Search This Blog
22.12.08
இட ஒதுக்கீடு சமத்துவ சமுதாயம் அமைந்திட இது உதவும் - அமர்த்தியா சென்
பல நூற்றாண்டுகளாக அழுத்தப்பட்டவர்களுக்கு நன்மை
செய்யவே இட ஒதுக்கீடு சமத்துவ சமுதாயம் அமைந்திட இது உதவும்
நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்
அமர்த்தியா சென் கருத்து - சென்னை அய்.அய்.டி. இல் அறிவுரை
நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் இட ஒதுக்கீடு எவ்வளவு அவசியமானது என்பதை பொறியில் அடித்தாற் போன்று தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பார்ப்பன இயக்குநரைக் கொண்டுள்ள சென்னை அய்.அய்.டி. இல் இவ்வாறு அவர் பேசி இருப்பது முக்கியமானது.
நியாயம் - நீதி
பல நூற்றாண்டுகளாக அழுத்தப்பட்டு, வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்துள்ள மக்கள் மேம்பாடு அடைவதற்காகத் தான் இட ஒதுக்கீடு என்பதை அவர் தெளிவுபடுத்தினார். இதில் அடங்கியுள்ள நியாயத்தை யாரும் புறந்தள்ளக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தினார். நியாயம் என்பது வேறு; நீதி என்பது வேறு என்பதை அவர் விளக்கினார். நியாயம் என்பதை நடப்பு நிலைகளைக் கருத்தில் கொண்டு கணிக்கப்படுவது. நீதி என்பது நடைமுறை நியதி களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது என அவர் விளக்கினார்.
இந்தியாவில் பலபேரும் நீதியை வழங்கி விட்டோம் என்கிறார்கள். தோல்வியை மறைப்பதற்கு சட்டத்தின்படி செய்துவிட்டேன் என்று கூறு கிறார்கள். ஆனால், இந்தியச் சமுதாயத்தில் நிலவியுள்ள ஏற்றத் தாழ்வுகளைப் போக்குவதற்குப் பாடுபட வேண்டும் என் பதுதான் இன்றையத் தேவை. நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு.
தகுதி - திறமை
தகுதி - திறமை என்பவை யெல்லாம் நேர்மையான, சமத்துவம் உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு உதவிட வேண்டும். மக்களுக்குப் பணியாற்றுவதில் எந்த அளவுக்கு நியாயமும் திறமையும் அளிக்கப்பட முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். சமன் செய்யும் நடவடிக்கைகள் எல்லாச் சமூகத்திலும் எடுக்கப்படுகின்றன. ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் கூட சலுகைகள் அளித்து மாணவர்களைத் தயார் படுத்தும் நிலைகள் இருக்கின்றன.
இட ஒதுக்கீடு அளிப்பதால், திறமை குறைகிறது என்பதைக் கவனமாக ஆய்வு செய்திட வேண்டும். நதியின் வளைவில் படகு ஓட்டுவதை வைத்து மாலுமியின் திறமையை மதிப் பிடுவதற்குப் பதில் நதியின் முழு அமைப்பையும் அறிந்து ஓட்டுவதுதான் சிறப்பானது என மார்க் ட்வைன் எனும் சிறந்த எழுத்தாளர் கூறியிருப்பதை மேற்கோள் காட்டி அமர்த்தியா சென் பேசினார்.
இந்தியாவில் அய்.அய்.டி.க்கள் பெரும் பாலும் பெரிய நிறுவனங்களுக்கு உதவும் பணியாளர் களைத் தான் உருவாக்குகின்றன; அடிநிலை மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவி செய்திடும் வகையில் அவர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கிரீமிலேயருக்கான வருமான வரம்பை உயர்த்தியதை எதிர்த்து வழக்காடும் இந்திரேசன் எனும் பார்ப்பனரும் சென்னை அய்.அய்.டி.யின் இயக்குநராக இருந்தவர். எனவே இட ஒதுக்கீடு எதிர்ப்பு நிலையத்தில் அறிவார்ந்த முறையில் நியாயத்தை விளக்கிப் பகுத்தறிவாளரான அமர்த்தியா சென் பேசியது மிகவும் பொருத்தமும் முக்கியத்துவமும் பெற்றதாகும்.
-----------------------------நன்றி: "விடுதலை" 22-12-2008
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment