Search This Blog

26.5.15

என்னைப் பற்றி - பெரியார்

என்னைப் பற்றி...  



பெரியார் ஈ.வெ.ரா.


நான் ஏறக்குறைய சுமார் 50– ஆண்டு காலமாகவே பார்ப்பன மேல் ஜாதி மக்கள் என்பவர்கள் - சட்டப்படி - சாஸ்திரப்படி - மதத்தின்படி என்று தாங்கள் அடைந்திருக்கும் வசதியையும், உயர்நிலையையும் பார்ப்பனரல்லாத "கீழ் மக்கள்" நலனுக்குக்கேடாகப் பயன்படுத்தும் வாய்ப்பை ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருகிறேன். என்னுடைய பிராதன ஒரே தொண்டு இது தான். இனியும் என் வாழ்நாள் வரையிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தொண்டும் இது தான். இவ்வளவு நாள் வரையிலும் பாடுபட்டும், இந்த நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கு பார்ப்பனரால் ஏற்பட்டு வருகிற கொடுமைகள் அவர்கள் தலையெடுக்கவொட்டாமல் அழுத்தப்பட்டு வருகிற "துணிச்சலான அநீதிகள்" ஒரு குறிப்பிடத்தகுந்த அளவுக்காவது, குறைந்திருக்கின்ற அளவு நிலைத்திருக்குமா? என்று சொல்ல முடியாது. 



                             ---------------------அய்க்கோர்ட் அவதூறு வழக்கில் தந்த அறிக்கை.

*********************************************************************************

நான் சாதாரண ஆள்தான் என்றாலும், இன்றைய மந்திரிகள் போன்றவர்களை விட எவ்வளவோ மேலானவன்; உலகம் சுற்றியவன்; பூணர பகுத்தறிவாதி; சொத்து சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லாதவன்; சொந்தத்திற்கும் பணம் சேர்க்க வேண்டிய தேவையில்லாதவன்; ஜாதி உணர்ச்சி, ஜாதிப்பற்று இல்லாதவன்; என்ன செய்தாவது ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பவன். 



70- ஆண்டு கால அனுபவம், 30- ஆண்டு வியாபார அனுபவம்.1915-16,17,18,19- வரை ரிஜிஸ்தர் செய்யப்பட்ட ஈரோடு வியாபாரச் சங்கத் தலைவன். தெ.இ.வியாபாரச் சங்க நிர்வாக சபை அங்கத்தினராக இருந்தவன். 5- ஜில்லாவுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவனாக இந்திய கவர்ன்மெண்டாரால் நியமிக்கப்பட்டவன். 




ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி, பழைய மாணவர் சங்க செக்ரட்டரி, ஹைஸ்கூல் போர்டு செக்ரட்டரி, பிறகு தலைவர்.1914- ஆம் ஆண்டு நடந்த கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி, 10- ஆண்டு ஆனரரி மாஜிஸ்ட்ரேட், ஈரோடு தாலுக்கா போர்ட் பிரசிடெண்ட் பல வருடங்கள் ஈரோடு முனிசிபல் சேர்மென். ஜில்லா போர்டு மெம்பர்; வாட்டர் ஓர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி, பிளேக் கமிட்டி செக்ரட்டரி, கோவை ஜில்லா 2-வது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரியாக 10- ஆண்டு, பிறகு 1929- வரை வைஸ்பிரசிடெண்ட்; பிரசிடெண்ட், 1918- ஆம் ஆண்டு உலக யுத்தத்தில் ஆனரரி ரெக்ரூட்டிங் ஆஃபீசர்; 1918- ஆம் ஆண்டு யுத்தத்தில் தாலுகா, ஜில்லா அரிசி கண்ட்ரோலில் கவர்மெண்டாரின் நிர்வாகி; அதாவது, அரிசி கண்ட்ரோலில் கவர்ன்மெண்டாருக்கு வரும் அரிசி வாகனங்களின் ரசீதுகளை வாரம் ஒவ்வொரு தாலுக்காவிலிருந்தும் 15, 20- டன் வீதம் எனக்கே கொடுத்து மற்ற வியாபாரிகளுக்கு விநியோகிக்கும்படி ஜில்லா கலெக்டர் கேட்டுக் கொள்ளும் டிஸ்டிரிபியூட்டிங் ஆஃபீசர்; கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி; காங்கிரசிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி தலைவர்; காதிபோர்டு (ஃபவுண்டர்) அமைப்பாளராக இருந்ததோடு, 5- வருடம் தலைவராக இருந்த போது எனக்குச் செயலாளராக டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், கே. சுந்தானம், எஸ்.ராமநாதன், கே.எம்.தங்கபெருமாள், அய்யாமுத்து முதலியவர்கள் இருந்தார்கள். 



இவைகள் ஒருபுறமிருக்க, 1940, 42- இல் 2- வைஸ்ராய்கள்; 2- கவர்னர்கள் என்னை அழைத்து மந்திரிசபை அமைக்க வேண்டினார்கள். ராஜாஜியும் வேண்டினார். நான் மறுத்து விட்டேன்.



1919- ஜீலையில் நான் ஜில்லா தாலுக்கா போர்ட் மெம்பர் சேர்மென் முதலிய பதவியை ராஜிநாமா கொடுத்த காரியம் பேப்பரில் வெளியானவுடன் லோகல் அண்டு முனிசிபல் போர்டு கவுன்சில் மெம்பர் பி.ராசகோபாலாச்சாரியார் அவர்கள் ஈரோடு வந்து, "என்ன ராமசாமி நாயக்கரே! இப்படி முரட்டுத்தனமான வேலை செய்து விட்டீரே! உமக்குப் புத்தியில்லையா?" என்றார். அவர் பக்கத்தில் கெரோசின் ஆயில் டீலர்ஸ் ஏஜெண்ட் கோவிந்தாச்சாரி இருந்தார். உடனே நான் வணங்கி, "நான் என்ன செய்து விட்டேன்" என்று கேட்டேன். அவர் தனது மனைவியைப் பார்த்து "அம்மா இவருக்குச் சொல்லு" என்று சொல்லி விட்டு மௌனமாக இருந்துவிட்டார்.



அந்த அம்மையார், "அய்யர் உங்களுக்கு, நீங்கள் உங்கள் முனிசிபாலிடியில் தண்ணீர்க் குழாய் ஏற்படுத்தியதற்காக "ராவ்பகதூர்" கொடுப்பது என்று சிபாரிசு பண்ணியிருக்கிறார். உங்கள் கலெக்டர் ராவ் சாகிப் தான் சிபாரிசு செய்தார். அய்யர் ராவ்பகதூர் என எழுதி கவர்னருக்கு ஃபைல் போய் இருக்கிறது. நீங்கள் இப்படி அய்யருக்கு அவமானம் செய்துவிட்டீர்களே; இது சரியில்லை" என்று சொன்னார். நான் பல காரணங்களைக் கூறி மறுத்து விட்டேன். 




நான் காங்கிரசுக்கு விரோதி என்று ஆனபிறகுங்கூட, ஆச்சாரியார் என் வீட்டிற்கு வந்தும் என்னை (காங்கிரசில் சேராமல், கதர் போடாமல்) சட்டசபைக்கு நாமினேஷன் போட ஃபாரம் நீட்டிக் கையெமுத்து கேட்டார். நான் மறுத்து விட்டேன். 41- இல் மந்திரிசபை அமைக்க ஒப்புக் கொள்ளும்படி சொன்னார். நான் கவர்னர் கவர்னர் ஜெனரல் ஆகியவர்கள் இடமெல்லாமல் மந்திரிசபை அமைக்க மறுத்து விட்ட பிறகு, என்னை அழைத்து மந்திரிசபை அமைக்கும்படியும், நான் விரும்பினால் தானும் ஒரு மந்திரியாயிருந்து எனக்கு உதவியும், காங்கிரசுக்கு ஆதரவும் தருவதாயும் சொன்னார். நான் மறுத்து விட்டேன். 




போதும், இவ்வளவு எடுத்துக் காட்டுவகற்கே நான் மிகமிக வெட்கப்படுகிறேன். தறுதலைகளும்! பொறாமைக்காரர்களும்! சொந்த எதிரிகளும்! இதன் மூலம் ஒரு பொது மனிதன் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமோ அதைவிட்டு விட்டு குற்றம் குறை சொல்ல வழி காணத்துடிக்கிறார்கள்.




இருந்தாலும், நான் ஏன் 'வெட்கம்' என்பதை விட்டு விட்டு இவ்வளவு எடுத்துக்காட்டுகிறேன் என்றால், துரோகம் செய்து அயோக்கியனாய் வாழ வேண்டிய அவசியம் எனக்கு எந்தக் கட்டத்திலும் வந்ததில்லை என்பதை எடுத்துக் காட்டவேயாகும். எல்லாத் துறைகளிலும் எனக்கு இந்த மந்திரிகளுக்குச் சிறிது கூட குறையாத அனுபவமும், திறமையும் உண்டு என்பதைக் கூறவுமேயாகும். ஒன்றை ஒப்புக் கொள்கிறேன். 




அதாவது, நான் பல விஷயங்களில் அறிவுக்குறைவு உள்ளவனாக இருக்கக் கூடும்; பல தவறுகள் செய்திருக்கக் கூடும்; இன்றைய கருத்தில் இருந்து நாளை மாறுதல் அடையக்கூடும்; பல கருத்துக்களை மாற்றியும் இருக்கிறேன். இவைகள் எல்லாம் எனது கண்ணியமான அனுபவம் ஆராய்ச்சியைக் கொண்டே இருக்குமே தவிர, பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக் கொள்ளவோ, கடுகளவு கூட காரணம் கொண்டதாய் இருக்காது. 




அதாவது, ஒரு பண்டம் கைநழுவி விழுந்து உடைந்து போவதற்கும், 
உடைக்க வேண்டுமென்றே கருதி கீழே போட்டு உடைப்பதற்கும் உள்ள பேதம் போன்றதாகும். இப்படிப்பட்ட என்னை இந்நாட்டு விடுதலைக்கு குறுக்கே இருந்தவன், துரோகம் செய்தவன் என்று சொல்லும் போது, எவ்வளவு "மன உரம் இருந்தாலும் நிதானம் தவறத் தூண்டுகிறது". 
அந்த நிதானம் தவறிய சொற்கள் தான் மேலே என்னைப் பற்றிக் குறிப்பிட்டவையாகும். பொருத்தருள்க.



இன்னமும் சொல்கிறேன், நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக் குறுக்கே இருந்திருந்தாலும்,  இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும், இந்தப் பாவிகள், மாபாவிகள் ஆதிக்கத்திற்கும் அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து அடிமையாக்கி அதனால் பணமும் பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல.
 *********************************************************************************

சட்டசபையும் மந்திரி பதவியும் பார்ப்பானிடத்திலும் வடநாட்டானிடத்திலும் இருப்பதால் இன்றைய மந்திரிகள் இதை ஆதரித்து இவைகளை மக்களிடம் பரப்ப கங்காணிகளாக இருக்கிறார்களேயொழிய மற்றபடி அவர்கள் சொந்தப் புத்தியிலா? தேசபக்தியிலா? பொது நல உணர்ச்சியிலா? சொல்லட்டுமே! அமெரிக்க ரஷ்யநாட்டு நீதிபதிகள் முன்னிலையிலோ அரசியல் நிபுணர்கள் முன்னிலையிலோ சொல்லட்டுமே பார்ப்போம். பல நாட்டு அரசியல் தலைவர்கள் மந்திரிகள் இங்கு வருகிறார்களே - அவர்களிடம் இந்த தக்ளி ராட்டினம் பஞ்சுப்பட்டை போடுதல் கதர் நெசவு கை நெசவு - அடிப்படைப் பள்ளிகள் - இவைகளைக் கொண்டுபோய்க் காட்டி விசிட்டர் புத்தகங்களில் கையெழுத்து வாங்கட்டுமே பார்ப்போம். உலகில் எங்குமேயில்லாத காட்டுமிராண்டிகள் ஆட்சி எந்த நாட்டிலுமே இல்லாத பார்ப்பன பனியா துரோகிகள் ஆதிக்கம் ஒரு பர்மாவும் பாகிஸ்தானும் ஒரு இலங்கையும் ஒரு ஆஃப்கானிஸ்தானமும் ஒரு நேப்பாளமும் வெள்ளையனை விரட்டிவிட்டுச் சகமாக வாழும்போது திராவிடர் நாடாகிய தமிழ்நாடு பார்ப்பன ஆதிக்கத்தை விரட்டிவிட்டு சுதந்திரமாக வாழ முடியாதா? 

                                                     ----------------------------------யார் துரோகிகள்.

******************************************************************************

என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு.
                                               -------------------------------------------பகுத்தறிவு 1935

*********************************************************************************

திராவிடர்களிடையில் எனக்குக் கெட்டபேர் வளர்கிறது என்று கூடச் சிலர் சொன்னார்கள். எனக்கு இந்தவிதமான உணர்ச்சிக்கு இடமில்லாத, மானத்தைப் பற்றிக் கவலைப்படாத, திராவிட மக்களிடையில் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற கவலை சிறிதுமில்லை. அப்படிப் போலி நல்ல பெயரின் மீது என் வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை. திராவிட மக்களுக்கு ஏதாவது தொண்டாற்ற வேண்டும். அதில் முதன்மையானதாய் திராவிடன் இழிவு நீங்க வேண்டும் என்கிற ஆசையும், கவலையும் தவிர, வேறு ஒன்றுமே எனக்குக் கவலையாக இல்லை. எனக்கு வேறு அடைய வேண்டிய சாதனமும் இல்லை. இன்று திராவிடனுக்கு உள்ள இழிவு என்னவென்றால், அவன் சூத்திரனாகவிருக்க வேண்டியிருக்கும் "இந்து"வாக இருப்பதைத் தவிர வேறில்லை.
                                                         ----------------------------------இன இழிவு ஒழிய....

*********************************************************************************


இந்த காலத்து இளைஞர்கள் மனம் என் மீது வெறுப்புக் கொள்ளாது. வெறுப்புக் கொண்டு விடுமானாலும் கூட நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்; பாராட்டாவிட்டாலும் இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மான வாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள். சரியாவோ, தப்பாகவோ நான் அதில் உறுதி கொண்டிருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும் மனக்குறையின்றி, நிறைமனதுடன் அனுபவிப்பேன் - சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகின்றேன்.

                                                       --------------------------------------------------- குடிஅரசு


*********************************************************************************


என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள் தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பதுபற்றி எனக்குக் கவலை இல்லை.



இந்தச் சந்தர்ப்பத்தில் எனது மதிப்பிற்குரிய நண்பர் பா.வே. மாணிக்கநாயக்கர் அவர்கள் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் ஈரோட்டில் எக்சிகியூட்டிவ் எஞ்சினீயராய் இருந்தபோது அவர் எங்கள் வீட்டில் குடியிருந்தார். மாடுகளுக்குச் சுலபமாய் இழுக்கக்கூடிய புதுமாதிரியான கவலை ஒன்று செய்யத் தனக்கு இரண்டு கொல்லர்களைத் தருவித்துக் கொடுக்கும்படி சொன்னார். நான் யோசித்து இரண்டு கெட்டிக்காரக் கொல்லர்களின், அதாவது துப்பாக்கி செய்யக் கூடியவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை அழைத்து வரும்படி என் காரியஸ்தர்களுக்குக் கூறினேன்.





அப்போது அவர் சொன்னார், "கொல்லன் கெட்டிக்காரன் என்பவர்களை அனுப்பி வைப்பாயானால், அவர்கள் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனப் போட்டி வேலையைக் கெடுத்துவிடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்துவார்கள். என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, சொல்வதைப் புரிந்து கொண்டு அதன்படி வேலை செய்யக்கூடிய ஒரு படிமானமுள்ள சொன்னபடி நடக்கக்கூடிய, இரண்டு சம்மட்டியும், கத்தியும் பிடித்துப் பழகிய ஆளை அனுப்பி வைத்தால் போதுமானது. அவர்கள் முட்டாள்களாயிருந்தாலும் சரி; அவர்களைக் கொண்டு சுலபத்தில் வேலையை முடித்து விடலாம் என்று கூறினார். 




புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப்போதுமே இயற்கைதான். ஆகவேதான், நான் நீடாமங்கலம் மாநாட்டின் போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று. யாராவது ஒருத்தன்தான் நடத்தக்கூடியவனாக இருக்க முடியுமே தவீர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவாகள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான். தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன். நீடாமங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன். 




நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டியதுதான். கழகத்தில் சேரு முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம். என்னுடன் வாதாடலாம். உங்கள் மனசாட்சி என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப்பட்டது என்றும் நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்!





ஆனால், எப்போது உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங் கொடுத்து நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்துவிட்டீர்களோ; அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியதுதான் முறை. 




ஒரு எஜமான் வேலைக்காரனைப் பார்த்து, 'அந்தப் பெட்டியைக் கொஞ்சம் எடப்பா' என்று கூறினால், 'என் மனசாட்சி என்னை அதற்கு அனுமதிக்கவில்லையே' என்று கூறினால், அது முறையாகுமா? ஒரு டிஸ்டிரிக் சூப்ரண்டென்டெண்ட் 'சுடு!' என்று போலீஸ்காரனுக்கு உத்தரவுபோட, அவன் 'என் மனசாட்சி அதற்கு இடங்கொடுக்கவில்லையே' என்று கூறினால் அந்த சூப்ரண்டென்டெண்ட் கதி என்னாவது? கசாப்புக்கடையில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டவன், 'அந்த ஆட்டை வெட்டுடா' என்று எஜமான் உத்தரவு விடும்போது, 'அய்யோ என் மனசாட்சி மாட்டேன் என்கிறதே நான் என்ன செய்யட்டும்?' என்று கூறினால், 'ஏண்டா மடப்பயலே! முன்னாடியே உனக்கு இது தெரியாமற் போனதேனடா? அப்போது உன் மனச்சாட்சி எங்கேயடா போயிருந்தது?' என்று கேட்பானா, இல்லையா அவனை? 





ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது 'விஷமத்தனமே' ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.





சிலருக்கு நான் ஏதோ சர்வாதிக்காரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதிகாரம்தான் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தோழர்களே நீங்கள் சிந்திக்க வேண்டும். "இந்தச் சர்வாதிகாரம் எதற்குப் பன்படுகிறதென்று? என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக; பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறேனே ஒழிய, எந்த சிறு அளவுக்கும் எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். 


              -------------------------1948 இல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, "குடிஅரசு" - 29-05-1948.


********************************************************************************


'கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்' என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். 'காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்' என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போடவேண்டமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்துவிட வேண்டுமென்றால், கருப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழச் சம்மதிக்கிறோம்.





அப்படியிருக்க, ஒரு அயோக்கியக் கூட்டம் நம்மை ஜெயித்து அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கிற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி, இழிவபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால், இதற்கு இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம் என்றால், இந்த இழிவு (சூத்திரத்தன்மை) எப்பொழுதுதான் எந்த வகையில்தான் மறைவது? என்று கேட்கிறேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்? 


                                                                     ---------------------------------------- "குடிஅரசு" - 1947
*******************************************************************************



'சூத்திரன்' என்கிற பட்டம் இழிவு என்று கருதுகிறவர்களுக்குத் தான் நான் இந்த யோசனை சொல்கிறனே ஒழிய, சூத்திரப் பட்டத்தைப் பற்றிக் கவலையில்லை என்பவர்களுக்கு இதைச் சொல்லுவதில்லை.



சூத்திரப் பட்டத்தைப் பற்றிக் கவலைப்படுகிறவர்களையும்கூட, சூத்திரப் பட்டம் ஒழிய வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுவிட்டுத்தான் நான் இதைச் சொல்லுகிறேனே தவிர, மற்றபடி அவசரப்பட்டு ஆணவத்தால் இதைச் சொல்லவில்லை.



                                                     ------------------------------------------ "குடிஅரசு" - 1947.


*********************************************************************************



வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்லுவார்கள்.


1. Physician's Cure

2. Surgeon's Cure



அதாவது, மருந்து கொடுத்து வியாதியை சொஸ்தப்படுத்துவது ஒருமுறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து நோயாளியைப் பிழைக்க வைப்பது இன்னொருமுறை.




என்னைப் பொறுத்தவரையில் நான் நோயாளி செத்துப் போனாலும் பரவாயில்லை. நோய்க்குக் கஷ்டமில்லாமல் மருந்து மட்டுமே கொடுத்து சொஸ்தப்படுத்தலாம் என்று கருதுபவன் அல்ல.




நோயாளிக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, அவன் சாகக் கூடாது என்று கருதி, அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன். எனது இலட்சியமெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் ஆள் பிழைக்க வேண்டும் என்பதுதான்.




நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல. 2,000- 3,000 
வருஷங்களாக தடித்துப்போன கெட்டியான தோல், அதில் உறைக்க வேண்டுமென்றால், சிறிது கடினமாகத்தான் சொல்லியாக வேண்டும். உங்கள் நாட்டு மக்களைப் பாருங்கள். உலகத்தையும் பாருங்கள், சிந்தியுங்கள், பரிகாரம் தேடுங்கள்!
********************************************************************************
--------------------- நூல்:- சாமி சிதம்பரனார் அவர்கள் எழுதிய ”தமிழர் தலைவர்” பக்கம் 11-18

0 comments: