Search This Blog

20.5.15

கண்ணகி கதை இலக்கியமா?

கண்ணகி கதை இலக்கியமா?

கண்ணகி சினிமாவைப் பார்த்தேன். அதன் பிறகு அந்தக் கதையைப் பார்த்தேன். பழந்தமிழர் பெருமைக்கு இந்தக் கதையா ஆதாரம் என்கின்ற ஆத்திரம் தான் வந்தது. இதைப் போன்ற முட்டாள்தனமான கதை ஆரியப் புராணங்கள் ஆகியவற்றிலும் இல்லை என்பது எனது அபிப்பிராயம். இந்தக் கதை ஓர் இலக்கியமாக இருப்பது தமிழர்களின் மானக்கேடு தான்.

கண்ணகி, கண்ணகிக் கால மக்கள் நிலை, கண்ணகி கால அரசர்கள் தன்மை, கண்ணகிக் காலக் கற்பு, கண்ணகிக் காலத் தெய்வங்கள் முதலியவை எல்லாம் "பண்டைத் தமிழர்களின் தன்மையை விளக்குகின்றன" என்றால் நாம் ஆரியர்களுக்குச் சூத்திரராய் இருப்பது மேலான காரியமாகும். அந்தக் காலத்திலேயே பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். அந்தக் கால அரசர்கள் அநீதி இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். அந்தக் காலத் தெய்வங்கள் நியாயம், அநியாயம் இல்லாமல் பார்ப்பனர்கள் தவிர மற்ற நிரபராதிகளையெல்லாம் வெந்து சாம்பல் ஆகும்படி செய்திருக்கின்றன. புத்தியே இல்லாத வெறிப் பிடித்த பெண் தேவதையாக ஆக்கி இருக்கிறார்கள். தாசி வீட்டில் இருக்கும் ஒரு ஆண்பிள்ளை எந்தப் பெண்ணைப் பற்றியும் சிந்தித்துப் பாடலாம். தாசி வேறு ஓர் ஆணைப் பற்றிப் பாடக் கூடாது என்பதைக் காட்டுகிறது. இந்த இலட்சணத்தில் கண்ணகிக்குக் கோயில் கட்டிய முட்டாள் தனமும், கண்ணகித் தெய்வத்தின் பெருமையும், இராமாயண, பாரத, பெரிய புராணப் புளுகையும், மூடநம்பிக்கையும் தோற்கடித்து விடும் போல் இருக்கிறது. (கண்ணகிக் கதையிலுள்ள மூட நம்பிக்கைகளைத் தொகுத்து மற்றொரு சமயம் கூறுவோம்) கண்ணகி நாட்டில் இருந்த கற்புள்ள பெண்களைப் பார்த்தால் உலகத்தில் உயிருடன் கூடிய எப்படிப்பட்ட பெண்ணும் கற்பாய் இருக்க முடியவே முடியாது என்பதுடன், கடுகளவு கூட அவை அறிவுக்கும் மனிதத் தன்மைக்கும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லவும் முடியாது. உதாரணம் சொல்லுகிறேன் பாருங்கள்.

முதலாவது பத்தினிப் பெண்

கண்ணகி மதுரைப் பாண்டிய மன்னனிடம் தனது இருப்பிடத்தைப்பற்றிச் சொல்லும் போது, தனது நாட்டில் ஏற்கனவே இருந்த 7-கற்புள்ள மகளிரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறாள். அதை இங்குக் குறிப்பிடுகிறேன். அப்பெண்களின் கற்புத் தன்மைகளாவன:

இவள் ஒரு காட்டில் திரிந்து கொண்டு இருந்த இடத்தில் ஒர் அழகிய பெண். இவளை அங்கு இருந்த ஆண் மகன் கண்டு ஆசைப்பட்டான். உடனே கூடிக் கலவி செய்தார்கள். அந்த ஆண் தன் காரியம் தீர்ந்ததும் அவசரமாக எழுந்து போய் விட்டான். பிறகு அந்தப் பெண் அலைந்து திரிந்து அவனைக் கண்டு பிடித்தாள். அப்போது அவன் அவளைத் தனக்குத் தெரியாது என்று சொல்லி விட்டான். அதற்கு அவள் தாங்கள் இருவரும் கலவி செய்த இடத்தைக் குறிப்பு சொன்னாள். அதுவும் தெரியாது என்று சொல்லி விட்டான். பிறகு அந்தப் பெண் இவனைத் தான் கலந்தது உண்மையானால், அதுமுதல் இவனைத் தவிர வேறு கணவனை மனத்தில் நினையாமல் கூட இருந்தது உண்மையானால், தாங்கள் கலவி செய்த அந்தக் காட்டு குடிசையும், அதன் பக்கத்தில் இருந்த வன்னிமரமும் இந்த இடத்திற்கு வந்து சாஷி சொல்ல வேண்டும் என்று கடவுளை வேண்டினாள். அதுபோலவே அந்தக் குடிசையும், வன்னி மரமும் அந்த விவகார இடத்திற்கு வந்து, "ஆம் இவன் இவளைக் கூடினான் நாங்கள் பார்த்தோம்" என்று சாஷி சொல்லிற்று. பிறகு சேர்த்துக் கொண்டான். எனவே, இவள் ஒரு பத்தினி.

இரண்டாவது பத்தினிப் பெண்

இரண்டு பெண்கள் ஆற்று ஓரம் கரையில் ஊசலாடுகையில், ஒரு பெண் மற்றொரு பெண்ணைப் பார்த்து அங்கிருந்து ஒரு மணற் பாவையை (உருவத்தை)க் காட்டி இது தான் உன் கணவன் என்று சொன்னவுடன், அந்தப் பெண் அந்த இடத்தை விட்டுப் போகாமல், ஆற்று வெள்ளம் அந்தப் பாவையை அடித்துக் கொண்டு போகாமலும் கரைந்து போகாமலும் காப்பாற்றினாள். இவள் ஒரு பத்தினிப் பெண்?

மூன்றாவது பத்தினிப் பெண்

கரிகாற்சோழன் மகள் இவள். தன் கணவனைக் காவேரி அடித்துக் கொண்டு போய் கடலில் சேர்த்து விட, அவனைத் தேடிச் சென்று கடலினிடத்தில் முறையிட்டுக் கடல் கணவனைத் தரப்பெற்றுத் திருப்பிக் கொண்டு வந்தவள். இவளொரு பத்தினிப் பெண்.

நான்காவது பத்தினிப் பெண்

தன்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வரும் வரை கடல் கரையிலேயே அவன் போன வழியைப் பார்த்துக் கொண்டே கல்லாகக் கிடந்திருந்து, கணவன் வந்த பிறகு பெண் உருப்பெற்றுக் கணவனுடன் வீடு வந்து சேர்ந்தவள். இவள் ஒரு பத்தினிப் பெண்.

அய்ந்தாவது பத்தினிப் பெண்

ஒருத்தி தன் மாற்றாள் குழந்தை கிணற்றில் தவறி விழுந்து விடத் தன் குழந்தையையும் கிணற்றில் போட்டு விட்டு இரண்டும் வெளி வரவேண்டும் என்று சொல்லி அக்குழந்தைகளை அடைந்தாள். இவளொரு பத்தினிப் பெண்.

ஆறாவது பத்தினிப் பெண்

இவள் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து இருந்த காலத்தில் வேறு ஒருவன் இவளை உற்றுப் பார்த்தது கண்டு தன் முகத்தைக் குரங்கு முகமாக ஆக வேண்டுமென்று கோரிக் குரங்கு முகமாக்கிக் கொண்டு கணவன் வந்ததும் அதை மாற்றிக் கொண்டாள். ஆகவே இவளொரு பத்தினிப் பெண்.

ஏழாவது பத்தினிப் பெண்

ஒரு பெண் தன் தோழியைப் பார்த்து விளையாட்டுக்காகத் தான் ஒரு பெண்ணையும் அவள் ஒரு ஆணையும் பெற்றால், அவ்விருவரும் கணவனும், மனைவியுமாக வாழ்வர் என்று சொன்ன சொல்லை அத்தோழி அப்பெண்ணின் மகளிடம் கூற, அந்த மகள் உடனே தோழியின் மகனுக்கு மனைவி ஆகிவிட்டாள். இவளொரு பத்தினிப் பெண்.

"ஆகவே, நான் இந்த ஏழு பத்தினிகளும் பிறந்த ஊரில் பிறந்த பெண் ஆகையால், நானும் கற்புள்ள பெண்ணாய் இருந்ததால், இந்த மதுரை மாநகரம் தீப்பிடித்து எரிய வேண்டும். ஆனால், மதுரையில் உள்ள ஆரியர்கள் எரியக் கூடாது என்று சொல்லித் தனது முலைகளில் ஒன்றைத் தன் கையில் கெட்டியாகப் பிடித்துத் திருகிப் பிடுங்கி எறிந்து அதிலிருந்து நெருப்புப் பற்றிக் கொள்ளச் செய்தாள்.

எனவே, தமிழ்நாட்டின் பழந்தமிழ் மக்களின் புத்திக்கும், நடைக்கும், ஒழுக்கத்துக்கும், ஆட்சி முறைக்கும், வீரத்துக்கும், இந்த இலக்கியங்கள் எடுத்துக்காட்டாக ஆகுமா என்று உங்களைக் கேட்கிறேன். இது எந்த விதத்தில் ஆரியர் புளுகையும், முட்டாள்தனத்தையும் விட குறைந்து இருக்கிறது என்று கேட்கிறேன்.


-----------------------தந்தை பெரியார்,"விடுதலை", 16.06.1943

0 comments: