Search This Blog

25.12.08

பெரியார் நினைவு நாள் சிந்தனை


சூளுரை என்ன?

தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 35 (1973) ஆண்டுகள் ஓடிவிட்டன. அவர் மறைந்த நாளை நினைவு நாள் என்று கூறுவது ஒரு வரலாற்றுக் குறிப்புதான்; உண்மையிலேயே அவர் நினைக்கப்படாத நாளோ, நேரமோ கிடையாது - கிடையவே கிடையாது. அந்த அளவுக்கு மக்கள் வாழ்வில் எவ்வகையிலும் பிரிக்கப்பட முடியாத அளவுக்கு ஒன்றாகவே கரைந்துவிட்டவர் அவர்.

மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தந்தை பெரியார்பற்றிக் கணித்தது இந்த அடிப்படையில்தான்.

இன்றைக்கு உலகம் முழுவதும் தலைதூக்கி நிற்கும் பிரச்சினை மதவாதம் - அதன் சுவீகாரப் புத்திரனான பயங்கரவாதம் - தீவிரவாதம் - இத்தியாதி இத்தியாதியாகும்.

ஈராக்கின்மீது படை தொடுத்த அமெரிக்க அதிபர் புஷ் சொல்கிறார்: நான் கடவுளிடம் அனுமதி பெற்றுதான் ஈராக்கின்மீது படையெடுத்தேன்! என்று.

இதன் பொருள் என்ன? ஏகப்பிதாவின் அனுமதி பெற்று அல்லாவை நம்பும் மக்கள் வாழும் நாட்டின்மீது படையெடுக்கிறார். அந்த நாட்டின் அதிபர் சதாம் உசேனுக்குத் தூக்குத் தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது.


அந்த நாட்டில் இருக்கும் இஸ்லாம் மதத்தின் ஒரு பிரிவினர் அந்தத் தண்டனையை வரவேற்றதும், இன்னொரு பிரிவினர் எதிர்ப்பதுமான சச்சரவுகள் உள்நாட்டிலே!

ஒரு மதத்துக்குள்ளேயே தீவிரவாதம், மிதவாதம் என்ற நிலையில் மோதல்கள்.

இந்தியாவை எடுத்துக்கொண்டால், பிரச்சினையே இப்பொழுது இந்துத்துவா பேர் சொல்லி திரிசூலங்களைத் தூக்கித் திரியும் காவிகள் கூட்டம்தான்.

ஒரு பட்டப் பகலில் - குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்களின் வழிபாட்டுத் தலத்தை அடித்து நொறுக்குகிறார்கள். அதன் எதிர்வினையாக நாடு தழுவிய அளவில் மத மோதல்கள் - பலிகள்!

இந்து மதத்தைச் சேர்ந்தவர் எந்தக் குற்றத்தைச் செய்தாலும் அதன்மீது விசாரணையே கூடாது என்கிற அளவுக்கு போக்கிரித்தனமான கூச்சல்களை எழுப்புகிறார்கள் என்றால், இதன் முடிவு எங்கே போய் நிற்கும்?

உலக நாடுகளே அதிர்ச்சியடையக் கூடிய அளவுக்கு மும்பையில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு மூல காரணம் - இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் முசுலிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அரசப் பயங்கரவாதம் என்ற மூலத் தைக் கவனிக்கும்பொழுது - நாட்டின் எதிர்காலமே கேள்விக் குறியாகி விடவில்லையா? மக்களின் வாழ்வுரிமை என்பது பரிதாபத்துக்குரிய இடத்தில் அல்லவா தள்ளப்பட்டு விட்டது.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டம்கூட, மனிதனைப் பிறவியின் அடிப்படையில் பேதப்படுத்தும் ஜாதி அமைப்பு முறையை பாதுகாத்துக் கொண்டுதானிருக்கிறது. இந்தப் பகுதியைத் தூக்கி எறியவேண்டும். ஜாதி இருக்கும் நாட்டில் சமத்துவம் இருக்குமா? சமத்துவம் இருக்கும் நாட்டில் ஜாதிக்கு இடம் இருக்க முடியுமா? என்ற தந்தை பெரியாரின் வினாவுக்கு - பிரதமர் நேருமுதல் - டாக்டர் மன்மோகன்சிங் வரை விடை காண முயலவில்லை அல்லது முடியவில்லை.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் எழுந்து நிற்கும் இந்தச் சிக்கல்களுக்கு - மதத்தை ஆணிவேராகக் கொண்ட இந்த நச்சு மரத்திற்கு அழிவுதரும் அறிவியல் - பகுத்தறிவு மாமருந்து என்பது - அறுவை சிகிச்சை என்பது சமுதாய மருத்துவராம் தந்தை பெரியார் அவர்களின் தகத்தகாயதான பகுத்தறிவுக்கதிர்தான் - அந்தச் சித்தாந்தம்தான்.

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பும் - மத எதிர்ப்பும் எவ்வளவு அவசியம் என்பதை யதார்த்தத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டத்தில்தான் நாடு இப்பொழுது இருக்கிறது.

எட்டுத் திக்கும் - தந்தை பெரியார் இலட்சியத்தைப் பரப்பு வதையே இலட்சியமாகக் கொண்டு பாடுபட இந்நாளில் சூளுரை ஏற்போம்!

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!


-----------------------நன்றி: "விடுதலை" 24-12-2008

3 comments:

Pradeep said...

என்னை பொறுத்த வரை தமிழகத்தின் ஒரு உன்னத தலைவர் தந்தை பெரியார்தான்

Anonymous said...

\\இந்நாளில் சூளுரை ஏற்போம்!\\

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி -பிரதீப் $ கவின்