Search This Blog

8.12.09

பெரியார் கொள்கையை பரப்புவோம் பாதுகாப்போம்


பாராட்டு விழாவில் தமிழர் தலைவர்

பெரியார் கொள்கையை பரப்புவோம், பாதுகாப்போம் என்று சிங்கப்பூர் கலைச்செல்வம் பாராட்டு விழாவில் (சென்னை, பெரியார் திடல், 7.12.2009) தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.

தமிழர் தலைவர் பாராட்டு

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது பாராட்டுரையில் குறிப்பிட்டதாவது:

சிங்கப்பூரின் நிலையைப் பற்றி எனக்கு முன்னாள் பேசிய நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் மிகச் சிறப்பாக எடுத்துச் சொன்னார்கள். நமது நாட்டில் காலையில் ஒரு கட்சியில் இருக்கலாம்.மாலையில் இன்னொரு கட்சியில் சேரலாம். தமிழ் நாட்டில் கட்சி தொடங்குவதற்கு எந்த உச்சவரம்பும் கிடையாது. தமிழ் நாட்டில் கட்சி தொடங்குவது சுலபம். கட்சி மாறலாம். மதம் மாறலாம். ஜாதி மட்டும் மாற முடியாது. ஒருவர் ஒரு கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கலாம்.

அப்படி கட்சித் தொடங்கி நடத்த முடியவில்லை யென்றால் இன்னொரு கட்சியுடன் அடுத்து இணைப்பு விழா நடத்தி இணைந்து கொள்ளலாம்.

1929 இல் சிங்கப்பூரில் பெரியார்

ஆனால் சிங்கப்பூர் நாட்டில் எல்லாம் அந்த மாதிரி எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு கட்டுப்பாடு உள்ள நாடு. தந்தை பெரியார் அவர்கள் 1929 இல் சிங்கப்பூருக்குச் சென்ற பொழுது சிங்கப்பூரில் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அய்யா அவர்கள் பல இடங்களில் அன்றைக்குப் பிரச்சாரம் செய்தார்.

திராவிடர் கழகம் 1944 இல் தொடங்கப்பட்டது.

சுலபமாகத் தொடங்க முடியாது

சிங்கப்பூரில் புதிதாக எந்த ஒரு அமைப்பையும் சுலபமாகத் தொடங்கி விட முடியாது. எந்த அமைப்பைத் தொடங்க நினைத்தாலும் அந்த அமைப்பைப் பற்றியும், அதன் நோக்கம் பற்றியும், அதன் சட்ட திட்டங்களைப் பற்றியும் சிங்கப்பூர் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். சிங்கப்பூர் அரசு அதை உளவுத் துறை மூலம் கண்காணிப்பார்கள். ஆராய்வார்கள். அப்படிப் பார்த்த பிறகுதான், அந்த நாட்டு மக்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் வராது என்று தெரிந்தவுடன்தான் ஓர் அமைப்புக்கு அனுமதி கொடுப்பார்கள்.

பெரியார் கொள்கைகளை நேரடியாகப் பரப்ப அங்கு வாய்ப்பில்லை. ஓட்டலிலோ மற்ற இடங்களிலோ விருந்து நிகழ்ச்சி என்கிற பெயரில்தான் பேச முடியும்.

சிங்கப்பூர் முன்னோடிகள்

மலேசியாவில் பதிவு செய்த அமைப்பே இப்பொழுது ரத்தாகிவிட்டது. சிங்கப்பூரில் முதியவர்களாக இருந்து தந்தை பெரியார் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு தொண்டாற்றியவர்கள் சிங்கப்பூர் மூர்த்தி, முருகு சீனிவாசன், நாகரத்தினம் போன்றவர்கள்தான் தொண்டாற்றி வந்தார்கள்.

அவர்கள் எல்லாம் மறைந்த பிறகு ஒரு தேக்கம் ஏற்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இடையில் ஏற்பட்டத் தொய்வைப் போக்க, கழகத்தைப் புதுப்பித்திட நினைத்த பொழுதுதான் சில இளைஞர்கள் வந்தார்கள்.

துடிப்பானவர் வீ.கலைச்செல்வம்

அப்படி வந்த இளைஞர்களில் மிகவும் துடிப்பானவராகவும், வேகமாகவும் இருந்தவர்தான் சிங்கப்பூர் வீ. கலைச்செல்வம் அவர்கள் ஆவார்கள்.

வயது குறைந்த இளைஞர்களை எல்லாம் சேர்த்து சிங்கப்பூரில் ஓர் அமைப்பைத் தொடங்க ஆலோசனை கூறினோம். அங்கு இருக்கின்ற எல்லோருமே தொழில், வசதி வாய்ப்பு உள்ளவர்களாகத்தான் இருக்க முடியும்.

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தைத் தொடங்கி கலைச்செல்வம் அவர்களே தலைவராக இருந்து மற்ற பொறுப்பாளர்களை நியமித்து செயல்படுங்கள் என்று நான் சொன்னேன். அவர் தலைவராக இருந்து மற்ற பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

சிங்கப்பூர் கலைச்செல்வம் யார் என்றால் நமது முருகு சீனிவாசன் அவர்களுடைய மகன் எங்கள் மகள் மலையரசியின் துணைவராவார்.

நானும் சத்யராஜூம்!

இந்த அமைப்புத் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு என்னையும் ‘இனமுரசு’ சத்யராஜ் அவர்களையும் அழைத்து விழா நடத்தினார்கள்.

அதற்குப் பிறகு தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்று இப்படித் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்த அங்கு மெல்ல மெல்லப் பெரியார் கொள்கையைப் பரப்பி வருகிறார்கள்.

கலைச்செல்வம் அவர்கள் மற்றவர்களால் பெரிதும் மதிக்கப்படக்கூடியவர். அவருக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டது. இந்த முறை நாங்கள் சென்ற பொழுது பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தினார்கள். அவர்களே வசூல் செய்தார்கள். சிங்கப்பூர் கலைச்செல்வமும், அவரது வாழ்விணையர் மலையரசி அவர்களும் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கைகளைக் கொடுத்து இப்படி விழா நடக்கிறது. இயன்றால் நிதி தாருங்கள். இல்லையேல் விழாவுக்குத் தவறாமல் வாருங்கள் என்று அழைத்தார்கள்.

அவ்வளவு கூட்டம்

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியைப் பார்த்த பொழுது வியந்து போனோம். இதுவரை இல்லாத அளவுக்குக் கூட்டம். வந்திருந்தவர்கள் நிற்கவே இடமில்லை. குண்டூசி போட்டால் கீழே விழமுடியாத அளவிற்கு அவ்வளவு கூட்டம்.

அந்த விழாவிலே பெரியார் விருதை வழங்கச் செய்தார்கள். அதுவும் ஒரு பெண்மணிக்கு முதல் விருதை வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். சிங்கப்பூரில் தேசிய நூலகத்தில் மிகப் பெரிய அதிகாரியாக இருப்பவர் புஷ்பலதா என்ற அம்மையாருக்கு விருது வழங்கி பெரியார் கொள்கைக்குப் பெருமை சேர்த்தார்கள். அதை எல்லோரும் பாராட்டினார்கள்.

மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி நடத்தினார்கள். வரும் ஜனவரியில் சடுகுடு போட்டி நடத்த இருக்கிறார்கள்.

ஷிண்டா என்ற அமைப்பின் மூலம் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கினார்கள்.

பணம் குவிந்த நிகழ்ச்சி டி.வி.யில்

பெரியார் சமூக சேவை மன்றத்தின் நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் பல லட்சக் கணக்கான வெள்ளி ரூபாய் திரண்டது என்று சிங்கப்பூர் தொலைக்காட்சி ரிப்பனில் தொடர்ந்து போட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால் அந்த நிகழ்ச்சி எவ்வளவு சிறப்பாக நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.முருகு சீனிவாசன், மலையரசி, கலைச்செல்வம் குடும்பம் நமது இயக்கக் குடும்பம்.

குவைத்தில் பெரியார் கொள்கை

குவைத்தில் செல்லபெருமாள் அவர்கள் பெரியார் நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கே வாழும் அவர் மிகுந்த ஒழுக்கமான, நேர்மையாளர். அவர் குவைத்திற்கு என்னை அழைத்து நமது கொள்கை பரவாத நாடான குவைத்தில் பெரியார், அண்ணா விழாவை ஏற்பாடு செய்து என்னைப் பேச வைத்தார். அங்கும் நமது கொள்கைக்குப் பெருத்த ஆதரவு கிடைத்தது.

மியன்மா

அதே போல பர்மா என்றழைக்கப்படக் கூடிய மியன்மாவில் வீரா. முனுசாமி என்ற பெரியார் பெருந்தொண்டர் அவருக்கு நாம் சமுக நீதி விருது கொடுத்தோம். அங்கு (பர்மா) சுயமரியாதை இயக்கத்தை இன்றைக்கும் சிறப்பாக நடத்தி வருகிறார்.

மலேசியா

அதே போல மலேசியாவில் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி இருந்த பொழுது என்னை ஒரு மாதம் தங்க வைத்து நிகழ்ச்சிகளை பல இடங்களில் ஏற்பாடு செய்து பிரச்சாரம் பரவிட பாடுபட்ட மிகச் சிறந்த மனிதர். மலேசியாவிற்கு நான் போய் பிரச்சாரம் செய்யாத இடமே இல்லை.

அமெரிக்காவில்

அதே போல அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களும் இலக்குவன்தமிழ் அவர்களும் பெரியார் கொள்கைகளை மிகச் சிறப்பாகப் பரப்பி வருகிறார்கள். வாஷிங்டனில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் ஆகியோர்களிடம் பெரியார் கொள்கை பரவிட பாடுபட்டு வருகிறார்கள். பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்பதற்கு இதுதான் அடையாளம்.

கிறிஸ்துவ மதம் பரவ யார் காரணம்?

கிறிஸ்து மதம் எப்படி பரவியது? ஏசுநாதர் சொன்னார், ஏசுநாதர் சொன்னார் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் அந்த கிறிஸ்துவ மதத்தை உலகம் பூராவும் பரவச் செய்த அவருடைய அருமையான சீடர் செயின்ட் பால் என்பவர்தான் காரணமாகும். கிறிஸ்துவத்தை அவர்தான் முழு மூச்சாகப் பரப்பினார்.

நம்முடைய கடமை இப்பொழுது பெரியார் கொள்கையைப் பரப்புவது மட்டும் முக்கியமல்ல. பெரியார் கொள்கையைப் பாதுகாப்பதே முக்கியம். பொதுத் தொண்டிற்கு மானஅவமானம் பார்க்காதவர்கள்தான் நம்முடைய கலைச் செல்வம், மலையரசி அவர்கள். அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்ற வேண்டும். அந்த அளவுக்குக் கொள்கையில், நிகழ்ச்சிகளில் ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.

தந்தை பெரியாருக்குப் பிடித்த குறளே

‘‘குடிசெய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்’’

என்ற குறள்தான்.

அந்த வகையிலே கொள்கையிலே நூற்றுக்கு நூறு மார்க் வாங்கக்கூடிய இவர்கள் அடுத்த தலைமுறையையும் தயார் படுத்திவிட்டது மிகுந்த பாராட்டுதலுக்குரியது. நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது; வேறு எவராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும். கலைச்செல்வம், மலையரசி வாழ்விணையர்களை இந்த நேரத்தில் மனதாரப் பாராட்டி வரவேற்கிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

--------------------நன்றி:-"விடுதலை" 8-12-2009

0 comments: