Search This Blog

2.5.15

பிரச்சாரத்திற்குத் தடைகள்!-பெரியார்

பிரச்சாரத்திற்குத் தடைகள்!


நான் எப்போது சொற்பொழிவாற்றுவதற்கு ஆரம்பித்தாலும் நான் முதலில் பொதுமக்களிடம், "நான் பேசுவதைக் கேட்பவர்கள் அப்படியே நம்பக்கூடாது" என்று கேட்டுக் கொள்வேன். நான் மற்றவர்களைப் போல மக்களை வசப்படுத்த வேண்டும். மக்கள் ஆதரவைப் பெறவேண்டும், மக்களிடம் செல்வாக்கடைந்து புகழடைய வேண்டும் என்ற எண்ணத்தின் மீது எதையும் பேசுவது கிடையாது. என் மனதிற்குச் சரியென்றுபட்டது மற்றவர்களின் மனதைப் புண்டுபடுத்தினாலும், மற்றவர்களின் வாழ்க்கைக்கு இடையூராக இருந்தாலும் நான் அதை லட்சியம் செய்வதில்லை. அப்படிப்பட்ட முடிவின் மீது பேசுகிற நான் கூறுவது எதையம் மக்கள் நம்பிவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அவர்களிடம் நான் மற்றொன்று கோருவது. என்னுடைய சொற்பொழிவைக் கேட்டதும் ஒவ்வொருவரும் அதை சிந்தித்து ஆராய்ந்து அதனிடத்தில் காணும் உண்மைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைத்தான் கேட்டுக் கொள்ளுகிறேன்.


இன்றைய அரசாங்கம் எங்களுக்கு எல்லாத் துறைகளிலும் தொல்லை தொடுத்து வருகிறது. இதற்கு உதாரணம், இந்தக் கூட்டம் நடந்துவதற்குப் பிரச்சாரம் செய்வதற்காக அனுமதி கோரி இந்நகர அரசாங்க உத்யோகஸ்தர்களிடம் கேட்டார்களாம். அதற்கு அவர்கள் கொடுக்க மறுத்து, அதற்கு ஏதோ அர்த்தமில்லாத காரணங்கள் கூறி அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், இன்றைக்கு வேறு கட்சிக்காரர்கள் மட்டும் பிரச்சாரம் செய்து கொண்டு போகிறார்களே. எங்களுக்கு மட்டும் விளம்பரம் செய்ய அனுமதி கொடுக்கவில்லையே என்று என்னிடம் கூறினார்கள். ஆமாம், அப்படி விளம்பரம் செய்கிறவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். அவர்களுக்கு எல்லாவித உரிமையும் உண்டு. இன்றைய ஆட்சி ஜனநாயக ஆட்சி என்றாலும் காங்கிரஸ்காரர்கள் நினைத்தால் எதையும் சட்டரூபமாகக் கொண்டு வரமுடியும். அதிலும் பார்ப்பனர்களாலும், வடநாட்டவர்களாலும் ஆளப்படும் ஆட்சியில் பார்ப்பனர்களுக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் தனியான சலுகை அளிக்கப்படுகிறது.


உண்மையில் பொதுமக்கள் அரசாங்கம் என்றிருக்குமானால் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் இங்கு இருக்காது; ஒரு தனிப்பட்ட கட்சிக்காரர்கள் இந்நாட்டை ஆளுகிறார்கள். அதிலும் அப்படிப்பட்ட கட்சிக்காரர்களின் முன்னேற்றத்தைக் கருதியோ, மக்களின் நல்வாழ்வை விரும்பியோ ஆட்சி செலுத்துகிறவர்களும் இல்லை. சுயநலக்காரர்களிடம் சிக்கிய ஆட்சி சுயநலத்திற்கென்று ஆட்சியின் சட்டதிட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.


சுருங்கக் கூறினால், ஒரு மாபெரும் கொள்ளைக் கூட்டம் இந்நாட்டை ஆட்சியின் பேரால் கொள்ளையடிக்கிறது என்று கூறிவிடலாம்; அக்கொள்கைக்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சி என்று மாற்றுப் பெயர் இடப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட கொள்கைக் கூட்டத்திடம் சிக்கிய நம்நாடு சீரழிந்து வருகிறது.


எதற்கெடுத்தாலும் அரசாங்கத்திடம் அனுமதி கேட்க வேண்டும். அரசாங்கம் அனுமதி அளிப்பதோ பாரபட்சமான முறையில் தமிழன், பார்ப்பான் என்ற வேற்றுமையைக் கொண்டு அளிக்கிறது.


அதிலும் சேலம் நகரத்தைப் பொருத்த மட்டிலும் கொடுமையான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும். காரணம் இங்குள்ள அரசாங்க உத்யோகஸ்தர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்கள். எப்படியோ எல்லா உத்தியோகத்திலும் பார்ப்பனர்களாகவே அங்கு அமைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சும்மா இருக்கிறார்களா என்றால், அதுவும் ஒரு பார்ப்பான் இருந்தால் அவனோ பிள்ளைப் பூச்சியைப் போல் அரித்துக் கொண்டே இருப்பான். இங்கு எல்லோரும் பார்ப்பனர்களாகவே அமைந்துவிட்டதால் தமிழனாக உள்ள ஓரிரு உத்யோகஸ்தர்களுக்கும் கொடுக்கும் தொல்லையோ கணக்கில்லை. செய்யாத அட்டூழியங்கள் எல்லாம் செய்கின்றனர். நம்முடையவர்கள் ஓரிருவர்கள் இருப்பவர்களை முன்னுக்கு விடாமல் செய்வதும், எப்படியாவது அவர்கள் மேல் இல்லாத குறைகளைக் கூறி வேலையிலிருந்து நீக்குவதும், பிரமோஷன் இல்லாமல் செய்வதுமாக இருக்கிறார்கள்.


உண்மையில் அவர்களின் அட்டூழியங்கள் கூடியவரை அழிக்கப்பட வேண்டும். இதற்கு அரசாங்கம் தக்க முறையில் கவனிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.


மேலும் இன்றைக்கு இது போன்ற கூட்டங்களுக்கு அனுமதி கேட்பதென்பது தேவையற்றதாகும். அதுவும் இந்த அனுமதி எல்லோருக்கும் அளிக்கப்படுவதில்லை. ஆட்சி புரிகிற காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு சட்டமும், மற்றவர்களுக்கு ஒரு சட்டமுமாக இருக்கிறது. அரசாங்கத்திடம் அனுமதி கேட்டுத்தான் கூட்டம் நடத்த வேண்டும் என்று இருப்பது நமது முயற்சியை எல்லாம் தடை செய்ய வேண்டும் என்பதற்கே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நம்முடைய பிரச்சாரத்தைத் தடை செய்ய வேண்டும் என்பதற்காக இச்சட்டங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அனுமதி வாங்குவதற்கு ரூபாய் கட்ட வேண்டும் என்று இருக்கிறது. ரூபாய் கட்டுவது என்ற சட்டத்தை அரசாங்கம் பணத்தைக் கருதி ஏற்படுத்தவில்லை. எப்படியாவது நமக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் இன்றைக்கு மந்திரிகள் திடீர்ப் பிரவேசம் செய்கிறார்கள் என்றால், அதற்குக் கேள்வி கேட்பாடு இல்லை. அதற்கு மட்டும் பிரச்சாரம் செய்வதென்பதற்கு அனுமதி தேவை இல்லை. இப்படி ஒரு தனிப்பட்ட கட்சிக்காரர்களுக்கு அரசாங்கம் நடக்கிறதென்றால், இந்தச் சட்டம் பொதுமக்கள் நன்மைக்கென்று அமைக்கப்பட்டதா? எப்படியோ தில்லு முல்லுகள் செய்து செல்வாக் கடைந்துவிட்ட காங்கிரசிடம் சிக்கிய ஆட்சி பொது மக்களின் இஷ்டத்தின் பேரில் எதையும் அமைப்பது கிடையாது.


அதனால்தான் காங்கிரஸ் தோல்வியடைந்ததும் சர்வாதிகாரத்தின் பேரால் தங்கள் ஆட்சியை நிலை நாட்டிக் கொண்டார்கள். அய்ந்துக்கு மூன்று பங்கு எதிர்க்கட்சிக்காரர்களாகவும், காங்கிரஸ்காரர்களாகவும் ஆகியும் கூட காங்கிரஸ் ஆட்சியைத்தான் நிறுவினார்கள். இதிலிருந்து ஆட்சியானது காங்கிரஸ்காரர்களின் கையில்தான் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இது மட்டுமல்ல, தேர்தலில் நின்று ஜெயிக்காத ஆளையும், அஞ்ஞாத வாசம் செய்து கொண்டிருந்த ஆளையும் தேடிப்பிடித்து பதவியில் அமர்த்தினார்கள்!


இவையெல்லாம் ஜனநாயகச் சட்டப்படி செய்யாததுமன்றி ஆதிக்கம் தமது கையில் உள்ளது என்ற ஆணவத்தின் பேரில் யார் என்ன செய்ய முடியும் என்ற மனத் தகுதியைக் கொண்டு இப்படிப்பட்ட அக்கிரமங்களைத் துணிந்து செய்கின்றனர். இப்போதும் ஆட்சிக்கு எங்கே கேடு வந்துவிடுமோ என்று பயந்து பொது ஜனங்களைத் தங்கள் கையில் போட்டுக் கொள்ள எந்தெந்த முறையில் பிரசாரம் செய்ய வேண்டுமோ எப்படி எப்படிப் பேசினால் பொது மக்களை ஏமாற்றி ஒட்டு பெறமுடியுமோ அந்தத் தந்திர சூழ்ச்சிகளை எல்லாம் கையாளுகின்றனர். இதற்கு உதாரணமாக, இன்றைக்கு, என்றைக்கும் ஞானம் பிறக்காத முறையில் புதியதாகப் பிறந்துவிட்டது போல், நேரு முதற்கொண்டு "ஜாதி ஒழிய வேண்டும்" என்று எங்கு சென்றாலும், முதலாவதாக தன் சொற்பொழிவில் பல்லவி பாடிய வண்ணமாகவே இருப்பதைக் காணலாம்.


இன்னமும் இப்படிப்பட்ட பார்ப்பனத் தலைவர்கள் எல்லாம் இதே பாடலைப் பின்பற்றி மக்களிடம் ஏமாற்றுகின்றனர். ஜாதி ஒழியவேண்டும் என்று கூறுகிறார்களே தவிர, ஜாதியை நிலை நாட்டவும், ஜாதி எவற்றின்  பேரால் இருக்கிறதோ அவற்றையும் ஒழிக்க வேண்டும் என்பதைக் கூறமாட்டார்கள். எனவே, இவர்களின் ஏமாற்று வலையில் மக்கள் சிக்கி ஏமாற்றமடைய வேண்டாம் என்பதைக் கேட்டுக் கொள்கிறேன்.


நாங்கள் பிரசாரம் செய்கிறோம் என்றால், எங்கள் பிரசாரம் முழுவதும் ஜாதியை ஒழிக்கவும், ஜாதியை உண்டாக்கிய கடவுள், மதம், புராணங்கள் ஒழியவும்தான் பிரசாரம் செய்கிறோம். உண்மையில் ஜாதியை ஒழிக்கும் அரசாங்கமானால் எங்கள் பிரசாரங்களுக்கு நன்மை செய்ய வேண்டும். நன்மை செய்யாவிடினும் இடையூறு செய்யாமலே இருந்தாலே போதும்.


ஆனால், அப்படி இன்றி எங்களுக்கென்றே புதுப்புதுச் சட்டங்கள் இயற்றுகிறார்கள். ஜாதியை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகவே ஆச்சாரியார் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். பகுத்தறிவு புகட்டும் நாடகங்களையும் மதம், ஜாதி, கடவுள், புராணம் இவற்றின் புரட்டுகளையும் வெளிப்படுத்தும் நாடகங்களையும் தடை செய்ய வேண்டும் என்பதற்காகவும் நாடகத் தடைச் சட்டம் இயற்றப்படுகிறது. எங்களுக்குக் கூட்டம் நடத்துவதற்கென்றால் அனுமதி கொடுப்பது இல்லை. சென்னை போன்ற இடங்களில் கூட்டங்கள் நடத்துவதற்கு இடம் கொடுப்பதும் இல்லை. பெரிய ஹால் போன்றவை நகரத்தில் பல இருந்தாலும் எங்களுக்கு என்றால் கொடுக்க மறுக்கிறார்கள். காரணம் கேட்டால் கூட்டம் அதிகம் வரும், சாமான்கள் பழுதாகிவிடும் என்று ஏதேதோ காரணம் கூறி மறுக்கிறார்கள். அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஸ்டேடியும் இருக்கிறதென்றால் அது காங்கிரஸ்காரர்களைத் தவிர மற்றவர்களுக்குக் கிடையாது. இப்படி சென்னையில் கூட்டம் நடத்த இடம் கிடைப்பதென்பது பெரும் தொல்லையாக இருக்கிறது.


கடற்கரை போன்ற இடங்களில் போடலாம் என்றால் அதற்கும் ஒலி பெருக்கி அனுமதியோ இலகுவில் கிடைக்காது. கூட்டம் நடத்த பல நாட்கள் முன்பு அனுமதி கோரி எழுதினாலும் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவசரமாக அனுமதிச் சீட்டைக் கொடுப்பார்கள்.


ஆனால் பார்ப்பனர்களுக்கோ இப்படிப்பட்ட தொல்லைகள் கிடையாது. விடிந்து சூரியன் உதிக்கும் வரை இராமாயணம், மகாபாரதம் பிரசங்கம் நடக்கும். அதற்குக் கேட்பதற்கு ஆள் இருக்காது. சட்டம் கிடையாது எங்கள் கூட்டத்திற்கு மட்டும் அவர்கள் பாட்டன் வீட்டு சொத்து பறிபோய்விடுகிறது போல் நேரத்தைக் கூட அளந்துதான் கொடுப்பார்கள். மணி ஒன்பது ஆனவுடன் தயாராக போலீஸ்காரன் இருந்து கொண்டு ஒலி பெருக்கியைத் தூக்கிக் கொண்டுபோய் விடுவான். எங்கள் விஷயத்தில் மட்டும் அரசாங்கம் அப்படி சட்டத்தைப் பிரயோகிக்கிறது.


பார்ப்பனர்களுக்கு சென்னையில் கூட்டம் நடத்தவோ, பக்திப் பிரசாரம் இராமாயணம், மகாபாரத கதாகாலட்சேபம் நடத்தவோ கண்ட இடங்களில் அனுமதி கிடைத்துவிடும். பப்ளிக் ரோடுகளில் போக்குவரத்துக்கு
இடையூராக உள்ள இடங்களில் கூட நடத்துவார்கள்.


ஒலிபெருக்கி வைத்துக் கொண்டு மற்றவர்கள் தூங்குவதற்குக் கூட முடியாமல் இரவு முழுவதும் கத்திக் கொண்டே இருப்பார்கள். பார்ப்பானுடைய காஃபி கிளப்பில் இராப்பகல் என்று பார்க்காமல் ஓயாமல் ரேடியோவில் ரிகார்டுகளும் வைத்து சபதம் போடலாம். ஆனால் நாங்கள் பிரசாரம் செய்வதற்கென்றால் அதற்கு மட்டும் காலத்தை அளந்து கொடுக்கிறார்கள்.


எனவே அவர்கள் சட்டமும் அரசாங்க அமைப்பும் எங்களின் முயற்சிக்குக் கேடு செய்ய வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் பெரிய கிளர்ச்சி செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். அங்கங்கே ஒலி பெருக்கி லைசென்ஸ் வாங்காமலே எங்கிலும் ஒரு நாள் கூட்டம் நடத்த வேண்டும். அப்போது என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்கலாம். நாம் இப்படி செய்வோம் என்றுதான் மற்றொரு தந்திரத்தைக் கையாளுகிறார்கள். அதாவது லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு ஒலிபெருக்கி கொடுக்கக்கூடாது என்று ஒலிபெருக்கி வைத்து வாடகைக்கு விடும் வியாபாரிகளை மிரட்டி வைத்திருக்கின்றனர். அப்படி மீறிக் கொடுத்தால் அரசாங்கத்தார் ஒலி பெருக்கியைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார்கள். இப்படியும் தந்திரத்தைக் கையாளுகிறார்கள்.


நான் சில நாட்களுக்கு முன்பு இந்த ஒலி பெருக்கி சம்பந்தப்பட்ட
நியூசென்சை எடுத்துக் கூறி அதன் சம்பந்தப்பட்ட வரையில் உள்ள சட்டத்தை மாற்ற வேண்டும் என்றேன். டிப்டி சூப் ரெண்டிடம் உள்ள அதிகாரத்தை மாற்றி அமைக்கணும் என்கிறேன். ஆனால், நான் சொன்னேன் என்பதற்காக ஒரு மாற்றம் செய்திருக்கிறார்கள். இரண்டு ரூபாய் இதற்குக் கட்டணம் கட்ட வேண்டும். அந்த இரண்டு ரூபாயை இப்போது மூன்று  ரூபாயாகச் செய்திருக்கின்றனர். அதாவது அதிகாரத்தில் ஒரு படி மேலே போயிருக்கிறது. இதன் நோக்கம் என்ன என்று இராமசாமி சொல்லி நாம் கேட்கவாவது அவனுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுக்கவாவது என்ற எண்ணத்தின் பேரிலும் என் பேச்சுக்கு மாறுதலாக நடக்க வேண்டும் என்பதாகவும் இரண்டு ரூபாய்க்குப் பதிலாக மூன்று ரூபாயாக மாற்றிவிட்டனர்.


இப்படி எடுத்தாலும் திமீர் கொண்ட நோக்கத்தின் பேரில் அரசாங்கம் சட்ட திட்டங்களை இயற்றுகிறதே அன்றி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக சட்ட திட்டங்களை இயற்றுவதில்லை. எனவே கண்டிப்பாக ஒலி பெருக்கி விசயத்தில் கிளர்ச்சி செய்யத்தான் வேண்டும். ஆனால் நான்தான் எதற்கும் முன்னே நிற்கவேண்டியதாக இருக்கிறது.

இதற்கெல்லாம் நான் கிளர்ச்சி செய்தால் தான் உண்டு. நான் எவற்றைத்தான் கவனிக்க முடியும்? எத்தனையோ காரியங்களுக்குக் கிளர்ச்சி செய்ய வேண்டியதாக இருக்கிறது.


அதுவும் இன்றைய அரசாங்கமோ, நமக்குப் புறம்பாகத்தான் எதையும் செய்கிறது. மக்களுக்கு நன்மை செய்வதாகச் சொல்லிக் கொண்டு செய்யும் காரியங்கள் அத்தனையும் நமக்குத் தொல்லை கொடுக்க வேண்டும், நாம் முன்னேறாமல் இருக்க வேண்டும் என்ற சூழ்ச்சிக்காகவே செய்கிறார்கள்.


அவற்றில் ஒன்றுதான் இந்தித் திணிப்பு பற்றியதாகும். நம்முடைய மக்கள் படிக்காமல் இருக்கவும், சிறிதும் அறிவு பெறாமல் இருக்கவும் என்ன வழியோ அதற்கென்றே இந்தியைப் புகுத்துகிறார்கள்.


இப்படிப்பட்ட இந்தியைப் புகுத்தவந்த பி.ஜி.கெர் கமிஷனுக்கு என்னையும் அழைத்திருக்கிறார்கள். ஆனால், நான் அதற்கு பதில் ஒன்றும் தெரிவிக்கவில்லை. முதல் அழைப்பைத் தவிர, மற்றொரு அழைப்பும் அதன் பிறகு, "அவசியம் வரத்தான் வேண்டும். உங்கள் அபிப்பிராயத்தைக் கூறத்தான் வேண்டும்" என்று தனி அழைப்பையும் அனுப்பினார்கள். அதையும் வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அதற்குப் பதில் ஒன்றும் எழுதாமல் சும்மா இருந்துவிட்டேன். பிறகு ஒரு கடிதம் வந்தது. அதில், "நீங்கள் இந்தி கமிஷனிடம் சாட்சி சொல்ல விருப்பம் இல்லை போல் இருக்கிறது. ஆகவே உங்களுக்குப் பதில் வேறொரு ஆளை அந்த நேரத்தில் சாட்சி சொல்ல தீர்மானித்துள்ளோம். ஆகவே உங்கள் விருப்பம் என்ன என்பதைத் தெரிவியுங்கள்" என்று எழுதி இருந்தது. நான் அதையும் வாங்கிக் கொண்டு சும்மா இருந்து விட்டேன். இந்தி கமிஷனும் நடைபெற்று வேறு இடத்திற்குப் புறப்பட்டுப் போய்விட்டதாம். ஆனால், திரு பி.ஜி.கெர் நான் இந்தி கமிட்டியிடம் என்னுடைய விருப்பத்தைக் கூறவில்லையே என்றும் நான் கூறினால் அதை மதிப்பேன் என்பதாகவும் கூறியுள்ளார்.


நான் ஏன் அங்கு போகவில்லை, என் விருப்பத்தைக் கூறவில்லை என்றால், இந்தக் கமிட்டி மத்திய அரசு அரசாங்கத்தால் அனுப்பப்பட்டது. அதனிடம் சாட்சி சொல்லப் போகிறவர்கள் எல்லாம் மத்திய அரசாங்கத்தை முதலில் ஒப்புக் கொண்டவர்கள். அப்படி ஒப்புக் கொண்ட மத்திய அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கமிட்டியை மதித்து அங்கீரித்து சாட்சி சொன்னதாக பொருள்படும். ஆகவே, நான் வடநாட்டு ஆட்சியின் கீழ் இருக்க சம்மதிக்கிறேன் என்பதை முதலில் ஒப்புக் கொண்டு, அதன் பிறகு இந்தி சம்பந்தமாக என்னுடைய விருப்பம் இதுவாகும் என்பதைக் கூற கமிஷனிடம் போக வேண்டும்.


நான் மத்திய அரசாங்கத்திடமிருந்து பிரிய வேண்டும் என்ற எண்ணமுள்ளவன். வடநாட்டு ஆட்சியையே ஒழிக்க வேண்டும். அதன் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்திலுள்ள நான் வடநாட்டானால் அனுப்பப்பட்ட இந்தி கமிஷனிடம் எப்படி சாட்சி சொல்லுவதற்குப் போவேன். இந்தி வேண்டாம் என்று நான் அங்கு சொன்னாலும் முதலில் நான் வடநாட்டு ஆட்சியை ஒப்புக் கொண்டவன் ஆவேன். எனவே, நான் கமிஷனிடம் சாட்சி கூறப் போகவில்லை.

மேலும் நாங்கள் முதலில் தீர்மானித்தபடி கமிஷன் வரும் பொழுது கருப்புக் கொடி காட்ட வேண்டுமென்பதற்கு மாறாக நடக்க முடியவில்லை என்று கழகத் தலைவர்கள் கமிஷனரிடம் சாட்சி கூறப்போகிறவர்களிடம் கருப்புக் கொடி காட்டிக் கொண்டிருக்கையில் நானும் போகிற போது என் முன்பாகவும் கருப்புக் கொடி காட்ட வேண்டும். அப்படி இருக்குமானால் இதை விடப் பயித்தியக்காரத்தனம் வேறு ஒன்றும் இல்லை; எனவேதான் நான் இந்தி கமிஷனரிடம் சாட்சி கூறப்போகவில்லை. எதுவானாலும் கமிஷின் வந்தது. அதன் வேலையைத் தொடங்கியது. சாட்சிகளின் விருப்பத்தைக் கேட்டு எழுதிக் கொண்டது. வந்த வழியே திரும்பிப் போய்விட்டது. இனி என்ன செய்யுமோ தெரியவில்லை?

ஆனால், ஒன்று இந்தி மட்டும் இந்த நாட்டுக்கு வருமானால் அதை ஒழிக்க என்னுடைய முழு முயற்சியையும் உபயோகிப்பேன். கொடி எரிப்புப் போராட்டம் அதற்குத்தான் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.


---------------------- 15.01.1956-இல் சேலத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு "விடுதலை", 23.01.1956

0 comments: