Search This Blog

14.12.08

தீர்ப்பை விமர்சிக்க நமக்கு உரிமை இல்லையா?




"உயர்ஜாதிக்காரன் தாழ்த்தப்பட்ட பெண்ணை வன்கலவி
செய்திருக்க முடியாது" எனும் நீதித்துறையின் செயல்பாடுகள்
சமூக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்

சமூக ஆர்வலர் டீஸ்டா சேதல்வாத் கருத்து


நீதித்துறை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக நீதிபதிகளின் செயல் பாடுகளை விருப்பு வெறுப்பின்றி கண்காணிப்பது, ஆய்வு செய்வது, தேவைப்படின் குறைகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவது ஆகிய செயல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று டீஸ்டா சேதல்வாத் கூறினார். நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் இயக்கம் (Citizen for Justice and Peace) அமைப்பின் செயலாளரான இவர் மதவாதத்தின் மீதான போர் (Communalism Combat) என்ற பத்திரிகை ஆசிரியருமாவார். சிறந்த சமூக ஆர்வலரான இவர்தான், குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கை அம்மாநிலத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு மாற்றி மறு விசாரணை செய்ய வைப்பதற்காக மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'தமிழ் நாட்டு மதச்சார்பின்மை அமைப்பு' (Secularist Forum) ஏற்பாடு செய்து சென்னையில் நேற்று நடைபெற்ற 'இந்தியாவில் மதச்சார்பற்ற மக்களாட்சி முறை எதிர்கொள்ள உள்ள சவால்கள்’ (Challenges for Secular Democracy in India) என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், ஒரு உயர்ஜாதி ஆண் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்திருக்க முடியாது என்று அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டிப் பேசிய அவர், இவ்வாறு அளிக்கப்பட்ட தீர்ப்பை விமர்சிக்க நமக்கு உரிமை இல்லையா? என்று கேட்டார். நீதித்துறையும் தனது செயல்பாட்டிற்கு பொதுமக்களுக்கு பதில் கூறி, பொறுப்பேற்கச் செய்யும் நிலையை உருவாக்க ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் மேற்கொள்ளப்படவேண்டும் என்று சமூக சிந்தனையாளர்களை அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட போலீஸ் சட்டத்தைப் பின்பற்ற வேண்டி கட்டாயப்படுத்தப்படுகிற போலீஸ்காரர்ளையும் மக்களாட்சி நெறிப்படுத்தும் போலீஸ் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். காவல் துறையைச் சீரமைப்பது பற்றி, இருபது ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட தேசிய போலீஸ் கமிஷனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் முயற்சி களுக்கு அரசியல் அதிகாரம் பெற்றவர்கள் பெரும் தடையாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அய்.பி. மற்றும் ரா போன்ற துப்பறியும், புலனாய்வு அமைப்பு களின் செயல்பாடுகளையும் நாடாளு மன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுத்தும் வகையில் அவற்றைச் சீரமைக்கவேண்டும் என்றும் அவர் கோரினார். அவை செய்யத் தவறியவைகளையும், எல்லைமீறிச் செயல்பட்டவைகளையும் வெளிப்படுத்தும் வகையில் அந்த அமைப்புகளும் சமூகத் தணிக்கையின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

அய்.பி. அதிகாரிகளின் செயல்பாடுகள் எவையும் தொழில் திறன் கொண்டவையாக இருப்பதில்லை; அரசியல் எஜமானர்கள் கேட்கும் தகவல்களைத் திரட்டுவதாகவே அது உள்ளது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதப் பிரச்சினையைக் கையாள ஆர்.எஸ்.எஸ். ஆட்களைப் பயன்படுத்துவது என்பது இதற்கு ஓர் சரியான எடுத்துக் காட்டாகும் என்று அவர் கூறினார்.


மதக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நீதி வழங்கத் தவறியதைப் பற்றியும், இந்துத்வ சக்திகளின் கொடிய முகம் பற்றியும், சமூகத்தில் நிலவும் அர்த்தமற்ற ஜாதிப் பிரிவினைகள் பற்றியும் அவர் விரிவாகப் பேசினார்.

இந் நிகழ்ச்சிக்கு முன்னர், சென்னைப் பல்கலைக் கழகத்தின் கிறித்தவ ஆய்வுத் துறை ஏற்பாடு செய்து நடத்திய நாகரிக சமுதாயமும் மதமும் என்ற கருத்தரங்கில் சேதல்வாத் முக்கிய உரையாற்றினார். நாகரிக சமூகத்தை மதம் காலம் காலமாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன், ஒன்றைப்பற்றி பேசும் போது மற்றொன்றைபற்றிக் குறிப்பிடாமல் பேசுவது இயலாத தாகவே செய்து விட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சில குழுக்கள் மத விழாக்களை இயல்புக்கு மாறாகப் பெரிது படுத்தி வரும் நிலையிலும், இன்று நிலவும் நுகர்வோர் விழிப்புணர்விலும் முக்கிய மத மதிப்பீடுகளை நிலைபெறச் செய்வதில் உள்ள சிரமங்கள் மதத்தைத் தாக்க இயன்ற ஆபத்தான கலவையாக விளங்குகிறது என்று கூறிய அவர், மதத்தைப் புரிந்து கொள்வதில் கல்வி பெரும் பங்காற்றியுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார். முதுகலைப் பட்டப் படிப்பு நிலையில் மட்டுமே மதத்தைப் பற்றி சிறப்பாக பயில்வது மட்டும் போதாது என்று கூறிய அவர் - மதக் கல்வி பள்ளி அளவில் தொடங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

வரலாறு என்ற அளவில், விடுதலையின் போது இந்திய-பாகிஸ்தான் பிரிவினை நான்கு பத்தி அளவிலும், காந்தி கொலை ஒரு வரியிலும் பல மாநில வரலாற்றுப் பாட நூல்களில் குறைக்கப்பட்டுள்ளன. என்று கூறிய அவர், நாட்டின் பன்முகத் தன்மையை எடுத்துக் காட்டுவதாக பள்ளி பாடநூல்கள் இல்லை என்றும் அவர் குறை கூறினார்.

சமூக மாற்றத்திற்காகப் பெரும் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட ஜோதிபாபுலே, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் வாழ்வும், தொண்டும் பாடங்களாகக் கற்பிக்கப்பட வேண்டும்
என்று முத்தாய்ப்பாகக் கூறினார்.


----------நன்றி; "விடுதலை" 14-12-2008

0 comments: