Search This Blog
9.12.09
எல்லோரையும்விட இயக்கம் முக்கியம் -இயக்கத்தைவிட மக்கள் முக்கியம்
ஒற்றுமை முழக்கம்
திராவிடர் கழகத்திற்கு பகுத்தறிவுக் கொள்கைகள் உண்டு; பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டுப் படையெடுப்பை முற்றிலும் எதிர்க்கும் நேர் கொண்ட பார்வையுண்டு.
பெண்ணுரிமை என்பது ஆண்களுக்கு நிகராக அனைத்துத் தடங்களிலும் தேவை என்பதில் சமரசத்துக்கு இங்கு இடம் இல்லை.
சமதர்மம், சமத்துவம், இழைந்தோடும் வருண, வருக்கப் பேதமற்ற ஒப்புரவு சமூகப் படைப்பு என்பது இதன் இலட்சியம்.
அரசியலில் இன்னார் இனியார் என்ற பேதமின்றி, தமிழர் நலன் என்ற எடை தட்டுதான் அதை நிர்ணயிக்கும்.
தமிழர்களின் ஒற்றுமையைக் கட்டுவதில் கழகத்திற்கு எப்பொழுதுமே முதல் இடம் உண்டு.
தி.மு.க. பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் தனிக் கழகம் காண முயன்றபோது தந்தை பெரியார் தடுத்தாட் கொண்டார்; எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தும் பேசினார். தலைக்கு மேல் போயிற்று, தந்தை பெரியார் என் செய்ய!
கலைஞர் அவர்களுக்கும், டாக்டர் நாவலர் அவர்களுக்கும் கருத்துராய்வு ஏற்பட்ட நேரத்தில் அன்னை மணியம்மையார் அவர்கள் இருவரையும் அழைத்துப் பேசிய சந்தர்ப்பமும் உண்டு.
தி.மு.க. அ.தி.மு.க. இணைப்புக்கு உரத்த முறையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் முயற்சித்ததுண்டு, எம்.ஜி.ஆர். அவர்களின் தோட்டத்திற்கே சென்று கலந்துறவாடினார்.
1) கழகத்தின் பெயர் தி.மு.க.வாகவே இருக்க வேண்டும்.
2) கொடியில் அண்ணா படம் இருப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
3) எம்.ஜி.ஆர். அவர்களே முதல் அமைச்சராகத் தொடரட்டும்; கலைஞர் கட்சியின் தலைவராகட்டும் என்கிற அளவுக்கு இணைந்து வந்தபோது, வெண்ணெய்த் திரண்டு வந்த நேரத்தில் தாழியை உடைத்த தம்பிரான்கள் உண்டு.
இணையதான் வேண்டாம்; காங்கிரசுடன் கூட்டுச் சேர்வதைவிடகலாச்சாரக் கொள்கை தமிழர் இனவுணர்வு என்னும் தடத்தில் இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்தால் என்ன என்ற ஒரு சிந்தனையைத் தூவியவர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.
1980 பிப்ரவரியில் அப்படியொரு, சிந்தனையோட்டம்! தேவி இதழுக்கு வெளிப்படையாகப் பேட்டியே கொடுத்தார்.
கேள்வி: தி.மு.க. அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்க தமிழினப்பற்று கொண்ட தாங்களும், கி.ஆ.பெ. போன்ற பெரியவர்களும் முயற்சி செய்வீர்களா?
வீரமணி பதில்:
எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதோ இல்லையோ. ஆசையிருக்கிறது பெரும்பான்மையான தமிழர்களைப் போலவே! எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக இருந்த குடும்பம்தானே அது என்று தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1984 இல் மீண்டும் இதேபோல ஒரு சிந்தனை திராவிடர் கழகப் பொதுச் செயலாளரிடம்.
11.11.1984 நாள் ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்தது. அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டு உறுதியென்றும், மக்களவைத் தேர்தலில் 40 இடங்களில் (புதுவையயும் சேர்த்து) மூன்றில் இரு பங்கு இடங்கள் காங்கிரசுக்கென்றும் தகவல்கள் கசிந்தன.
நாவலர் இரா. நெடுஞ்செழியன் டெல்லி சென்றார் பிரதமர் இந்திரா காந்தியை இரு முறை சந்தித்தார்.
அந்த நேரத்தில் திராவிடர் கழகம் எடுத்த நிலை என்ன?
நாடாளுமன்றத் தேர்தலில் இ. காங்கிரசுக்கு மூன்றில் இரண்டு பங்கினைத் தாரை வார்த்து அரிசியும், உமியும் கலந்து ஊதி ஊதித் தின்னும் கேலிக் கூத்தான முயற்சிக்குப் பதில் அ.தி.மு.க.-வின் அமைச்சர்களும், தோழர்களும், பொறுப்பாளர்களும் துணிந்து முடிவுக்கு வந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒரு தொகுதி உடன்பாடு செய்து கொண்டு, தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாக பெரும்பாலும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவர்களே வரக்கூடிய நல்வாய்ப்பினை உருவாக்கினால், அது எதிர்காலத்தில் இரண்டு கழகங்களுக்குமே சிறப்பானதாகவும், தமிழ்நாட்டின் நலனைக் காப்பாற்றுவதாகவும் ஆகும்.
கொள்கை உடன்பாடு இல்லாத காங்கிரசோடு கூட்டு சேரத் தயாராக இருக்கும்போது, ஒரே கொள்கை, ஒரே பாரம்பரியம் உள்ள இயக்கத்தின் இரு வேறு கூறுகளில் உள்ளவர்கள் ஒன்றாக இணைய முன் வராவிட்டாலும்கூட இந்தத் தொகுதி உடன்பாடு போன்ற குறைந்தபட்ச பணியையாவது செய்ய முன் வரக்கூடாதா?...
இப்போது திராவிட இயக்கங்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளை வெல்ல வேண்டுமானால், ஊடுருவல்களைத் தடுக்க வேண்டுமானால், பிரித்தாளும் பகைவர்களுக்குப் பலியாகாமல் புதிய திடமான முடிவை எடுக்க வேண்டும்.......
அரசியலுக்கு அப்பாற்பட்ட பல பெரியவர்கள் விவரம் தெரிந்தவர்கள் ஆசை இதுதான்! அறிவுரையும் எல்லோருக்கும் இதுதான்! எனவே அடுத்த தேர்தல் பற்றி மட்டும் சிந்திக்கின்ற அரசியல் கட்சிகளாக இல்லாமல், அடுத்த தலைமுறை பற்றி மட்டும் சிந்திக்கின்ற பொது நலவாதிகளாக இரண்டு அணி சகோதரர்களும் இருக்க முன்வர வேண்டும் என்று தாய்க் கழகத்தின் பாசத்தோடு, பரிவோடு, கவலையோடு இதை ஒரு பிரார்த்தனை வேண்டுகோளாக முன் வைக்கிறோம், துணிச்சலுடன் எதிர்காலம் கருதி நல்லமுடிவு எடுங்கள்
தமிழின மக்கள் பேராதரவு என்ற குடை உங்களுக்குத்தானே வந்து நிற்கும் என்று இன்றைக்கு கால் நூற்றாண்டுகளுக்குமுன் தனது 54 ஆம் அகவையிலே எடுத்து வைத்த இனமானச் சிந்தனைத் தலைவராக விளங்கியவர்தான் இன்றைய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள். அந்தச் சிந்தனை அவரை விட்டு அகன்றதில்லை திராவிட பார்முலா என்ற ஒன்றைக்கூட அறிமுகப்படுத்தினார்.
1993 அக்டோபரில் தி.மு.க.வில் மற்றொரு பிளவு வை. கோபால்சாமி அவர்களை மய்யப்படுத்திய பிளவு; அது.
உடல் நலம் நலிவுற்றிருந்த நிலையிலும் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் ஓடோடிச் சென்று வைகோவைச் சந்தித்து சமரசம் செய்கிறார். திமுக தலைவர் கலைஞர்அவர்களிடம் வேண்டுகோள்களை முன் வைத்தார். எல்லோரையும்விட இயக்கம் முக்கியம்; இயக்கத்தைவிட (மக்கள்) இனம் முக்கியம். எத்தரப்பிலும் ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகள்பற்றி மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று பதறப் பதற வேண்டுகோள் விடுத்தார். (விடுதலை 9.10.1993)
பரஸ்பர குற்றச்சாற்றுகள் மற்றும் பதில்கள் இவைகளுக்கு இதுவா நேரம்? திராவிடர் கழகம் தி.மு.க.வின் தாய்க் கழகம் என்ற பாசத்துடன் எப்போதும் பிரச்சினையை அணுகும் உரிமை நமக்கு உண்டு என்பதாலும், மற்றவரைவிட லட்சியத்தில் மிகவும் அருகில் உள்ள தமிழ் இனவுணர்வு பாசறை அது என்பதாலும் அதற்கு ஏற்படும் சங்கடமும் நமக்கு ஏற்படும் சங்கடம் என்று தாய்க் கழகத்தின் தசை ஆடியதை, குருதிக் கொத்தளித்ததை இந்த எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தினார்; தமிழர் தலைவர் என்பதற்கு பொருத்தமான நம் தலைவர் கண்ணியக் குறைவாகப் பேசுவது, கொடும்பாவிகளைக் கொளுத்துவது இவற்றைக் கைவிடுங்கள், கைவிடுங்கள் என்று கண்ணீர் மல்க அறிக்கைவிட்டார்.
தந்தை பெரியார் அவர்கள் சிந்தனை ஊற்றில் பூத்த மலர் அல்லவா அதனால் தான் அந்தப் பதைபதைப்பும் இனமானத் துடிதுடிப்பும்!
உறவுள்ள ஒர் இயக்கம் உரிமையோடு கேட்கிறது என்ற நிலையை முக்கியமான இடங்களில் எல்லாம் எடுத்தவர் இவர்.
1997 ஜூலை தென் மாவட்டங்களில் முக்குலத்தோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் ஜாதிக் கலவரம் கொலைகள், தீயிடல்கள், சூறையாடல்கள் என்று மனிதத் தன்மைக்கு எதிரான கோரத்தாண்டவங்கள்.
அந்தக் கால கட்டத்திலும் கம்பீரமாகக் குரல் கொடுத்தவர் ஆசிரியர்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்கள் ஆனாலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர்கள் ஆனாலும் நாம் அனைவரும் ஒரு மண்ணின் மைந்தர்கள் என்ற உணர்வினை ஊட்டியாக வேண்டும். கிராமங்களில் தோற்றுவிக்கப்பட்ட பகை உணர்ச்சிப் பேயை விரட்டியாக வேண்டும் (விடுதலை 20.7.1997) என்று அறிக்கை வெளியிட்டார்.
அத்துடன் நிற்கவில்லை அதனோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கவும் இல்லை.
நமது இயக்கம் திராவிடர் கழகம்கூட இந்த இரு சாராரின் பிரச்சினைகளையும், பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து, தக்க சமரசம் கண்டு, அனைத்து மக்களையும் காப்பாற்ற என்றென்றும் சித்தமாக உள்ளது. எங்களுக்கு ஓட்டு அரசியல், பதவி அரசியல் கண்ணோட்டம் இல்லை. எனவே எந்த சந்தேகப் பார்வையும் இன்றி இரு சகோதரர்களும் ஒப்புக் கொண்டால், நாங்கள் என்றென்றும் அதற்குத் தயாராக உள்ளோம்.
எங்களின் உள்ளத்தில் வடியும் இரத்தக் கண்ணீரை அதன் மூலம் துடைத்துக் கொண்ட ஆறுதல் எங்களுக்குக் கிடைக்கும் என்பதைத் தவிர எங்களுக்கு இதனால் வேறு சுயநலம் லாபம் இல்லை! சகோதரர்களே, தாராள மனதுடன் முன் வாருங்கள் என்று இருகரம் நீட்டினாரே!
முசுலிம்லீக் அமைப்பில் நாவலர் அப்துல் சமது அவர்களுக்கும், பன்மொழி புலவர் அப்துல் லத்திப் அவர்களுக்குப் பிளவு ஏற்பட்ட அமைப்பும் இரண்டாகச் சிதறிய தருணத்தில் தொடக்க முதல் அதனை இணைத்து வைக்க இன்முகம் காட்டியவரும் மானமிகு வீரமணி அவர்களே!
இணைப்பு ஏற்பட்ட நிலையில், அப்துல் சமது அவர்கள் முதலில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததும் தமிழர் தலைவர் அவர்களிடத்தில்தான்.
அரசியலைத் தூக்கி எறிந்து தமிழர் ஒற்றுமை என்னும் பதாகையைத் தூக்கிப் பிடித்து தமிழா இனவுணர்வு கொள்! தமிழா தமிழனாக இரு! என்ற முழக்கங்களை மூச்சு உள்ளவரை முழங்கும் ஒரே தலைவர் தந்தை பெரியார் வழி வந்த தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களே!
பகுத்தறிவுப் பாதையில் திராவிடர் கழகத்தின் இன்னொரு பக்கம் பயணம் செயல் பணி என்பதும் இதுவே ! அதனை தந்தை பெரியார் வழியில் தமிழர் தலைவர் வீரமணி மிகச் சரியாகவே செய்துவருகிறார்.
--------------கவிஞர் கலி. பூங்குன்றன் பொதுச் செயலளார், திராவிடர் கழகம் -"உண்மை" டிசம்பர் 1-15_2009
Labels:
பெரியார்-மின்சாரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment