Search This Blog

5.12.08

சாதி ஒழிப்பில் மற்றவர்களுக்கும் பெரியாருக்கும் உள்ள வேறுபாடு



சாதியை அடியுடன் ஒழிப்பதே எமது இலட்சியம்!



காரைக்குடி நகரமன்றத் தலைவர் அவர்களே! துணைத்தலைவர் அவர்களே! அங்கத்தினர்களே! தாய்மார்களே! தோழர்களே!

இன்றைய தினம் காரைக்குடி மாநகருக்கு இயக்கத் தொண்டு ஆற்ற வந்த இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த நகராட்சி மன்றத்தின் சார்பாக என்னை வரவேற்று மனமானரப் புகழ் உரை கூறி வாழ்த்தி அருளியமைக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சம்பிரதாய முறைப்படி நீங்கள் வாசித்து அளித்த வரவேற்பு இதழுக்கு நன்றியறிதலைச் செலுத்திக் கொள்ளுவது மரபு.

உங்கள் வரவேற்பில் இரண்டு விஷயங்களைக் குறித்து உள்ளீர்கள். ஒன்று சாதிக் கொடுமையை ஒழிக்கப் பாடுபட்டு வருகிறேன் என்பதும், இரண்டாவது நான் இன்றைய காமராசர் ஆட்சியானது நிலைத்து வரப்பாடுபட்டு வருகிறேன் என்பது பற்றியும் குறிப்பிட்டு உள்ளீர்கள்.

இந்த இரண்டு கருத்துக்களுக்காகவே இப்போழுது நான் தொண்டாற்றி வருகிறேன். தினம் தினம் ஊர் ஊராகச் சுற்றிப் பாடுபடுகிறேன்.

சாதி ஒழிப்புத் தொண்டு என்பது பிற நாட்டவர்கள் கண்டு பரிகாசம் செய்யும்படியான தொண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சாதியைப் பாதுகாக்கிற கடவுளை, மதத்தை, சாஸ்திரங்களை, நடப்புகளை நாம் இன்னும் விட்டுக் கொண்டு இருக்கிறோம். இவற்றைக் கண்டு வெளி நாட்டுக்காரர்கள் பரிகாசம் பண்ணும்படியாகவே உள்ளோம்.

2000- ஆண்டுகளாக நமது மான உணர்ச்சி பற்றியோ, அறிவு வளர்ச்சி பற்றியோ கவலைப்படாமல் சாதி இழிவைத் தாங்கிக் கொண்டே இருந்து வந்துள்ளோம். இன்றைக்குத் தான் சாதி ஒழிப்பு உணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

எங்குப் போனாலும் நான் சாதி ஒழிப்புக்காகப் பாடுபடுவது கண்டு ஏதோ மகத்தான பெரிய வேலையை நான் செய்ததாக எண்ணிப் பாராட்டுகிறார்கள். இதிலிருந்து சாதி ஆணிவேர் எவ்வளவு தூரம் ஊன்றி இருக்க வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

சாதி ஒழிப்புப் பற்றிப் பலர் பேசினாலும் கூட சாதி ஒழிப்பு விஷயத்தில் பலரும் என்னைத் தான் காட்டுகிறார்கள். காரணம் சாதிக்குக் காரணமாக எவை எவை ஆதாரமாக உள்ளனவோ அவற்றை ஒழிக்கும்படியான தொண்டுதான் நான் செய்து வருகிறேன்.

இன்றைய தினம் பறையனுக்கு வீடு கட்டிக் கொடுப்பது, பறையனைச் சட்டசபை மெம்பர் ஆக்குவது – என்பதன் மூலம் சாதி இழிவு ஒழிந்து விடும் என்று கருதுகிறார்கள். இது நோய்க்குப் பரிகாரமே ஒழிய, நோயே வராமல் தடுக்க நோய்க்கு ஆதாரமானது என்னவோ அதை ஒழிக்கப் பாடுபடுவதே இல்லை.

சாதி என்றால் எதனால் வந்தது? இதற்கு ஆதாரம் என்ன? என்று பார்க்க வேண்டும். இந்தத் தமிழ்நாட்டில் சாதி இழிவைப் போக்க பாடுபட்டவன் எல்லோரும் மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள். மற்றவனுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள் அல்ல! நானோ, மலேரியாவுக்குக் காரணமானது கொசு. கொசு எங்கு வசிக்கிறது? கசுமாலத்தில். கசுமாலத்து (அழுக்கு) க்குக் காரணம் தண்ணீர்த் தேக்கம் என்பதைக் கண்டு இதை இல்லாமல் தடுக்கும் வைத்தியன் போன்றவன்.
நான் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுகிறேன் என்றால், சாதிக்கு எவை எவை ஆதாரமாக உள்ளனவோ அவற்றை கடவுள், மதம், சாஸ்திரங்கள் இவற்றை ஒழிக்கப் பாடுபடுவதாகும்.
என்ன செய்தாவது, எந்தப் பாவத்தைச் செய்தாவது சாதியை ஒழிக்க வேண்டும் என்பது எங்கள் இலட்சியமாகும்.


மக்கள் எதைச் செய்தாவது சாதியை ஒழிக்க முன்வர வேண்டும். சாதி ஒழியக் கடவுள் ஒழியும் என்றால் தயங்காமல் ஒழிக்க வேண்டும்.

எங்களுக்கும் (திராவிடர் கழகத்தினர்) கடவுளுக்கும் சண்டை இல்லை. அதன் (கடவுளின்) பேரைச் சொல்லி நம்மை இழிமக்களாக, மடையனாக இருக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்?

அதுபோலவே மதம் என்ன மதம்? சாதியை ஒழிய ஒட்டாமல் நம்மை (தமிழ் மக்களை) இழிமக்களாக ஆக்கி கட்டிக் காக்க வல்லது மதம் என்றால் அதை ஒழித்துத்தானே ஆகவேண்டும்?

இதுதான் சாதி ஒழிப்பில் மற்றவர்கள் செய்யும் தொண்டுக்கும் எங்களுக்கும் (தி.க) உள்ள வித்தியாசம்.

இப்படிப்பட்ட தொண்டு செய்யக்கூடிய எனக்கு இத்தகைய வரவேற்பு, மரியாதைகள் எல்லாம் நடைபெறுவது கண்டு மக்கள் அறிவு பெற்று விட்டார்கள் என்றே கருதுகின்றேன்.


-----------------23.10.1961- அன்று காரைக்குடியில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு- "விடுதலை" 04.11.1961. நூல்:-"பெரியார் களஞ்சியம்" தொகுதி - 15-(ஜாதி-தீண்டாமை: பாகம் - 9) பக்கம் 75 - 77

0 comments: