Search This Blog

20.12.09

வைகுண்ட ஏகாதசியின் பலன் என்ன?

வைகுண்ட ஏகாதசி

சிறீரங்கத்தில் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி என்கின்ற ஒரு உற்சவம் ஆண்டுதோறும் நடக்கிறது.

அதற்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் சென்று, உற்சவத்தில் கலந்து சொர்க்கவாசல் புகுந்து, மோகினி அவதாரத்தைக் கண்டு களித்து, தங்கள் பாவத்தைத் தொலைத்துவிட்டுத் திரும்புவது என்பது வெகுகாலமாய் நடந்து வரும் காரியமாகும். இந்த ஏகாதசி என்பது 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் நாளாகும்.

இப்படிப்பட்ட ஏகாதசி ஒரு ஆண்டில் மாதத்துக்கு 2 வீதம் 12 மாதங்களுக்கு வரும் 24 ஏகாதசிகளில் மார்கழி மாதத்தில் வரும் இரண்டு ஏகாதசிகளில் ஒன்றுக்குப் பெயர் வைகுண்ட ஏகாதசி என்பது. இது வைணவர்களுக்கு ஒரு முக்கிய நாள். அதாவது சைவர்களுக்கு சிவராத்திரி வருவது போன்ற ஒரு நாள்.

இந்த ஏகாதசியை ஒரு உற்சவமாக ஆக்கி அதற்கு பகல் பத்து, இராப் பத்து என்று இருபது நாட்களை ஒதுக்கி தினம் ஒரு சடங்கு போல் உற்சவம் கொண்-டாடுவார்கள். இந்த வைகுண்ட ஏகாதசி அன்று மக்கள் நாள் முழுவதும் பட்டினி கிடக்கவேண்டும். அதற்கு ஏகாதசி விரதம் என்று பெயர். அடுத்த நாளைக்குப் பெயர் துவாதசி என்பது.

ஏகாதசி என்றால் 11 ஆவது திதி; துவாதசி என்றால் 12 ஆவது திதி என்பது பொருள். 11 ஆவது நாள் முழுவதும் பட்டினி கிடந்து 12 ஆவது நாள் பாரணை என்னும் பெயரால் வயிறு புடைக்கச் சாப்பிடுவதுதான் இந்த ஏகாதசி, துவாதசி சடங்கு.

இதில் மற்றொரு விஷயம்என்னவென்றால், இந்த ஏகாதசி நாள் முழுவதும் பட்டினி கிடப்பது மாத்திரமல்லாமல் அன்று இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்துக் கொண்டு இருக்க வேண்டும். தூங்கினால் ஏகாதசி விரதத்தின் பலன் வீணாகிவிடும். அதாவது பலன் இல்லாமல் போகும்!

அறிவுக்கு ஒவ்வாத சடங்குகள்

இந்த ஏகாதசி நாள் உற்சவங்கள் தமிழ் நாட்டில் சீரங்கத்தில்தான், பலமாக, ஆடம்பரமாக, ஆயிரம், பதினாயிரம் மக்கள் வந்து கூடும்படியாக மிகப் பிரபலமாய் நடக்கும். 20 நாள்களுக்கு பல சடங்குகள், சாமி ஊர்வலங்கள் முதலியவை நடக்கும்.

ஏகாதசி உற்சவங்களுக்கு சீரங்கம் போனவர்கள்

1. சுவர்க்கவாசல் புகவேண்டும்.

2. மோகினி அவதார தரிசனம் பார்க்கவேண்டும்.

3. முத்தங்கி சேவை பார்க்க வேண்டும்.

சுவர்க்கவாசல் புகுவது என்பது கோயிலில் மற்ற நாளெல்லாம் மூடிக் கிடந்து ஏகாதசி அன்று காலையில் திறக்கப்பட்ட வாசல் வழியில் முட்டி அடித்துக் கொண்டு புகுந்து வெளியில் வருவதுதான்.

மோகினி அவதாரம் என்பது சீரங்கம் கடவுளை பெண் வேஷம் போட்டு பெண்ணாகச் சிங்காரித்துக் காட்டுவதுதான்.

முத்தங்கி சேவை என்பது சீரங்கம் கடவுளுக்கு முத்துக் கோத்துத் தைத்த ஒரு சட்டையைப் போட்டுக் காட்டுவதுதான்.

இதுதான் ஏகாதசி உற்சவத்தின் காட்சி!

இந்தக் காட்சியினால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படும்?

பெரும்பாலும் அங்கு செல்கிற மக்களின் கருத்தெல்லாம் பெரிய ஜனக் கூட்டத்தைப் பார்க்கலாம் என்பதுதான். செல்பவர்களில் 100 க்கு 90 ஆண், பெண்களின் கருத்தாகும்.

அறிவு கெடுவதே உற்சவ பலன்

மக்களுக்கு சினிமா பார்ப்பதில் உள்ள ஆர்வம், உணர்ச்சி, பயன் என்னவோ அதுதான் இந்த உற்சவங்களைக் காண்பதிலும் இருந்து வருகிறது. சினிமா வந்தபிறகு உற்சவங்களின் பெருமை மோகம் நல்ல அளவுக்குக் குறைந்துவிட்டது. என்றாலும், அதைப் பழையபடி ஆக்க பார்ப்பனர்களும், அரசாங்கமும் இப்போது அதிகமுயற்சி செய்கிறார்கள்! சினிமாவால் ஒழுக்கம் கெடும்; உற்சவத்தால் அறிவே கெடும்! இதுதான் பலன்.

------------------------- தந்தைபெரியார் - ‘விடுதலை’, 8.1.1966

2 comments:

passerby said...

Interesting.

பெரியார் தம் கருத்துகளை கண்ணியமான முறையில் தெரிவித்து இருக்கிறார்.

சினிமா மோகம் வந்து மக்களை தம்பக்கம் இழுப்பதால் கோயில்களில் கூட்டம் குறைவதை அன்றே சொல்லிவிட்டார். அதனால் கோயிலாளர்கள் தங்கள் விழாக்களை தூசுதட்டி பூசி மெருகூட்டி மக்களை இழுக்க முயற்சிக்கிறார்கள் என்பது ஒரு அருமையான பார்வை.

இருப்பினும், சினிமா என்ற ஒரு கவர்ச்சி சாதனம் வருவதற்கு முன்பே, நெடுங்காலமாக இத்திருவிழா சிரிரங்கத்தில் கொண்டாடப்பட்டு வருகிறதே? தமிழ் ஓவியா அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மேலும், இத்திருவிழாவின் சிறப்பம்சம், பெரியார் சொன்னது போல, மக்கள் தம் பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு புது வாழ்க்கை தொடங்கமுடியும் என நம்பிச்செய்வதாகத்தான் வருகிறது.
Turning a new leaf. Leaving the sinful past and entering a new life of good life.

அது முடியாததுதான். எனினும் மக்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டுவதாகத்தான் இதிருவிழாக்கள் அமைவதாக நான் நம்புகிறேன்.

கூட்டம் பார்க்கத்தான் செல்கின்றனர்.ஒரளவுக்கு சரிதான். இருந்தாலும், இது எப்படியிருக்கிறதென்றால், பெண்கள் கைப்பந்தாட்டாமாடும்போது, அவர்கள் திறந்த கால்களையும் பார்க்கச் சிலர் செல்வரல்லாவா?

The purpose and the abuse of the purpose.

Isnt? I mean that.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

கள்ளபிரான்