Search This Blog

29.12.09

பெரியார் கருத்து உலகமெலாம்

பெரியார் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது
பெரியாரின் மறு உருவாக்கமாகத் திகழ்கிறார் வீரமணியார்
திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் மு.நாகநாதன் பாராட்டு

தந்தை பெரியாரின் மறு உருவாக்கமாகத் திகழ்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியார் அவர்கள் என்று தமிழக திட்டக்குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் தனது உரையில் குறிப்பிட்டார்.

சென்னை பெரியார் திடலில் நேற்று (27.-12.-2009) இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ரிச்சர்டு டாகின்ஸ் அவர்கள் எழுதிய God Delusion என்னும் ஆங்கில நூலை தமிழில் மொழியாக்கம் செய்து திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். இந்நூலின் முதல் படியினைப் பெற்றுக் கொண்டு தமிழ்நாடு திட்டக் குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பிற்போக்கான அமெரிக்க நாடு

வளர்ந்த அமெரிக்க நாடு பிற்போக்குவாதிகள் நிறைந்த நாடு. அங்கு கடவுளை மதத்தை நம்பக் கூடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் அறிவியல் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மனிதனின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு பிடித்த டார்வின் மிகச் சிறந்த பகுத்தறிவுவாதி.

இருபதாம் நூற்றாண்டில் கடவுள் இல்லை என்று சொல்லி இடையறாமல் போராடியவர் தந்தை பெரியார். அவர் மதங்களை ஒழிக்கப் போராடினார். ஜாதிகளை ஒழிக்கப் போராடினார். மக்கள் சமத்துவ உரிமை பெறவேண்டும் என்பதற்காகப் போராடினார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காகப் போராடினார்.

இப்படிப்பட்ட நிலையில் ரிச்சர்டு டாகின்ஸ் அவர்கள் எழுதிய ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட நமது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பெருமகனார் அவர்களையும், இந்த நூலை தமிழில் மொழி பெயர்ப்பதற்கு உதவிய பேராசிரியப் பெருமக்களையும் பாராட்டுகிறேன். தந்தை பெரியார் வழியில் மிகச் சிறப்பாக ஆசிரியர் அவர்கள் செயல்பட்டுக் கொண்டு வருகிறார்.

பெரியார் வழியில் ஆசிரியர்

1930, 1940ஆம் ஆண்டுகளில் உலக அறிவியல் அறிஞர்களின் நூல்களை எல்லாம் ஆங்கில மொழியில் இருந்து மொழி பெயர்த்து தமிழில் கொண்டு வந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

அது மட்டுமல்ல. தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எல்லா ஊர்களிலும், எல்லா நகரங்களிலும் பரப்பிக் கொண்டிருக்கின்றார்.

நமது ஆசிரியரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் தந்தை பெரியாரின் மறுவடிவமாக, தந்தை பெரியாரின் மறு ஆக்கமாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு ஆசிரியர் வீரமணியார் அவர்களுடைய பணி பாராட்டத் தக்க அளவிலே நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவருடைய பணியைப் போற்றுகிறேன். கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை என்ற இந்த நூலை ஆங்கிலத்தில் இரண்டு முறை படித்தேன்.

பெரியார் கருத்து உலகமெலாம்

தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகள் இன்றைக்கு உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் பெரியாருடைய கருத்துகளை இருட்டடிப்பு செய்து பார்த்தார்கள்.

கலைஞர் - வீரமணியார் சுறுசுறுப்பு

பெரியாருடைய கடவுள் இல்லை என்ற கருத்து இன்றைக்கு ரிச்சர்டு டாகின்ஸ் மூலம் வெளியே வருகிறது, பரவுகிறது. பெரியாரைப் பின்பற்றுகிறவர்கள் நீண்ட காலம் வாழுகிறார்கள். தந்தை பெரியாருடைய குருகுலத்தில் பயின்ற தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 86 வயதிலும் சுறுசுறுப்பாக பொதுமக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டு வருகின்றார்.

அதே போல நமது ஆசிரியர் அவர்களும் இந்த 77 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்து கொண்டு பொதுப் பணிகளை ஆற்றி வருகிறார். பெரியாரின் பேரியக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

தேவநாதன் என்ற காஞ்சிபுர அர்ச்சகர் அவருடைய செயலாலேயே கடவுள் இல்லை என்று காண்பித்துவிட்டார்.

நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர், நாத்திகர்

2003ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அறிஞர் தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் ஒரு நாத்திகர். அவர் ஒரு நாத்திகர் என்ற செய்தியே ஊடகத் துறையால் மறைக்கப்பட்டது. பிறகு நான் தேடித் தேடி அலைந்து அந்த ஆதாரத்தைக் கண்டுபிடித்தேன். அறிவியல் இதழ்களிலிருந்து ஆதார பூர்வமாக எடுத்தேன், அவர் ஒரு நாத்திகர் என்ற செய்தியை. நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர் சாகும் தறுவாயில் இருந்த பொழுது அவரிடம் கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் கேட்டார்கள். ‘‘எனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை கிடையாது. நான் ஒரு நாத்திகன். நான் இளமையிலிருந்தே நாத்திகனாக வளர்ந்தேன். நான் இறப்பைப் பற்றி கவலை கொள்ளவில்லை’’ என்று தெளிவாகச் சொன்னார்.

12 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய கவிஞர் உமர் கயாம் ஒரு நாத்திகர். கடவுளை நம்பாதவர். சொர்க்கம், நரகம் என்று வேறெதுவும் இல்லை. இந்த பூமிதான் சொர்க்கமும் நரகமும் ஆகும் என்று பாடியவர் அவர்.

மா சே துங் சொன்னார்

மாசேதுங் சொல்கிறார் ‘‘தொழிலாளிகள், விவசாயிகளின் மூளையை உறைய வைப்பதற்காக முதலாளிகள் மதம் என்ற மாத்திரையைப் பயன்படுத்தினார்கள்’’ என்று. தந்தை பெரியார் அவர்கள் கடவுள் இல்லை என்று சொன்னார். அந்தக் கருத்துகளைத்தான் இன்றைக்கு அறிவியல் அறிஞர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள். நான் நாத்திகன் என்னுடைய சகோதரர் நரேந்திரன் ஒரு நாத்திகர்.

முரசொலி மாறன் சொன்னார்

மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களைப் பார்க்க நான் டில்லி சென்றிருந்தேன். அவர் உடல் நலம் இன்றி வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பி வந்த சமயம். நான், அண்ணன் முரசொலி மாறன் அவர்களைப் பார்க்க டெல்லியில் அவருடைய இல்லத்தில் அமர்ந்திருந்தேன். மத்திய அமைச்சரான அவரோ எங்கோ வெளியே சென்று விட்டு இல்லத்திற்குத் திரும்பினார். என்னைப் பார்த்தவுடன் ‘‘நீங்கள் எவ்வளவு நேரமாகக் காத்திருக்கிறீர்கள்’’ என்று கேட்டார். ‘‘நான் அரைமணி நேரமாகக் காத்திருக்கிறேன்’’ என்று செல்லிவிட்டு ‘‘நீங்கள் எங்கே சென்று வருகிறீர்கள்’’ என்று கேட்டேன். ‘‘ஒன்றுமில்லை. நான் உடல் நலம் தேறி வந்ததற்காக குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ண காந்த் என்னைப் பார்ப்பதற்காக வருகிறேன் என்று சொன்னார். இல்லை நீங்கள் வர வேண்டாம் நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்ததில்தான் இந்த காலதாமதம்’’ என்றார். அது மட்டுமல்ல குடியரசுத் துணைத் தலைவரே ஒரு மூடநம்பிக்கையாளராக இருக்கிறார் என்று சொல்லிவிட்டுச் சொன்னார். என்னை குடியரசு துணைத் தலைவர் கேட்டார். நீங்கள் வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் வந்திருக்கிறீர்கள். நீங்கள் உயிர் பெற்றது கடவுளால் என்பதை இப்பொழுது ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டார். உடனே நான் சொன்னேன். நான் உயிர் பெற்றது மருத்துவர்களின் முயற்சியால், மனிதர்களின் முயற்சியால். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று அன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறன் சொன்னார். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த ஆசிரியர் அவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் மு.நாகநாதன் பேசினார்.

---------------------------- “விடுதலை” 29-12-2009

0 comments: