Search This Blog

14.12.08

பெரியாரும்-சமதர்ம அறிக்கையும்





சமதர்ம அறிக்கை


தற்காலம் உலகில் ரஷியாவிலும், ஸ்பெயினிலும் மற்றும் சில இடங்களிலும் சமதர்மம், பொதுவுடைமை தர்மம் ஆகியவைகளின் பேரால் அரசாட்சிகளும் கிளர்ச்சிகளும் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஓர் உண்மையாகும்.

இவ்வுணர்ச்சியானது ரஷியாவில்தான் முதன்முதலில் தோன்றியதாக நமது மக்களில் அனேகர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். சமதர்ம உணர்ச்சி சம்பந்தமான சரித்திரத்தைக் கவனித்து ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இக் கருத்து சரியானதல்ல என்பதாகத் தோன்றும். ஏனெனில், உலகில் சமதர்ம உணர்ச்சி என்பதானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி இருப்பதற்கு அத்தாட்சிகளிருக்கின்றன. சமதர்ம உணர்ச்சி ஒரு எண்ணமாய் ஏற்பட்டு அதன் தத்துவங்களைப் பற்றியும், கொள்கைகளைப் பற்றியும் வெளியில் எடுத்து மக்களுக்குத் தெரியும்படியாக மாநாடுகள் மூலமும் அறிக்கை மூலமும் வெளிப்பட்டிருப்பதாக நமக்கு விளங்கும்படியாய்க் காணப்படும் காலமே இன்றைக்குச் சுமார் 80, 90 வருஷங்களுக்கு முன்பு என்று தெரிகின்றது. அதாவது 1847 ஆம் வருஷத்திலேயே இலண்டன் மாநகரத்தில் உலகத்திலுள்ள சமதர்மவாதிகளுடைய மாநாடு (காங்கிரஸ்) ஒன்று நடந்திருப்பதாகவும் அதன் பலனாய் அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. ஆனால், அதைச் சீக்கிரத்தில் கையாளப்படவும் அனுபவத்தில் கொண்டு வரவும் முயற்சித்த நாடு ரஷியாவாக ஏற்பட்டு விட்டது.

இது சம்பந்தமாக நமக்குக் கிடைத்த ஓர் அறிக்கை - சரித்திரத்தில் சமதர்ம உணர்ச்சி பெற்றவர்களில் முதன்மையான முக்கியஸ்தர்கள் ஜெர்மானியர்களாயிருந்தாலும், அதற்காக மாநாடு கூடினது இலண்டன் பட்டணமாய் இருந்தாலும், அதற்கு அப்பொழுதே கிளர்ச்சி நடந்தது. பிரான்சு தேசமாயிருந்தாலும், அது முதன்முதல் அனுபவத்தில் கொண்டுவர முயற்சிக்க வேண்டிய இடம் ரஷியாவாகவே ஏற்பட்டு விட்டது. சிலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும் அந்தப்படி ஏற்படுவதற்கு நியாயம் இல்லாமலில்லை.

என்ன நியாயமென்று வாசகர்கள் கேட்பார்களேயானால், அதற்கு நமது சமாதானமானது எங்கு அளவுக்கு மீறிய - தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.

எனவே, இந்த நியாயப்படிப் பார்ப்போமேயானால் உலக அரசாங்கங்களிலெல்லாம் ரஷிய ஜார் அரசாங்கமே மிகக் கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. அதனாலேயே அங்கு சமதர்ம முறை அனுபவத்திற்குக் கொண்டுவர வேண்டியதாயிற்று.

இந்த நியாயப்படிப் பார்த்தால், அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷியா தேசத்தைவிட இந்தியாவுக்கே முதன் முதலாக ஏற்பட்டு இருக்க வேண்டியதாகும். ஆனால், அந்தப்படி ஏற்படாமல் இருப்பதற்கு இங்கு அனேகவித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும் சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகு ஜாக்கிரதையாகவே கல்வி, அறிவு, உலக ஞானம், சுயமரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு மார்க்கம் இல்லா மல் காட்டுமிராண்டித் தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோட்ச சாதனமென்றும் புகட்டி வந்ததாலும் அதே சூழ்ச்சிக்காரர்கள் அடிக்கடி வேற்றரசர்களை அழைத்துவந்து மக்களை மிருகத்தனமான ஆதிக்கத்தால் அடக்கி ஆளச்செய்து வந்ததாலும், உலகில் சமதர்ம உணர்ச்சி முதன்முதல் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி, ரஷியாவுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டியதாயிற்று.

ஆனபோதிலும்கூட, இப்போது உலகில் மற்றும் எல்லாப் பாகங்களிலும் ஏற்பட்டு விட்டதின் காரணமாய் இந்தியாவிலும் ஏற்படவேண்டியது தவிர்க்க முடியாத அவசியமாய்ப் போய் விட்டதால் இங்கும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது. ஆனால், உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால், இந்தியாவிலோ மேல்சாதியார் கீழ்ச்சாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன் - ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது.

ஆதலால், இங்கு சமதர்மத்திற்கு இரட்டிப்பு அதிகமான எதிர்ப்பு இருந்து வருவது கொண்டு சமதர்ம உணர்ச்சி தலைதூக்க முடியவில்லை.

இவ்விவரங்கள் இந்த அளவில் நிற்க, முன் குறிப்பிட்டதான அதாவது, சமதர்மக் கொள்கை சம்பந்தமாக அந்தக் காலத்தில் வெளியான ஓர் அறிக்கையை மக்கள் உணரும்படியாக வெளிப்படுத்தலாம் என்று நாம் கருதுவதால் அதை மொழிபெயர்த்து வெளியிடலாம் என்கின்ற கருத்துக்கு மேற்கண்ட வாக்கியங்களை முகவுரையாக எழுதினோம்.

இனிமேல் வருபவைகள் முழுவதும் அவ்வறிக்கையின் மொழிபெயர்ப்பேயாகும். அதில் நமது அபிப்பிராயம் என்பது சிறிதும் இல்லை. ஆகையால், வாசகர்கள் அதை 1847 ஆம் வருஷத்தில் இரண்டு ஜெர்மானியர்களுக்கு ஏற்பட்ட அபிப்பிராயம் என்பதாகவே கருதி வாசிக்க வேண்டுமென்று விரும்புகின்றோம்.

சமதர்ம அறிக்கையின் சரித்திரமும் பீடிகையும்:

1847 ஆம் வருஷத்தில் இலண்டனில் ஒரு சமதர்ம காங்கிரஸ் நடந்தது. அதற்கு உலகின் பல பாகங்களில் இருந்தும், சமதர்ம உணர்ச்சியுடைய பிரதிநிதிகள் பலர் வந்தார்கள். அக் காங்கிரசில் சமதர்ம இயக்கத்தின் சார் பாக அதன் கொள்கைகளை வெளியிட காரல் மார்க்ஸ், பிரட்ரிக் எஞ்சல்ஸ் ஆகிய இரண்டு ஜெர்மானியப் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொள்வதாக ஒரு தீர்மானம் செய்து, அத் தீர்மானப்படி அவ்விருவரும் ஜெர்மனி பாஷையில் ஓர் அறிக்கை தயாரித்து 1848 ஆம் வருஷம் ஜனவரி மாதத்தில் அச்சுக்குக் கொடுத்தார்கள். ஆனால், அது அச்சிடப்பட்டு வெளியாவதற்கு முன்பே அடுத்த பிப்ரவரி மாதத்தில் பிரான்சு தேசத்தில் ஒரு சமதர்மப் புரட்சி ஏற்பட்டுவிட்டது.

அப்புரட்சியின் மத்திய காலமாகிய ஜூன் மாதத்தில் அவ்வறிக்கையை பிரெஞ்சு பாஷையில் மொழி பெயர்த்துப் பரப்பப்பட்டது. அது சமயம் வேலை செய்து ஜீவனம் செய்யும் ஏழை மக்கள் ஏராளமாய் அப்புரட்சியில் கலந்து இருந்தார்கள். என்றாலும் புரட்சியின் பயனாய் ஏற்பட்ட மாறுதல்களால் அவ்வேழை மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படவில்லை. ஏழை மக்கள் சுதந்தரமாய், nக்ஷமமாய் வாழ ஆசைப்பட்டு அதற்காக வென்று என்னென்ன முயற்சிகள் செய்யப்பட்டனவோ அவைகளையெல்லாம் அங்குள்ள பணக்காரர்கள் எதிர்த்து நின்று தோற்கடித்துத் தலையெடுக்கவொட்டாமல் செய்து விட்டார்கள்.

அதோடு கூடவே அப்போதைய ஜெர்மன் அரசாங்கத்தாரும் அம் முயற்சிகளையெல்லாம் அடக்கப் புறப்பட்டு கலோன் பட்டணத்தில் இருந்த சமதர்ம சங்கத்தின் மத்திய நிர்வாக சபை அங்கத்தினர்களைக் கைது செய்து, 18 மாதங்கள் விசாரணை செய்யாமலே ரிமாண்டு கைதிகளாகச் சிறையில் வைத்திருந்தார்கள். கடைசியாக 1852 ஆம் வருஷத்தில் அவர்கள் விசாரிக்கப்பட்டு ஏழு பெயர்கள் மூன்று முதல் ஆறு வருஷம் வரை தண்டிக்கப்பட்டார்கள். அதன் பயனாய்ச் சமதர்ம சங்கமே கலைக்கப்பட்டுவிட்டது. சமதர்ம அறிக்கை வினியோகமும் நிறுத்தப்பட்டு விட்டது.

மறுபடியும் கொஞ்சகாலம் பொறுத்து, வேலை செய்து ஜீவனம் செய்யும் பாமர ஜனங்களுக்குச் சிறிது சிறிதாகத் தைரியம் ஏற் பட்டு ‘சர்வதேச வேலையாளர்கள் சங்கம்’ என்பதாக ஒன்றை ஸ்தாபித்தார்கள். அதன்மூலமாக மற்றும் பல தேசங்களில் இருந்து வந்ததான சமதர்ம அபிப்பிராயம் கொண்டவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கவும் தங்கள் அபிப்பிராயங்களைக் கலந்து கொள்ளவும் சந்தர்ப்பம் ஏற்படலாயிற்று. சமதர்மக் கொள்கை முழுவதையும் ஏற்றுக் கொள்வதில் ஆரம்பத்தில் சற்றுத் தயங்கினார்கள். ஆனாலும் நாளடைவில் தைரியம் ஏற்பட்டு அறிக்கையில் கண்ட முழுக் கொள்கைகளையும் ஒப்புக் கொண்டு விட்டார்கள். அதன் பிறகே இந்த அறிக்கை பல தடவை மீண்டும் மீண்டும் ஜெர்மன் பாஷையிலேயே பிரசுரித்து அய்ரோப்பா, அமெரிக்கா தேசங்களிலெல்லாம் தாராளமாய் வினியோகிக்கப்பட்டது. 1872 ஆம் வருஷத்தில்தான் இவ்வறிக்கை முதன் முதலாக ஆங்கில பாஷையில் மொழி பெயர்க்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு வாரப் பத்திரிகையின் மூலம் வெளியிடப்பட்டது.

மற்றும் இவ்வறிக்கையை 1863லும், 1882-லும் ரஷ்யன் பாஷையிலும் மொழி பெயர்த்து ஜினிவாவிலிருந்து அனேக இடங் களுக்கு அனுப்பி வினியோகித்துப் பரப்பப்பட்டது. மேலும், இவ்வறிக்கை 1885 ஆம் வருஷத்தில் டேனிஷ் பாஷையிலும், 1886-ல் பிரெஞ்சு பாஷையிலும், புதிய மாதிரியில் 1886 ஆம் வருஷத்தில் ஸ்பானிஷ் பாஷையிலும் மொழி பெயர்த்து ஆங்காங்கு பரப்பப்பட்டது. ஜெர்மனி பாஷையில் மாத்திரம் இவ்வறிக்கை 12 பதிப்பும், இங்கிலிஷ் பாஷையில் 3 மாதிரியான மொழி பெயர்ப்பும் செய்யப்பட்டது. ஆர்மீனியன் பாஷையில் ஏற்பட்ட ஒரு மொழி பெயர்ப்பானது. அதன் மொழி பெயர்ப்பாளர் தனது பெயரை வெளியிடப் பயந்ததாலும் பிரசுரித்தவர் அவ்வறிக்கையின் கர்த்தாவான மார்க்ஸ் என்பவருடைய பெயரால் வெளியிடப் பயப்பட்டதாலும் அவ்வறிக்கை வெளிவர முடியாமல் போய்விட்டது. இந்த மேற்கண்ட சரித்திரமே அவ்வறிக்கையின் சரித்திரமாகும்.

உலகில் உள்ள எல்லா தேசத்து வேலையாளர்களுடைய மனோபாவத்தையும் ஒன்றுபடுத்தி அவர்கள் யாவரையும் ஒரே பொதுக் கூட்டத்தில் சேர்ந்து கலந்து உழைக்கத்தக்க மனோதைரியத்தையும் கொடுத்தது இந்த அறிக்கையேயாகும்.

இவ்வறிக்கை எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை உலக நிலைமையில் அதிசயிக்கத்தக்க பல மாறுதல்கள் எவ்வளவுதான் ஏற்பட்டு இருந்தாலும் அவ்வறிக்கையின் தத்துவமானது இன்றைய நிலைமைக்கு மிக்கப் பொருத்தமானதாகவே இருந்து வருவது அவ்வறிக்கையின் விசேஷத்திற்கு ஒரு காரணமாகும்.

சமதர்மவாதிகள் தங்களுடைய வேலைத் திட்டங்களை காலதேச வர்த்தமானத்திற்குத் தகுந்தபடி மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்பது சரியானாலும் சமதர்மக் கொள்கை என்பதில் எந்தக் காலத்திற்கும் எந்தத் தேசத்திற்கும் இந்த அறிக்கையில் இருந்து சிறிது கூட மாறுபட வேண்டிய அவசியம் ஏற்படாத படி இது அமைந்திருக்கின்றது.

அறிக்கை:

உலகத்தில் தோன்றியிருக்கும் ஒரு பூதத்தைக் கண்டு எல்லோருமே பயப்படுகிறார்கள்.

அது எப்படிப்பட்ட பூதம் என்றால் அதுதான் ‘சமதர்மம்’ என்னும் பூதமாகும்.

அய்ரோப்பாவிலுள்ள சகல சக்திகளுமே அதாவது, அரசாங்கச் சக்திகள், மதங்களின் சக்திகள் முதலியவைகள் எல்லாமும் ஒன்று சேர்ந்து அந்தப் பூதத்தை விரட்டி ஓட்டப் பார்க்கின்றன.

போப்பைப் போன்ற மத அதிகாரிகளும், ஜாரைப் போன்ற அரசர்களும், பிரபல இராஜ தந்திரிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும், இரகசிய வேவுகாரர்களும் ஆகிய எல்லோருமே ஒன்றுசேர்ந்து இந்தப் பூதத்தை ஒழிக்கப் பகீரதப் பாடுபடுகின்றார்கள். எந்த அரசியல் சபையிலும், கவர்ன்மெண்டார் தங்கள் எதிரிகளைச் சமதர்மவாதிகள் என்று வைவதும், எதிர்க்கட்சியார்கள் தங்கள் கட்சியிலிருக்கும் தீவிரவாதிகளையும், பிற்போக்காளர் களையும் சமதர்மவாதிகள் என்று வைவதும், அந்தப் பேச்சையே சொல்லி எந்த எதிரியையும் வைது வாயடக்கப் பார்ப்பதும் சாதாரண வாடிக்கையாகி விட்டது.

இவைகளில் இருந்து இரண்டு விஷயங்கள் வெளியாகின்றன. அதென்னவென்றால்,

ஒன்று:


சமதர்மம் என்பதானது ஒரு பெரிய வலிமையும் ஆதிக்கமும் கொண்டதான ஒரு பெரிய சக்தி என்பதாகச் சகலரும் ஒப்புக் கொண்டு வெளிப்படையாகவே பயப்படுகின்றார்கள் என்பது.

இரண்டு:

உலகத்தில் உள்ள எல்லா சமதர்மவாதிகளும் ஒன்றாகச் சேர்ந்து தங்களுடைய உண்மை எண்ணங்களையும் பொதுவான இலட்சியங்களையும் வேலைத் திட்டங்களையும் உலகத்தாருக்கு முன்னால் நன்றாய் விளங்கும்படி வெளிப்படையாய் ஓர் அறிக்கை மூலம் வெளியிட்டு, அதில் உள்ள பயத்தையும் தப்பபிப்பி ராயத்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம் என்பதாகும்.

------------------- தந்தை பெரியார் ‘குடிஅரசு’ - தலையங்கம் - 4-10-1931 -நூல்: “சமதர்மம் சமைப்போம்” பக்கம் 53-60

0 comments: