Search This Blog

7.12.09

மதமும் பகுத்தறிவும்


இறந்துபோன மதங்கள்

இன்று உலகில் மிகக் குறைவான மதங்களே உள்ளன. கிறித்துவ மதம், இந்து மதம், புத்த மதம், ஜைன மதம், கன்ஃப்யூஷிய மதம், தாவோ மதம், சரதுஷ்ட மதம் ஆகியவையே அவை. இவை தவிர ஆங்காங்கே சில பிரதேச மதங்களும் நடைமுறையிலுள்ளன. இவற்றில் எந்தவொரு மதத்துக்கும் 2500 ஆண்டுகளைவிட அதிகப் பழைமை கிடையாது. அதற்கு முன்பு உலகில் மதங்கள் எதுவும் இல்லை என்பது பொருளல்ல. இன்றைய மதங்களைப் போலவே பிரபலமான பல மதங்களும் அன்றும் இருந்தன. புதிய மதங்கள் உற்பத்தியானவுடன் அவை அனைத்தும் அழிந்துவிட்டன.

மிகப் பழைமையான காலகட்டத்தில்தான் மனிதன் அவனுக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கற்பிக்கவும் வழிபடவும் தொடங்கினான். இடி, மின்னல், காட்டுத்தீ, சூறைக்காற்று, கொடிய விலங்குகள் முதலியவற்றைத்தான் ஆதிகால மனிதன் கடவுளாக வழிபட்டு வந்தான். இந்தியர்களுடைய அக்னி, வாயு, வருணன், நாகம் ஆகியவையே இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். இவற்றில், சில இயற்கை வெளிப்பாடுகளை மனிதர்கள் அடக்கவும், அவர்களுக்குத் தெரியாத பிற சில விஷயங்களைக் கற்றுக்கொண்ட பிறகுதான் மத நெறிமுறைகளிலும் மாற்றம் வந்தது. பழைய நம்பிக்கைகளுடைய மனிதர்கள் என்றும் அதை நிலைநிறுத்த முயன்று வந்தனர் என்பதை எல்லா மதங்களுடைய வரலாறுகளும் நிரூபிக்கின்றன. பழைய மதங்களின் இடத்தில் புதிய மதங்கள் வரும்பொழுது, பழைய மதத்திலிருந்தவற்றில் நல்லதெனத் தோன்றிய செயல்முறைகளைப் புதிய மதங்கள் ஏற்றுக் கொள்வது வழக்கம்தான். யூத மதத்திலுள்ள சில மரபு வழக்கங்களைக் கிறித்துவர்கள் பின்பற்றுவது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். இந்தியாவில் கூட பழைய வேத மதமோ திராவிட மதமோ இன்று நடைமுறையில் இல்லாவிட்டாலும்கூட அவற்றிலுள்ள பல மதக் கற்பனைகளையும் பிற்கால இந்து மதம் உள்வாங்கிக் கொண்டதைக் காணலாம்.

நடைமுறையிலுள்ள மதம் மனித முன்னேற்றத்துக்குத் தடையாக ஆகும்பொழுதோ அரசியல் மாற்றத்தின் பலனாகவோதான் புதிய மதம் தோன்றுகின்றது. ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களுடைய மதத்தை, வென்ற பிரதேசங்களில் வலுக்கட்டாயமாகத் திணித்ததற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. சில சமயங்களில் ஆக்கிரமிப்பாளர்களின் மதமும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேச மதமும் ஒன்றுக்கொன்று கலந்து புதிய உருவம் கொண்டதாகவும் காணலாம். ஆரியர்களுடைய இந்திய ஆக்கிரமிப்புக்குப் பிறகு நிகழ்ந்தது அதுதான். இந்திரனை முதன்மைக் கடவுளாக வழிபட்ட ஆரியர்களுடைய மதமும், சிஸ்ன தேவனை (சிவன்) வழிபட்ட திராவிடர்களுடைய மத நம்பிக்கைகளும் கலந்து இந்தியாவில் இந்து மதம் உண்டானது. ஆரியர்களுடைய வேத மதமோ, திராவிட மதமோ இன்று நடைமுறையில் இல்லை.

வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டே இவ்வாறு பிறந்து இறந்த மதங்களுடைய எண்ணிக்கை ஏராளமானதாகும். அவற்றில் சிலவற்றைப் பற்றி நமக்கு எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. பிரபலமாக விளங்கிய சில மதங்களுடைய விவரங்கள் மட்டும் மிஞ்சியிருக்கின்றன. அத்தகைய மதங்களுடைய எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். அதனால் அவற்றில் முக்கியமானவற்றின் விவரங்களை மட்டும் இங்கே சுருக்கமாகத் தருகின்றேன். குறிப்பெடுப்பதற்கு வசதியாக அகர வரிசைப்படி தந்திருக்கின்றேன்.

இறந்துபோன இந்த மதங்களைப் பற்றிப் படிக்கும்பொழுது இயல்பாகவே ஓர் அய்யம் எழலாம். இன்றைய மதங்களும் நாளை இதுபோல இறந்துவிடாதா என்பதுதான் அந்த அய்யம். நிச்சயமாக வரலாற்றில் மதத்தின் கதி அதுதான். ஆனால், இனிமேல் புதிய மதங்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு குறைவுதான். காரணம் மனிதர்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதிக்கும் அதிகமானோர் மத நம்பிக்கையாளர்கள் அல்லர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலுள்ள எந்தவொரு மதத்திலுமுள்ள அங்கத்தினர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும் இது. கடவுளிடம் நம்பிக்கை இழப்பவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

இன்று உள்ள மதங்களில் பலவும் அழிவின் அருகில்தான் இருக்கின்றன. அதிக உறுப்பினர்களையுடைய மதம் என்று உரிமை கொண்டாடுகின்ற கிறித்துவ மதம் கூட மூவாயிரத்துக்கும் அதிகமான மதங்களாகப் பிரிந்து ஒன்றையொன்று அடித்துக் கொள்கின்றன. அய்ரோப்பாவில் பல இடங்களிலும் பக்தர்கள் கிடைக்காமல் தேவாலயங்களைப் பூட்டத் தொடங்கியிருக்கின்றனர். புரோகிதர்களாகத் தேவையான அளவு ஆள்கள் கிடைக்காமல் ரோமன் கத்தோலிக்க சபை கவலைப்படுகின்றது. சீனாவில் கன்ஃப்யூஷியன் மதமும் தாவோ மதமும் இதைவிடத் துயரமான கட்டத்தில் இருக்கின்றன.

இந்தியாவில் இந்து மதத்துக்குப் புத்துயிரளிக்க ஏராளமான முயற்சிகள் நடைபெறுகின்றனவல்லவா. இந்து மதம் அழிவு நிலையில் இருக்கின்றது என்பது அதன் தலைவர்களுக்குத் தெரிந்ததுதான் அதற்குக் காரணம். ஜைன மதம், சரதுஷ்ட மதம் ஆகியவை உறுப்பினர் எண்ணிக்கையில் மிகவும் குறைந்துவிட்டது. இஸ்லாம் மதத்திலும் புதிய உள்பிரிவுகளும் உள்போர்களும் ஏற்பட்டுள்ளன. நம்முடைய காலகட்டத்தில் இல்லாவிட்டாலும், மிகத் தொலைவிலில்லாமல், எதிர்காலத்தில் இன்றிருக்கின்ற மதங்களும் வரலாற்றில் வெறும் நினைவாகவே எஞ்சிவிடும்.

-----------------------நூல்: ‘மதமும் பகுத்தறிவும்’, மலையாளத்திலிருந்து தமிழில்: அமலா

0 comments: