Search This Blog

25.5.15

பார்ப்பானே வெளியேறு என்று ஏன் சொல்லுகின்றோம்?-பெரியார்

குலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டுவோம்! இன்றேல் செத்தொழிவோம்!


 தந்தை பெரியார்



இந்த நாட்டு மக்களாகிய நாம் சூத்திரர்கள் இழிஜாதி மக்களாக இருந்து வருகிறோம். இந்த இழிவுகள் இன்று நேற்றல்ல, 2000, 3000 ஆண்டுகளாக இருக்கின்றன, இவைகளை அதாவது இழிஜாதி மக்களாக, சூத்திரர்களாக, நாம் இருக்கிறோம் என்பதை நீங்கள் உணர வேண்டும், ஏதோ நம்மவர்களில் சில பேர் பூணூல் போட்டுக் கொள்வதாலோ, நாமம் போட்டுக் கொள்வதாலோ, கோவில் கட்டுவதாலோ, உயர்ந்தவர்கள், பெரிய ஜாதி என்று கருதிக் கொள்ளா தீர்கள். இவைகளை  எல்லாம் செய்வ தால்தான் சின்ன ஜாதி என்பதை  நாமாக ஒப்புக் கொள்வதாகும். நான்  இவை களையெல்லாம் சும்மா சொல்லவில்லை; புராணங்களைப் பார்த்து - சரித்திரங் களைப் பார்த்து - ஆதாரங்களைப் பார்த்துச் சொல்லுகின்றேன், திராவிடர் ஆகிய நாம் அனைவரும் ஆண்ட பரம்பரையினர். இந்த நாட்டுக்குச் சொந் தக்காரர்கள்; இந்த நாட்டு வளமை யெல்லாம் நம்முடையது; நம்மை இந்த நாட்டுக்கு வந்த அந்நியர்களான பார்ப் பனர்கள் இழி ஜாதி மக்களாக, சூத்திரர் களாக ஆக்கி வைத்துவிட்டார்கள். பார்ப்பான் நமக்கு அறிவே  இல்லாமல் முட்டாள்களாக்கினான்; அதைச் சொன்னால் பாபம்; இதைச் சொன்னால் பாபம்; கடவுளையோ, பார்ப்பானையோ, கோவிலையோ குற்றம் சொன்னாலும் பாபம் என்று மிரட்டி வைத்தான். அதன்படி பணக்காரர்களும் அவர்களை வணங்கினார்கள். அதைப் பார்த்து ஏழை எளியவர்களும் பின்பற்றினார்கள்; இது நீண்ட நாட்களாக இருந்துவரும் இழிவுத் தன்மை ஆகும்.


நம் உடம்பில் ஒரு சாதாரண புண் இருந்தால், அதற்கு மருந்து போட்டால் ஆறிவிடும்; ஆனால் அழுகிப்போன,  அதாவது புரையோடிப்போன புண்ணாக இருந்தால், காரமான மருந்தை வைத்துக்கட்டுகிறோம். அதற்கும் புண் ஆறவில்லை என்றால்,  புண் உள்ள பகுதியை  வெட்டு என்று வைத்தியர் கூறுகிறபடி செய்வோம்; இல்லாவிடில் உயிருக்கு ஆபத்து என்ற நிலைமைதான் ஏற்பட்டுவிடும். அதுமாதிரி நமது சமு தாயத்தில் புரையோடிப் போயிருக்கும் இந்த இழிவுத் தன்மையைச் சூத்திர தன்மையை ஒழிப்பதற்கு நாங்கள்  காரமான மருந்தாகச்  சொல்லுகின்றோம், முடியாவிடில் வெட்டித்தான் ஆக வேண்டும் என்று கூறுகிறோம்.


இந்த 1954 ஆம் வருடத்திலும் நாம் பார்ப்பனர்களால் இழிஜாதி மக்களாய் ஆக்கிவைக்கப்பட்டிருக்கும் தன்மையை உணரவில்லை. இன்னமும் நமக்கு மானமில்லை, உணர்ச்சியில்லை என்றே சொல்ல வேண்டும். முட்டாள் தனமாகச்  சோம்பேறிப் பார்ப்பான் கையில் நாம் பாடுபட்ட காசைக் கொடுத்து விட்டுச் சிவனே, கடவுளே,  என்று வீடுவந்து நிற்கின்றோம்.


எவராவது, எந்தக் கட்சிக்காரர் களாவது பொதுஜனங்களுக்குப் பாடுபடு பவர்கள் என்று வருகின்றவர்களைப் பாருங்கள். காந்தியார் உட்பட எல் லோரும் எதற்காக உங்களிடையே வந்தார்கள்? பட்டம் பதவிக்குப் போக வேண்டும்; இரண்டொருவர் மந்திரியாக வேண்டும், என்பதைத் தவிர வேறென்ன? எவராவது இந்த நாட்டு மக்களாக  இருக் கிறார்களே என்று கவலைப்பட்டவர்கள் உண்டா? பாடுபட்டவர்கள் உண்டா? எங்களைத் தவிர பாடுபட்டவர்கள் வேறு யார்? வேறெந்த நாட்டிலாவது, உலகத் திலாவது பார்ப்பான் இருக்கின்றானா? பறையன் இருக்கின்றானா? எந்த நாட்டி லாவது தலையில் பிறந்தவன் ஒரு ஜாதி; இடுப்பில் பிறந்தவன் ஒரு ஜாதி; காலில் பிறந்தவன் ஒரு ஜாதி என்று இந்த மானமற்ற இழிவான நாட்டைத்தவிர வேறு எங்காவது உண்டா?


அற்புத, அதிசய விஞ்ஞான நாடு களில் எல்லாம் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. ஆனால் இந்த விஞ் ஞான காலத்தில் இவைகளை எடுத்துச் சொல்ல எந்த ஆளும், எந்தக் கட்சியும் இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் கூட இல்லை. அவர்கள் ஏதோ இரண்டு பணக்காரர் களைப் பற்றிப்பேசிவிட்டுப் போவார்களே தவிர, அவர்களும் பார்ப்பானைப் பற்றி மறந்து ஒரு வார்த்தையும் சொல்ல மாட் டார்கள். ஏன் அந்தக் கட்சியும் பார்ப்பன ஆதிக்கம் உள்ள கட்சி. அதுமட்டுமல்ல. இந்த நாட்டில் எந்தக் கட்சியும், அது காங்கிரசாயிருந் தாலும், கம்யூனிஸ்டாயிருந்தாலும், சோஷி யலிஸ்டாய் இருந்தாலும், பிரஜா சோஷி யலிஸ்டாய் இருந்தாலும், அது எல்லாம் பார்ப்பன ஆதிக்கக் கட்சிகள்தான்.  பார்ப்பன ஆதிக்கம் இல்லாத கட்சி, பார்ப்பன எதிர்ப்புக்கட்சி என்று ஒன்று இருக்கிற தென்றால் அது திராவிடர் கழத்தைத் தவிர வேறு எதுவுமில்லை.


நாங்கள் பார்ப்பானே வெளியேறு என்று ஏன் சொல்லுகின்றோம்? நமக்கென்ன வேறு வேலையில்லையா?


சும்மா இருக்க முடியாமலா இந்தப்படி சொல்லுகிறோம்!  உலகத்தில் எங்கும் இல்லாதபடி இந்த 1954-ஆம் வருடத்திலும் நான் மேல்ஜாதி, நீ கீழ்சாதி என்று இன்னமும் சொல்லி வருகின்ற, ஒரு இனத்தைப் பாடுபடுபவன் சூத்திரன் பாடுபடாதவன் சோம்பேறி சுகவாழ்வு பெறவுமான  தன்மை யில் சமுதாய அமைப்பை அமைத்துக் கொண்டு, இதுதான் கடவுள், இதுதான் மதம், இந்தப்படித்தான் சாஸ்திரம் சொல்லுகிறது என்று வைத்துக் கொண்டு, இந்தப்படியான தன்மையிலேயே அரசியலையும், ஆதிக் கத்தையும் ஏற்படுத்திக் கொண்டு நம்மை ஏறி மிதித்துக் கொண்டிருக்கிற ஒரு இனத்தைப்பார்த்து, வெளியேறு என்று சொல்லுவதில் தவறு என்ன? இதைத் தவிர வேறு வழிதான்  என்ன, திராவிட மக்கள் விடுதலை பெறுவதற்கு? மக்கள் இடையில் இந்த உணர்ச்சி ஏற்படவேண்டும்; எல்லோ ரும் மனிதர்கள்தான் என்கிற முறை வரத்தான் பாடுபடுகின்றோம்.


இந்தக் காரியத்தைச் சும்மா செய்துவிட முடியாது. பெரும் புரட்சி நடைபெற்றாக வேண்டும். அப்பேர்ப்பட்ட புரட்சிக்கு  மக்கள் தயாராய்  இருக்க வேண்டும். உள்ளபடி யோக்கியன், கெட்டவன் என் பதைத் தவிர, அவன் தாழ்ந்த ஜாதி, இழிந்த ஜாதி என்பதை  இந்த நாட்டை விட்டு ஓட்ட வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் இன்றைய வேலையாகும்.


இந்த நாட்டை முதலில் முகலாயர்கள் ஆண்டார்கள். பிறகு வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள். வெள்ளைக்காரன் இங்கு பார்ப்பானால் வந்தான். பார்ப்பான் பேச் சையே கேட்டான். கடைசியில் வெள்ளைக் காரன் என்ன நினைத்தான் என்றால் பார்ப்பான் எல்லோரையும் ஏய்க்கின்றான். இந்த முட்டாள் ஜனங்கள் அவனுடைய ஏய்ப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள், என்ப தாக. இப்படிப்பட்ட முட்டாள் மக்களை ஏய்த்து வரும் பார்ப்பானிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு அவனிடம் சாவி கொடுத்து விட்டுப்போனால் தங்களுக்கு லாபம் என்று கருதிப் பார்ப்பனரிடம் ஆட்சியை ஒப்புவித்தான். ஆனால் வெள் ளைக்காரன் கொஞ்சம் ஓரளவுக்குத் தமிழ னுக்குப் புத்தி வர வசதி செய்து விட்டுப் போனான்: இந்த வெள்ளைக்காரனாலும் சுயமரியாதை பிரச்சாரத்தினாலும் மக்களுக் குக் கொஞ்சம் புத்தி வந்தது.


ராஜாக்களுக்கும் கொஞ்சம் புத்தி வந்தது. திருவாங்கூர் மற்ற ராஜ்யங்களில் கோவிலைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிடச் சொன்னார்கள். வெள்ளைக் காரன் இங்கு வந்ததும், பார்ப்பனர் தாம் பதவிக்கு வரும் மாதிரியில் ஏற்பாடுசெய்து கொண்டனர். அந்தப் படிக்கே கல்வி முறையையும் உத்தியோகத் தகுதியையும் ஏற்பாடு செய்து கொண்டனர், உதாரணமாக, ஒரு வக்கீல் வேண்டும் என்றால் 18 வருடம் ஆகும்; அதில் பார்ப்பான்தான் வக்கீலாக முடியும். காரணம் அவன் பிச்சையெடுத் தாவது அவன் மக்களைப் படிக்கவைக்க முடியும். அதற்கு அனுசரணை யாகவும், ஆதரவாகவும், அவன் ஜாதி உயர்வு இருக்கிறது. பல அக்கிரமங்கள் செய்து அவனே சகல உத்யோகத்தியோகங்களிலும் அமர்ந்தான்.


இவற்றையெல்லாம் மீறி இரண்டொரு நம்மவர்கள் படித்துவந்தனர். அதுவும் இந்தப் பார்ப்பனர்களுக்குப் பிடிக்க வில்லை. இதைத்தான் ஆச்சாரியார் அவர்கள் தமது திட்டமாகச் சொல்கிறார். அதாவது கிராம மக்களுக்குப் படிப்பு வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார். அவன் சிரைக்கணும், வெளுக்கணும், சட்டிப் பானை செய்யணும் என்று சொல்லி விட்டார். உங்கள் ஊர்ப்பள்ளிக்கூடம் 3 மணிநேரம்தான்; மற்ற நேரமெல்லாம் நம் பிள்ளைகள் கழுதை மேய்க்க வேண்டும், இதற்குப்  பெயர் புது ஆரம்பக் கல்வித் திட்டமாம், இப்படிப்பட்ட திட்டத்தை எதிர்ப்பதற்குத்தான் ஈரோட்டில் மாநாடு கூட்டினோம். அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். சட்டப்படி போராட வேண்டும் என்று சர்க்கார் (அரசு) சொல்லு கின்றது. அதாவது சட்டசபைக்குச் சென்று மந்திரி பதவியைக் கைப்பற்றி இந்தத் திட்டத்தை மாற்றவேண்டும் என்று சொல்லுகிறது. சட்டசபைக்கு நாம் போக முடியுமா? இன்னும் சொல்கிறேன்; யோக் கியன் சட்டசபைக்குப் போக முடியுமா? தேர்தலில்  நிற்பதற்கே முதலில் 250 ரூபாய் டிபாசிட் கட்ட வேண்டும்; பார்லிமெண் டுக்கு (நாடாளுமன்றம்) 500 ரூபாய் டிபாசிட் கட்டவேண்டும்; 200, 300 போலிங் ஆஃபீஸ் களுக்கு (வாக்குச்சாவடிகளுக்கு) ஆள் வைக்கவேண்டும்; அதற்கு ஆள் ஒன்றுக்கு 1 ரூபாய் கூலி என்றாலும் 300 ரூபாய் போல் வேண்டும்,


இவை எல்லாவற்றையும் விட நம் மக் களுக்கு ஓட்டுப்போடும்  (வாக்கு அளிக்கும்) தகுதியோ, அறிவோ இல்லாததால் நம் ஜனங்களுக்கு எது எப்படி ஆனாலும் சரி என்று 4 அணா கொடுத்தால்போதும் என்று தம் ஓட்டைப் போட்டு விடும் நிலையில் உள்ளவர்கள் ஆவர். இப்படி இருக்கும் போது யார் சட்டசபைக்கு வரமுடியும்? அப்படியும் போனால்தான் அங்கேபோய் என்ன செய்ய முடியும்? எடுத்துக் கொள் ளுங்களேன், சட்டசபையில் ஆச்சாரி யாரின் கல்வித்திட்டத்தை எதிர்த்து தீர் மானம் நிறைவேறியது. ஆனால் ஆச் சாரியார் அவர்கள்.  இது ஒரு சிபாரிசு என்று கூறிவிட்டார். இப்படி இருக்கும்போது சட்டசபைக்குப் போய்த்தான் என்ன செய்யமுடியும்? அதோடு இந்த ஜனநாய கம் சட்டசபை என்பது எல்லாம் தேர்தலில் நிற்காதவர்களும், தேர்தலில் தோற்றவர்கள் எல்லாரும் மந்திரிகளாக வரக்கூடிய கேவலமான தன்மையில் இருக்கிறது. இந்த நிலைமை இருக்கும் போது சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? பெரிய புரட்சியின் மூலம்தானே காரியம் சித்தியாகும்? நம்மில் 100, 1000 பேர் பலியாக வேண்டி வந்தாலும் தயார் என்று கச்சைக் கட்டிக்கொண்டு முன் நின்றால் தானே முடியும்!

ஆந்திரா எப்படிப்பிரிந்தது? அங்கே போராடத் தயாராகி விட்டார்கள், எதற்கும். நேரு தாம் இருக்கின்ற வரை ஆந்தி ராவைப் பிரிக்கமுடியாது என்றார். அதற்கு ஆக ஆந்திர மக்கள் சும்மா இருக்க வில்லை. ரயிலை நிறுத்தினார்கள்; அதன் டிரைவரை உதைத்தார்கள்; ஒரு மாதம் வரை சரியான நேரத்துக்கு வண்டிபோக முடியவில்லை. பல சட்டத்துக்குப் புறம் பான செயல்களையெல்லாம் துணிந்து செய்து நஷ்டத்தை உண்டாக்கினார்கள், உடனே  ஆந்திராவைச் சட்புட்டென்று பிரித்துக் கொடுத்துவிட்டார்கள்.


மற்றும் காங்கிரஸ்காரர்கள் இம்மாதிரி காரியங்களைச் செய்து, அதாவது தாங்கள் ஆகஸ்டு கிளர்ச்சி செய்துதான் சுதந்திரம் பெற்றதாகக் கூறிவருகின்றனர், இதனால் தான் நானும் 3 மாத நோட்டீஸ் கொடுத்து சுட்டால் சுடட்டும் என்று போராட்டம் ஆரம்பிக்க இருக்கின்றேன். எப்படியும் இந்தக் கல்வித்திட்டத்தை ஒழித்துத் தீர வேண்டும். வாத்தியார்கள் எதிர்த்தார்கள்; அதோடு போனமாதம் பஞ்சாயத்துத் தலைவர்கள் மாநாடு நடந்தது, 400பேர் கூடினார்கள். இதில் ஆச்சாரியார் அவர்கள் தந்திரமாக ஒரு ஆளை அனுப்பி அதில் பேசி ஏமாற்றப் பார்த்தார். ஆனால் அங்கே அந்த ஆளை வெளியேற்றச் சொல்லிக் கலவரம் நடந்து அந்த ஆள் வெளியேறும்படியாகிவிட்டது. மற்றும் ஜில்லா போர்டுகளும், முனிசிபாலிட்டி களும் இதை எதிர்த்து தீர்மானம் போட்டன.  இவ்வளவுக்குப் பிறகும் ஆச்சாரியார் அவர்களும், நகரங்களுக்கும் இக்கல்வித் திட்டத்தை விஸ்தரிக்கின்றேன் என்று கூறுகிறார் என்றால், நம்மை  மடையர்கள் என்று கருதுவதைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஆகவேதான்  கிளர்ச்சிக் குப் படை திரட்டுகின்றோம். இரத்தம் சிந்தத் தயாராயிருக்கின்றோம். இப்போது ஆள்கிறவர்கள் பார்ப்பனர்; உதைப்பார்கள்; சுடுவார்கள்; எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் சட்டத்தால் செய்ய வேண்டிய தெல்லாம் முடிந்துபோய்விட்டன. ஆகவே அரசாங்கம் செய்யும் அக்கிரமங்களைச் சட்டத்தைமீறிக் காரியங்களைச் செய்து தான் நாம் போராட வேண்டியுள்ளது. அந்த நிலைமைக்குச் சர்க்காரே (அரசே) நம்மைக் கொண்டுவந்து விட்டுவிட்டது. ஒன்று அந்தப் படிப்புத் திட்டத்தை ஒழித்துக்கட்டு, அல்லது அங்கேயே சாவு என்று சொல்லி உங்கள் இளைஞர்களை அனுப்ப வேண் டும். தாய்மார்களும் களத்தில் குதிக்க வேண்டும்; இந்தப் போராட்டத்தில் இரண்டி லொன்று  பார்த்துவிட வேண் டியதுதான்.


-------------------23-2-1954 அன்று மெணசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார்பேருரை: "விடுதலை" 26-2-1954

0 comments: