உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன- காங்கிரஸ் எம்.எல்.ஏ
என் அடியை அளந்து வைக்கிறேன்-அண்ணா
பெருந்தன்மை, இரக்க குணம் கொண்ட அண்ணா பற்றி தமிழர் தலைவர் விளக்க உரை
உங்கள் நாள்கள் எண்ணப்படுகின்றன என்றார் காங்கிரஸ் எம்.எல்.ஏ, என் அடியை அளந்து வைக்கிறேன், என்றார் அண்ணா பெருந்தன்மை, இரக்க குணம் கொண்ட அண்ணா பற்றி தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கி பேசினார்.
குவைத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 16.10.2009 ஆற்றிய உரையின் 28.11.2009 அன்றைய தொடர்ச்சி வருமாறு:
அண்ணா அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து பல கருத்தரங்கங்களை நடத்த வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
அண்ணா அவர்களது ஆங்கிலப் பேச்சு எல்லாவகையிலும் சிறப்பானதாக இருக்கும். நாடாளுமன்றத்தில் அண்ணா பேசுகிறார்
பண்டித நேரு அவர்கள் நாடாளுமன்றத்திலே பேசிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது எதிர்க் கட்சியினர் அமர்ந்து உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மொழிப்பிரச்சினை பற்றி அப்பொழுது பேசப்படுகிறது. மெஜாரிட்டி மக்கள் பேசுகிற மொழி இந்தி மொழி தான். ஆகவே நீங்கள் இந்தியை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு என்று நேரு இந்தி பேசாத மாநில எம்.பிக்களைப் பார்த்துப் பேசினார்.
அண்ணா அவர்கள் அதற்கு ஆங்கிலத்திலே உதாரணத்தோடு பதில் அளித்து சொன்னார் இந்தியாவின் தேசிய பறவை எது என்று நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?.
இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பது காக்கைகள்தான் (கைதட்டல்). ஆனால் நீங்களோ மயிலைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.
ஆகவே இந்த மொழிப் பிரச்சினையில் பெரும்பான்மை, சிறுபான்மை என்பது முக்கியமல்ல என்று விளக்கமளித்தார். அண்ணா அவர்கள் பேசும்பொழுது நேரமாகிவிட்டது என்று சபாநாயகர் மணி அடித்தார்.
எங்களுடைய நேரத்தையும் எடுத்துக்கொள்ளட்டும் உடனே எதிர்கட்சித் தலைவர் பூபேஷ்குப்தா மற்றவர்கள் எழுந்து சொல்லுகிறார்கள். எங்களுடைய நேரத்தையும் அண்ணா அவர்களுக்குக் கொடுக்கின்றோம்.
அவர் பேசட்டும் என்று சொன்னார்கள். பாராளுமன்ற வரலாற்றிலே இவைகள் எல்லாம் ரெக்கார்டாக இருக்கிறது. அண்ணா அவர்களின் ஆங்கில கருத்துகளால் அனைவரும் ஈர்க்கப்பட்டனர்.
அதே போல தமிழக சட்டமன்றத்திலும் கூட அண்ணா அவர்கள் பதற்றமில்லாமல் பேசியவர் அது ஆங்கிலமாக இருந்தாலும், தமிழாக இருந்தாலும் பதற்றமில்லாமல் பேசக் கூடியவர்.
முதலமைச்சர் அண்ணா சட்டமன்றத்திலே இருக்கின்றார். எதிர்கட்சித் துணைத் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நண்பர் விநாயகம் ஆத்திரப்பட்டு கோபத்தோடு அண்ணா அவர்களைப் பார்த்து சொல்லுகின்றார்.
உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன
Your days are numbered என்று. நண்பர்களே! அந்த நேரத்திலே அண்ணா அவர்கள் உடல் நிலை சரியில்லாத நிலையில் இருக்கின்றார். அந்த நிலையிலே அண்ணா அவர்களுடைய மனதை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர் இரண்டு அர்த்தத்தில் இப்படிச் சொல்லுகின்றார். தி.மு.க எம்.எல்.ஏக்கள் எல்லாம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விநாயகம் பேசியதைப் பார்த்து ஆத்திர மடைகின்றனர்.
விநாயகம் பேசியது ஆட்சியையும் குறிக்கும், அண்ணாஅவர்களுடைய ஆயுளையும் குறிக்கும். அண்ணா மற்றவர்களை கையமர்த்திவிட்டு சொன்னார். My steps are measured என்று (பலத்த கைதட்டல்). என்னுடைய ஒவ்வொரு அடியையும் அளந்து வைக்கிறேன். அதனால் எனக்கொன்றும் குறைவு வராது. பல பதில்கள் அண்ணா அவர்களிடமிருந்து நகைச்சுவையாக வரும்.
சட்டமன்றத்திலே அண்ணா அவர்கள் கலகலப்பை உண்டாக்குவார். காங்கிரஸ்காரர்கள் வேகமாக கேட்பார்கள் விலைவாசியைப் பற்றி. சட்டமன்றத்திலே பொருள்களின் விலையை படித்துக் கொண்டே வந்தார் அண்ணா. உடனே காங்கிரஸ்காரர் வம்புக்காக ஒரு கேள்வியை எழுந்து கேட்டார்,
புளி விலை குறைந்தது யாருடைய சாதனை?
புளி விலை குறைந்திருக்கிறதே அது யாருடைய சாதனை என்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அண்ணா அவர்களைப் பார்த்துக்கேட்டார்.
அதற்கு முன்னாலே இருந்த எங்களுடைய ஆட்சியின் சாதனை என்று தான் சொல்லுவார் என்று எதிர்பார்த்தார்கள். உடனே அண்ணா அவர்கள் பளிச்சென்று பதில் சொன்னார்,
அது புளியமரத்தின் சாதனை என்று சொன்னார்கள் (கைதட்டல்). அவ்வளவு நகைச்சுவையாகப் பதில் சொல்லுவார். இப்படி எல்லா துறைகளிலும் அண்ணா அவர்கள் பதில் சொன்னார். அவர் மாதிரி தனித்தன்மையுடன் பதில் சொல்லக்கூடிய ஆற்றல் வேறு எவருக்கும் கிடையாது. மிகப் பெரியவராகத் திகழ்ந்தவர் அண்ணா.
காரணம், தந்தை பெரியார் அவர்களிடத்திலே அவர் பயின்ற பாடம். அதனாலே அவர் பெற்ற மிகப்பெரிய வெற்றி.
அண்ணா தலைச்சிறந்த மனிதாபிமானி அதோடு மட்டுமல்ல; அண்ணா அவர்கள் தலைசிறந்த ஒரு மனிதநேயர். பதவிகள் வரும் போகும். பட்டங்கள் வரலாம், பெறலாம். பதவியாளர்கள் இருக்கின்றார்கள். மனிதர்களைத் தேடுகின்ற நேரத்திலே கிடைப்பதில்லை.
அந்த மாதிரி நம்முடைய சமுதாயத்தில் ஒரு பிரச்சினை. மாமனிதராக அண்ணா அவர்கள் திகழ்ந்தார்கள். அண்ணா அவர்களுடைய உள்ளம் இரக்க உள்ளம். அண்ணா அவர்களுடைய எழுத்துகள் அவருடைய இரக்க உள்ளத்தைப் பிரதிபலித்திருக்கிறது.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும். என்று அண்ணா அவர்கள் அற்புதமான ஒரு சொற்றொடரை எடுத்துச் சொன்னார்கள்.
போப்பை சந்திக்க அண்ணாவுக்கு விருப்பம்
ஒரே ஒரு செய்தியைச் சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்ய விரும்புகின்றேன். முதலமைச்சர் அண்ணா அவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று விட்டுத் திரும்புகிறார். அண்ணா அவர்களுக்கு ஒரு விருப்பம். ரோமாபுரி தலை நகரமான வாடிகன் தலைநகரிலே இருக்கின்ற போப் ஆண்டவரைப் பார்க்க வேண்டும் என்று.
உடனே அதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அண்ணா அவர்களோ ஒரு பகுத்தறிவுவாதி. இவர் என்ன போப் ஆண்டவரிடம் போய் பேசப் போகிறார் என்று கேள்வி. அண்ணா அவர்கள் வாடிகன் போப் அவர்களை சந்திக்கச் செல்லுகின்றார். போப் அவர்கள் அண்ணா அவர்களை வரவேற்கின்றார்.
இரண்டு பேருமே மரியாதையோடு பேசிக் கொண்டார்கள். அப்பொழுது போப், உங்களுக்கு ஏதாவது தேவையா, என்று கேட்டார். ஒன்றுமில்லை. ஒரு சிறு விண்ணப்பம் என்று அண்ணா அவர்கள் சொன்னார்.
ஆயுள் தண்டனை கைதி ரானடே
போர்த்துகீசிய அரசாங்கம், கோவாவைச் சேர்ந்த ரானடே என்பவர் அரசாங்கத்தை எதிர்த்தார் என்பதற்காக அந்தத் தோழருக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது.
ரானடே என்ற அந்தத் தோழர் போர்த்துகீசிய சிறையிலே வாடிக்கொண்டிருக்கின்றார். தயவு செய்து உங்களால் முடிந்தால் கருணை காட்டுங்கள். அவர் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து விட்டார். ஆயுள் தண்டனை என்றால் அவர் சிறையிலேயே மறைந்து போகக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
எனவே போப் ஆண்டவர் அவர்களே! அவரை நீங்கள் விடுதலை செய்ய உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அண்ணா அவர்களுக்கு அறிமுகமாகாதவர் ஏனென்றால், அந்த நாடு கத்தோலிக்க நாடு போப் அவர்களே உங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ரானடே மனிதரை விடுதலை செய்ய உதவி செய்யுங்கள்; அந்த மனிதரின் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டார். போப் அவர்கள் அதைச் செய்தார். ரானடே என்பவர் எங்கோ இருக்கக் கூடியவர். அண்ணா அவர்களுக்கு முன்பின் அறிமுகமாகாதவர். செய்தியைப் படித்துவிட்டு அந்த உணர்வுகளை போப் அவர்களிடம் சொல்லுகின்றார். மற்றவர்களாக இருந்தால் போப் அவர்களிடம் இது கொடுங்கள்; அது கொடுங்கள் என்று கேட்டிருப்பார்கள். ஆனால் அண்ணா அவர்கள் அப்படி எதையும் கேட் கவில்லை. போப் உத்தரவிட்டார்
போப் அவர்கள் உத்தரவால் ரானடே அவர்களை உடனே விடுதலை செய்தார்கள். தனக்கு அறிமுகமே இல்லாத ஒரு தலைவர் எனக்காக வாதாடினார் என்றால் நான் எவ்வளவு நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும். என்று ஓடோடி அண்ணா அவர்களைப் பார்த்து நன்றி சொல்ல தமிழ்நாட்டிற்கு ரானடே வந்தார். அப்போது அண்ணா உயிருடன் இல்லை. அவருடைய நினைவிடத்திற்குச் சென்றார் ரானடே.
அண்ணா புதைந்துபோனார்; ரானடே கதறி அழுதார்
அண்ணா புதைந்து போனார். ரானடேவோ கதறி அழுதார். இந்தக் காட்சிகள் எல்லாம் எதைச் சொல்லுகின்றன. மனிதநேயத்தின் மறு உருவமாக அண்ணா அவர்கள் திகழ்ந்தார்கள். அப்படிப்பட்ட அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடுவது வெறும் விழாக் கோலத் திற்காக அல்ல, வெளிச்சம் போட்டு நாம் கொண்டாடுவது வெறும் விழாக்கோலம் காண்பதற்காக அல்ல.
சாமான்யர்களின் சகாப்தத்தை மாற்ற
எந்தக் கொள்கைக்காக எந்தச் சமுதாய மாற்றத்திற்காக, நான் ஒரு சாமான்யன் என்னைப் போன்ற சாமான்யர்களுடைய சகாப்தத்தை மாற்ற வேண்டும் என்று கருதினார்களோ அதற்காகவே தன்னுடைய வாழ்நாள் முழுக்க பாடுபட்டவர் அண்ணா.
நாம் அனைவரும் அண்ணாவைப் பாராட்டுவது பெருமை அல்ல, முக்கியமல்ல. அண்ணா அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை, சிறப்பு. தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாள் விழாவை நாம் கொண்டாடுவதன் நோக்கம் அவர்கள் எல்லாம் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தார்களோ, அந்தக் கொள்கையை நாமும் கடைப்பிடிப்போம், ஏற்போம் என்று கூறி இந்த நிகழ்ச்சியில் இவ்வளவு பொறுமையாக அமர்ந்து கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி அண்ணாவைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆழமான கருத்தரங்கங்கள் தேவை. அதனை சிறப்பாக நடத்துங்கள் என்று கூறி, நீண்டநேரம், உட்கார்ந்திருக்கின்றதானது அனைவரின் பெருந்தன்மையையும், மனிதத் தன்மையையும் காட்டுகிறது என்று கூறி என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி, வணக்கம். இவ்வாறு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
---------------------"விடுதலை" 2-12-2009
0 comments:
Post a Comment