Search This Blog

30.12.08

தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்


கிரீமிலேயரும் - அடுத்தகட்டப் போராட்டமும்!

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் நேற்றைய தினம் (29.12.2008) மத்திய அரசு அலுவலகங்கள்முன் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு, கழகத் தோழர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நடைபெற்ற மறியலுக்குத் தலைமை தாங்கிய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், அடுத்தகட்டமாக திராவிடர்கழகம் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புச் செய்தார்.

டில்லியில் இதுகுறித்து மாநாடு - போராட்டம் நடக்கும் என்ற ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தென் மாநிலம் அளவுக்கு அவ்வாறு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்சினை இது. இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த இந்த 58 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு துறைகளில், கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்பது இப்பொழுதுதான் முதன்முதலாக அமலுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த வகையில் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படையாகும். இத்தகையதோர் சூழ்நிலையில், தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்ததுபோல முதன்முதலாக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பில் மத்திய அரசுத்துறை களிலோ, கல்வியில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலோ நுழையும் முதல் கட்டத்திலேயே, பொருளாதார அளவுகோல் என்ற ஒன்றை - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றைத் திணித்து பிற்படுத்தப்பட்டோரில் இவற்றில் நுழைய ஓரளவு தகுதி வாய்ந்தவர்களை உள்ளே நுழைய விடாமல் வெளியில் தள்ளுவது அநீதி அல்லவா? நேர்மையற்ற தன்மையல்லவா? என்பதுதான் சமூகநீதியாளர்கள் எழுப்பும் அடிப்படை வினாவாகும்.

கிரீமிலேயர் என்னும் அளவுகோலை திணிப்பதால் தகுதி வாய்ந்த பிற்படுத்தப்பட்டோர் கிடைக்காமல் போகும் என்று நன்கு தெரிந்த நிலையில்தான் காலியாகும் பிற்படுத்தப்பட் டோர்களின் இடங்கள் பொதுப்பட்டியலுக்குப் போகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவிக்கிறது.

நீதிமன்றங்கள் நாட்டில் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கா? அல்லது அவர்களைப் பழிவாங்குவதற்கா? என்பதுதான் நம்முன் நிற்கும் கேள்வி.

நீதிமன்றங்களின் தற்காலப்போக்கு எந்தத் திசையில் பயணம் செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பிரச்சினையில் அது தெரிவித்திருக்கும் இத்தகு கருத்து மூலம் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பது இதன் மூலமும் உணரப்படுகிறது.

கிரீமிலேயர் என்கிற பொருளாதார அளவுகோல் தாழ்த்தப் பட்டோருக்கும் தேவை - அத்தகு காலம் வந்துவிட்டது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே கருத்தாகக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் பொதுவான எதிரியாக - முட்டுக்கட்டையாக இருக்கக் கூடிய இந்தக் கிரீமிலேயர் முறையை அகற்றிட ஒருங் கிணைந்து போராடக்கூடிய காலகட்டமாக இதனைக் கருதவேண்டும்.


நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) ஒன்றிணைந்து செயல் படுவார்களேயானால், அடுத்த நொடியே இந்தக் கிரீமிலேயர் என்கிற சமூகநீதியின் குறுக்கே படுத்துக்கிடக்கும் முட்டுக்கட்டை இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்தப்பட்டு விடும்.

மக்கள் பிரச்சினையை நேரடியாகச் சந்திக்கக் கூடியவை மாநில அரசுகளே - மத்திய அரசுக்கென்று நேரிடையாக மக்கள் கிடையாது. எனவே, இதுபோன்ற பிரச்சினைகளில் முடி வெடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே உண்டு என்று சட்டத்திருத்தம் அவசிய உடனடித் தேவையாகும்.

அதனால்தான் மறியல் போராட்டத்துக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், கிரீமிலேயரால் ஏற்படும் அநீதி குறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.

எல்லா முனைகளிலும் அழுத்தம் கொடுத்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதியைக் காக்க திராவிடர் கழகம் தொடர்ந்து பாடுபடும் - கட்சிகளை மறந்து அனைத்துத் தரப்பினரும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


--------------------நன்றி:"விடுதலை" தலையங்கம் 30-12-2008

0 comments: