Search This Blog

15.12.09

பகுத்தறிவுவாதிகளும் வாழ்வியல் சிந்தனைகளும்

தன்னம்பிக்கைக்குத் தூண்டா விள்க்கு!

‘‘மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்’’ போன்ற நூல்களை மதவாதிகளே எழுதுவதிலிருந்து கடவுள் நம்பிக்கையோடு, தனி மனித மனப் பயிற்சியும் அவசியம் என்று அவர்களே நம்புவதாகத் தெரிகிறது. அப்படியெனில் பகுத்தறிவுவாதிகளும் தங்கள் கண்ணோட்டத் திலிருந்து இத்தகைய நூல்களை எழுதுவது நல்லது. தி.க.தலைவர் வீரமணி அவர்கள் இந்த வகையில் ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்திருக்கிறார். வாழ்வியல் சிந்தனைகள் என்கிற அவரின் நூல், வாழ்வை எதிர்கொள்ளும் மனத் தெம்பையும் உளவியல் நுணுக்கங்களையும் கூறுகிறது.’’

(‘செம்மலர்’, ஏப்ரல் 2004)

நாத்திகர்கள் மனித சமூகத்திற்கு எத்தகைய நல் வழிகளைக் காட்டுகின்றனர், - உலகில் ஒவ்வொரு நாளும் பூக்கும் பல்வேறு மலர்களின் மணங்களைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம்.

கடவுளை மற மனிதனை நினை என்றார் தந்தை பெரியார். மனிதனை நினைக்கும்போது, அவன் மகத்தானவனாக உருவாவதற்குத் தேவையான தன்னம்பிக்கை, பகுத்தறிவு இவற்றுடன் நாட்டில் நிறைந்து நிற்கும் தகவல்கள், பொருள்களும் அவன் கவனத்திற்குக் கொண்டு வரப்படுவது அவசியமாகும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தெரிந்து கொள்ள, ஏன் கடைப்பிடிக்க, ஒரு மனிதன் பல நூல்களைப் படிக்க வேண்டியிருக்கிறது; படித்தவற்றை அசை போட்டு சாறு பிழிந்து கொடுக்க வேண்டியுள்ளது. அந்த மகத்தான தொண்டற அறிவுப் பணியைத்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் செய்திருக்கிறார்.

‘செம்மலர்’ சொல்லுவது போல பகுத்தறிவுவாதிகளின் பணிகளில் இதுவும் முக்கியமான கூறே! வாழ்வியல் சிந்தனைகள் வரிசையில் இதுவரை அய்ந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. மிகப் பெரிய அளவில் இவ்வரிசைக்கு வரவேற்பு கிடைத்தது. எல்லைகளைத் தாண்டி தமிழ் படிக்கத் தெரிந்த பன்னாட்டு மக்கள் மத்தியில் பரிமளம் வீசுகிறது.

இப்பொழுது ஆறாவது தொகுப்பு தந்தை பெரியார் நினைவு நாளில் வெளிவர இருக்கிறது. அதையும் சேர்த்தால் இவ்வரிசையில் 500 கட்டுரைகள் அணிசெய்கின்றன.

இந்த ஆறாவது தொகுதியைப் பொறுத்தவரை இதன் உள்ளடக்கம் இவ்வாறு அமையும்.

மனிதம்_2

உழைப்பு-_4

திறமை_1

தொண்டறம்_5

தன்னம்பிக்கை_9

தலைமைத் தத்துவம்_-1

சமூக சீர்திருத்தம்_1

சிந்தனைக்கு_10

மூடநம்பிக்கை_-1

வாசிப்பு_5

சுற்றுச்சூழல்_1

தொலைக்காட்சி_1

பண்பாடு_-6

சுயநலம்_1

குழந்தைகள்_4

பெற்றோர்_3

முதுமை_1

ஆசிரியர்_2

உடல்நலம்_13

உணவு முறை_-3

அண்ணா (மனிதநேயம்)_-1

திராவிட இயக்க எழுத்தாளர்களில் இத்திசையில் தன் எழுதுகோலை ஓடவிட்டவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களே!

பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர் என்ற ஓர் எண்ணத்தில் மருண்டோடுபவர்கள் இந்த வாழ்வியல் சிந்தனைகள் மூலம் நெருங்கி வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

‘ஆனந்தவிகடன்’ மதிப்புரையில் கூறியிருந்தது போல மூடநம்பிக்கைகளை எதிர்த்து எழுதியவர் இப்பொழுது தன்னம்பிக்கை பற்றியும் எழுதுகிறார் என்பது கவனிக்கத் தக்கதாகும்.

நமது கருத்துக்குத் தொடர்பேயில்லாத வாசகர் ஒருவர் எழுதியுள்ளார்.

‘‘நான் பெரியாரைப் பார்த்ததில்லை. இந்தக் கொள்கையைப் பற்றி நிறைய விடுதலை மூலமாகப் படிக்கிறேன். இப்பொழுது தமிழர் தலைவர் அய்யா எழுதிவரும் வாழ்வியல் சிந்தனை என்ற பகுதி நமக்காகவே எழுதப்பட்டதாகும். பாதிப்பு இல்லாதவர் யாருமே இருக்க முடியாது. நமக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கும். விடுதலை நாளிதழைப் படித்தால் நிறைய கருத்துகள் தெரிந்து கொள்ள முடிகிறது’’ _ விஜயா.

விடுதலைக்குள் நுழைய தந்தை பெரியார் கொள்கைக்குள் கால் பதிக்க தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனை நுழைவு வாயிலாக இருந்து வருகிறது. குழந்தை வளர்ப்புக்குத் தாய்ப்பாலையும், முதுமைக்கு ஊன்றுகோலையும் தரும் கட்டுரைகள் உண்டு.

குழந்தைகள் நலம், குடும்ப நலம், பெண்ணுரிமை, பொது சமையற்கூடம், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் அனைத்து உரிமைகள், பெண்கள் உடையில் மாற்றம், பெண்கள் கிராப் வெட்டிக் கொள்ளுதல் என்ற தந்தை பெரியார் தெரிவித்த கருத்துகள் வாழ்வியல் சிந்தனையின் தடத்தில் பதிக்கப்பட்ட மைல் கற்கள்.

அந்த அடிப்படையின் விரிவாக்கச் சிந்தனைகளே இவை! கால ஓட்டம், அறிவியல் வளர்ச்சி, ஊடகப் புரட்சி இவற்றையெல்லாம் வயப்படுத்தி, உள்வாங்கி, நாத்திகச் சிந்தனையின் செழுமையை முப்போகமாக விளைவித்துத் தந்துள்ளார் கருத்துக் கனலாம் விடுதலை ஆசிரியர்.

பகவானை சரணடைக! பரம மண்டலம் போகலாம்; சடங்குகளைச் செய்க! சொர்க்க சாம்ராஜ்ஜியம் கிடைக்கும்; நேர்த்திக் கடனாற்று, நினைத்தவை நடக்கும் என்ற மூடயிருள் சூழ்ந்த சமூக அமைப்பில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிந்தனைகளின் அடிப்படையில் புத்துலகுக்கு அழைத்துச் செல்லும் மகிழ்ச்சிக்கான திறவு கோல்தான் இந்த வாழ்வியல் சிந்தனை.

தந்தை பெரியார் நினைவு நாளில் (டிசம்பர் 24) தலைநகரில் வெளியிடப்படுகிறது.

மனித வாழ்வு மாயையல்ல; மகத்தானது - மகிழ்ச்சிக்குரியது! அடுத்த ஜென்மம் என்பது முடிச்சுமாறிகளின் பேச்சு! - பிறந்த இந்த வாழ்வைச் சுவைத்துப்பார்! உலகில் எத்தனை எத்தனைச் செல்வங்கள், இன்பங்கள் உனக்காகக் காத்துக் கிடக்கின்றன! உழைப்பாய் - உண்பாய் - உனக்கும் அதில் உரிமையுண்டு என்று கூறிக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் தன்னம்பிக்கையின் தூண்டா விளக்கு இது! திருமணத்திற்குப் பரிசளியுங்கள்; உங்கள் உறவினர்களுக்குத் தாருங்கள். நண்பர்களுக்குக் கொடுத்துப் படிக்கச் செய்யுங்கள். மிரண்டு ஓடியவர்கள் நெருங்கி வருவார்கள்.

தந்தை பெரியார் படைக்க விரும்பிய அந்தத் திரண்ட மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் அறிவியல் உலகைத் தெரிந்து கொள்வார்கள்.

-------------------நன்றி:-”விடுதலை” 15-12-2009 இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: