Search This Blog

25.2.12

கம்யூனிஸ்டு தலைவர்கள் பின்னால் ஜாதிப் பட்டம்?


இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழுக்கூட்டம் கோல்கட்டாவில் கூடி புதிய திசை நோக்கிப் பயணிக்க முக்கிய முடிவினை எடுத்துள்ளது.

இதுவரை வருக்கப் பிரச்சினையே சகல நோய்களுக்குமான மாமருந்து என்று நினைத்து, கொள்கை களம் அமைத்துப் பயணித்த இக்கட்சி வருண பேதம் குறித்தும் கருத்தில் கொண்டு போராட முன் வந்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

வருக்கமா? வருணமா? என்ற சர்ச்சை மூண்டெழுந்து பல கட்டங்களில் திராவிடர் கழகத்தோடு, விடுதலையோடு மல்லுக்கட்டி மற்போர் புரிந்ததுண்டு.

இந்திய சமூக அமைப்பில் பிறப்பின் அடிப்படையில் பேதம் என்கிற கொடுமை வேறு எங்கும் காணமுடியாத கழிசடைத்தனமாகும். பிறவி முதலாளித் துவம் என்பது இந்த சமூக அமைப்பின் கொடிய நஞ்சாகும்.

பொதுவுடைமை பூக்க பொதுவுரிமை அடிப்படை என்ற சங்க நாதத்தைத் தந்தை பெரியார் எழுப் பினார்.

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் நூலினை எழுதிய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரான தோழர் ஏ.எஸ்.கே. (அய்யங்கார்) அவர்கள் அந்நூலின் என்னுரையில் ஒன்றை அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா - நான் அந்த வேலையைச் செய்து வருகிறேனே. . . அவ்வாறிருக்க கம்யூனிஸ்டுக் கட்சி என்னை எதிர்ப்பதேன்? என்று பெரியார் அவர்கள் என்னிடம் விநயமாகவும், உருக்கமாகவும் பன்முறை கேட்டுள்ளார். இது முற்றிலும் உண்மை. பெரியார் அவர்களைப் பற்றிச் சரியான கணிப்புப் பல தோழர்களுக்கு இல்லை என்பது என் கருத்து. இந் நூலை எழுதுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்சினைகள் குறித்து மீண்டும் கிளப்பவோ, அசை போடவோ தேவையில்லை. இத்திசையில் தந்தை பெரி யாரும் திராவிடர் கழகமும் மேற் கொண்டுள்ள பிரச்சாரம் - போராட் டம் என்ற களம் அமைத்துப் போராடி வரும் திசையில் தன் போக்கில் பொதுவுடைமை கட்சி ஒன்று அடி யெடுத்து வைக்க எத்தனிக்கும்போது அதனை இரு கரம் கூப்பி வரவேற்கவே செய்கிறோம்.

(1) தீண்டாமை ஒழிப்பு என்கிற போது அது ஜாதி என்னும் வேரி லிருந்து வெடித்துக் கிளம்பக் கூடிய தாகும். அண்மைக் காலத்தில் தீண் டாமை ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் மாநாடுகளை நடத்தி வந்துள்ளது. அதனை ஜாதி ஒழிப்பு மாநாடாக பரிணமிக்கச் செய்துகொள்வது சரியானதாக இருக்க முடியும்.

(2) தனது பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைச் சுமந்திருந்தவர் தான் தந்தை பெரியார்.

தன்மான இயக்கம் கண்ட நிலையில், குடிஅரசு பூகம்பத்தை உருவாக்கிய கால கட்டத்தில் தன் பெயரில் ஒட்டி யிருந்த நாயக்கர் என்ற ஜாதி வாலினை ஒட்ட நறுக்கித் தூக்கி எறிந்தார்.

1929 செங்கற்பட்டில் நடைபெற்ற சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் பெயருக்குப் பின்னால் தொங்கிக்கொண்டிருந்த ஜாதிப் பட் டத்தைத் துறப்பது என்ற தீர்மானத்தை ஏற்று அந்த மாநாட்டிலேயே ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்ததாகப் பிரகடனம் செய்தனர் இயக்க முன் னோடிகள்.

கம்யூனிஸ்டு கட்சியின் மிகப் பெரிய தலைவர்கள் கூட பெயருக்குப் பின் னால் ஒட்டிக்கொண்டிருக்கும் வருணா சிரமச் சின்னமான ஜாதிப் பட்டத்தைத் துறக்க முடியாமல் இருப்பது நல்லதல்லவே!

பட்டாச்சார்யா என்றும், குப்தா என்றும், சட்டர்ஜி என்றும், முகர்ஜி என்றும், சர்மா என்றும், நம்பூதிரிபாட் என்றும் அறிமுகமாவது நல்லதுதானா?

கேரள மாநிலத்தில் நடக்க இருக்கும் அவர்களின் அகில இந்திய மாநாட்டில் சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் முடிவு எடுத்தது போல ஒரு தீவிரமான முடிவெடுத்து ஜாதியைத் தூக்கித் தங்களைத் தாங்களே சுத்திகரித்துக் கொள்வது, இளைஞர்கள் மத்தியில் புத்தெழுச்சி வெடித்துக் கிளம்பிடவும், இந்துத்துவாவின் அடிவேரில் தீவைத்தது போன்றதுமான ஒரு புதிய நிலைப்பாடாக இருக்க முடியும்.

மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மக்களவைத் தலைவராக இருந்தவருமான திரு சோம்நாத் சட்டர்ஜி அவர்கள் தன் பெயரன் பூணூல் கல்யாணத்திற்கு அழைப்பிதழ் போட்டு நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கெல்லாம் கொடுத்தார் என்பது கொதி நிலையின் உச்சகட்டம் அல்லவா?

இது போன்ற மூத்த தலைவர்களே கம்யூனிஸ்டு தத்துவத்தை இந்த அளவுக் குத்தான் புரிந்து கொண்டுள்ளனர் என்று கருதவேண்டியிருக்கிறதே!

பகுத்தறிவுக் கோட்பாட்டிலும் மிக உயர்ந்த சிந்தனைப் போக்குத் தேவைப் படுகிறது.

(3) பகுத்தறிவுக் கோட்பாட்டு நிலையில் ஒரு கோடு கிழித்துக் காட்டி, இந்தக் கோட்டின் முன் பகுதியில் இருப்பவர்கள் மதக்கொள்கைகளைப் பின்பற்றலாம்; - பின்பகுதியில் இருப்ப வர்கள் மதக் கோட்பாடுகளிலிருந்து சந்தேகத்திற்கிடமின்றி விலகி இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தினை கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் அவர்களின் கட்டுரை கட்சியின் தமிழ் மாநில அதிகார பூர்வமான தீக்கதிர் நாளிதழில் (27.-1.-2010) வெளியாகி யிருந்தது.

இந்தக் கருத்தினை ஏற்றுக் கொள்ளாமல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் மனோஜ் கட்சியிலிருந்து விலகினார். கண்ணனூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த அப்துல் வகாப்பும் இதே காரணத்துக்காக கட்சிக்கு முழுக்குப் போட்டதுண்டு.

கேரள மாநில முதலமைச்சராக இருந்த திரு.ஈ.கே. நாயனார் அவர்கள் வாட்டிகன் சென்று போப்பைச் சந்தித்தபோது, வருணாசிரமத்தின் ஒட்டு மொத்த வடிவமான (நான்கு வருணங்களையும் நானே உண்டாக்கினேன். அப்படி என்னால் உண்டாக் கப்பட்ட அந்த நான்கு வருணங் களையும் நானே நினைத்தால் கூட மாற்றியமைத்திட முடியாது என்று கிருஷ்ணன் கூறுவதாக கீதை கூறு கிறது.) கீதையை அன்புப் பரிசாக அளித்தது அண்டத்தையே குலுக்கிய அசாதாரணமான நிகழ்ச்சியல்லவா?

இதில் அழுத்தமாகக் குறிப்பிட வேண்டியது ஒன்று உண்டு. அந்தச் செயலுக்கு அவர் நியாயம் கற்பித்தது தான். மகரஜோதி மோசடி என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையிலும் அதில் தலையிடமாட்டேன் என்று கூறுவதற்கு ஒரு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆட்சி தேவையா என்ற கேள்வி கட்சியைத் துரத்திக்கொண்டேயிருக்கும் என்பதில் அய்யமில்லை.

இந்து சமூக அமைப்பில் நாத்திகம் என்பதேகூட ஜாதி மறுப்பே தவிர கடவுள் மறுப்பல்ல.

அதே நேரத்தில் ஜாதியின் பாது காப்பை கடவுளின் அரவணைப்பில் முடிச்சுப் போட்டு வைத்துள்ளனர்.

பிர்மாவின் நெற்றியில் இருந்து பிராமணன் பிறந்தான். தோளிலிருந்து சத்திரியன் பிறந்தான். இடுப்பிலிருந்து வைசியன் பிறந்தான்.

பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்று ஏற்பாடு செய்து வைத்துள்ள வருணாசிரம அமைப்பில் பிர்மாவைத் தனியே பிரித்து வைத்து விட்டு ஜாதியை ஒரு கை பார்க்கிறேன் என்பது நிஜத்தை விட்டு நிழலைத் தாக்கும் பரிதாப முயற்சி யாகும். கேரளாவில் சாஸ்தா கோவிலில் செத்துப்போன குரங்கு ஒன்றுக்கு இரண்டு அமைச்சர்கள் (சி.பி.எம்.) செங்கொடி போர்த்தி புரட்சி ஓங்குக என்று முழக்கமிடும் அளவுக்குச் சீர் கெட்டுப் போகக் கூடாதல்லவா?

சமூக நீதிக் கொள்கையில்கூட தடுமாற்றம் உண்டு. சி.பி.எம். கட்சியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்பதற்குப் பதிலாக பொருளாதாரத்தையும் இதற்குள் திணிப்பதற்கு அனுசரணையாக இருந்த போக்கு கடந்த காலத்தில் உண்டு.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்து கொண்டு வரப்பட்ட (வருமான வரம்பு) ஆணைக்கு ஆதரவு தெரிவித்த நிலை யில், அதே நேரத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (சி.பி.அய்.) அதில் தெளிவாகவே இருந்திருக்கின்றது.

பெரும்பாலான தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக, பொருளா தாரத்தில் கீழ் மட்டத்தில் தள்ளப் பட்டு இருக்கும் நிலையில், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது பெரும்பாலான தொழிலாளர்களுக்கும் பாயக் கூடிய நீர்ப்பாசனமேயாகும்.

குறையைச் சுட்டிக்காட்டி சங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ப தல்ல திராவிடர் கழகத்தின் நோக்கம்.

காலம் கடந்தாலும் சரியான திசையில் பயணத்தைத் தொடர்ந்திருப்ப தாக எடுத்த முடிவுக்கு ஆக்கம் தரும் வகையில் கோடிட்டுக் காட்ட வேண் டிய கடப்பாடாகக் கருதி இவற்றைத் திராவிடர் கழகம் முன் வைக்கிறது - மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியைப் புதிய பாட்டையில் வாழ்த்தி வரவேற்கிறது.

--------------- கலி.பூங்குன்றன் அவர்கள் 25-2-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

6 comments:

தமிழ் ஓவியா said...

இன்னுமா யோசனை!

இன்னுமா யோசனை? அட மடப்பயலே! பார்ப்பான் தம் இனத்தை வாழ வைக்க எப்பவோ கிளம்பிட்டான்!? நீ என்ன யோசிக்கிறாய்? அடடா உத்யோகம் ஒரு தடையா? அதைத்தான் மனதில் எண்ணுகிறாய்; நன்றாக புரிகிறது. அது ஒரு தடையே அல்ல! நீ வேணாலும் பெரியாரின் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களை கேட்டுப்பார்!

கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாய் ப.க.வில் எழுத்துப்பணி, வசூல் பணி, பிரச்சார பணி, மூடநம்பிக்கை முறியடிப்பு பணி என இயக்கம் அறிவிக்கும் எல்லா பணிகளும் செவ்வனே செய்து வருகிறேன். இன்னும் நிறைய செய்ய ஆசைதான், சில நேரங்களில் பொருளாதாரம், நேரம் இவை ஒத்துழைக்க மறுக்கின்றன். இருந்தாலும் விடுவோமா?

சிலர் இந்த தடைகளை பெரிதுபடுத்தி உழைக்க மறுக்கின்றனர். அத்தகையவர்களிடம் நான் இக்கடிதம் மூலம் நேரடியாக பேசுவதுபோல் இதை எழுதுவதற்கு காரணம். நிறைய தோழர்கள் எனக்கு உத்யோகம் இருக்கிறது இல்லாவிட்டால் வெட்டி மாய்த்து விடுவேன், கிழித்து விடுவேன் என வாய் ஜம்பம் அடிக்கின்றனர்.

நிறைய இயக்கப் பணிகள் தேக்கம் அடைய காரணம் பதவி பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் சூத்திர அதிகாரிகள்தான்!

ஏன் எனில் நன்கொடை கொடுக்க மறுப்பது! மட்டுமன்றி, கொடுப்பவனையும் தடுக்கின்றனர்.

இந்தக் கேடு கெட்ட செயலை தட்டிக் கேட்டால் நம் மீது அவதூறு சேற்றை வரி இறைக்கினர். நாம் உடனடியாக செய்வது நம் ஆசிரியர் அவர்கள் யாரை எங்கு பார்த்தாலும் இரண்டொரு கேள்வியை கேட்க செய்ய வேண்டும். அப்போது தான் நம் தோழர்கள் வேகம் பெறுவார்கள்.

தோழர்களே அவசியம் இதை படிப்பீர்! நன்றி!

- ஆக்கம்: கல்மடுகன் 25-2-2012

தமிழ் ஓவியா said...

வாஸ்து மூடத்தனம்

வாஸ்து சிற்பி என்று புகழப் படுகிறவர் பி.என்.ரெட்டி. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கட்டுமானம் பற்றிய மேற்படிப்பு படித்துவிட்டு, 1993 முதல் ஆந்திராவில் கட்டடக் கலைஞராக இருக்கிறார். திருப்பதி கோவில்களுக்கு கவுரவக் கட்டடக் கலை ஆலோசகராகவும் இருக் கிறார். வாஸ்து சாஸ்திரத்தை விஞ் ஞானம் என்று நிருபிப்பதில் கடும் முயற்சி எடுத்துக் கொண்டு, நூல் களையும் எழுதி வருகிறார். பி.என். ரெட்டியிடம் பகுத்தறிவாளர் பிரே மானந்தா, மூன்று கேள்வி களை எழுப்பியுள்ளார்.

அந்தக் கேள்விகளுக்கு, ரெட்டி யிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.

திருப்பதி கோவிலுக்கு மற்ற எல்லாக் கோவில்களையும் விட வருமானம் குவிந்து வருவதற்குக் காரணம், அது முழுமையான வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்டது தான் என்பது ரெட்டியின் வாதம், குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலும் முழுமையான வாஸ்து அடிப்படையில் கட்டப்பட்டது தான். அந்தக் காலத்தில் உலகத்திலேயே பெரும் பணக்காரக் கோவிலாக அது இருந்தது. ஆனால், அந்தக் கோவிலில்தான் கஜினி முகம்மது படை எடுத்து வந்து, பொருள்களை யெல்லாம் எடுத்துச் சென்றார். வாஸ்து ஏன் அந்தக் கோவிலைக் காப்பாற்றவில்லை?

கட்டடக் கலையில் தேர்ச்சி பெற்ற கடவுள்கள் என்று மாயா, விஸ்வ கர்மா போன்ற கடவுள்களைக் கூறுகிறார்கள். வாஸ்து சாஸ்திரத் துக்கே இந்தக் கடவுள்கள்தான் தோற்றுவாய் என்றும், வாஸ்து பண்டிதர்கள் கூறுகிறார்கள். இந்தக் கடவுள்தான் வாஸ்து சாஸ்திரப்படி அயோத்தி அரண்மனையையும், மகாபாரதத்தில் வரும் இந்திரப் பிரஸ்தாவில் மாயா சபாவையும் வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்ட மாளிகைகளில், இராமனும், பாண் டவர்களும் வாழ முடியவில்லையே.

காடுகளில் கடும் அவதிக்குள்ளான தாகவே, இராமாயணமும், மகா பாரதமும் கூறுகின்றன. இதுதான் வாஸ்துவின் பலனா? பி.என்.ரெட்டி. நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். வாஸ்து சாஸ்திரப்படி அவரே கட்டிய பல அடுக்கு மாடிக் கட்டடம் 1981ஆம் ஆண்டு அக்டோ பரில் இடிந்து விழுந்ததே:

இதுதான் வாஸ்துவின் பலனா? என்று கேட் டார் பிரேமானந்தா. 25-2-2012

தமிழ் ஓவியா said...

பகல் கனவு காணும் பச்சைப் பார்ப்பனர் சோ


குரங்குப் படைகளுக்குள் குத்துவெட்டு நாளும்
கொலைவெறித் தாக்குதல் ஆனாலும்
அரிப்பெடுத்து அலைகின்றார் அக்கிர காரசோ
சிரங்கு பிடித்தவன் சொரிவதுபோல்
நரேந்திர மோடியை தலைமையமைச்ச ராக்கி
நடுவத்தை யாளஆலாய்ப் பறந்து
நாரிமணி துணையுடன் மோடிக்கு வழிவிட
அத்வானியை சரிக்கட்ட முயன்றே!

நரவேட்டை யாடிய நரேந்திர மோடி
குசராத்தைக் கொலைக்கள மாக்கியவர்
பார்ப்பன ரல்லாதா ரெனின் பார்ப்பனிய அடிவருடி இந்துவியக் கோட்பாட்டை
வெறித்தனமாய் செயல்படுத்தும் விலங்காண்டி என்பதால்
மோடிமேல் சோவுக்கோர் ஈர்ப்பு
நரித்தினத்தால் பிஜேபியை நாட்டில் ஆட்சியில்
அமர்த்தத் துடியாய்த் துடிக்கிறார்

ஆண்டுக்காண்டு மோடியை அழைப்பதும்
சோ கூட்டம் புகழ்வதும் வழக்கம்! இவ்
வாண்டு தூக்கி நிறுத்தித் தொடைதட்டிப்
பார்க்கின்றார் அம்மணி ஆட்சியால்!
கொலைவெறி தலைக்கேற குஜராத்தைத் தமிழகம்
விஞ்சுமென வன்முறையைத் தூண்டுகின்றார்
கொலையில் கொடியார் கொடுவெறிப் பார்ப்பனர்
தமிழரைச் சீண்டிப் பார்க்கின்றார்!

ஊழல்பெருச் சாளிகள் நிறைந்த கட்சி
உத்தமர் வேடமிட்டுத் திரிந்திட
ஊழலில் புழுத்த புழுக்கள் பிஜேபியின்
நாடாளு மன்ற உறுப்பினர்கள்
அடுத்தவர் மனைவியை அயல்நாட் டிற்கு
அதிர்ச்சியில் உறைந்தது நாடு!
நாடாளு மன்றத்தில் கேள்வி கேட்டிடக்
கையூட்டு! உலகுகாரி உமிழ்ந்தது!

இந்த அழகில் மீண்டும் பிஜேபிக்கு
முடிசூட்ட பகல்கனவு காண்கிறார்
இந்நாட்டின் மதச்சார் பற்ற கட்சிகள்
பிளவுண்டு நிற்பதால் என்னவோ
கலங்கிய குட்டையில் காவிகள் மீன்பிடிக்க
நினைக்கின்றார் வீழ்வது திண்ணம்
விலக்கு மதவெறியை விலக்கு! மானிட
மேட்டிமையால் பிஜேபியை விலக்குவீரே!

- கவிஞர் இனியன்
திருவெறும்பூர், திருச்சி 25-2-2012

தமிழ் ஓவியா said...

முகமூடிகள் கிழிகின்றன!

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்பற்றி இப்பொழுதே சர்ச்சைகள் கிளர்ந்து விட்டன. அரசியல் கட்சிகள் அதற்கான முஸ்தீபுகளிலும் இறங்கி இருப்பதாகத் தெரிகிறது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மத்தியில் உள்ளது. இது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

விலைவாசியைக் கட்டுப்படுத்துவதிலும் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும் பேசப் படுகிறது.

எதிர்க்கட்சிகளோ ஊழல் மிகுந்த ஆட்சி என்று இன்றைய மத்திய அரசு மீது முத்திரை குத்தி வருகின்றன. வெளி நாட்டுக் கொள்கையில் குறிப்பாக ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசிடம் இந்திய அரசு பணிந்து போய்விட்டது.
இலங்கை அரசு விசயத்தில் இந்தியா நடந்து கொள்ளும் போக்கின் மூலம் மனித உரிமைகளுக் காகக் குரல் கொடுத்த இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதுபோல எண்ணற்ற குற்றச்சாற்றுகளை இன்றைய மத்திய அரசின்மீது சாற்றலாம் தான். இவற்றைக் காரணமாகக் கொண்டு, பி.ஜே.பி.யை ஆட்சிக்குக் கொண்டு வரலாமா? அவ்வாறு பி.ஜே.பி. ஆட்சிக்கு வருவது நன்மை பயக்கவல்லதா?
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுமீது வைக்கப்பட்ட குற்றச்சாற்றுகள் பி.ஜே.பி.யின் மீது கிடையாதா? எந்தெந்த கொள்கைகளில் இன்றைய மத்திய ஆட்சியிடமிருந்து பி.ஜே.பி. விலகி நிற்கிறது? என்பதைப் பற்றிச் சிந்திப்பது மிக மிக முக்கிய மானதாகும்.

ஊழல் என்று வைத்துக் கொண்டால், இந்தியா விலேயே பி.ஜே.பி. ஆளும் கருநாடக மாநிலத்தில்தான் அந்த ஊழல் கொடி விண்ணை முட்டும் அளவில் பறந்து கொண்டிருக்கிறது.

ரெட்டி சகோதரர்கள் என்று கூறப்படும் இரு அமைச்சர்கள் சுரங்கத் தொழில் கொள்ளை காரணமாக சிறையில் உள்ளனர். முதல் அமைச்சர் எடியூரப்பாவோ ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருந்த காரணத்தால் பதவி பறி போயிற்று.

இப்பொழுது இந்த ஊழல் பேர் வழிக்குப் பெரும் பாலான பி.ஜே.பி. சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆதரவுக் கரங்களை நீட்டுகின்றனர். இதன் அடிப்படையில் மீண்டும் என்னை முதல் அமைச்சராக ஆக்க வேண்டும் என்று பி.ஜே.பி.யின் தலைமைக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகிறார்.

கருநாடக மாநிலத்தில் சீறிராம்சேனா என்ற இந்துத்துவா அமைப்பின் காலித்தனமும், அட்ட காசமும் சொல்லுந்தரமன்று. அந்த அமைப்பின் தலைவராக இருக்கக் கூடியவர், சிறுபான்மையின ருக்கு எதிராகக் கலவரம் விளைவிப்பதற்காக குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயித்து வைத்துள்ளார். இந்தக் கும்பல் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சிலம்பம் ஆடுகிறது.
மக்களின் உணவுப் பிரச்சினையில் தலையிடும் வகையில் பசுவதை தடுப்பு சட்டம் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ளன.

மூன்று வேளை உணவுக்கு உத்திரவாதம் கொடுக்க முடியாத இந்த அரசுகள் மக்களின் உணவுப் பழக்கத்தில் தலையிட உரிமை படைத்தனவா என்பது முக்கியமான கேள்வியாகும்.

பி.ஜே.பி.யின் ஆணிவேராக இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸின் இந்திய அளவிலான கடந்த கால வன்முறை நடவடிக்கைகளின் உண்மைகள் அலை அலையாக வெளிவரத் தலைப்பட்டுள்ளன.

முறையான வகையில் இந்தக் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டனை அளிக்கப் பட்டால், சங்பரிவார் மற்றும் அதன் அரசியல் அமைப்பான பி.ஜே.பி. வரை கூண்டோடு காலியாகும் நிலை ஏற்பட்டு விடும்.

மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி கலவரங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கும் ஒரு கட்சி எப்படி தேர்தலில் ஈடுபடுகிறது என்பதே கேள்விக்குறியாக இருக்கும்போது, அடுத்து அதுதான் மத்தியில் ஆட்சி என்று பிரச்சாரம் செய்யப்படுவது எவ்வளவுப் பெரிய ஆபத்தான போக்கு என்பதைப் பொது மக்கள் சிந்திக்க வேண்டும். 25-2-2012

தமிழ் ஓவியா said...

அருள் வாக்குக்கு சக்தி எங்கே? ஜோதிடர் வீட்டில் மோதிரங்கள் கொள்ளை
அண்ணா நகர், திருமங்கலம் வெல்கம் காலனியை சேர்ந்தவர் பழனிநாதன் (50). இவர், பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறுவதுடன் ஜோதிடமும் பார்க்கிறார். அவரவர் ராசிக்கு ஏற்ற மோதிரங்கள் கொடுப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். நேற்று மதியம் வீட்டுக்கு வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட 100 வெள்ளி மோதிரங்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ,.3லட்சம் என்று திருமங்கலம் காவல்துறையில் புகார் செய்துள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையரை தேடுகின்றனர்.
25-2-2012

தமிழ் ஓவியா said...

செய்திச் சிதறல்கள்!

முதியோரைக் காக்க சட்டம் இருப்பதற்கு சமூகம் வருத்தப்பட வேண்டும். - நீதியரசர் எஸ். இராசேசுவரன் (சென்னை உயர்நீதிமன்றம்)

நியாயமான ஒன்றுதான். இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டிய நிலைமைக்கு என்ன காரணம்? தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை கொடுமைப்படுத்தும் போக்கு தலைதூக்கி நிற்கிறதே - ஊரார் பழிப்பார்கள் என்பதற்காக முதியோர் இல்லத்தில் தள்ளி விடுகிறார்களே.

மகன்கள் ஒருபுறம் இருந்தால் வீட்டுக்கு வரும் பெண்கள் இன் னொருபுறம்.

அவா அவா தலை எழுத்தின்படி தான் எல்லாம் நடக்கும் என்கிற சமா தானத்தைச் சொல்லப் போகி றார்களா?

உலகமயம், தாராளமயக் கொள் கைகளால் நுகர்வோர் கலாச்சாரத் தின் கலப்பைகளாக மாறி விட்டவர் களின் மனப்பான்மையைத்தான் இது பிரதிபலிக்கிறது என்று சொல்லப் போகிறார்களா?

ஒன்றை மறக்கக் கூடாது. இவர்களும் ஒரு காலத்தில் முதியோர் ஆவார்கள் - அப்பொழுது இவர் களின் பிள்ளைகளும் தம்பாட்டனா ருக்குத் தமது தந்தையார் செய்த அ(உ)பகாரத்தை மறந்து விடு வார்களா என்ன?

குறிப்பு: சுயமரியாதைத் திருமண நிகழ்ச்சிகளில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மறக்காமல் சொல்லிக் கொண்டு வரும் முக்கியமான அறிவுரை, பிள்ளைகளே உங்கள் பெற்றோர்களிடம் நன்றி காட்டுங்கள் - அன்பைக் காட்டுங்கள்! என்பதுதான்.

ஒரு நாடு நாகரிகமானது என்ப தற்கு அடையாளம் முதியவர்கள் அந்நாட்டில் எப்படி நடத்தப்படு கிறார்கள் என்பதைப் பொறுத்ததே!

கிராமத்தில் உள்ள மரங்களை வெட்டக் கூடாது - காவல்துறைக்கு நீதிமன்றம் ஆணை

பதில்: நாட்டின் மிக முக்கியமான சொத்துகளுள் காடு வளம் என்பது மிக மிக முக்கியமானது. நீர்வளம், நிலவளம் என்பவற்றில் முக்கியமான இடத்தை இது வகிக்கிறது.

நில நடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்கு முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்படுவதே என்று சுற்றுச்சூழல் இயலார்கள் கூறுகின் றனர்.

மரங்களின் எண்ணிக்கை குறைய குறைய சுவாசத்துக்கு நல்ல காற்றும் கிடைக்கப் போவதில்லை. வாக னங்கள் தங்களின் இரைப்பைகளி லிருந்து நச்சுக் காற்றைக் கக்கிக் கொண்டு ஓடுகின்றன. இவற்றைத் தான் அன்றாடம் மக்கள் அனுப வித்துக் கொண்டுள்ளனர்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலத்தைத்தாரை வார்ப்பதற்காக காடுகள் அழிக்கப்படும் கொடுமை யும் இன்னொரு பக்கம்.

கெட்டுப் போகாமல் இருந்த கிராமங்கள்கூட தங்களின் வைப்பு நிதியாகிய மரங்களை இழந்து வெறிச் சோடிப் போகும் அவலம் ஏற்பட்டு விட்டது. உயர்நீதிமன்றத்தின் ஆணை கறாராக செயல்படுத்தப் பட்டால்தான் மனிதம் பிழைக்கும்!

தண்ணீர் விநியோகப் பொறுப்பு தனியாரிடம் விடப்பட வேண்டும் என்ற வரைவுக் கொள்கை உருவாக்கப் பட்டுள்ளது.

போகிற போக்கைப் பார்த்தால் ஆட்சியைக்கூட தனியார்த் துறைக்கு ஒப்படைத்து விடுவார்கள் போலிருக் கிறது. மூன்றாவது உலக யுத்தம் தண்ணீருக்காகத் தான் வரப் போகிறது என்று எச்சரிக்கப் பட்டுள்ளது. தண்ணீரைத் தனியார் வசம் ஒப்படைப்பது அதற்கான கல் நாட்டு விழா என்றே சொல்ல வேண் டும்.

வயலுக்கு உரத்தையும், பூச்சிக் கொல்லி மருந்துகளையும் வாங் குவதுபோல தண்ணீரையும் தனி யார்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், விவசாயம் என்ற தொழிலே முற்றிலும் ஒழிந்து, விவசாயிகள் என்று ஒரு காலத்தில் இருந்தார்கள் என்று வரலாற்றுப் பாடத்தில் பிள்ளைகள் பிற்காலத்தில் படிக்கும் பரிதாப நிலைதான் ஏற்படும். வெட்கம்! மகா வெட்கம்!!

முதல் அமைச்சர் பிறந்த நாளில் 64 பள்ளிகளுக்கு இலவசமாக தினமணி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கான சந்தாவைக் கட்டினார் மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினர் சண்முகவேலு.

தினமணி என்ற ஆர்.எஸ்.எஸ். காரரை ஆசிரியராகக் கொண்ட ஏட்டுக்கு அண்ணா பெயரையும் திராவிட இனச்சுட்டுப் பெயரையும் கொண்ட கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சந்தாகட்டி 64 பள்ளி களுக்குக் கிடைக்கும்படிச் செய் கிறார் என்றால் எந்த அளவுக்கு அண்ணாவையும், திராவிட இயக் கத்தையும் புரிந்து கொண்டு இருக் கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த ஆட்சியில்தான் விடுதலை நூலகங்களில் தடை செய்யப்பட் டுள்ளது. சட்டமன்ற நடவடிக்கை களைக் குறிப்பெடுக்க வார இதழ்களுக்கு அனுமதி கிடையாது. ஆனாலும் இப்பொழுது துக்ளக் குக்கு அந்த வாய்ப்பு - அதுவும் முன் வரிசையில் இடம் அளிக்கப்பட் டுள்ளதே - இந்த ஆட்சியில் இன்னும் என்னென்ன வெல்லாம் நடக்குமோ!

விழுப்புரம் மாவட்டம் கண்ட மங்கலத்தில் முதல் அமைச்சர் ஜெ. பிறந்த நாளையொட்டி, அவரை லட்சுமி அலங்காரத்தில் உருவகப்படுத்தி, அ.தி.மு.க.வினர் வைத்துள்ள விளம்பர பேனர்.- இன்றைய தினமலர் செய்திபடத்துடன் கடவுள்கள் எல் லாம் இப்படித்தான் தோன்றியிருக்கும் என்று தெரிகிறது. பெருமைப்படுத் துவதாக நினைத் துக் கொண்டு முதல்வரை சிறுமைப்படுத்தலாமா? (புராணக் கதை கள் போற்றத்தக்க தாக இல்லையே!) 25-2-2012