Search This Blog

1.5.15

மே தினக் கொண்டாட்டத்தில் பெரியார்

மே தினம்

தோழர்களே!

மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.

மே தினம் என்பது இன்று உலகமெங் கும் எல்லா தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும், ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படு கின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவது போல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படு வது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.


அதுபோலவேதான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண் டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை.


ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிட வில்லை.


ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும், முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.


இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொறுத்ததாகும்.


இங்கிலாந்து, பிரெஞ்சு முதலிய தேசங் களில் கொண்டாடுவதின் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப் படுவதாகும்.


எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாதமான வித்தி யாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளா தாரத்திலும் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.


அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலை மைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.



ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத் தில் ஒவ்வொரு விதமாகவே இருக் கிறார்கள். மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் பொறுத்து இருக்கிறார்கள்.
அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியென்றும், வகுப்புப் போர் என்றும் சொல்லப்படு கின்றது.
ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய் கொள் ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும் பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கிய மானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்றக் கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.


ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.


நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்வதன் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.


அய்ந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதி யான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண் டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.


இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.


இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானா லும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.


பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99 பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப்படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல் லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் - அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல் லாமல், ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு, அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப் பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக் காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப் பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழி லாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா? என்று பாருங்கள்.


மற்றும் ஜாதி காரணமாகவே, தொழி லாளிகளாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும் படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக் கிறார்களா இல்லையா? என்றும் பாருங்கள்.
இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதான மாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.


இந்தியாவில் வகுப்புப் போர் என்ப தற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.


இந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும், ஏழைகளாகவும், மற்றவர் களுக்கே உழைத்துப் போடுகின்றவர் களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.


இன்று முதலாளி, தொழிலாளி என்ப தற்கு நாம் என்ன வியாக்கியானம் செய் கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும், பாடுபடுகின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லு கின்றோம்.



ஆகவே, ஜாதியையும், அதற்கு ஆதார மான மதத் தன்மையையும்  அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழி லாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.


இந்தியாவில் ஏழை மக்களுக்காக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரா னாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும், மதத் தன் மையையும் ஒழிக்க சம்மதிக்க வில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர் களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.
ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நித்திய கூலிக்கோ, மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசிவிடுவதனாலேயே அல்லது அத்தொழிலாளிகள் விஷயமாய் பேசி விடுவதனாலேயே அல்லது அவர் களுக்குத் தலைமை வகிக்கும் பெரு மையைச் சம்பாதித்துக் கொண்ட தினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடுபட்டவர்களாக கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல், தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களா கவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.


இந்து மக்களின் மதமும், அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி, முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத் தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக்கொண்டாட்டத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லு கிறேன். இந்த முதலாளி, தொழிலாளி நிலை மைக்கு வெள்ளையர், கறுப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், தொழி லாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களாகும். அந்த முறை மாற்றப் படக் கூடாது என்பதை மதமாகக் கொண் டிருக்கிறவர்களே கறுப்பர்களாகும்.
ஆகையால், இதில் வெள்ளையர், கறுப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.
இந்திய தேசியம் என்பதுகூட ஜாதி யையும், மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருக்கிறதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழி லாளி, முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி, முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். இன்று நம் நாட்டிலுள்ள பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி, முதலாளி கிளர்ச் சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனா கவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி, முதலாளி வகுக் கப்பட்டிருப்பது ஒரு அளவு மாறி வரு கின்றது. இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும், தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.
இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர் கள், பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந்தனைகளைப் பார்த் தால் வகுப்புத் துவேஷம், வகுப்புக் கொடுமை என்பவை யாரால் செய்யப் பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.


நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி, தொழிலாளி கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டி யதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாக வும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப் பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.


இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.


நிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண் டும். ஏனெனில், நமது பண்டிகைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப் படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடு வது இந்நாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவையோ அல்ல.
பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவை தான் சிறிது ஓய்வும், சந்தோஷமும் கொடுக்கின்றன.
தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக் கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவ தில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படு வதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக் கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமே யானால் மத சம்பந்தமான பண்டிகை, உற் சவம் ஆகியவைகளை மக்கள் கை விடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.
ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.


              ------------- --------------------காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில் தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை  ”குடிஅரசு” - சொற்பொழிவு - 12.05.1935                                                                                                                 
                                                                                                                                       

0 comments: