Search This Blog

17.12.08

சூத்திரர்களுக்கு (பஞ்சமர்களும் பெண்களும் அடுக்குக்குக் கீழே) எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கக் கூடாது என்பது அம்மனுவின் கட்டளை


காலந்தாழ்ந்தேனும் கட்டாய ஆரம்பக் கல்விச் சட்டம்

கல்விச் செல்வம் என்பது மனிதர்களுக்கு மிகமிக முக்கியமான ஒன்று.

கல்வியைக் கண் என்று அழைத்தார் திருவள்ளுவர். மனிதர்களின் அடிப்படை உரிமையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்பன போன்றே அறிவார்ந்த கல்வியும், அடிப்படை உரிமையாகும்! நமது அரசியல் சட்டத்தில் 1949 நவம்பர் 26 ஆம் தேதியே நமக்கு நாமே (செய்து) வழங்கிக் கொண்ட நாட்டின் மூலாதாரச் சட்டமான இந்திய அரசியல் சட்டத்தில், அரசுகளுக்கு "வழிகாட்டும் நெறிமுறைகள்” (Directive Principles of the State Policy - Part IV) என்ற நான்காம் அத்தியாயப் பகுதியில் 10 முதல் 15 வயது (45 ஆவது பிரிவு பிறகு 86 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி 2002 இல் திருத்தப்பட்டு) கட்டாய இலவசக் கல்வி என்பதாக வாசகங்கள் புகுத்தப்பட்டன.

இதற்கென ஒரு திருத்தச் சட்டம் கொணரவே அரை நூற்றாண்டு ஆகியுள்ளது மிகவும் வேதனைக்குரியது. அதற்குமுன் அதில் 10 ஆண்டுக்குள் 1950 முதல் 1960 வரை என்று வாசகங்கள் கருத்தியலில் இருந்தன. அதை மாற்றிதான் 2002 இல் 86 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் வந்தது!

அந்தப்படி அரசியல் சட்டத் திருத்தம் வந்தாலும், அதனை வைத்து நேரிடையாகச் செயல்படுத்த முடியாது. சட்டப்படி. இதற்கென மற்றொரு தனிச்சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றிட வேண்டும்.

அச்சட்டம் இப்போதுதான் அர்ஜுன்சிங் அவர்களது சீரிய முயற்சியால், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் - அதுவுங்கூட சற்று காலந்தாழ்ந்துதான் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Better late than Never - காலந்தாழ்ந்தாவது செய்தல், செய்யாமலே இருப்பதைவிட ஒருவகையில் மேலானது என்பதுதான் அப்பழமொழியின் பொருள். அதன்படி நடந்துள்ளது. அதை வரவேற்கிறோம்!

மற்ற நாடுகளைப் போன்றதல்ல இந்தியா என்ற இந்த ஞானபூமி.

இங்கே பிறவி அடிப்படையில் ஜாதிகள் உண்டு. ஹிந்து மதம் என்ற பார்ப்பனிய மதம்தான் 87 விழுக்காடு மக்களது மதம். மனுதர்மம்தான் அண்மைக்காலம்வரை கோலோச்சிய நிலை, அம்மதத்தின்படி, நாட்டில்.

சூத்திரர்களுக்கு (பஞ்சமர்களும் பெண்களும் அடுக்குக்குக் கீழே) எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கக் கூடாது என்பது அம்மனுவின் கட்டளை. அதன்படி கோடானுகோடி கீழ் ஜாதியினர்கள் கல்வி மறுக்கப்பட்ட, வெறும் கைநாட்டு உடல் உழைப்பாளர்களாகவே ஆக்கப்பட்டதோடு, அவர்களே அதில் மனதிருப்தி அடையும் அளவுக்கு அதுதான் அவர்களது கர்மவினைப்பயன் என்பதற்கான இந்த (அ) தர்மத்திற்கு முட்டுக்கொடுக்க கர்மம் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் மூளைகளில் சாயமேற்றப்பட்டது!

அதன் நீண்ட கால விளைவு தற்குறித்தனம்; கல்வி மறுக்கப்பட்ட கொடுமை! இந்தக் கல்விக் கண்ணைத் தருவதற்கு தென்னகத்தில் பிறந்ததுதான் நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்கம், தந்தை பெரியார் தொடங்கிய சமூகநீதி இயக்கம். இவைகளின் லட்சியப் பரிணாம வளர்ச்சியே திராவிடர் கழகம், திராவிடமுன்னேற்றக் கழகம்.


அவைகளின் தாக்கமே அகில இந்திய அளவிலும் சமூகநீதித் தாகமும் தவிப்பும்!

அதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால்தான் இப்படி கல்விப் புரட்சி - அமைதிப் புரட்சியாய் உருவாகியுள்ளது!

அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்பு அடிமை முறை இருந்தது; ஆப்பிரிக்காவில் வெள்ளையர் இன ஒடுக்கல் முறை இருந்தது; நிறபேதம் ஆண்டது.

ஆனால், இங்குள்ளதுபோல கறுப்பின மக்களுக்கும், அவர்கள் அடிமைகளாய் இருந்த காலத்திலும் கல்வி மறுக்கப்பட்டதில்லை. வேண்டுமானால், விரும்பத்தகாத முறையில் தனி வகுப்பு - தனியே படித்தல் முறை இருந்து பிறகு ஒழிந்தது!

இங்கே இன்னமும் ஆரம்பப் பள்ளிக் கூடத்திலே இப்படி ஒரு பிறவிக் கொடுமை - சமூக அநீதி - அது அநீதி என்றுகூட அறியாத மக்கள்! என்னே விசித்திரம்!

எனவேதான், 21 ஆம் நூற்றாண்டில்தான் இப்படி ஒரு தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டிய நிலை, என்பதுதான் நம் நாட்டின் மக்களின் விழிப்புணர்வு!

கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கல்வி வளர்ச்சி அடைந்த அளவுக்கு வடபுலத்தில் கல்வி வளர்ச்சி மிகவும் குறைவு என்பதும், அதிலும் பெண்கள் கல்வி என்பது அதைவிடக் குறைவு என்ற நிலை இருப்பதாலும் - சிறுவர், சிறுமியர்களை வேலைக்கு அனுப்பி பிழைக்கவேண்டிய கொடுமையும், வறுமையும், பட்டினியும் இருப்பதாலும் கல்விக் கண்ணை அவர்கள் பெறாத, பெற முடியாத ஒரு இருண்ட காலம் இருந்தது; அது இப்போது விடை பெறுகிறது. இச்சட்டம் மூலமாக கட்டாயக் கல்வி இளந்தளிர்களுக்குத் தரப்பட்டால்தான் சமூக மாற்றம் ஏற்பட சாத்தியமாகும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும், அதன் ஆற்றல் மிகு மனிதவளத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங் அவர்களையும் பாராட்டுகிறோம்.

-------------- கி . வீரமணி தலைவர்,திராவிடர் கழகம்

-------------------------"விடுதலை" தலையங்கம் 17-12-2008

0 comments: