Search This Blog

12.11.08

புத்தமும் - யுத்தமும்

புத்த மதத்தைப் போதிக்கவேண்டிய சாமியார்கள் பாராளுமன்றத்தில் வந்திருந்துகொண்டு படையினர் கிளிநொச்சியைப் பிடிப்பார்கள்; இதோ பிடிக்கப் போகின்றனர், அதோ பிடிக்கப் போகின்றனர் என்று கூறி சிங்கள மக்களை உணர்ச்சிப்படுத்தி அரசியல் லாபம் தேடுகின்றனர்.

இன வாதத்தைக் கிளப்பி அரசியல் செய்ய முற்பட்டதால், புத்த ஆலயங்களில் பூசை செய்ய சாமியார்கள் இல்லை. உங்களுக்குக் கிளிநொச்சி எங்கிருக்கிறது என்று தெரியுமா?

கிளிநொச்சி என்ன நிறம் என்றுகூட தெரியுமா? உங்களுக்குப் போரில் அறிவு உள்ளதா? கிளிநொச்சியை படையினர் கைப்பற்று வார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

புத்த மதத்தைப் போதிப்பதை விடுத்து மக்களிடம் வாக்குகள் பெறுவதற்காகத் தளபதிகள் போன்று சாமியார்கள் பேசுவது வேடிக்கையானது.

புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தமாட்டோம் என அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே கூறுவது முட்டாள்தனமானது. புலிகளைப் போரில் தோற்கடிக்கவும் முடியாது - புலிகளை உங்கள் படைகள் ஒருபோதும் வெற்றி கொள்ளவும்மாட்டார்கள். புலிகள் ஆயுதங்களை ஒருபோதும் கீழே வைக்கமாட்டார்கள். சமஷ்டி தீர்வு குறித்து 20 வருடங்களுக்கு முன்னர் பேசியிருந்தால், தமிழர்கள் அதுகுறித்து ஓரளவு பரிசீலித்திருப்பார்கள். ஆனால், இன்று இத்தனை அழிவுகளுக்குப் பின்னர் சமஷ்டி தீர்வுபற்றிப் பேசுவதும் அறியாத்தனம்; தமிழ் ஈழமே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஆகும்.

- இவ்வாறு பேசியிருப்பவர் இலங்கை மட்டக்களப்பு நாடாளு மன்ற உறுப்பினரும், தமிழருமான ஜெயாந்த மூர்த்திதான்.


சந்து முனையில் சிந்து பாடியதல்ல இது - இலங்கை நாடாளு மன்றத்தில் வரவு - செலவு திட்டம்பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு பேசப்பட்ட அதிகாரப்பூர்வமான உரை - நேருக்கு நேர் நிகழ்த்தப்பட்டதாகும்.

இவர் எழுப்பிய இந்த வினாக்களுக்கு யார்தான் என்ன பதிலைக் கூற முடியும்?

உலகில் அமைதியையும், அகிம்சையையும், மனிதநேயத்தை யும், பகுத்தறிவையும் போதித்த கவுதமப் புத்தரால் உண்டாக்கப்பட்ட ஒரு நெறி - மதமாக மாற்றப்பட்டு வெறியாக உருமாறிப் போனதை எவ்வளவு அழகாக - நேர்த்தியாக ஒரு தமிழர் இலங்கை நாடாளுமன்றத்தில் நிரல்பட எடுத்துரைத்துள்ளார்.

கலிங்கத்துப் போரில் மனித உயிர்கள் ஆயிரக்கணக்கில் பலியானதைக் கண்டு, கசிந்துருகி மனிதநேய மார்க்கமான புத்தத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டார் சாம்ராட் அசோகன் என்னும் மாபெரும் மன்னன்!

போர்க்குணம் கொண்ட அரசர்களின் கல் மனத்தையே கனியாக மாற்றியது புத்த நெறி. அந்த நெறியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, மத வேடம் புனைந்து ஈழத் தமிழர்களின் இரத்தம் குடிக்கும் காட்டு நரிகளாக மாறியவர்கள்பற்றி நேருக்கு நேர் நெற்றியடியாக சாட்டையடி கொடுத்துள்ளார் ஒரு தமிழர் - பாராட்டத்தக்க உரை அது!

புத்தரின் சிலைகளுக்கே தமிழர்களின் குருதியைக்கொண்டு அபிஷேகம் செய்தவர்களாயிற்றே! ஒரு நெறி மதமாக மாறும்போது - அதற்கு வெறிபிடித்து விடுகிறது என்பதற்கு அடையாளமதான் இலங்கையில் புத்த பிக்குகள் நடந்துகொண்டுவரும் கேவலமான மிருகவெறி கொண்ட போக்காகும்.

புத்தர் மாநாட்டை தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டிலே நடத்தி இலங்கையிலிருந்து மல்லலசேகர போன்ற புத்தநெறி சான்றோர்களை அழைத்து கருத்துகளை கூறச் செய்தார்! அறிவு மார்க்கமான புத்தநெறிக்குப் புது திருப்பமும் கொடுத்தார்கள்.

புத்தியைப் பயன்படுத்தியதால் புத்தன் ஆனான் என்னும், பொருத்தமான விளக்கமும் தந்தார் அறிவுலக ஆசானாம் தந்தை பெரியார் அவர்கள்.


பவுத்தம் அதிகாரப்பூர்வமான மதமாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கைத் தீவிலே, அங்குள்ள புத்த மார்க்கவாதிகள், பிக்குகள், நேர்மையான சிந்தனையாளர்களாக புத்தரின் அறிவு மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்களாக - மனிதநேய மாண்பாளர்களாக - சான்றாளர்களாக இருந்திருப்பார்களேயானால், இலங்கைத் தீவில் மனித ரத்தம் உடைப்பெடுத்து ஓடியிருக்குமா? தமிழன் மாமிசம் இங்குக் கிடைக்கும் என்ற விளம்பரப் பலகைகள் தொங்கவிடப்பட்டு இருக்குமா?

புத்தத்துக்கும், யுத்தத்துக்கும் எவ்விதத்திலும் தொடர்பு இருக்க முடியுமா? இதுபற்றி சிந்திக்கவும், கருத்துகளை எடுத்துக் கூறவும் இலங்கைத் தீவிலே சிந்தனையாளர்கள் ஒருவர்கூட உயிருடன் இல்லையா? அல்லது எடுத்துக்கூறினால் அவர்களின் தலைகளும் சீவப்படும் என்ற அச்சமா?

சீனாவிலும், ஜப்பானிலும், திபெத்திலும், மியான்மரிலும் பவுத்தம் இல்லையா? அந்த மார்க்க அறிஞர்கள் அங்கு இல்லையா? இலங்கைத் தீவில் பவுத்தத்தின் பெயரால் மனித ரத்தத்தைக் குடிக்கும் போக்குகள்பற்றி அவர்கள் கருத்துகளைத் தெரிவிக்காதது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இனியாகிலும் கிடைக்குமா? என்று பார்ப்போம். இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவார்ந்த கருத்துகளை நேருக்கு நேர் எடுத்து வைத்த அந்தத் தமிழரை மீண்டும் பாராட்டுகிறோம்.


----------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 12-11-2008

2 comments:

Thamizhan said...

புத்த பிக்குகள் இலங்கை புத்த மதத்திற்காக சிறப்பாகப் படைக்கப் பட்ட நாடு,அதில் வேறு யாருக்கும் இடமில்லை என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள்.
அவர்களை எதிர்த்து எதுவும் எந்த சிங்கள அரசும் ஒன்றும் செய்து விட முடியாது.
ஆகவே தமிழீழம் மட்டுமே தமிழர் வாழ் வழி செய்யும் என்பதைப் புரிந்து கொண்டு,புது டில்லியையும் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

தமிழ் ஓவியா said...

நன்றி.

தொடந்து கருத்து தெரிவிக்கவும்.