Search This Blog

10.12.09

விதியை மாற்றிய வித்தகர் பெரியார்

விதியை மாற்றிய
வித்தகரின் பயணம்

(இதே நாளில்தான் தந்தை பெரியார் 1929 ஆம் ஆண்டில் இன்றைக்குச் சரியாக 80 ஆண்டு களுக்கு முன் மலேசிய மண்ணில் காலடி பதித்தார். அடேயப்பா, எவ்வளவு பெரிய எதிர்ப்புகள் 80 ஆம் ஆண்டை ஒட்டி இந்தச் சிறப்புக் கட்டுரை - கட்டுரையாளர் முனைவர்: இரா.குறிஞ்சிவேந்தன், இணைப் பேராசிரியர்)

1833 ஆம் ஆண்டு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அடிமை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்க நாட்டு அடிமைகள் விடுதலை பெற்றனர். ஆனால், ஆப்பிரிக்க அடிமைகள் உதறிச் சென்ற அடிமைச் சங்கிலியில் பூட்டப்படுவதற்குப் பொருத்தமானவர்களாக, உலக வல்லாதிக்கங்கள் தேர்வு செய்த இனம், தமிழினம். அன்று தொட்டு, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்க நாடுகளின் கரும்பு வயல்கள், ஈயச் சுரங்கங்கள், தேயிலை, ரப்பர்த் தோட்டங்களில் தமிழர்களை நாற்றாக நடும் பணி இருநூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து நடைபெற்றது. இவ்வாறு தமிழர்கள் லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளுள் மலேசிவும் ஒன்று. இரப்பர்த் தோட்டங்களில், கூலிகளாகத் திரிந்த இத்தமிழரின் வரலாறு கண்ணில் நீர் கசிய வைப்பதாகும்.

மலேசியத் தோட்டப் புறங்களில் தமிழர்கள் கால்பதித்து நூறாண்டுகள் கழிந்திருந்த நிலையில், அவர்களின் கண்களில் வழிந்த நூற்றாண்டுக் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தமிழ் மண்ணிலிருந்து இரு கரங்கள் நீண்டன. ஆங்கிலேயரின் காவல் மிகுந்திருந்த அம்மலை நாட்டில் வேற்று மனிதர்கள் நுழைவதென்பது நினைத்துப் பார்க்க முடியாத காலம் அது. ஆனால் அஞ்சாநெஞ்சத்துடன் அலைகடலுக்கு அப்பால் சென்று, தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கும் துணிவு ஒரே ஒரு தலைவரிடம் நிறைந்து இருந்தது. அத் தன்னிகரில்லாத தலைவர், தந்தை பெரியார் ஆவார். மலேசிய நாட்டிற்கு தந்தை பெரியார் இருமுறை பயணித்திருக்கிறார். அந்த இரு பயணங்களுமே, வரலாற்றை வாழ வைக்கும் இணையற்ற காவியங்களாகும்.

1929 - மலேசியாவில் தந்தை பெரியார் தடம் பதித்த ஆண்டு ஏற்கெனவே, பெரியாரின் இனவுணர்வு, ஜாதி ஒழிப்பு, மதுவிலக்கு ஆகிய சீர்திருத்தக் கொள்கைகள் அந்நாட்டின் நகர்ப்புறங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தன. ஆனால், தோட்டப் புறங்களில் இருந்த தமிழர்களிடையே, தமிழகத்திலிருந்த அனைத்துப் பிற்போக்கு சிந்தனைகளும் நீக்கமற நிறைந்து கிடந்தன. அங்கே ஜாதி உணர்வு தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. தோட்டங்களில் புகைந்து கொண்டிருந்த தமிழர்களின் ஜாதி உணர்வுக்கு எண்ணெய் ஊற்றி அம்மக்களிடையே ஆங்கிலேயர்கள் மேலும் பிளவினை உருவாக்கினர். ஜாதி அடிப்படையில் வீடுகள், ஆலயங்கள், சுடுகாடுகள் போன்றவற்றை அமைத்து, கப்பலில் ஒன்றாக வந்த மக்களை, மலையகத்தில் தனித்தனியாக ஆங்கிலேயர்கள் பிரித்து வைத்திருந்தனர். இச்சூழ்நிலையில், மலேசியாவில் மலாயாத் தமிழர் சீர்திருத்த மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு, அம்மாநாட்டைத் திறந்து வைக்கப் பெரியாரை அழைப்பதெனவும் அங்கிருந்த சீர்திருத்தவாதிகள் தீர்மானித்தனர்.

பெரியார் மலேசிய மண்ணில் அடியெடுத்து வைத்த நிகழ்வைச் சுவையான சம்பவங்கள் நிறைந்த சாகசப் பயணம் எனலாம். பெரியாரை மலேசியாவுக்கு அழைத்து வந்தால், உள்ளத்தால் பிரிந்து கிடக்கும் தமிழர்கள் ஒன்றுபடுவார்களென சிறந்த பகுத்தறிவாளரான அ.சி.சுப்பையா, தமிழவேள் கோ. சாரங்கபாணி, திரு. கா. தாமோதரனார், திரு கோ. இராமலிங்கம், பெரியவர் கோவிந்தசாமி போன்றோர் எண்ணினர். ஆனால் பெரியாரை நாத்திகவாதி என்று கூறி அவரை மலேசியாவுக்குள் வரக்கூடாதென ஒரு பிரிவினர் தடுப்பு வேலைகளில் ஈடுபட்டனர். அவர்கள் ‘தமிழ்நேசன்’ நாளிதழில் பெரியாருக்கு எதிராகக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டனர். பினாங்குத் துறைமுகத்தில் வந்து நிற்கும் கப்பலிலிருந்து பெரியாரை இறங்கவிடக் கூடாதென்று அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துப் பரப்புரையும் செய்தனர்.

தமிழகத்திலிருந்து தந்தை பெரியாரைத் தாங்கி வந்த ‘ராஜூலா’ என்ற கப்பல் பினாங்கு துறைமுகத்தில் வந்து நின்றது. ஆனால் பெரியார் கப்பலில் இருந்து இறங்குவதற்கு ஆங்கிலேய அரசு அனுமதி மறுத்தது. பெரியாரோ, பினாங்கில் இறங்கியே தீர்வதென்பதில் மிக உறுதியாக இருந்தார். இச்செய்தி, சிங்கப்பூரில் விழா ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த அ.சி.சுப்பையா, கோ.சாரங்கபாணி ஆகியோரின் காதுகளில் விழுந்தது. எவ்வாறேனும் பெரியாரை மலேசியாவுக்குள் கொண்டு வந்துடுவோமென சூளுரைத்து, அவர்கள் பினாங்கு புறப்பட்டனர். பினாங்கில் இருந்த சமுதாய நலத் தொண்டராக சுவாமி அற்புதானந்தாவின் உதவியுடன், ஆங்கிலேய அரசின் இந்திய முகவரான அப்துல் காதரை சந்தித்துப் பேசினர். பின்னர் காவல்துறையினருடன் விவாதித்து, பெரியாரைத் தரையிறக்குவதற்கு அனுமதி பெற்றனர்.

10.12.1929 அன்று காலை 10 மணிக்கு, பெரியார், அவர்தம் துணைவியார் திருமதி நாகம்மையார், திருவாளர்கள் எஸ்.இராமநாதன், பொன்னம்பலனார், சாமி.சிதம்பரனார், சி. நடராசன், சொக்கலிங்கம், என்.பி. காளியப்பன் ஆகியோர் கப்பலில் இருந்து இறங்கியபோது, அங்கே கவலையோடு பெரியாருக்காகக் காத்திருந்த அய்ந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெருத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர். பெரியாரின் கழுத்தினை ஏழைத் தமிழர்களின் மாலைகளும், பொன்னாடைகளும் நிறைத்தன. பினாங்கில் இறங்கக் கூடாதென்று எதிர்ப்புக் காட்டியவர்களே திகைத்துப் போகும் அளவுக்கு அவருக்கு மக்கள் வரவேற்பு அமைந்திருந்தது.

பெரியாரின் தலைமையில் 29.12.1929 அன்று ஈப்போ நகரில் நிகழ்ந்த மலாயாத் தமிழர் சீர்திருத்த மாநாடு, மலேசியத் தமிழர்கள் வாழ்வில் புதிய வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. அம்மாநாட்டில் பெரியார் ஆற்றிய மூன்று மணிநேர உரை, அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தில் தன்மானக் கனலை மூட்டியது. தமிழரிடையே நிலவும் ஒற்றுமையின்மை, கருத்து வேறுபாடுகள், மூடக் கருத்துகள் போன்றவை, எப்படித் தமிழ்ச் சமூகத்தின் ஓட்டப்பாதையில் தடைக் கற்களாகக் குவிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஜாதி ஒழிப்பைத் தான் தொடங்கிய கால கட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்களேஅதை எதிர்த்ததையும், கல்வியறிவு இல்லாததாலேயே பாமர மக்கள் எந்தப் பக்கம் இழுத்தாலும் செல்லக்கூடிய நிலைக்கு ஆட்படுகிறார்கள் என்றும், அவர் எடுத்துக் கூறினார். மெல்லியப் பஞ்சினைத் தீயின்அருகில் கொண்டு சென்றால் எவ்வாறு பஞ்சு பற்றிக் கொள்ளுமோ, அதுபோல படிப்பறிவில்லாத பாமர மக்களிடம் கடவுளை மறுக்கிறவன் வருகிறான் என்று புரளியைக் கிளப்பி விட்டால், அவர்கள் எதிர்க்காமல் என்ன செய்வார்கள்? என்று தன்னை எதிர்த்தவர்களுக்கு ஆதரவாகப் பெரியார் கேள்வியெழுப்பினார். அம்மாநாட்டு உரைகளால் தமிழர்கள் மட்டுமல்லாது, இந்திய முஸ்லிம்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் ஆகியோரும் பேரெழுச்சி பெற்றனர்.

அப்பயணத்தில் மலேசியாவில் பினாங்கு நகரம் முதல் சிங்கப்பூர்வரை ஏறத்தாழ 71 இடங்களில் பெரியார் உரையாற்றினார். அவர் பேசிய இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கூடியிருந்து செவிமடுத்தனர். தொலை தூரத்திலிருந்த பல்வேறு தோட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்காக தொழிலாளர்கள் அவரின் பேச்சைக் கேட்பதற்காக ஒவ்வொரு நாளும் திரண்டு வந்தனர். தோட்டங்களில் அடிமைகளாக உழன்று கொண்டிருந்த தொழிலாளர்களின் அகக்கண்களைப் பெரியாரின் பேச்சுக்கள் திறந்துவிட்டன. நாளது வரை, இந்தியாவிலிருந்து எத்தனையோ தலைவர்கள் மலேசிய மண்ணுக்கு வந்துள்ளனர். அத்தகையவர்கள் இந்தியாவைப்பற்றி அம்மக்களிடையே பேசினரேயன்றி, அத்தொழிலாளர்களின் பரிதாப வாழ்க்கை குறித்து எதுவும் பேசியதில்லை. ஆனால், பெரியார் ஒருவரே, அத் தொழிலாளர்களின் இதயத்தில் முதன்முதலாக சுயமரியாதைச் சுடரை ஏற்றி வைத்தார். தமிழ்நாட்டிலிருந்து ‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ ஆகிய ஏடுகள் கப்பல் மூலமாக மலேசியாவுக்குள் வரவழைக்கப்பட்டபோது, அச்சுடர் மேலும் கொழுந்து விட்டெரிந்தது.

ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின், 1954 ஆம் ஆண்டு பெரியார் மீண்டும் மலேசியாவுக்கு வருகை தந்தார். இடைக் காலத்தில் அங்கிருந்த தமிழர்கள் நேதாஜி தலைமையில் இந்திய விடுதலைக்காகப் போரிட்டும், ஜப்பானியர் ஆட்சியில் அளவில்லாத துன்பங்களைச் சந்தித்தும் என வெவ்வேறு அனுபவங்களைப் பெற்றிருந்தனர். மேலும் மலேசியாவில் அப்போது விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அச்சூழ்நிலையில் அங்கே பெரியார் வருகை தந்தபோது, அவரும்கூட மாறிப் போயிருந்தார். ஆம்! இம்முறை வெண்தாடி வேந்தராக ஆளுமை நிறைந்த உருவத்துடன் கம்பீரமாக அம் மக்கள்முன் பெரியார் காட்சியளித்தார். மலேசியாவின் பல நகரங்கள் மற்றும் தோட்டப் புறங்களுக்குச் சென்ற பெரியார், மதுவினால் சீரழியும் தமிழர்களின் வாழ்க்கை நிலையைக் கண்டு வேதனையுற்றார். மதுவின் தீமையையும், சிக்கனமாக வாழ்வதன் நன்மைகளையும் எடுத்துக் கூறி அம்மக்களைத் தட்டி எழுப்பினார்.

தோட்டப்புற மக்கள் வாழ்வில் உயர்வதற்குக் கல்வியறிவு முக்கியமென வலியுறுத்தினார். மலேசியாவின் நகர்ப்புறத்தில் வாழும் செல்வம் படைத்த இந்தியர்கள், கல்வி நிலையங்களை ஏற்படுத்தி ஏழை இந்திய மக்களுக்குக் கல்வியளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். எண்ணிக்கையில் பெரும்பான்மையராய் இருக்கும் ஏழைத் தொழிலாளர்கள் முன்னேறினால்தான், ஒட்டுமொத்த இந்தியர்கள் மீதும் மலேசியாவில் மதிப்பு ஏற்படுமென பெரியார் எடுத்துரைத்தார். இருபதாம் நூற்றாண்டில் உலக நாடுகள் எல்லாம் வளர்ச்சிப் பாதையில் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழர்கள்மட்டும் மூடநம்பிக்கைளில் சிக்கி உழலும் கொடுமையை அவர் சுட்டிக்காட்டினார். அன்பும், மற்றவர்களுக்கு உதவும் கருணை உள்ளமும், ஒழுக்கமுமே உண்மையான கடவுள் நெறி என்று அவர் ஆற்றிய உரை, தமிழர்கள் மட்டுமின்றி அங்கிருந்த இந்தியர்கள் அனைவரின் ஆழ்மனத்தையும் தொட்டது.

தன் இரண்டாவது பயணத்தில், பெரியார் வலியுறுத்திய செய்தி மிக ஆழமானது. மலேசியாவில் வாழும் தமிழர் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரும் மலேசியாவைச் சொந்த நாடாகக் கருதி மெய்யான உணர்வோடு உழைத்திடல் வேண்டும். உழைப்பதிலும், பாடுபடுவதிலும் பின்தங்கிவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். பெரியாரின் தீர்க்க தரிசன உரை, இந்தியர்களை மட்டுமின்றி ஆங்கிலேயர்கள், மலாய் இனத்தவர், சீனர்கள் என அனைவரின் மனத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தின.

பெரியாரின் பயணத்திற்குப் பின், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் வியப்பூட்டும் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆங்கிலேய துரைமார்கள் எதிரில் வந்தால், மிதிவண்டியிலிருந்து இறங்கி ஒதுங்கி நின்ற தமிழ்த் தொழிலாளர்கள் துணிவோடு மிதிவண்டியை நிறுத்தாமல் சென்றனர். அவர்கள் எதிரே வந்தால் அணிந்திருந்த செருப்புகளைக் கையில் எடுத்து ஓரமாக நின்ற தமிழ்த் தொழிலாளர்கள், இப்போது கம்பீரமாக அணிந்திருந்த செருப்புகளுடன் தொடர்ந்து நடந்தனர். சொல்லப் போனால், மண்ணோடு மண்ணாகக் கிடந்த மனிதர்களை, மானமிகு மனிதர்களாகப் பெரியாரின் பயணங்கள் செதுக்கி அமைத்தன. பெரியாரின் பாதம் அம்மண்ணில் பதியாமலிருந்திருந்தால், அம்மக்களின் கண்ணீர், ரப்பர்ப் பாலோடு சேர்ந்து கரைந்து, கால வெள்ளத்தில் காணாமல் போயிருக்கும்!

(10.12.2009 அன்று பெரியார் மலேசிய மண்ணில் கால் பதித்த எண்பதாம் ஆண்டு நினைவு நாள்)

------------------நன்றி:-"விடுதலை" 10-12-2009

0 comments: