Search This Blog

1.5.15

தமிழ்நாடு - பெரியார் நாடு

பிற இதழிலிருந்து....தமிழ்நாடு - பெரியார் நாடு
தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி 90 ஆண்டுகள் ஆகி விட்டன (1925-2015). சுயமரியாதை இயக்கம் கருக்கொண்ட காலத்திலிருந்து, தந்தை பெரியார் முன்வைத்த இலட்சியக்கோட்பாடு களை இந்த மண்ணிலிருந்து துடைத் தெறிவதற்குப் பல முனைகளில் இருந்து பல மனிதர்களும், சில அமைப்பு களும் தொடர்ச்சியாக முயற்சி செய்தன அனைத்தும் வரலாற்றின் பக் கங்களில் இருக்கின்றன.


பெரியார் கொள்கை எனும் வாளேந்தி நின்றவர்களை, நூலேந்தி களால் வீழ்த்த முடியவில்லை. 90 ஆண்டுகளாகியும் இன்றும் இதே நிலை தான். 

மராட்டியத்தில் ஜோதிராவ் புலே எனும் சமூக சீர்திருத்தச் செம்மலை விழுங்கி செரித்த ஆரியம்; மலையாள நாட்டில் நாராயண குரு எனும் புரட்சிக்காரரை ஆட்கொண்டு வீழ்த்திய ஆரியம், பெரியாரியம் என்ற நெருப்பு வளையத்தை நெருங்க முடியவில்லை. அவர்கள் ஏந்திய எல்லா ஆயுதங்களும் இற்று வீழ்ந்த சரித்திரத்தை மறைக்க முடியாது.


சாகாச் சரித்திரம் படைத்த தந்தை பெரியாரின் வீர முழக்கம், ஈராயிரம் ஆண்டுகளாக அடிமைத்தளையில் சிக்கிப் பள்ளத்தில் விழுந்து கிடந்த தமிழர்களைத் தட்டி எழுப்பியது; திராவிட இனம் தலைநிமிர்ந்து நின்றது.
பெரியார் பேசினார்: தோழர்களே! இன்று நாம், அதாவது இந்தநாட்டுப் பழங்குடி மக்களாகிய நாம், இந் நாட்டை ஆண்டு வந்த அரச பின்  வழியாகிய நாம், உலகத்தில் எந்த நாட்டினர்க்கும் பின்வாங்காத வீரம், மானம், அறிவு, ஆற்றல், கலை, நாகரிகம் ஆகியவைகளில் சிறந்த மக்களாகிய நாம் இன்று ஒரு சிறு கூட்டத்தாராகிய, அதுவும் இந்நாட் டுக்கு மலைக் காடுகளிலிருந்து கால் நடைகளுடன் பிழைக்க வந்த கூட்ட மாகிய, பாடுபடாத வர்க்கத்தாராகிய ஆரியர்களாலும், பிறராலும் ஆயிரக் கணக்கான வருடங்களாக அடிமைப் படுத்தப்பட்டு, அடக்கி ஒடுக்கி மிருக மாய் நடத்தப்படுகிற காரணம் என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.


வெள்ளையர்கள் நம்மை அரசி யலில் ஆளுகிறார்கள் என்றால் அதற்காவது ஒரு காரணம் இருக்கலாம். அதாவது, இந்தச் சூழ்ச்சியால் நாம் தமிழர்கள் - திராவிடர்கள் பல்வேறு சமயமாகவும், பல்வேறு மேல்-கீழ் சாதி வகுப்புகளாகவும், பல்வேறு இலட்சிய முடையவர்களாகவும் ஆக்கப்பட்டு, கல்வி இல்லாமல், தன் முயற்சி இல் லாமல் நசுக்கப்பட்டு விட்டபடியால், கத்தி, துப்பாக்கி உள்ளவருக்கெல்லாம் பயந்து அடிமையாகி, ஆரியரால் நம் நாட்டிற்குக் கூட்டி வரப்படு பவருக்கு எல்லாம் குடி ஆகி அல்லல்பட்டு வருகிறோம். ஆனால், கத்தி இல்லாத, துப்பாக்கி இல்லாத, உடல் வலி கூட இல்லாத இந்த ஆரியர்களுக்கு, அரசியல், சமூக இயல், சமய இயல், பொருளாதார இயல், ஞான இயல் முதலானவற்றிற் கெல்லாம் நாம் உரிமை இல்லாமல் அடிமைப்பட்டு உழல்வதற்குக் கார ணம் கண்டுபிடிக்க வேண்டாமா என்று உங்களைக் கேட்கிறேன். அல்லது நம் நிலை தமிழ்நாடு தோன்றியது முதல், தமிழர் தோன்றியது முதல் இப்படித் தான் இருந்ததா என்று கேட்கிறேன். சரித்திரத்தைப் பாருங்கள்; ஆராய்ச் சியாளர் கூறுவதன் உண்மையைப் பாருங்கள்; உலகிலேயே முதன் முதலில் தோன்றிய நாடு தமிழ்நாடு என்றும், உலகிலேயே மனித வர்க்கம் தோன்றிய இடம் நம் தென்னாடு என்றும் கூறப்படவில்லையா? இந்த மாதிரிப்பூர்வீகப் பெருமைகளால், பழங்கதைகளால் நமக்கு ஆவது ஒன்றும் இல்லை என்றாலும், இப்படிப்பட்ட தமிழர்கள் ஏன் உலகில் இவ்வளவு கீழான நிலையிலும், இழிவான தன்மையிலும் இருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா என்பதற் காகவே இவற்றைக் கூறினேன்.
தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரி கத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும்,  ஞானத்தையும், பகுத் தறிவையும், உரிமையையும் இழந் தான். இவ்வாறு உரிமை முழக்கமிட்டு தமிழ்ச் சமூகத்தை அறிவும் மானமும் உள்ள சமுதாயமாக மாற்றிக் காட்டி யவர் தந்தை பெரியார்.


மனித சமத்துவத்தை மறுக்கும் மனு தர்ம, வருணாசிரம தருமத்தை நார் நாராகக் கிழித்து எறிந்து, பிறவி ஏற்றத் தாழ்வை ஒழிப்பதற்கு களத்துக்கு வந்தவர் தந்தை பெரியார். சாதிப் பிரிவினைக்குச் சாட்டை அடி கொடுத்து, தீண்டாமைக் கொடுமைக்கு முடிவுகட்ட ஆர்த்து எழுந்தவர் தந்தை பெரியார்.


தந்தை பெரியாரின் இயக்கம் சாதித்தது என்ன? மண்ணுக்கு ஒருமைப்பாடு வேண்டும் என்று கேட்ட நாட்டில், மனித ருக்குள் ஒருமைப்பாடு காண உழைத்தது பெரியார் இயக்கம்; வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனும் சமூகநீதியை நிலைநாட்டியது மட்டுமல்ல; இந்தியாவின் அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் உரிய பிரதிநிதித் துவம் பெற்று வருவதை உறுதி செய்த இயக்கம்; பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்த இயக்கம்; ஆணுக்குப் பெண் அடிமை; பெண்கள் கல்வி கற்கக் கூடாது; பெண்ணுக்குச் சொத்துரிமை கிடையாது என்று இருந்த பழைய சமூக கட்டுமா னத்தை உடைத்து நொறுக்கியது பெரியார் இயக்கம். வடமொழி சமஸ்கிருத ஆதிக் கத்தையும், இந்தி ஏகாதிபத்தியத்தையும் ஒழித்தது பெரியார் இயக்கம். விடுதலை பெற்ற இந்தியாவில் தமிழர்கள் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் டெல்லிக்கு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்தபோது தட்டிக் கேட்டது பெரியார் இயக்கம். மூடப் பழக்கங்களால் முடை நாற்றமெடுத்துக் கிடந்த தமிழ்ச் சமுதாயத்தில் அடியோடு மாற்றம் கொண்டு வர சமூகப் புரட்சியை ஏற்படுத்தி, விழிமூடிக் கிடந்த மக்களை எழுச்சி பெறச் செய்தது பெரியார் இயக்கம். சமுதாயச் சீர்திருத்தம் ஒன்றையே தன் வாழ்நாள் பணியாகத் தோள்மீது போட்டுக் கொண்டு தந்தை பெரியார் வலம் வந்தபோது சந்தித்த எதிர்ப்புகள் எத்தனை; மணிக் கணக்காக மேடையில் சொற் பெருக்காற்றி திராவிடர்களின் அடிமைத் தளையை நொறுக்கியபோது பெரியார் ஏற்றுக்கொண்ட சோதனைகள் ஏராளம்; எல்லாவற்றையும் எதிர் கொண்டுதான் தந்தை பெரியார் ஆரியக் கும்பலின் அதிகாரக் கோட்டையைத் தகர்த்து எறிந்தார். தன் வாழ்நாளிலேயே தன் கொள்கைகள் வெற்றிமாலை சூடியதைக் கண்டவர் பெரியார் என்று பேரறிஞர் அண்ணா கூறிய வார்த்தைகள் சாதாரண மானதல்ல.தந்தை பெரியார் இல்லையேல் தமிழ்ச் சமுதாயம் எத்தகைய இழிநிலையில் இருந்திருக்கும் என்பதை இந்நாட்டு மக்கள் உணர்ந்து இருக்கின்றனர். எனவேதான் தந்தை பெரியார் இன்றும் எவர்க்கும் நிகர் சொல்ல முடியாத பெரியாராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் இமயம் தொலைக் காட்சியின் நேர்காணலில் குறிப்பிட்ட வாறு தமிழகம், தந்தை பெரியார் இருந்த நாடு மட்டுமல்ல; பெரியார் இருக்கும் நாடு; தமிழ்நாடுபெரியார் நாடாக இருக்கின்ற தால்தான் இந்துத்துவ மதவெறிக் கூட்டத் தின் ஆட்டம் இங்கு எடுபடவில்லை.

மதக் கலவரங்களால் வடநாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியபோ தெல்லாம், அமைதிப் பூங்காவாக காட்சித் தந்தது தமிழகம். இதற்கு பெரியார் இந்த மண்ணைப் பண் படுத்தியதுதான் காரணம். ஜிப்ரால்டர் கோட்டை போன்று தமிழ் நாடு பெரியார் கோட்டையாக இருப்பதால் இந்துத்துவா மதவெறிக் கூட்டம் தங்கள் நோக்கம் நிறைவேறாத ஆத்திரத்தில் கள்ளுண்ட குரங்கு போல நர்த்தனம் புரிகிறது.


பெண்ணடிமைத்தனத்திற்குக் கட் டியம் கூறும் விதத்தில் தாலி கட்டும் வழக்கம் தமிழர்களிடத்தில் இருப்பதை முக்கால் நூற்றாண்டு காலமாக தந்தை பெரியாரின் இயக்கம் மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறது. தாமாக முன்வந்து பெண்கள் தாலியை அகற்றிக் கொள்ள முன்வருகிற போது, அதை ஒரு இயக்கமாக திராவிடர் கழகம் பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றது.


ஏப்ரல் 14-இல் அண்ணல் அம் பேத்கரின் 125-ஆம் பிறந்தநாளின் போது, சென்னை பெரியார் திடலில் எப்போதும் போல தாலி அகற்றும் நிகழ்வைத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.


வடநாட்டு ஆரிய ஆளும் கட்சி யின் தயவுக்காகக் காத்துக் கிடக்கும் தமிழக அரசு சிலரைக் குளிர்விப்பதற் காக பெரியார் திடல் நிகழ்ச்சிக்குத் தடை யாணை பிறப்பித்தது. அதோடு, இந்துத் துவா சக்திகள் புனிதம் கற்பித்து மத வெறிக்குத் தூபம் போடும் மாட்டு அரசி யலைத் தோலுரிக்க மாட்டுக்கறி உண் ணும் நிகழ்ச்சிக்கும் ஜெயலலிதா கட்சி யின் அரசு தடை விதித்தது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத் தின் மாண்பமை நீதிபதி அரி பரந்தாமன் அவர்கள், சென்னை காவல் துறை ஆணையர் விதித்த தடையை நீக்கியது மட்டுமின்றி பெரியார் திடலுக்குப் பாது காப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தர விட்டார்.


ஏப்ரல் 14 காலையிலேயே திரா விடர் கழகத்தோழர்கள் தி.க. தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் திட்டமிட்டவாறு தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்தி விட்டனர். காவல் துறை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து நிகழ்ச்சிக்குத் தடை யாணையை உறுதிசெய்து கொண்டு வந்தவுடன் காலை 10 மணிக்கு மாட் டுக்கறி விருந்து நிகழ்ச்சி ரத்து செய் யப்பட்டது. வரலாற்றில் சட்டத்தை மீறி திராவிடர் கழகம் ஒருபோதும் நடந்து கொண்டது இல்லை. சட்டத்தை மீறுவதாக இருந்தால், வெளிப்படை யாக அறிவித்து அதையே ஒரு போராட்டமாக மாற்றிக் காட்டுவது தான் பெரியார் காலத்திலிருந்து திராவிடர் கழகம் பின்பற்றி வரும் நடைமுறை ஆகும்.

பெரியார் திடலுக்கு முன்பு இந்துத் துவா சக்திகள், சிவசேனா உள்ளிட்ட கும்பல் ஆயுதங்களுடனும், நாட்டு வெடிகுண்டுகளுடனும் திரண்டு நின்று வன்முறையில் ஈடு பட்டபோது தமிழக அரசின் காவல்துறை வேடிக்கை பார்த்தது; அதுமட்டுமின்றி காலித் தனத்தில் ஈடுபட்ட மதவெறிக் கும் பலைக் கைது செய்யாமல், தடியடி நடத்தி கலைக்காமல், பெரியார் திடலுக்குள் காவிகள் நுழைவதற்கு வழிவகுத்தது;


அதே நேரத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் மீது தடியடி நடத்தி இரத்தக் காயம் ஏற்படுத்தியது மட்டு மின்றி 15 பேரைக் கைது செய்து வேலூர் சிறையிலும் அடைத்துள்ளது. இந்துத்துவா மதவெறிக் கும்பலுக்குத் துணைபோன தமிழக அரசுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப்பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.மறைந்திருந்து தாக்கும் ஆரியம், தமிழ் நாட்டில் இப்போது பண்பாட்டுப் போர்வையைப் போர்த்திக் கொண்டு பெரியாருக்கு எதிராக சிலரைத் தூண்டிவிடும் வேலையில் இறங்கி இருக்கிறது. நம்மவர்கள் சிலர் ஆரியச் சதிக்கு ஆளாகியும் வருகின்றனர். தொலைக்காட்சி ஊடகங்களில் இப்போது பெரியாரியம்தான் விவாதப் பொருளாக ஆகி இருக்கிறது. தமிழ் நாட்டில் பெரியார் கொள்கை இன்னும் வேர்விட்டு நிற்க கருத்து மோதல்கள் பயன்படும். தந்தை பெரியார் மறைந்து 42 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னமும் பெரியார் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியவராக இருக்கின்றார் எனில், பெரியார் ஒளிதான் தமிழ்நாட்டிற்குக் கலங்கரை விளக்கமாக இருக்கின்றது. இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், தந்தை பெரியாரை இங்கு எவராலும் புறந்தள்ளிவிட முடியாது. பேரறிஞர் அண்ணா அவர்கள், அய்யா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அறிவுப்புரட்சி சுலபத்தில் நிற்கப் போவது இல்லை. எப்படி வில்லை விட்டுக் கிளம்பிய கணை அடைய வேண்டிய இடத்தில் பாய்ந்தால் தான் அதன் வேகம் நிற்குமோ அதுபோல் பெரியார் அவர்களிடத்திலே இருந்து பிறந்த அறிவுக்கணை எந்த இலக்கை அடைய வேண்டுமோ அதை அடைந்தே தீரும், என்று அழகாகச் சொன்னார்.அறிஞர் அண்ணா சொன்னதைப் போல தந்தை பெரியார் அறிவுக் கணை இன்னும் பாய்ந்து கொண்டே இருக்கிறது. இலக்கை அடையும்வரை சென்று கொண்டேதான் இருக்கும்.


--------------------------------------------------நன்றி: சங்கொலி 1.5.2015 (பக்.3)

0 comments: