Search This Blog

9.5.15

நன்னெறியாம் நாத்திகம் வளர்கிறது!இந்து மதத்தில் நாத்திகம் - ஆத்திகம் என்பது என்ன?

நன்னெறியாம் நாத்திகம் வளர்கிறது!

கவிஞர் கலி. பூங்குன்றன்

நாத்திகமா? நல்லதன்று - நாட்டையும் நல்ல மனிதர்களையும் கெடுக்கக் கூடியது.

உலகத்தைப் படைத்த ஆண்ட வனையே மறுக்கக் கூடியவர்கள் - உதவாக் கரைகள் - உருப்பட மாட்டார்கள் என்று சாபம் விடுவோர் உண்டு.

சாபம் விடுவதாலேயோ, சண்டைக்கு வருவதாலேயோ ஆகப் போவது என்ன? அவர்களின் முட்டாள்தனத்தை மூர்க்க மாகப் பாதுகாத்துக் கொள்வதைத் தவிர மூளக்கூடிய பலன் ஏதுமில்லை.

கடவுள் உண்டா, இல்லையா என்று கோதாவுக்குள் குதிப்பதைவிட அந்தக் கடவுளை நம்புவதாகக் கூறுபவர்கள் உண் மையிலேயே நடைமுறையிலே நம்பு கிறார்களா? நம்பி எந்தக் காரியத்தைக் கடவுளிடம் ஒப்படைக்கிறார்கள்?

உண்ணும் உணவிலிருந்து, உடலைப் பாதுகாப்பது உட்பட வாழ்வின் எல்லாப் பிரச்சினைகளிலும் தானே கையை ஊன்றிக் கரணம்போடுகிறானே தவிர, கடவுள் கவனித்துக் கொள்வார் என்று எதனை  கடவுளிடம் விட்டு வைக்கிறான்?

சங்கராச்சாரியாரே கண் பார்வை சரி யில்லை என்றால் சங்கரா  நேத்திராலயத் துக்குத்தானே ஓடினார்?


கடவுள் அவதாரம் என்று அடேயப்பா கடல் அளவுப் பிரச்சாரத்தையும், விளம்பரத் தையும் அவிழ்த்துக் கொட்டினார்களே - புட்டபர்த்தி சாயிபாபா - மூன்று மாதம் படுத்த படுக்கையில் கிடக்கவில்லையா? புகழ் பெற்ற மருத்துவ நிபுணர்கள் எல்லாம் கூடிக் கூடி ஆலோசித்து ஆலோசித்து வைத்தியம் பார்த்தும் பிள்ளை பிழைக்க வில்லையே!

இதேபோல் எத்தனை எத்தனையோ கேள்விகளைக் கேட்டதுண்டு, அறிவு நாண யமான முறையில் பதில் சொன்ன ஒரே ஒரு மனிதனையும் காண முடியவில்லை.

உலகம் இன்று உண்மையை நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறது. உண்மையை உணரும் ஆர்வத்தில் ஆயிரம் ஆயிரம் பரி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

பெரு வெடிப்புச் சோதனை (பிக்பேங் தியரி) நடத்தி பூமி உண்டான விதத்திற்கு விஞ்ஞானத்தின் மூலம் விடை கண்டுள் ளனர்.

மரபணு இரகசியங்களைக் கண்டறிந்து மரணமற்ற வாழ்வை மனிதன் மேற் கொள்ள முடியுமா எனும் ஆய்வில் குதித் துள்ளனர்.

இந்த ஏவுகணை வேகத்தால் மத நம்பிக் கைகளும் கடவுள் நம்பிக்கைகளும் புதை குழியை நாடுகின்றன.


கிறித்தவ நாடுகளில்கூட சர்ச்சுகள் விலைக்கு என்று விளம்பரம் செய்யப்படுகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த பியு ஆய்வு நிறுவனம் உலக மதங்களின் எதிர்காலம் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில் உலக அளவில் கடவுள் மறுப்பாளர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அறிவியல் வளர்ச்சி மற்றும் நவீன மய மாகும் மேலை நாடுகளில் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கல்வி யறிவு, அறிவியல், பொருளாதார சுதந்திரம், சமத்துவம், சமூக அமைதி கொண்ட மேலை நாடுகளில் நாத்திகர்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கிராமங்களை விட நகரங்களில் கடவுள் நம்பிக்கையற்றவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மிகவும் வேகமாக இல்லாவிட்டாலும் உள் ளூர் கடவுள் மறுப்பு, நாத்திக சித்தாந்தம் கொண்ட மக்கள் அதிகரித்து வருகின்றனர்.

இந்தியாவில் இன்றளவிலும் சமூகச்சூழலில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் பக்திமான்களாக காட்டிக்கொண்டாலும் உள்ளூர அவர்கள் கடவுள் மறுப்புச் சிந்தனையைக் கொண்டுள்ளனர்.  பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகள் அனைத்திலும் கடவுள் நம்பிக்கை யாளர்கள் அதிகம் உள்ளனர்.

கடவுள் நம் பிக்கை அதிகம் உள்ள நாடுகள் அனைத்தும் பொருளாதாரத்திலும் இன்னும் பின்னடை வைக் கண்டு வருவதும் குறிப்பிடத்தக்க தாகும். முக்கியமாக ஆசியாவில் உள்ள இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆப்பி ரிக்காவில் உள்ள சூடான், நைஜீரியா, மத்திய ஆப்ரிக்க குடியரசு, கானா போன்றவற்று டன் தென் அமெரிக்காவில் பெரு,சிலி, ஈக்வெடார், மெக்ஸிகோ என பல நாடுகள் மத நம்பிக்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு வருகின்றன.

இந்த நாடுகள் அனைத்தும் மூன்றாம் உலக நாடுகள் இவற்றில் பல பொருளாதார நிறைவு பெறாத நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.       2014 அமெரிக்கவின் ஹுட்சன் மாகா ணத்தில் உள்ள ரைஸ் பல்கலைகழக பேரா சிரியர் எலைன் ஹவார்ட் தலைமையில் கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள பல் வேறு அறிவியல் அறிஞர்களின் கடவுள் நம்பிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத் தினர்.

இந்தக் கணக்கெடுப்பை இங்கி லாந்தின் அறிவியல் அறிஞர்களுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ளனர். அதில் கடவுள் நம்பிக்கையற்ற அறிவியல் அறிஞர்கள்  இந்தியா 6 விழுக்காடு இங்கிலாந்து 71 விழுக்காடு உள்ளனர்.

மத விழாக்கள் மற்றும் மதம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அறிவி யல் அறிஞர்கள் இந்தியாவில் 32 இங்கி லாந்தில் 10 பேர்.
மதவிழாக்களை முற்றிலும் புறக்கணிக் கும் அறிவியல் அறிஞர்கள் இந்தியா 19 விழுக்காடு, இங்கிலாந்து 69 விழுக்காடு. கடவுள் இருக்கிறார் என்று நம்பும் அறிவியல் அறிஞர்கள் இந்தியா 32 விழுக்காடு, இங்கிலாந்து 10 விழுக்காடு.


நம்மைக் காப்பாற்றும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பிக்கைகொள்ளும் அறிவியல் அறிஞர்கள்  இந்தியா 38 விழுக்காடு இங்கிலாந்து 8 விழுக்காடு.

Rationalist International Bulletin  2013 எடுத்த கணக்கெடுப்பின் படி இந்தியாவில்  79 விழுக்காடு மதநம்பிக்கை கொண்ட வராகவும்,. 13 விழுக்காடு எந்த மதத்தை சாராதவர்கள் என்றும், 6 விழுக்காடு நாத்திகர்கள் என்றும் பதிவு செய்துள்ளனர்.

வாசிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க இதழ் மே மாதம் 2013 ஆண்டு மக்கள் தொகை மற்றும் மத நம்பிக்கை தொடர்பான விவாதத்திற்காக உலகம் முழுவதும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் மூலம் மத நம்பிக்கை குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில் இளைய தலை முறையைச் சேர்ந்தோர்களில் 42விழுக்காடு நபர்கள் கடவுள் மறுப்பு கருத்தைத் தெரிவித்திருந்தனர்.

2020 ஆண்டு 100 பேரில் 30 பேர் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருப் பார்கள் என்று தெரிவித்துள்ளது. இதன்படி இனிவரும் காலங்களில் உலகில் கடவுள் மறுப்பாளர்கள் மக்கள் தொகையில் மூன்றாமிடத்தை பிடித்துவிடுவார்கள் என்று தெரியவருகிறது. வரும் காலத்தில் தொடர் அறிவியல் வளர்ச்சி மற்றும் பொருளாதார மாற்றம் காரணமாக கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கை தற்போதுள்ளதை விட மிகவும் அதிகமாக வாய்புள்ளதாக கூறியுள்ளது.

நாடு            கடவுள் மறுப்பாளர்
(நாத்திகர்)

1.  ஸ்வீடன்        65.5%
2. செக் குடியரசு    64.3%
3. வியட்நாம்       63.55%
4. டென்மார்க்     61.5%
5. அல்பேனியா    60%
6. அய்க்கிய இராச்சியம் 52%
7.  ஜப்பான்    51.8%
8.  அஸ்ர்பைஜான் 51%
9.  சீனா 50.5%
10.  எஸ்தோனியா 49%
11.  பிரான்ஸ் 48.5%
12.  ரஸ்யா 48.1%
13.  பெல்லாரஸ் 47.8%
14.  பின்லாந்து 44%
15.  அங்கேரி 42.6%
16.  உக்ரைன் 42.4%
17.  நெதர்லாந்து 41.5%
18.  லாத்வியா 40.6%
19.  தென் கொரியா 36.4%
20. பெல்ஜியம் 35.4%
21.  நியூசிலாந்து 34.7%
22.  ஜெர்மனி 34.6%
23.  சிலி 33.8%
24.  லக்ஸம்பேர்க் 29.9%
25.  ஸ்லோவீனியா 29.9%
26.  வெனிசுவேலா 27.0%
27.  கனடா 23.9%
28.  எஸ்ப்பானியா 23.3%
29.  ஸ்லவாக்கியா 23.1%
30.  ஆஸ்திரேலியா 22.3%
31.  மெக்சிகோ 20.5%
32.  அமெரிக்கா 19.6%
33.  லிதுவேனியா 19.4%
34.  இத்தாலி 17.8%
35.  அர்ஜென்டினா 16.0%
36. தென்னாப்பிரிக்கா 15.1%
37.  குரோவாசியா 13.2%
38.  ஆஸ்திரியா 12.2%
39.  போர்த்துகல் 11.4%
40.  புவேர்ட்டோ ரிக்கோ 11.1%
41.  பல்கேரியா 11.1%
42.  பிலிப்பைன்ஸ் 10.9%
43.  பிரேசில் 8.0%
44.  அயர்லாந்து 7.0%
45.  இந்தியா 6.6%
46.  செர்பியா 5.8%
47.  பெரு 4.7%
48.  போலந்து 4.6%
49.  அய்ஸ்லாந்து  4.3%
50.  கிரேக்கம் 4.0%
51.  துருக்கி 2.5%
52.  ருமேனியா 2.4%
53.  தன்சானியா 1.7%
54.  மால்ட்டா 1.3%
55.  ஈரான் 1.1%
56.  உகாண்டா 1.1%
57.  நைஜீரியா 0.7%
58. வங்காளதேசம் 0.1%

இந்தியத் தொழில் நுட்பக் கழக மாணவர்களிடையே நாத்திகக் கருத்து வலுவாகப் பரவியுள்ளது. 2013-14 ஆம் கல்வி யாண்டில் பயிலும் மாணவர்களிடையே கடவுள் நம்பிக்கை மற்றும் மதம் குறித்த கருத்துக்கள் மீது நம்பிக்கையில்லை என்று கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந் துள்ளது.

இந்திய தொழில் நுட்பக் கழகங்களில் பயிலும் மாணவர்களிடையே அறிவியல் சார்ந்த கல்விகற்கும் நிலையில், அவர்களின் கடவுள், மத நம்பிக்கை குறித்த ஆய்வை மும்பையைச் சேர்ந்த ஒரு பத்திரிகை நிறுவனம் நடத்தியது. இந்த ஆய்வில் 22.8 விழுக்காடு தொழில்நுட்ப மேற்கல்வி பயிலும் மாணவர்கள் ஆத்திக கருத்துள் ளவர்கள் என்றும், 30.1 விழுக்காடு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும்  தெரிய வந்துள்ளது.

இளங்கலை தொழில் நுட்ப மாணவர்கள் தங்களுக்கு இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் பயில கிடைத்த அரியவாய்ப்பு தங்களது கடுமையான உழைப்புத்தான்; கல்வி கற்கும் போது அறிவியல் உபகர ணங்கள் மற்றும் நாங்கள் கற்ற கல்வியின் திறனால் தான் இங்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் தொழில் நுட்பக் கல்வி என்பது அறிவியல் சார்ந்த ஒன்று இங்கு கடவுளுக்கு வேலையில்லை என்று கூறினர். பல மாணவர்கள் தொழில் நுட்பம் பயிலுவதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எந்த தொடர்புமில்லை, என்று கூறினர். மதப்பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த மாணவர்கள் கூட தொழில் நுட்பம் என்று வந்த உடன் தங்கள் கடவுள் நம்பிக் கையைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டுத் தான் இங்கு வருகிறார்கள்.

2013-14-ஆம் கல்வியாண்டில் பயிலும் 260 மும்பை தொழில் நுட்பக் கழக மாணவர்களில் பெரும்பாலானோர் கல்வி என்று வரும் போது தங்களது கடவுள் நம்பிக்கையைக் கொஞ்சம் தளர்த்திவிடுகின்றனர். தேர்வு என்று வரும்போது 36 விழுக்காடு மாணவர்கள் தங்களின் திறமையை மட்டுமே நம்பியுள்ளனர்.

மாணவர்களின் நாத்திக மனநிலை குறித்து தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் ஒருவர் கூறும் போது இங்கு கல்விபயில வரும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் எதிர்காலம் குறித்து நிர்ண யித்துவிட்டுத் தான் வருகிறார்கள். தொழில் நுட்பக்கல்லூரி பட்டம் என்பது அவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடியது.

இங்கு பயிலும் கல்விக்கென்று நல்ல எதிர்காலம் உள்ளது. ஆகையால் மாணவர்கள் தங்களின் மதநம்பிக்கைகளை கொஞ்சம் மூட்டைகட்டிவைத்துவிட்டுத்தான் வருகிறார்கள் இருப்பினும் பெரும்பாலான மாணவர்கள் தங்களின் நாத்திக கருத்துக் களை வெளியில் காட்டிக்கொள்வதில்லை என்று கூறினார்.

முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை தொடர்ச்சியான உழைப்பு, பாடங் களில் கவனம் செலுத்துதல், அறிவியல் கருத்துக்களை உள்வாங்குதல் போன்றவை களால்தான்  தலைசிறந்த மாணவர்களாக அவர்கள் இங்கிருந்து வெளியேற முடியும் என்பதும் தொழில் நுட்பக் கழகங்களில் கூட மதநம்பிக்கை மற்றும் சமயசிந்தனைகளு டன் பயிலும்போது சரியான எல்லையை அடைய முடியாமல் போவதுடன் அவர் களால் சுதந்திரமான மனநிலையுடன் செயல்பட முடியாமல் போய்விடுகிறது.

இதுதான் உண்மை நிலை!

இந்தியாவில் இந்து மதத்தில் நாத்திகம் - ஆத்திகம் என்பது என்ன?

உலகம் முழுவதும் கடவுள் மறுப்புதான் நாத்திகம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இந்து மதமோ நாத்திகம் என்பதற்கும், ஆத்திகம் என்பதற்கும் வேறு கண்ணோட்டத்தில் விளக்கம் தருகிறது.
சங்கராச்சாரியார்கள் என்ன சொல்லு கிறார்கள்? குறிப்பாக காஞ்சீபுரம் மூத்த சங்கராச்சாரியார் என்றும் சங்கராச்சாரியார் களிலேயே மிகவும் மதிப்புக்குரியவர் என்று அவர்களின் வட்டாரத்திலேயே பெரிதாகப் பேசப்படும் திருவாளர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறும் கருத்து இந்த இடத்தில் மிகவும் பொருத்தமானதே.
நாஸ்திகம் என்றால் ஸ்வாமி யில்லை என்று சொல்கிற நிரீச்வர வாதம் என்று தானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமி, ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டேகூட ஆஸ்திகர் களாக இருக்க முடியும்
அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக் கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது?  அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்!
வைதீக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞான சம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது - ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல என்கிறார் காஞ்சி சந்திரசேக ரேந்திர சரஸ்வதி (ஆதாரம்: தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதி பக்கம் 407 - 408).
இது ஏதோ காஞ்சி சங்கராச்சாரியார் தன்னோக்கில் தான்தோன்றித்தனமாகச் சொல்லி விட்டாரா?
அதுதான் இல்லை; அவர்தான் சாஸ் திரங்களைக் கரைத்துக் குடித்தவர் ஆயிற்றே! மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல் லுகிறது? வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக் தியைக் கொண்டு
மறுப்பவன் நாஸ்திக னாகின்றான் (மனுதர்மம் அத்தியாயம் - 2; சுலோகம் 11)
கடவுளை நிந்தித்தாலும் பரவாயில்லை; வேதங்களை, தரும சாஸ்திரங்களை மட்டும் விமர்சிக்கக் கூடாது, எதிர்த்துக் கேள்விக் கேட்கக் கூடாது என்று பார்ப்பனர்கள் விரும்புவது - ஏன்? அதற்கான விடை எளிதானதுதான்.
வேதங்கள்தான் பார்ப்பனர்களை பிர்மா வின் நெற்றியில் பிறந்ததாகக் கூறுகின்றன.
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் ததேவதா
தன்மந்த்ரம் பிரம்மாதீனம்
பிராமணா மம தேவதா
(ரிக்வேதம் 62ஆவது பிரிவு 10ஆம் சுலோகம்)


உலகம் தேவர்களுக்குக் கட்டுப்பட்டது. தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்ட வர்கள், மந்திரம்  பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. எனவே பிராமணர்களே கடவுள் என்கிறது வேதம்.
இதற்கு விளக்கம் கூடத் தேவை யில்லை. கடவுள்களுக்கு மேல் பிராம ணர்கள் என்று கூறுகிற வேதங்கள், சாத் திரங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட் டவை - அப்படி விமர்சிப்பதுதான் நாத்திகம் என்று கூறப்படுவதன் பொருள் - இரகசியம் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!
இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது பெரும்பாலும் பார்ப்பனர் அல்லா தார் தந்தை பெரியார் அவர்களாலும் அவர்கள் கண்ட கழகத்தாலும் தன்மான உணர்வு பெற்றவர்கள் அத்தனைப் பேரும் நாத்திகர்களே! இதற்கொரு எடுத்துக் காட்டும் உண்டு.
1971இல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது, திராவிடர் கழகத்தாரால் ராமன் செருப்பாலடிக்கப்பட்டான் என்று கூறிப் பெரு மழைப் பிரச்சாரத்தைப் பார்ப்பனர் களும், அவர்களின் ஊடகங்களும் செய்த நிலையில்,  தவத்திரு குன்றக்குடி அடி களார் அவர்கள் தெரிவித்த கருத்தை இந்த இடத்தில் சாட்சிக்கு அழைக்கலாம்.
இன்று ஆஸ்திகம் என்பது உயர் சாதியினரின் நலம். இன்று நாஸ்திகம் என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம். உங்களுக்கு இதில் எது வேண்டும்? (விடுதலை 19.2.1971) என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னதை கருத்திற் கொண்டால் இந்து மதத்தில் ஆஸ்திகம் என்பது உயர் ஜாதியினராகக் கருதப்படும் பார்ப்பனர்களுக்கானது நாஸ் திகம் என்பது பிறப்பின் அடிப்படையில் சூத்திரர், பஞ்சமர்களாக்கப்பட்ட மக்களின் நலமாகும்.
யதாஹிசவ்ர:
ஸ்யத தயாஹிபுத்த
ததாகதம் நாஸ்திக மத்ரவித்தி
என்கிறது வால்மீகி இராமாயணம். திருடனும் புத்தனும் ஒன்றாவான், அவன் நாத்திகன் என்று கூறப்பட்டுள்ளது.

அறிவியல் ரீதியாக உலகம் நாத்திகத் திசையில் வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவிலோ இந்து மத வாதிகள் பிறப்பின் அடிப்படையில் மேல் ஜாதி ஆதிக்கவாதிகளாக வரித்துக் கொள்ள ஆஸ்திகர்களாக இருந்து வருகின்றனர்.
இந்தப் பிறவி முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்கள் கடவுள் நம்பிக்கையாளர் களானாலும் நாத்திகர்களாகவே இருந்து தீர வேண்டிய கட்டாயமாகி விட்டதா இல்லையா?
--------------------கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 9-5-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

Read more: http://www.viduthalai.in/page-1/101058.html#ixzz3ZdrKeuwg

0 comments: