Search This Blog

24.12.09

மூல பலத்தை நோக்கிப் போர் புரிவதுதான் பெரியார் முறை


‘‘பொட்டைக் காடுகளின்’’ புலம்பல்!

தந்தை பெரியாரின் தமிழ் மண்ணில் 21 ஆம் நூற்றாண்டில் 10 ஆண்டுகள் காலடி எடுத்து வைக்கப்பட்ட இந்தக் கால கட்டத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களின் தெருக்களில் தேரோட்டம் நடத்தலாமா? நடத்தக்கூடாதா? என்ற கேள்வி எழுந்திருப்பது வெட்கப்படத் தக்கதாகும்.

தாழ்த்தப்பட்டவர்கள் பொது வீதிகளில் நடக்கக்கூடாது, உணவு விடுதிகளில் நுழையக் கூடாது, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது; பேருந்துகளில் பயணம் செய்யக்கூடாது; பள்ளிகளில் அமர்ந்து படிக்கக்கூடாது; கோயிலுக்குள் செல்லக்கூடாது என்கின்ற தடைகள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு, சட்ட ரீதியாகவே இந்த உரிமைகள் எல்லாம் அனைவருக்கும் உண்டு என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. தந்தை பெரியாராலும், நமது இயக்கத்தாலும், கோயில் கருவறைக்குள் சென்று தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட அனைவருக்கும் அர்ச்சனை செய்ய உரிமை உண்டு என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்காகப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கிடைத்திட்ட ஒரு கால கட்டம் இது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொட்டைக்காடு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு வீதிகளில் கோயில் தேர் சென்றிட கோயில் நிருவாகிகள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். இதுவும் ஒரு வகையான தீண்டாமைக் கண்ணோட்டம் என்பதால், தடை செய்பவர்களைத் தீண்டாமை ஒழிப்புக் குற்றத்தின் கீழ் தண்டிக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது.

அந்த நிலையை எட்டுவதற்கு முன் மாவட்ட வருவாய் அதிகாரி இரு தரப்பிலும் பேசி ஒரு சுமுகமான சூழலை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் ஜாதி ஆணவக்காரர்களுக்கு, கோயில் நிருவாகிகளுக்கு உயர்நீதிமன்றம் வாய்ப்பு ஒன்றை தாராளமாகக் கொடுத்திருக்கிறது என்றே கருதவேண்டும். இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் அவர்களுக்கும் நல்லது; - ஊரின் பொது அமைதிக்கும் உகந்தது.

வேறு சில ஊர்களில் இது போன்ற பிரச்சினைகள் எழுந்ததுண்டு; பிறகு சமாதானமான முறையில் காரியங்கள் நடைபெற்றதும் உண்டு.

இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று அடிக்கடி அழைக்கும் இந்து முன்னணிக்காரர்களும், ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளும் இந்த இடத்திற்கு வராமல் எங்கு போய் ஒளிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்கள்தான். அவர்கள் குடியிருக்கும் பகுதியில் கண்டிப்பாகத் தேரோட்டம் நடைபெறவேண்டும் என்று குரல் கொடுக்க ஏன் முன்வரவில்லை? இல்லாவிட்டால் அவர்களுக்கு கைவந்த யாகங்களை நடத்தி, ஆண்டவன் அனைவருக்கும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சலாமே! அந்த வகையிலும் ஏன் அவர்கள் முயற்சிக்கவில்லை என்ற இரண்டாவது கேள்வியும் எழுகிறது.

இந்து மதம் 2010 பிறக்கும் தருணத்திலும் தன்னுடைய நஞ்சு உமிழ்தலை நிறுத்தவில்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

இதற்கு மேலும் மூல காரணத்தை இந்த இடத்தில் ஆராய்வது அவசியமாகும். கிராமங்களில் இன்றும் இரு பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒன்று தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதி; இன்னொன்று மேல்ஜாதி என்று கருதப்படுவோர் வாழும் பகுதியாகும். இந்தத் தனித்தனி இருப்பிடங்கள் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். இந்தத் தனித்தனி முறை என்பது பழைய சமூக அமைப்பை நிலை நிறுத்தும் அடையாளங்களாகும். இதில் இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால், சேரியில் வாழும் மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும், வேறு இடத்தில் வாழும் மக்கள் குடியானவர்கள் என்றும் அழைக்கப்படுவதாகும். அப்படியென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் குடி மக்கள் இல்லையா? எவ்வளவு ஆழமாக, பேதங்கள் என்ற காயங்கள் ஊடுருவியிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

வேறு எப்பொழுதும் சிந்திக்க மறந்தாலும், தந்தை பெரியார் அவர்கள் நினைவு நாளான இன்று இது குறித்து சிந்திக்கவேண்டும். சேரிகளும் கூடாது; மேட்டுக் குடியிருப்புகளும் கூடாது. இரு கூறுப் பகுதிகள் கூடவே கூடாது.

இந்த அடையாளங்கள் மிச்சசொச்சமின்றி முற்றிலும் அழிக்கப்பட்டாக வேண்டும். சமநிலைக் குடியிருப்புகளை அரசே முன்னின்று உருவாக்க வேண்டும். இந்த வகையில் தீர்வு காணப்படாத வரை பொட்டைக் கிராமங்கள் விழுந்து விழுந்து முளைத்துக் கொண்டேதானிருக்கும்.

மூல பலத்தை நோக்கிப் போர் புரிவதுதான் தந்தை பெரியார் முறை என்றார் அறிஞர் அண்ணா. அது இந்த நாளில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நல்ல சிந்தனையாகும்.


-------------------- “விடுதலை” தலையங்கம் 24-12-2009

0 comments: