Search This Blog

6.12.08

75-ம், 85-ம்தான் தமிழர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொண்டிருக்கின்றன.




தமிழர் தலைவர் கி. வீரமணி பவள விழா
நிறைவு மலர் வெளியீட்டு விழா

75-க்கும், 85-க்கும் இருக்கின்ற இன உணர்வை,
சுறுசுறுப்பை இளைஞர்கள் பின்பற்றவேண்டும்
கலைஞர், தமிழர் தலைவரைப் பாராட்டி

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சு


தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி (75), முதலமைச்சர் கலைஞர் (85) ஆகியோரின் இன உணர்வை, சுறுசுறுப்பை எடுத்துக்கூறிப் பாராட்டி தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி பேசி விளக்கவுரையாற்றினார்.

வீரமணி ஒரு வீரவிதை நூல் அறிமுக விழா மற்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் 75-ஆம் ஆண்டு பவள விழா நிறைவு மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ஒய்..எம்.சி.ஏ. கட்டட மாடியில் 1-12-2008 திங்கள் மாலை 6.30 மணிக்குத் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

வீரமணி ஒரு வீரவிதை நூலை தயாரித்த நூல் ஆசிரியரும் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் 75 ஆம் ஆண்டு பவளவிழா நிறைவு மலரைத் தயாரித்தவருமான பகுத்தறிவாளர் கழக மேனாள் துணைத் தலைவர் கோ. அண்ணாவி, கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வீரமணி ஒரு வீரவிதை நூலை தனி ஒருவனாகவே இருந்து தயாரித்ததையும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு பவளவிழா நிறைவு மலர் வெளியிட்டு நன்றி தெரிவித்ததையும், தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி. வீரமணி, கலைஞர் ஆகியோருக்கு தன் நன்றியைத் தெரிவித்து, இந்த அண்ணாவி உயிர் போனாலும் தனது குடும்பம் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை பார்த்து தந்தை பெரியார் வழியில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்று கூறிய அவர், குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரச் சூழ்நிலை, இவை அத்தனையையும் சமாளித்து தனக்கு உதவிகரமாக இருந்த தனது துணைவியார் மணிமேகலை, மகள் அ.ம. பகுத்தறிவு மற்றும் உடனிருந்து ஒத் துழைத்த அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி கூறி வந்திருந்த வர்களை வரவேற்று உரையாற்றினார். இரு நூல்களின் சிறப்பைப் பற்றியும் கூறிய டெய்சி மணியம்மை இணைப்புரை வழங்கினார்.

அடுத்து பெரியார் பேருரையாளர் திராவிடர் இயக்க ஆராய்ச்சியாளர் கு.வெ.கி. ஆசான் தமது உரையில், தந்தை பெரியார் ஆற்றிய தொண்டு, பணிகள் அதேபோல திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் ஆற்றிய தொண்டு, வாழ்க்கை, பெருமை ஆகியவற்றை எடுத்துச் சொல்வதற்குரிய அரிய பணிகளை கோ. அண்ணாவி இந்த நூல்கள்மூலம் செய்துள்ளார்.

கடவுள், மதம் - தீவிரவாதத்தைத்தான் வளர்த்தன

கடவுள், மதம் இவைகள் எல்லாம் தீவிரவாதத்தை வளர்க்கத் தான் பயன்பட்டன. மனித சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தப் பயன்படவில்லை. தந்தை பெரியார் அவர்கள்தான் சுயமாக சிந்தித்து 1925-க்கு முன்பு சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே மக்களுக்கான நல்ல கொள்கைகளை நல்ல சிறந்த கருத்துகளை எடுத்துச்சொல்லி, மனித சமுதாயம் முன்னேறப் பாடுபட்டவர் மனித சமுதாயத்தை நேசித்த தலைவர் வழி காட்டியாக இருந்த தலைவர்.

இந்தியாவுக்கு வழிகாட்டக்கூடிய முதல்வர்

தந்தை பெரியார் அவர்களுடைய வழியிலேயே இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கக் கூடிய ஒரே முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான்.

அதுமட்டுமல்ல, மற்ற முதலமைச்சர்கள் எல்லாம் மதவெறி முன்பு மண்டியிட்டவர்கள். முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஒருவர்தான் மதவெறிக்கு மண்டியிடாத ஒரே முதலமைச்சர்.

உலகத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுடைய தொண்டு வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக வீரமணி ஒரு வீரவிதை நூலை தயாரித்து அளித்தவர் கோ. அண்ணாவி. அவருடைய தொண்டு தொடரட்டும் என்று வாழ்த்தினார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தமது உரையில், இந்த விழாவில் பேசுவதற்காக நாங்கள் வரவில்லை, இந்த விழாவில் பேசுகிறவர்களுடைய கருத்துகளைக் கேட்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கின்றோம்.

அண்ணாவி அவர்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு பிடிவாதக்காரர். கடந்த சில ஆண்டுகளாக விடாப்பிடியாக இருந்து வீரமணி ஒரு வீரவிதை என்ற நூலை உருவாக்கி யிருக்கின்றார். நமக்கு வரலாற்றுச் செய்திகளை எடுத்துக் காட்டியிருக்கின்றார்.

திராவிடர் இயக்கத்தின் சார்பில் நன்றி

அவர் தனிப்பட்ட முறையில் இப்படி ஒரு நூலை கொண்டு வந்திருப்பதைப்பார்த்து திராவிடர் கழகத்தின் சார்பாகவும் சரி, திராவிட இயக்கத்தின் சார்பாகவும் அண்ணாவி அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம். நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் 75 ஆண்டுகால அகவையில் 65 ஆண்டுகாலப் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இவரைத் தவிர வேறு எவரும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்தியாவிலே பல தலைவர்கள் தோன்றியிருக்கின்றார்கள். கேரளாவிலே நாராயணகுரு தோன்றியிருக்கின்றார். அவர் உருவாக்கிய இயக்கம் அவருக்குப் பிறகு இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். உலகத்தில் உள்ள மிகப் பெரிய ஆற்றல் வாய்ந்த தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவருக்குப் பிறகு அவரது இயக்கம் வலிமையாக இருக் கிறதா என்றால் இல்லை. அதேபோல மகாத்மா என்று அழைக்கப்பட்ட ஜோதி பாஃபுலே அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட இயக்கம் இருக்கிறதா என்றால் இல்லை.

ஆனால், தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய இயக்கம் இன்றைக்கும் உலகளாவிய நிலையிலே பரவியிருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள்தான். வீரமணி ஒரு வீர விதை என்ற நூலின் இந்த கதாநாயகர்தான் அதற்கு காரணம் என்றார்.


அடுத்து வீரமணி ஒரு வீரவிதை நூலுக்கு படம் வரைந்து கொடுத்த ஓவியர் வரதராசன் இந்த நிகழ்ச்சியில் தனக்கு பேச வாய்ப்பு கிடைத்ததே அளவற்ற மகிழ்ச்சி என்று கூறி நன்றி தெரிவித்தார்.

கலைமாமணி முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் தமது உரையில் குறிப்பிட்டதாவது: ஒரு நூலை உருவாக்குவது எவ்வளவு கடினமான வேலை என்பதை நான் நன்கு உணர்ந்தவன். இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற பொழுது உலகத்தமிழ் மாநாட்டிற்கான மலர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். ஒவ்வொரு செய்தியையும், அண்ணா அவர்களிடமும், கலைஞர் அவர்களிடமும் காட்டி, காட்டி அனுமதி பெற்று ஒரு திங்கள் அந்த மலரைத் தயாரிக்க கடுமையாகப் பாடுபட்டோம்.

வீரமணி வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூல்

அதுபோல் உலகத்திலேயே இதுபோன்று ஒரு தலைவருடைய படங்களைப் போட்டு விளக்கமளித்து மிகச் சிறப்பாக இந்த நூலை உருவாக்கியிருக்கின்றார் அண்ணாவி அவர்கள். வீரமணி அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூலாக இந்த நூல் திகழ்கின்றது.

ஒரு கப்பலுக்கு எப்படி திசை காட்டும் கருவி முக்கியமோ, திசை காட்டும் கருவி வட திசையை நோக்கித்தான் இருக்கும். அதுபோல தந்தை பெரியார் அவர்களை பின்பற்றி அவருடைய கொள்கையை பரப்புவதே தமது லட்சியம் என்று பாடுபட்டுக் கொண்டு வருகின்றார் வீரமணி அவர்கள்.

வீரமணி ஒரு வீர விதை நூலில் முதல் நாள் மாநாட்டுப் படச் செய்தியும் இருக்கிறது. அதுபோல் இரண்டாம் நாள், மூன்றாம் நாள், நான்காம் நாள் மாநாட்டுச் செய்திகளும் படங்களுடன் இருக்கின்றன. 1943-ஆம் ஆண்டு தமது 9 ஆவது வயதில் கடலூரில் திராவிடநாடு இதழுக்கு நிதி உதவி அளிக்க நடைபெற்ற நிகழ்ச்சியில் 103 ரூபாயை பொதுக்கூட்டம் நடத்தியவர்கள் சார்பாக அண்ணா அவர்களிடம் ஆசிரியர் அளித்தார். வீரமணி அவர்களுடைய கையால்தான் அந்த நிதி தரப்பட்டது.

டார்பிடோதான் அறிமுகம் செய்துவைத்தார்

தென்னாற்காடு மாவட்டம் கடலூரில் நடைபெற்ற மாநாட் டில்தான் டார்பிடோ ஏ.பி. ஜனார்த்தனம் அவர்கள்தான் தந்தை பெரியார் அவர்களிடம் துடிப்புள்ள சிறுவன் வீரமணி என்று கூறி முதன் முதலில் ஆசிரியரை அறிமுகப்படுத்தினார். வீரமணி அவர்களுக்கு அப்பொழுதே அய்யா அவர்களுடைய முன் னாலே பேச வாய்ப்புக் கிடைத்தது.

அப்பொழுதெல்லாம் அண்ணா அவர்களானாலும், கலைஞர் அவர்களானாலும் எப்படியெல்லாம் பேசக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் என்றால், சத்தியவாணிமுத்து அவர்கள் விலகிய நேரம், மா.பொ.சி. அவர்கள் கலைஞர் அவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார். கலைஞர் அவர்களும் என்ன பேசப் போகிறாரோ என்று ஆவலோடு அனைவரும் எதிர் பார்த்திருந்த நேரம். கொம்பை ஒடிப்பதற்காக வந்திருக்கிறேன்

சோதனைதான்! இந்த நிகழ்ச்சியில் அதன் கொம்பை ஒடிப்பதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்று சொன்னார். அப்படியானால் என்ன அர்த்தம். சோ என்பதில் உள்ள முதல் கொம்பு என்ற எழுத்தை எடுத்துவிட்டால் சாதனை என்று ஆகிவிடும். ஆகவே சோதனையை சாதனையாக ஆக்க வந்திருக்கின்றேன் என்று பேசினார் கலைஞர்.


அண்ணா அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தன் என்று பாராட்டியிருக்கிறார். தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை வீரமணி அவர்கள் தொடர்ந்து சிறப்பாகப் பிரச்சாரம் செய்து அவருடைய புகழைப் பரப்பி வருகிறார்.

அண்ணாவி அவர்கள் வீரமணி ஒரு வீர விதை என்ற இந்த நூலில் 1950 வரை எழுதியிருக்கின்றார். இந்த வரலாறு தொடர வேண்டும். கி. வீரமணி அவர்களுக்கு நாளை 76-ஆவது பிறந்த நாள் இன்றைக்கே நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். வீரமணி அவர்களின் தொண்டு தொடரவேண்டும் என்றுகூறி மேலும் பல கருத்துகளை விளக்கி உரையாற்றினார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி

நிறைவாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் க. பொன்முடி தமது உரையில் குறிப்பிட்டதாவது:

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் பவளவிழாச் சிறப்பு மலர் வெளியீட்டு விழா, வீரமணி ஒரு வீர விதை நூல் அறிமுக விழா ஆகியவற்றில் பேசு வதற்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இங்கே பேசிய நமது கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் நம்முடைய இனத்தைப்பற்றிய வரலாறு சரியாக எழுதப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

வரலாற்றில் திரிபுவாதங்கள்

நான் தஞ்சை வல்லத்தில் நடைபெற்ற வரலாற்று சம்பந்தப் பட்ட கருத்தரங்க நிகழ்ச்சியில் பேசிய பொழுதுகூட குறிப்பிட்டுச் சொன்னேன். வரலாற்று ஆதாரங்கள் நம்மிடையே குறை வாகக் கூட இருக்கலாம். ஆனால் வரலாற்றில் திரிபுவாதங்கள் வந்துவிடக் கூடாது, எழுதிவிடக்கூடாது என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.

வரலாற்றில் ஆண்டுகள் முன்பின் இருந்தால் கூட வரலாற்று ஆதாரங்கள் நிகழ்ச்சிகள் மிகச் சரியாக இருந்திட வேண்டும். அதனால்தான் கலைஞர் அவர்கள் நெஞ்சுக்கு நீதி என்று அவருடைய வரலாற்றை மிகச் சரியாக எழுதிக் கொண்டு வருகின்றார்.

மனிதகுல முன்னேற்றத்திற்கு வரலாறு

வரலாறு எழுதப்படுவது மனித குல முன்னேற்றத்திற்காக எழுதப்பட வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தார். மனித வரலாற்றைத் திரும்பிப் பார்த்தார். தந்தை பெரியார் அன்றைக்கு விதைத்தார். அதுதான் இன்றைக்குத் திராவிடர் இயக்கமாக வளர்ந்திருக்கிறது.

ஆசிரியர் அவர்களுக்கோ வயது 75. கலைஞர் அவர்களுக்கோ வயது 85. இந்த 75-ம், 85-ம்தான் தமிழர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு தலைமையின் கீழ் தமிழன் வரவேண்டாம். குறைந்த பட்சம் ஒரு குடையின் கீழாவது தமிழன் வரவேண்டாமா? ஒரு உணர்வின் கீழாவது வர வேண்டாமா?

அந்த உணர்வோடுதான் 75-ம், 85-ம் இப்பொழுதுகூட ஒன்றாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருப்பார்கள்.
அண்ணாவி அவர்கள் வீரமணி ஒரு வீரவிதை என்ற நூலை பட நிகழ்ச்சிமூலம் மிகச் சிறப்பான கருத்துகளை இந்த நூலிலே சொல்லியிருக் கின்றார்கள்.

இளைஞர்கள் மனதில் நல்ல விதைகளை விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியிருக்கின்றார். விதைகள் சரியாக விதைக்கப்படவேண்டும். என்னுடைய பேரப்பிள்ளைகள் கயல், பொன்னிகளை கேட்டால் NO god கடவுள் இல்லையென்றுதான் சொல்லுவார்கள் நம்முடைய கொள்கைகள் நமது வீட்டில் விதைக்கப்படவேண்டும்.

நீ - தி.மு.க. பகுத்தறிவுவாதி


நான் பெரியார் திடலில் பி.எச்.டி. செய்வதற்காக ஆராய்ச்சி செய்து படித்துக் கொண்டிருந்த பொழுது, கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடத்திலே விவாதிப்போம். அப்பொழுது என்னை பார்த்து சொல்வார் - நீங்கள் எல்லாம் தி.க. - தி.மு.ககாரர்கள் என்பார்கள். எனது துணைவியார் பெரியார் திடலில் தாலி அறுத்துக் கொடுத்தவர். நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு 75 ஆம் ஆண்டு நிறைவு என்பதற்காக ஏதோ சடங்கிற்காக, சம்பிரதாயத்திற்காக இந்த நிகழ்ச்சியை நாம் நடத்தவில்லை. பெரியார் கொள்கையைப் பரப்பி வருகின்ற நம்முடைய ஆசிரியர் பெருந்தகைக்கு இங்கே விழா எடுத்து நடத்தப்படுகின்றது.

எண்ணங்கள் மாறவேண்டும்


இந்த நூலில் சில அச்சுப்பிழைகள் இருக்கலாம். அண்ணாவி அவர்கள் வரலாறை வரலாறாகவே எழுதியிருக்கின்றார். நம்முடைய எண்ணங்கள் முதலில் மாறவேண்டும். தெளிவுடன் இருக்கவேண்டும். இதுதான் எங்களுடைய வரலாறு என்பதை நாம் ஏற்றுக்கொண்டு சொல்வதற்காகவாவது துணிச்சல் வரவேண்டும்.

நாம் சிந்தித்த நல்ல பகுத்தறிவுக் கருத்துகளை தைரியத்துடன் எடுத்துச் சொல்லவேண்டும். என்னைப் பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். இவன் இந்தக் கொள்கை உடையவன் என்பது நன்றாகத் தெரியும்.

5 தடவையில் 4 முறை வெற்றி அய்ந்துமுறை தேர்தலில் நின்றேன். நான்குமுறை வெற்றிபெற்றிருக்கின்றேன். ஒரே ஒருமுறைதான் தோற்றிருக் கின்றேன். தந்தை பெரியார் ஒரு சுய சிந்தனையாளர் (originai thinker) நம்முடைய அமைச்சர் இராசா நிறைய படிப்பேன் என்று சொல்லுவார். நாங்கள் எல்லாம் கலைஞர் அவர்கள் பேசியதை ஆசிரியர் அவர்கள் பேசியதைச் கேட்டு அதைப் பொதுக்கூட்டங்களில் எடுத்துச் சொன்னாலே போதும் என்று சொல்லுவேன்.

நம்முடைய ஆசிரியர் அவர்களுடன் வேனில் சுற்றுப்பயணம் செய்வோம். தமிழ்நாடு முழுக்க நம்முடைய ஆசிரியர் அவர்கள் ஏற்பாடு செய்த பட்டி மன்றங்களில் பேசியிருக்கின்றேன். புராண இதிகாசங்களில் காமச்சுவை மிகுந்தது சைவமா? வைணவமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம். கட்டணம் போட்டு பட்டி மன்றம் நடத்தப்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டம்.

எனவே நம்முடைய கருத்துக்களைத் துணிந்து சொல்ல வேண்டும். பாறையில் விதைத்தாலும் முளைக்க வாய்ப்பிருக்கும்பொழுது அது தானே முளைக்கும். ரஷ்யா என்று தந்தை பெரியார் பெயர் வைத்தார். என்ன ஊர் நாட்டு பெயரெல்லாம் வைத்திருக்கிறீர்களே என்று சிலர் கேட்டார்கள்.

பெரியார் திருப்பிக் கேட்டார்

உடனே தந்தை பெரியார் திருப்பிக் கேட்டார். அவர்தான் ஒரிஜினல் திங்கர். நீங்கள் பழனி என்று பெயர் வைத்திருக் கின்றீர்களே! திருப்பதி என்று பெயர் வைத்திருக்கின்றீர்களே! அதெல்லாம் ஊர் பெயரில்லையா? என்று திருப்பிக் கேட்டார். நாள்தோறும் இரவு முதல்வர் கலைஞர் அவர்களும், நம்முடைய ஆசிரியர் அவர்களும் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் எல்லாம் வெளியில் இருப்போம். பழைய பழைய பழைய விசயங்களை பேசுவார்கள். எங்களுக்கு அவைகளைப் பற்றி அவர்கள் பேசியதைக் கேட்டபொழுது இவைகள் எல்லாம் எங்களுக்குத் தெரியாத செய்திகளாக இருக்கின்றன என்று சொல்லுவோம்.

அதுபோல பல நல்ல வரலாற்றுச் செய்திகளை அண்ணாவி அவர்கள் படத்தோடு நல்ல விளக்கமாக சொல்லியிருக்கின்றார். பத்துப் பேர் இந்தச் செய்திகளை தெரிந்து கொண்டால் அதில் இரண்டு பேராவது திருந்தட்டுமே. முதலில் நம்மிடையே இருக்கின்ற தாழ்வு மனப்பான்மையை அகற்ற வேண்டும். தன்னம்பிக்கையை உருவாக்கவேண்டும்.

நம்முடைய ஆசிரியர் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவர். படி, படி என்று சொல்லிக் கொண்டிருப்பார். நம்முடைய வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். அண்ணாவி ஒரு வரலாற்று நூலை எழுதி வழிகாட்டியிருக்கிறார். நூல் விலை அதிமாக இருந்தாலும் நம்முடைய பூங்குன்றன் அவர்களுடைய உதவியோடு மலிவு விலையில் இதைக் கொண்டு வரவேண்டும்.
பூங்குன்றன் எதையும் ஃபிங்கர் டிப்ஸ்சில் வைத்திருப்பார். பூங்குன்றன்போல ஒரு ஆள் இல்லையே! கலைஞர் அவர்களே சொல்லுவார் - பூங்குன்றன் போல நமக்கு ஒரு ஆள் இல்லையே என்று சொல்லுவார்.


அண்ணாவி நம்முடைய ஆசிரியர் அவர்களுடைய வரலாற்றை 1950 வரையில்தான் எழுதியிருக்கின்றார். மேலும் இந்த வரலாறு தொடர வேண்டும். நம்முடைய ஆசிரியர் நாளை 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் அவருக்கு. அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பொன்முடி பேசினார்.

இறுதியாக திராவிடர் கழகக் கலைத்துறை அமைப்பாளர் மு.அ. கிரிதரன் நன்றி கூறினார். ஏராளமான பல்துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள், இன உணர்வாளர்கள் பெருந்திரளாக வந்து கலந்துகொண்டனர்.

----------------------- நன்றி: "விடுதலை" 8-12-2008

0 comments: