முசுலிம்கள் மற்றும் பிற சிறுபான்மை மக்களுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் 5 பேர்கள் அடங்கிய குழு ஒன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை மக்களவையில் கடந்த 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
அவ்வறிக்கையில் முசுலிம் மற்றும் சிறுபான்மை மக்களின் அவல நிலை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக முசுலிம்களின் கல்வி நிலை, இடை நிறுத்தம், தாழ்த்தப்பட்டவர்களைவிட மோசமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு கருத்தை அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. பொருளாதார முன்னேற்றம் என்பது கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைகின்றது. அறிவை மேம்படுத்துவது மற்றும் போட்டித் தன்மையை வளர்த்துக் கொள்வது என்பதெல்லாம் அவற்றிற்குரிய வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்பதை அக்குழுவின் அறிக்கை மிக அழகாக, ஆழமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
வாய்ப்புக் கொடுக்கப்படாமல் கல்வியின் தரத்தை எப்படி நிர்ணயிக்க முடியும்?
அதனால்தான் முசுலிம்களுக்கு 10 சதவிகிதமும், பிற சிறுபான்மையினருக்கு 5 சதவிகிதமும் அரசு பணிகளிலும் இட ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கை மக்களவையில் வைக்கப்பட்டதுதான் தாமதம், வழக்கம்போல பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் “விட்டேனா பார்’’ என்று வில்லிலிருந்து கிளம்பும் அம்புபோல தோள் தட்டி, தொடை தட்டிக் கிளம்பிவிட்டது. சிறுபான்மை மக்களின் வாக்குகளைக் கவரத்தான் இந்த ஏற்பாடு என்று உள்நோக்கம் கற்பிக்கின்றன.தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு மூன்றரை சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதற்கே தங்களின் கொடுக்கை நீட்டி விஷத்தைக் கொட்டினர் என்றால், 10 சதவிகிதம் அளிக்கப்படவேண்டும் என்றால், சும்மாவா இருப்பார்கள்?
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு அளிப்பதையே எதிர்த்து வந்தவர்கள். உண்ணாவிரதம் இருந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிரதமர் வி.பி. சிங் அறிவித்தபோது, அந்த ஆட்சியையே கவிழ்த்தவர்கள் ஆயிற்றே!
இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்களைக் கைதூக்கிவிட கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கே எதிர்ப்பாக இருந்தவர்கள், தங்களின் ஜென்மப் பகைவர்களாகக் கருதும் முசுலிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்று ஓர் ஆணையத்தின் அறிக்கை கூறுமேயானால், அவர்கள் அதனை வரவேற்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
பார்ப்பனர்கள் வெகுமக்களால் ஒதுக்கப்படுவதற்கும், வெறுக்கப்படுவதற்கும் காரணமே, அவர்களின் இத்தகைய குரூரமான பிற்போக்கு மனப்பான்மைதான்.ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான அறிக்கை மட்டுமல்ல, நீதிபதி சச்சார் தலைமையிலான குழுவும் முசுலிம்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் எந்த அளவு பின் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை விளக்கிக் கூறியுள்ளது.
2001 மக்கள் தொகைக் கணக்கின்படி எல்லாச் சிறுபான்மையினரின் எண்ணிக்கை 19.5 விழுக்காடாகும். அதில் முசுலிம்கள் மட்டும் 13.4 விழுக்காடாகும். சிறுபான்மையினரில் முசுலிம்களின் விழுக்காடு 68.7 என்பது கவனிக்கத்தக்கது.
தொடக்கக் கல்விக் கூடத்தில் (2006_07) 13.20 கோடி முசுலிம் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றால், உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும்போது இந்த எண்ணிக்கை (2007_08) 5.09 கோடியாகச் சரிந்துவிடுகிறது. அதற்கு மேலும் கல்லூரி படிப்பு என்கிற போது பெரும் வீழ்ச்சியைக் காண முடிகிறது.
ஒவ்வொரு சமூகமும் எந்த அளவு விகிதாச்சாரத்தைப் பெற்று இருக்கிறது என்பதற்கு ஜி.இ.ஆர். (Gross Enrollment Ratio) குறிப்பிடுகிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது உயர்கல்வியில் கிறித்துவர்கள் 19.85; சீக்கியர்கள் 17.81; இந்துக்கள் 13.13; முசுலிம்கள் 7.7; இந்துக்களில் தாழ்த்தப்பட்டோர் 7.37.இந்த நிலையைக் கணக்கில் கொண்டால், முசுலிம்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்கிற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கையின் நியாயத்தை உணர முடியும், புரிந்துகொள்ளவும் முடியும்.
---------------------"விடுதலை” தலையங்கம் 22-12-2009
1 comments:
அன்பு நண்பரே,
இந்த சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கின்ற முஸ்லிம்களின் நிலையை தெளிவாக எடுத்து கூறி, அவர்களும் இந்த சமுதாயத்தில் அவர்களுக்குறிய இடத்தை கல்வி அறிவின் மூலம் அடைய வேண்டும் என்பதை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தெளிவாக தன்னுடைய அறிக்கையில் சுற்றி காட்டி இருக்கிறார்.
இதை பொறுத்து கொள்ள முடியாத,சங்க பரிவார், R.S.S,பா.ஜ.க.ஹிந்து முன்னணி போன்ற அமைப்புகள் விஷத்தை கொட்டி இருகின்றன.அவர்களுக்கு உங்களின் இந்த கட்டுரை, சவுக்கடியாக இருக்கட்டும்.
நன்றியுடன்
அபுல்பசர்
Post a Comment