Search This Blog

29.12.08

கர்நாடக அரசு ,மைசூரை தமிழ்நாட்டிடம் ஒப்படைப்பார்களா?
ஒகேனக்கல் திட்டத்தைத்
தடுக்க கருநாடகாவுக்கு உரிமை இல்லை

தருமபுரி கூட்டுக் குடிநீர்த் திட்ட மீட்புரிமை மாநாட்டில் திராவிடர்
கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்கவுரை
25.12.2008 அன்று ஒகேனக்கல்லில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் உரிமை மீட்பு மாநாடு தந்தை பெரியார், எம்.என். நஞ்சையா சிலை திறப்பு, பெரியார் படிப்பகம் திறப்பு விழாவில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் ஆற்றிய தொடக்கவுரை:

முப்பெரும் விழாக்கள் தலைவர் தமிழர் தலைவர் அவர்களே பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரம் நிறுவனத்தின் தலைவர் மானமிகு பொத்தனூர் சண்முகம் அவர்களே கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் பெருமக்களே, தோழர்களே, தாய்மார்களே!

உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் விழிகளைத் திறந்தவர், மானுட சமுதாயத்துக்கே புத்தொளி பாய்ச்சியவரான தந்தை பெரியார் சிலையையும், உலகில் எங்கும் காணக் கிடைக்காத ஒரு இயக்கத்தின் ஒப்பரும் கருஞ்சட்டைத் தொண்டர்களை அடையாளப்படுத்தும் வகையில் இந்தப்பகுதியில் சுயமரியாதை வீரராக உலா வந்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு எம்.என். நஞ்சையா அவர்களின் சிலையையும் மூட நம்பிக்கையைச் சாய்த்து பகுத்தறிவு ஒளிபரப்பிட பெரியார் படிப்பகத்தையும், தமிழர் தலைவர் அவர்கள் திறந்துள்ளார்.

இவற்றோடு தமிழர்களின் உரிமைப் போராட்டமாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட மீட்பு மாநாடும் இணைக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் சிலை திறப்பு என்றாலே அதில் தமிழர்களின் மீட்பு இருக்கிறது என்பது சொல்லாமலேயே விளங்கும்.


ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் அரசு திட்டமிட்டுச் செயலாற்றும் ஒரு கால கட்டத்தில் கருநாடக மாநிலம் தேவையில்லாமல், விதண்டாவாதத் தன்மையில், சட்ட விரோதமான, நியாய விரோதமான ஒரு செயலில் ஈடுபட்டு வருகிறது.

மறுவரையறையா?

1956 ஆம் ஆண்டிலேயே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, மாநில எல்லைகளும் வரையறை செய்யப்பட்டுவிட்டன. அதன்படி ஒகேனக்கல் பகுதி என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்பது ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

இந்த நிலையில் எல்லையை மறுவரையறை செய்யவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தால், அது எங்கு போய் முடியும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் எல்லாம் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்படவேண்டும் என்றெல்லாம் நமக்குக் குரல் கொடுக்கத் தெரியாதா? என்ற வினா எழக் கூடிய நிலை ஏற்பட்டு விடாதா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டப்படியும், நியாயப்படியும் நமக்குச் சொந்தமான பிரச்சினைகளுக்காக போராட வேண்டிய நிலை இருப்பது மிகவும் பரிதாபமாகும்.

தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே நாம் தொடர்ந்து ஈடுபடுவதும் மற்றவர்களோ தாக்குதல் தொடுக்கும் நிலையிலும் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது.

காவிரி நீர்ப் பிரச்சினையாகவிருந்தாலும், முல்லை பெரியாறு அணை பிரச்சினையாகவிருந்தாலும், பாலாறு பிரச்சினையாகவிருந்தாலும், நமக்குச் சட்டப்படியாக உள்ள உரிமைகளுக்காகப் போராடுவது என்பது வழமையாகி விட்டது.

கருநாடகமானாலும், கேரளாவாக ஆனாலும், அவர்கள் சட்டத்தைத் தூக்கியெறிந்து, நீதிமன்ற தீர்ப்புகளையும் புறந்தள்ளி தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பதில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒகேனக்கல்லை கூட்டுக்குடி நீர்த் திட்டத்தைப் பொறுத்தவரை - இது பல ஆண்டுகளுக்குமுன்பே திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.

அய்ந்தாவது முறையாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை மூன்றாண்டுகளுக் குள்ளாகவே 75 விழுக்காட்டினை நிறைவேற்றிய சாதனை முதல்வர் கலைஞர் அவர்களையே சாரும்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைப் பொறுத்தவரை மக்களின் தாகத்தைத் தீர்க்க நதிகள் என்பவை கிடையாது - அணைகளும் கிடையாது. இந்த நிலையில்தான் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ரூ.1334 கோடி

1334 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டு, ஜப்பான் 85 சதவிகிதத் தொகையை கடனாக அளிக்க முன்வந்துள்ளது.

உள்ளாட்சியை நல்லாட்சியாக நடத்திவரும் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜப்பான் சென்று ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு வெற்றிகரமாகத் திரும்பி வந்தார்.

இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், 1998 ஆம் ஆண்டிலேயே கருநாடக - தமிழக அரசுகள் பெங்களூர் குடிநீர்த் திட் டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. பெங்களூர் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்திற்கு நிதி உதவி வழங்க முன்வந்த ஜப்பான் அரசு, மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியதைக் காரணம் காட்டி, நிதி வழங்குவதில் தடை ஏற்பட்டது என்பதும் குறிப்பிட்டுக் காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.

திட்டத்திற்கான தொடக்க விழா இவ்வாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களும் அவ்விழாவில் கலந்துகொண்டார்.

30 லட்சம் மக்களுக்குக் குடிநீர்

இந்தத் திட்டத்தினால் 30 லட்சம் மக்கள் பயனடைவார்கள். மக்களின் குடிநீருக்காகத் திட்டம் தீட்டப்படும்பொழுது அதில் குறுக்கிடுவது மனிதாபிமானம் அல்ல. ஒகேனக்கல் என்பது கூத்தப்பாடி ஊராட்சியைச் சேர்ந்த ஒரு பகுதியாகும். தமிழ்நாட்டின் பகுதியில் விழும் நீரைத்தான் நாம் பயன்படுத்தப் போகிறோமே தவிர, கருநாடக எல்லைக்குள் சென்று நீரை எடுக்கவில்லை. இந்தச் சாதாரண நியாயத்தைக்கூட - பொது அறிவைக்கூடப் பயன்படுத்தாமல், வெறும் வெறியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

கருநாடக மாநிலத்தைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு எதிரான ஒரு வெறித்தனத்தை வளர்த்து வைத்துள்ளார்கள். அந்த வெறித்தனத்தில் யார் அதிகம் டிகிரி என்பதுதான் அங்குள்ள கட்சிகளிடையே போட்டி!

தேசியக் கட்சிகள் என்றும், அகில இந்தியக் கட்சிகள் என்றும் முத்திரை குத்திக்கொண்டு அலைபவர்கள்தான் - தேசியவாதிகள்தான் தேசியத்துக்கு விரோதமான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

பா.ஜ.க.வின் இரட்டை வேடம்

இன்றைக்கு கருநாடக மாநிலத்தை ஆண்டுகொண்டு இருக்கும் பா.ஜ.க. - அதன் முதலமைச்சர் எடியூரப்பா - பதவிக்கு வருவதற்கு முன்பே இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு, தமிழ் நாட்டின் எல்லைக்குள்ளேயே வந்து அத்துமீறி அடாவடித்தனமாக ஆர்ப் பாட்டம் நடத்தினார் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டவேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா தலைவர் திருவாளர் இல. கணேசன் என்ன சொல்கிறார்?

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தமிழக எல்லைக்குள் நிறைவேற்றப்படுகிறது. ஒகேனக்கல் குடிநீர்த் திட்ட இடத்தில் கருநாடகாவுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே, அவர்களின் அனுமதி நமக்குத் தேவையில்லை. கருநாடக தேர்தல் முடிந்துவிட்டதால், திட் டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் (தினகரன், 29.5.2008, பக்கம் 18) என்று கூறுகிறார்.

கருநாடக பா.ஜ.க. எதிர்க்கிறது; தமிழக பா.ஜ.க. ஆதரிக்கிறது. ஏன் இந்த இரட்டை வேடம்? கருநாடகத்தில் எதிர்த்தால்தான் ஓட்டு - தமிழ்நாட்டில் ஆதரித்தால்தான் தாக்குப் பிடிக்க முடியும் தேசியக் கட்சிகளின் இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்.

மைசூரை தமிழ்நாட்டிடம் ஒப்படைக்கத் தயாரா?


இன்னொரு காரணத்தை முன்வைக்கிறார் - ஒகேனக்கல் என்ற வார்த்தையே கன்னட மொழியில் உள்ளதுதான் என்று கூறுகிறார்கள்.

தமிழ் மொழியில் பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவலால் தோன்றியது தான் கன்னட மொழி என்பது வரலாற்று உண்மை.

சமஸ்கிருத ஊடுருவல் மொழியை மட்டும் பிளவுபடுத்தவில்லை; திராவிட இன மக்களைக்கூட ஒருவருக்கொருவர் பகைவர்களாக ஆக்கிவிட்டது என்பதுதான் கசப்பான - வேதனையான உண்மையாகும்
.

அப்படிப் பார்க்கப் போனால், மைசூர் என்பதன் உண்மையான பெயர் எருமையூர் என்பதே! சமஸ்கிருதத்தில் எருமை என்பதற்கு மகிஷி என்று பெயர். மகிஷி என்பது மகிஷாசூர் ஆகி அதன்பின் மைசூர் என்று ஆகி விட்டது. அந்த அடிப்படையில், மைசூரை தமிழ்நாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று நாம் கூறினால், அவர்கள் மைசூரை தமிழ்நாட்டுக்கு ஒப்படைப்பார்களா?

பழைய வரலாற்றை ஆய்வு செய்தால், அது தமிழர்களுக்கு இலாபமாகவேதான் முடியும்.

தமிழர்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்டவேண்டும் என்றால், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை ஏற்கவேண்டும் - திராவிடர் கழகத்தைப் பலப்படுத்த வேண்டும். அதன்மூலம்தான் தமிழன் தமிழனாகவும், தமிழ்நாடு தமிழ்நாடாகவும் இருக்க முடியும் என்று கூறி, இம்மாநாட்டை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன் என்று உரையாற்றினார் .


--------------நன்றி: "விடுதலை" 29-12-2008

0 comments: