Search This Blog

20.11.08

அறிவார்ந்த தீர்வுகளை அள்ளித்தரும் "வாழ்வியல் சிந்தனைகள்"


தி.க.தலைவர், விடுதலை ஆசிரியர், கி. வீரமணி அவர்கள் எழுதிய"வாழ்வியல் சிந்தனைகள்" (அய்ந்தாம் பாகம்) நூல் குறித்த விமர்சனம் இது:

தமிழ் மக்களின் பாராட்டைப் பெற்றுவருகிறது கி. வீரமணி அவர்கள் எழுதிவரும் வாழ்வியல் சிந்தனைகள். ஆனால் ஒரு சிலர் வாழ்வியல் சிந்தனைகள் பற்றி மோசமாக விமர்சித்து வருகின்றனர். அது சரியல்ல என்பதை இக்கட்டுரையைப் படிப்பதன் மூலம் உணர்வார்கள் என்று நம்புவோம்.
பெரியாரா? - கடவுள் மறுப்பாளர்; தி.க.வா? - பார்ப்பனர்களை விமர்சிக்கும் கட்சி!

சுனாமானாவா - மத எதிர்ப்பாளர்கள், ஜாதி ஒழிப்பாளர்கள் என்ற விமர்சனங்கள் உண்டு.

மறுக்கவில்லை - இவையெல்லாம் விலைமதிக்க இயலாப் பெரும் மதிப்பீடுகள்தான்!


அதேநேரத்தில், இந்த ஒழிக முழக்கங்கள் ஏன்? ஆக்க ரீதியான சிந்தனைகளுக்கும், அறிவார்ந்த - அன்பார்ந்த வாழ்க்கை முறைக்கும், அணுகுமுறைக்கும் தேவையான முழக்கங்கள்.

அழிவிலிருந்து பிறக்கும் ஆக்கச் சிந்தனைகள் இவை.

ஒரு பகுத்தறிவுவாதி தலைசிறந்த மனிதாபிமானி - வாழ்ந்து காட்டும் வழிமுறைக்குச் சொந்தக்காரன் - பிறர் நலம் பேணும் பண்பாளன் - சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் சமத்துவ நோக்குடையோன் - உலகியல் அறிந்தவன், விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி - வாழ்க்கைச் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறக்கூடியவன், காலத்திற்கு ஈடு கொடுக்கும் கருத்தாளன் என்றே தமிழர் தலைவர் வடித்துள்ள இந்த வாழ்வியல் சிந்தனைகள் பறைசாற்றும்!

படிப்பு இருந்தால் மட்டும் போதாது. பணம் இருந்தாலும் பயனில்லை.

வாழும் முறை அறியவேண்டும் - பழகும் முறையை உணரவேண்டும் - துய்ப்பது எந்த அளவு என்பதிலும் தெளிவுவேண்டும்.

நேற்றைய உலகம் எது - இன்றைய உலகம் எப்படி? நாளைய விடியலின் மணம் என்ன? என்ற கணிப்பு தேவை.

இவற்றில் கணிப்பு இல்லாவிட்டால் எல்லாம் இருந்தும் இல்லை என்றாகிவிடும்.

உலகம் ஒளி வேகத்தில் சுழன்றுகொண்டு இருக்கிறது. அதற்கு ஈடு கொடுக்க நம்மை நாம் தயாரித்துக் கொள்ளாவிட்டால், கைவிடப்பட்டவர்கள் ஆவோம்.

மனிதன் இனி சாவது கடினம் என்றார் தந்தை பெரியார். அந்தக் காலம் நெருங்கிவிட்டது! அந்த அளவுக்கு மருத்துவம் வளர்ந்து படைப்புத் தத்துவத்திற்கு மரண அடி கொடுத்து வருகிறது! நாள்தோறும் வளர்ச்சிகள் - பாய்ச்சல்கள்!

எத்தனைப் பேர் இவற்றையெல்லாம் அறிந்து வைத்திருக்கிறோம்?

நம் மக்கள் அனைவருக்குமாக ஒருவர் படித்து அனைத்தையும் நமக்கு இலவயமாக வழங்குகிறார் ஒருவர் என்றால், அது சாதாரணமா?

கரும்பு தின்னக் கூலியா?


கரும்புக் கட்டையே கொடுத்திருக்கிறார் தமிழர் தலைவர், அப்பப்பா! இவ்வளவையும் வாரி வழங்க - அவர் எத்தனை நூல்களைப் படித்திருக்கவேண்டும்? எத்தனைக் காலம் செலவழித்திருக்கவேண்டும்? எவ்வளவுக் குறிப்புகளைத் தயாரித்திருக்கவேண்டும்? இவ்வளவையும் செய்யும் ஒருவருக்கு ஓய்வு என்று ஒன்று இருந்திருக்க முடியுமா? என்று படித்தோர் வியக்கிறார்கள்.

ஒரு பழ மரம் பன்னூறு பறவைகளுக்குத் தீனி கொடுப்பதில்லையா? ஒரு நிரூற்று எண்ணிறந்த மக்களின் தாகத்தைத் தீர்ப்பதில்லையா?

அதனைத்தான் நம் தலைவர் - தமிழர் தலைவர் செய்திருக்கிறார்.

கழகப் பணி - கல்விப் பணிகளுடன் - இதனையும் செய்து வருகிறார் - இன்னும் சொல்லப்போனால், பகுத்தறிவுப் பாட்டையின் ஒரு அம்சம் இது!

கல்வி, மருத்துவம், மனிதநேயம், சுற்றுச்சூழல், குழந்தை வளர்ப்பு, நட்பு, தொண்டறம், மகளிர் நலம், வருமுன் காப்பு என்று அன்றாட வாழ்வில் நாம் கைபிடித்துக் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு பிரச்சினைகளுக்கு அறிவார்ந்த தீர்வுகளை ஆதாரத்துடன் கூறப்பட்டுள்ள களஞ்சியமே வாழ்வியல் சிந்தனைகள்.


---------------நன்றி: "விடுதலை" 15-11-2008

0 comments: