Search This Blog

17.12.08

புத்தரை நாடு கடத்திய பார்ப்பனியத்தின் எதிரி பெரியார்


புன்னகை

தோழன்: சித்தார்த்தரே! சிந்தை நொந்தவர் போல் நீர் இருப்பானேன்? உமக்கென்ன குறை? நீரோ கீர்த்தி வாய்ந்த மன்னரின் மகன். சாம்ராஜ்ய சித்திரம் உமக்கு மனோரம்மியமான மாளிகை இருக்கிறது, சிங்காரத் தோட்டமிருக்கிறது. அதோ பாரீர், நீலப் பட்டாடை அணிந்த மயிலாள் பச்சைக் கம்பளி மீது நடனமாடுகிறாள். குயில் கூவுகிறது. மயிலின் சாயல், குயிலின் இனிய குரல், தென்றல் போன்ற குணம் கொண்ட தர்ம பத்தினியும், செல்வக் குழந்தையும் உமக்கு உள்ளனர். இவ்வளவும் இருக்க நீர் ஏன் முக வாட்டத்துடன் இருக்கிறீர்? சந்திரனுக்குக் களங்கம் உண்டு; உமக்கு அதுவுமில்லை. ரோஜாவில் முள்ளுண்டு; உமது வாழ்க்கை முள்ளில்லாத ரோஜாவாயிற்றே. சுருதியுடன் சேர்ந்த சங்கீதம் போன்றுள்ள உமது வாழ்க்கையில் வசீகரம் இருக்கக் காரணமிருக்கிறதே தவிர விசாரத்துக்குக் காரணம் இல்லையே, அரண்மனை உம்மை அழைக்கிறது. மணிமுடி உமக்குச் சித்தமாக இருக்கிறது. கொலு மண்டபத்தில் மந்திரி பிரதானிகள், இளவரசர் என்றைய தினம் சிம்மாதனமேறுவார் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். வாழ்க்கை உம்மிடம் கொஞ்சி விளையாடுகிறதே. வலிய அணையும் சுகத்தைப் பெற்றும், வாட்டம் உமக்கு ஏன்?

சித்தார்த்தர்: நண்பா? என் சிந்தனையைக் கெடுத்து விட்டாய். நீ விவரித்த வசீகரங்கள் என்னை வாத்சல்யத்துடன் வரவேற்கின்றன. குதூகலமூட்டப் பலருண்டு. ஆனால் சந்திரனை கருமேகம் பிடித்து மறைப்பது போல், என் வாழ்க்கை வசீகரத்தை ஒரு வாட்டம் வதைக்கிறது. சந்திரன் மேகத்தை மிரட்டி அடித்து விட்டு மினுக்கிக் கொண்டு வரக் கண்டிருக்கிறேன். ஆனால் நானோ, வாட்டத்தினிடமிருந்து விடுதலை பெறுவது முடியாத காரியம்.

தோழன்: இளவரசே! சோகத்தின் காரணமென்ன? மன்னிக்க வேண்டும். மதனனின் கணைகள்.

சித்தார்த்தர்: சீச்சி! என் மனைவியின் அன்பென்னும் கேடயத்தின் முன்பு அக்கணைகள் கூர் மழுங்கிக் கீழே விழும். என்னை வதைப்பது அதுவல்ல.

தோழன்: வேறு காரணம் யாதாக இருக்கும்?

சித்தார்த்தர்: மல்லிகையும் மனோரஞ்சிதமும் தூவித் தானிருக்கிறது. பஞ்சணையின் மீது தென்றல் வீசுகிறது. நிலவு நடனமாடுகிறது! யாழ் ஒலிக்கிறது! ஆம்! இவ்வளவையும் நுகர்ந்து இன்பத்தில் ஈடுபட ஆவலோடு பஞ்சணைக்கருகில் சென்றால் மலரணை மீது மங்கை இல்லை. சீறும் நாகமிருக்கிறது. என் வாழ்க்கைப் பஞ்சணையில், சீறும் நாகத்தை நான் கண்டேன். கலக்கம் ஏற்படாதோ? கூறு.

தோழன்: சீரும் நாகம் எங்கே?

சித்தார்த்தர்: எங்கேயா? எங்கும் அதனைத்தான் காண்கிறேன். சுகம், போகம், ஆட்சி, அன்பு இவைகள் தவழும் வாழ்க்கைப் பஞ்சணையில் படுத்துக் கொண்டிருப்பது, வறுமை, மூப்பு, நோய், மரணம் என்னும் நாலு தலைகள் கொண்ட நாகம், அதனைக் கண்ட பிறகு எனக்கு வாழ்க்கைப் பஞ்சணையில் படுக்க மனமில்லை.

தோழன்: இதைத்தான் கூறினீரோ? நன்று நன்று! பால் போல் காயும் நிலவு சில நாள் தேயும், இருளும், ஒளியும், இன்ப துன்பமும் இயற்கைதானே? இதனை மாற்ற நாமா அதிகாரிகள்? சுகம் கிடைக்கும்போது அதனை நுகருவது, துக்கம் நேரிடும் காலையில் சகித்துக் கொள்வது என்பதைத் தவிர வேறு வழி ஏது?

சித்தார்த்தர்: புதுவழி காண்பேன். போகங்களைத் துறந்து, அரசை விட்டு நீங்கி, அலைந்து, திரிந்து, இன்பமும் துன்பமும், பிணைந்துள்ள முடியை அவிழ்த்துவிடும் வித்தையைக் கற்பேன். அந்தப்புரத்து அலங்காரியும் வேண்டாம், அரச போகமும் ண்டாம். உண்மை உணரும் வேலையில் ஈடுபடுவேன். தவசிகளை அடுப்பேன். அவர் தம் கருத்துக்களை செவி மடுப்பேன். நாலுதலை நாகத்தை நசுக்குவேன்.

****************************

புத்தருக்கும் அவரது தோழருக்கும் மேலே தீட்டியுள்ளது போன்ற பேச்சு நடந்திருக்கக்கூடும். இளவரசர் துறவியாகும் முன்னம் தமது தோழருடன் கலந்து பேசியிருப்பார். இல்லையேனும் அவருடைய மனத்திற்குள்ளாகவேனும் இத்தகைய கருத்துப் போர் நடைபெற்றுத் தான் இருக்கும். இறுதியில் சித்தார்த்தர் துறவு கோல் பூண்டார்! புத்தரானார்.

கருணை ததும்பும் பார்வையால் அவர் கசடர்களின் கல்மனத்தையும் கரைத்தார். புன்சிரிப்பால் புரோகிதரின் பொற்சிரிப்பைப் பொசுக்கினார். அன்பினால், ஆரியப் புரட்டல்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தார். கொலையை வேள்வி யென்றும், குருட்டுத் தனத்தைச் சாத்திரமென்றும், ஆபாச ஆட்டங்களை ஆண்டவன் பணி என்றும் சாதிச் சனியனை கடவுள் கட்டளை என்றும் கூறி மக்களைச் சிறைப்படுத்திய பார்ப்பனீயத்தைப் புத்தரின் புரட்சி, மூலைக்கு விரட்டி விட்டது. புத்த மார்க்கம் வஞ்சக வர்த்தகரை வீழ்ந்திற்று. ஆனால் . . .

இந்தியாவில் தோன்றிய புத்த மார்க்கம் இந்தியாவில் இல்லை! சீன நாட்டில் இருக்கிறது! புத்தரின் மறைவுக்குப் பிறகு புதருக்குள் மறைந்திருந்த ஆரிய அரவம் வெளிக் கிளம்பி மீண்டும் தனது விஷப் பல்லுக்கு வேலை தேடிக் கொண்டது. புத்தமதம் இந்தியாவிலே இடம் பெற்றிருந்திருப்பின், நாட்டு நிலையும், மக்கள் நிலையும் இப்போது இருப்பதைப் போல இருந்திருக்கும்.

அன்று சுதேசமித்திரன் எழுதியது, பாரதத் தாய் ஈன்றெடுத்த புத்தபகவான் உபதேச மொழிகளே சீனர் பின் பற்றும் மதம் இன்று, கோபால கிருஷ்ணரின் லீலைகளுக்கு மதிப்பைத் தரும் மித்திரனுக்கு இந்த வாசகங்களை எழுதும் போது துக்கமோ, வெட்கமோ ஏற்பட்டிருக்காது. பெருமையும் பூரிப்பும் உண்டாகி இருந்திருக்கும். புத்தரின் புரட்சி வேகத்தை நாடு கடத்தியவர்கள் நமது மூதாதையர்கள் என்ற எண்ணம் ஆசிரியருக்கு பூரிப்பையும் பெருமையையும் அளிக்கும். ஆனால் பார்ப்பனீயத்தால் பாழான நமக்கோ படிக்கும்போது வெட்கமும் துக்கமும் பிறக்கிறது. ஆரியச் சேற்றில் ஓர் சீரிய செந்தாமரை பூத்தது! அது சீனச் சீமைக்குச் சென்றுவிட்டது. பூத்த இடத்தில் மீண்டும் ஆரியச் சேறே இருக்கிறது. புத்த மார்க்கம் காட்டிய வழி செல்ல மறந்தோம்! வெட்கம்! துக்கம்! புத்தர் தமது அரசைத் துறந்தவர் மட்டுமல்ல, அவரது மார்க்கமும், அவரைப் போலவே இந்தியாவை விட்டு வெளியேறி சீனம் சென்றுவிட்டது.

இன்று பாரதத் தாயின் பிள்ளையான புத்தர் தந்த பொன்மொழிகளை சீனர் போதனையாகக் கொண்டு வாழ்கின்றனர் என்று கூறிய மித்திரன் அந்தப் பொன் மொழிகள் பிறந்த நாட்டிலே ஏன் நிராகரிக்கப்பட்டு விட்டன என்பதற்குக் காரணங் கூறுமா?

காசிக்கு அருகே, சாரநாத் என்று இடம் இருக்கிறது. அழகிய பாட்டை! வழியில் பெரும் பகுதியில் ஒரு வேப்ப மரம் அதன் பக்கத்திலே ஒரு மாமரம் என்று பாதை அமைந்திருக்கிறது. சித்தார்த்தர் உலகில் கசப்பும், இனிப்பும் ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டு நிற்பதைக் கண்டாரல்லவா? சாரநாத்தில் உள்ள புத்தர் கோட்டத்திற்குச் செல்லும் பாட்டையில் இதனை நமக்கு எடுத்துக் கூறுவது போல, வேம்பும் மாவும், ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக நின்று காட்சி தருகின்றன. கோட்டத்தை நெருங்குகையில், வேம்பு இல்லை, மாமரங்களே உள்ளன. சித்தார்த்தர் இன்பமும் துன்பமும் உள்ள வாழ்க்கைப் பாதையைக் கடந்து அறிவு உதயம் பெற்றதும் துன்பம் துடைக்கப் பெற்று ஈடிலா இன்பம் பெற்றார் என்று கூறுகிறார்களே. அதைச் சித்தரிப்பது போல் புத்தர் கோட்டத்தை அணுகும்போது பாட்டையில் இனி மாமரங்கள் மட்டுமே உள்ளன. புத்தர் கோட்டத்திலே ஜப்பான் சர்க்கார் தானமாகத் தந்த மணி தொங்குகிறது. கோட்டத்தை அடுத்தாற்போல் சீனச் செல்வர் ஒருவர் புத்தர் கோட்டமொன்று புதிதாக அமைத்துக் கொண்டிருக்கிறார்! அங்கு புத்த விக்ரகம் சீன உருவத்துடன் காணப்படுகிறது. சாரநாத்தில் சார்ந்த புத்தர், போதனை பல புரிந்தார். ஆனால் இன்று சாரநாத் பக்த கோடிகள் செல்லும் இடமாக இல்லை. அதை அடுத்துள்ள காசியே புண்ணிய க்ஷேத்திரமாக இருக்கிறது.

பாரதத் தாய் ஈன்றாள்; பராமரிக்கவில்லை. நான் வேறு வீடு சென்றேன் என்று சாரநாத்தில் உள்ள புத்த உருவம் கூறுவது போல், அந்த அநீதியைக் கேட்க ஆண்மையில்லையே உங்களுக்கு என்று கேலி செய்வது போல், புன்னகை புரியக் கண்டேன். அரச குடும்பத்தினர் நீர் புத்தரானீர்! உம்மையே பாடுபடுத்திற்றே பார்ப்பனீயம்! என்னை அது என்ன செய்யுமோ? என்று புத்தரிடம் கூற எண்ணினேன். பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கள் என்னுடன் இருந்தார். நேரமாகிவிட்டது உணர்ந்து தமது கைத்தடியைக் கீழே தட்டினார். சிந்தனையிலாழ்ந்து இருந்த நான் விழித்துக் கொண்டேன். காற்று அடித்துக் கொண்டிருக்கிறது! அந்த வெண்ணிறத் தாடி அசைந்து கொண்டிருந்தது! மீண்டும் புத்தரை நோக்கினேன். உம்மை பார்ப்பனீயம் நாடு கடத்தி இருக்கிறது. ஆனால் நீர் அன்று மூட்டிய புரட்சியை அடியோடு ஆரியம் ஒழித்து விடவில்லை. அதோ பாரீர், பார்ப்பனீயத்தின் வைரீ! என்று புத்தரிடம் பெரியாரைப் பற்றி நான் கூறவில்லை. என் மனதில் எண்ணிக் கொண்டேன். அதையும் அறிந்து, நன்று! நீதி நின்று வெல்லும். ஆனால் நிச்சயம் வெல்லும் என்று என்னை நோக்கி சாரநாத் புத்தர் கூறினது போன்றிருந்தது, அந்தப் புன்னகை!

--------------------- பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி-2

0 comments: