Search This Blog
17.12.08
"ஆரிய மாயை" நூல் எழுதப்பட்டதன் நோக்கம்
"ஆரிய மாயை" என்ற தலைப்பில் பேரறிஞர்அண்ணா அவர்கள் நூல் எழுதினார். அதற்காக அண்ணா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு தொடர்பாக "திராவிட நாடு" ஏடு வெளியிட்ட செய்தி இதோ:
" வகுப்புத் துவேஷம் எங்களுக்கில்லை!
ஆரிய மாயை வழக்கு விசாரணை சி.என்.ஏ. வாக்குமூலம்:
தோழர்கள் அண்ணாதுரை, கண்ணப்பன் ஆகியோர் மீது, திருச்சி கோர்ட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆரிய மாயை வழக்கு, 9.9.50 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நான் எழுதியுள்ள ஏட்டில் வகுப்புத் துவேஷம் எதுவும் கிடையாது. வகுப்புத் துவேஷத்தைக் கிளப்பிவிடும் எண்ணமோ ஒரு வகுப்பார் மீது பலாத்கார உணர்ச்சியை ஏவிவிடும் எண்ணமோ எனக்குக் கிடையாது. சமூகத்தில் சம உரிமையும் நீதியும் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்ட இயக்கத்தவன் நான். ஆகவே, அந்தக் குறிக்கோளுக்காக, திராவிடச் சமுதாயம் சீர் குலைந்திருப்பதை எடுத்துக் காட்டவும், மீண்டும் செம்மையுறுவதற்கான வழி வகைகள் கூறவும், ஏடு தீட்டினேன். அந்த ஏடும், நான் பல சமயங்களில் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளின் தொகுப்பே. வரலாற்றுப் பேராசிரியர்களான ஆ.பிடியூபா சர் ஜான்மார்ஷல், ஹாவுல், பி.டி. சீனிவாச அய்யங்கார் ஆகியோருடைய ஏடுகளிலே உள்ள கருத்துக்களை, ஆரிய மாயையில் வெளியிட்டு இருக்கிறேன். ஆரியக் கலாச்சாரம், திராவிடக் கலாச்சாரம், ஆரிய - திராவிடக் கலாச்சாரப் போராட்டம், அதன் விளைவு, அதன் பயனாக இன்றுள்ள நிலைமை ஆகியவற்றினை விளக்கும் நோக்கத்துடனேயே ஆரிய மாயை எழுதப்பட்டது. வகுப்புத் துவேஷம் அதில் கிடையாது. எனவே. நான் குற்றவாளி அல்லவென்று தீர்ப்பளிக்கக் கோருகிறேன் என்ற கருத்துள்ள அறிக்கையை அண்ணாதுரை (வக்கீல் மூலம்) தந்தார்.
தோழர் கண்ணப்பன் சார்பாக ராமானுஜ அனந்தர் எனும் வழக்கறிஞரும் பேராசிரியர் ஒருவரும் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
வழக்கு 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அன்று விசாரணை, திருச்சிக்கு அடுத்த திருவெறும்பூரில் நடைபெறும்.
------------------------------"திராவிட நாடு", 17.9.1950
Labels:
அண்ணா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment