்ன நியாயம்?

இந்தக் கூற்று உண்மையாக இருப்பின், தமிழகக் கல்வித் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது?

மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் வாரியம் என்ன செய்துகொண்டிருக்கிறது?

இந்தியை ஒரு பாடமாக எடுத்துப் படிப்பதில் எந்த ஆட்சேபனையு மில்லை. ஆனால், அதை ஏன் கட்டாயப் பாடமாக ஆக்கவேண்டும்?

மற்றுமொரு கேள்வி, தமிழை ஏன் கட்டாயப் பாடமாக ஆக்கவில்லை? நண்பரின் கூற்றுப்படி தன் மாமா பிள்ளைகளுக்கு தமிழ் பேச மட்டும் தான் தெரிகிறதாம். எழுதவோ படிக்கவோ தெரிவதில்லை.

இவ்வாறான இந்தித் திணிப்பு அமைதியான முறையில் நடந்து கொண்டுள்ளது. விருப்பமிருப்பவர்கள் படித்துக் கொள்ளட்டும். ஆனால், இந்தித் திணிப்பைக்கூட எதிர்க்க தமிழ்நாட்டில் ஆளில்லாமல் போய்விட்டதா? அதுவும் கலைஞரின் ஆட்சி நடந்துகொண்டி ருக்கும்போது!

ஒரு மொழியை தேவை இருக்கும்பொழுது கற்றுக்கொள்ளுதல் அவசியமானதே. ஆனால், செயற்கையான தேவைகளை உண்டாக்கி அதைத் திணிக்கும்பொழுதுகூட நாம் எதிர்க்கவில்லை என்றால், நம் கதி பிகார் மாநில மொழிகளுக்கு ஏற்பட்ட நிலைமை, கதிதான். பிகாரில் மூன்று மொழிகள் இருந்தனவாம். ஆனால், அவைகளில் இப்பொழுது மைதிலி என்ற மொழியைத் தவிர, மற்ற மொழிகள் என்னாயிற்றே என்று தெரியவில்லையாம்!

இம்மாதிரி ஒரிசா, கோவா போன்ற மாநில மொழிகளும் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதேபோல், நிறைய தெலுங்கு நண்பர்க ளுக்குப் பேச மட்டும்தான் தெரியுமாம்; எழுதவோ, படிக்கவோ தெரிவதில்லை. நமக்கும் அந்த நிலைமை வந்துவிடுமோ? என்று அச்சமாக உள்ளது.

---------------நன்றி: "விடுதலை" 5-12-2008

0 comments: