Search This Blog

25.11.08

ஆரியம் அலற


நமது இயக்கம்

திராவிடர் கழகமும், பட்டம் பதவிகளை விட்டொழித்து விட்டு, நாடு மீளவும் கேடு தீரவும் பணி புரியும் அணிவகுப்பினை அமைக்கும் திட்டமும், உணர்ச்சியும், வேகமும் கொண்ட பல்லாயிரக் கணக்கான திராவிடத் தீரர்கள் ஆதரவைப் பெற்று விட்டன. ஒரு குழுவின் வெற்றியென்று நாம் கருதவில்லை; ஒரு இயக்க வளர்ச்சியிலே முக்கியமான குறிப்பிடத்தக்க ஒரு கட்டம் என்றே கருதுகிறோம். தீவிரமான திட்டங்களை நிறைவேற்றிவிட்டது மனத் திருப்திக்காக அல்ல! திட்டங்களைத் தீட்டிவிட்டு, எட்டி நிற்போராக இருப்பவர்களைப் பற்றிக் கவலை இல்லை. அத்தகையவர்களுக்குத் திட்டங்களைப் பற்றியும் கவலையில்லை. ஆனால், கஷ்ட நஷ்டம் ஏற்கும் துணிவுடன் அன்று அங்கு கூடிய வீரர்கள் கூட்டம் விரும்புவது, விடுதலைப் போரினையே யாகும்!

விவேக சிந்தாமணிக்கு விளக்க உரை ஆற்றும் காரியத்திலோ, அரசியல் தந்திரங்களுக்கு அட்டவணை தயாரிக்கும் வேலையிலோ, அந்த அஞ்சா நெஞ்சு படைத்த ஆயிரமாயிரம் தோழர்களுக்கு அக்கறை கிடையாது. அவர்கள், பட்டம் பதவி கிட்டுமா என்று பக்குவம் பார்த்துப் பொது வாழ்வு நடத்தும் பண்பினரல்ல! ஒரு பெரிய பண்டைப் பெருமை வாய்ந்த இனம் பாழாகி விடுவதா? உலக வரலாற்று ஏடுகளிலே இடம் பெற்ற ஒரு நாடு உதவாக்கரைகளுக்கு உலவுமிடமாவதா? இந்நிலையை மாற்றப் போரிடாது ஆண்மையாளர் என்ற பெயரைத் தாங்குவதா? என்ற தீ உள்ளே கொழுந்து விட்டெரியும் கோலத்துடன் கூடிய அந்த வீரர்கள் விரும்புவது, உரிமை! ஆம்! திராவிட நாடு திராவிடருக்கே என்ற உரிமையைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். அந்தக் கண்கள் காட்டிய ஒளி, அவர்கள் அன்று கிளப்பிய ஒலி, தோள் தட்டி மார்பு நிமிர்த்தி அணிவகுத்து நின்ற காட்சி, ஒரு இனத்தின் எழுச்சியின் அறிகுறியாக, விடுதலைப் படையின் எக்காளமாக, மூலத்தை உணர்ந்தோரின் முழக்கமாக இருந்ததேயன்றி, காருண்யமுள்ள சர்க்காருக்கு வாழ்த்துக் கூறி, கனதனவான்களுக்கு நமஸ்காரம் செலுத்தி, சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் சேதி கூறிடும் சிங்காரக் கூட்டமாக இல்லை. இதனை நாடு அறிதல் வேண்டும்; நாமும் மனத்திலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆளும் கூட்டத்தாரால் அலட்சியப்படுத்தப்பட்டு, மாற்றுக் கட்சிகளால் கேலி செய்யப்பட்டு, ஆரியர்களால் அவமதிக்கப்பட்டு; வடநாட்டவரால் வாட்டப்பட்டு, மண் இழந்து, மானம் இழந்து பொருளைப் பறி கொடுத்து, மருளைத் துணைக்கு அழைத்து, மார்க்கமின்றி மமதையாளரிடம் மண்டியிட்டுக் கிடக்கும் ஒரு இனம், அன்று விடுதலை பெற்றுத் தீர வேண்டும்; அதற்காக நான் உழைப்பேன்! உயிர் அளிப்பேன்! இடையே இன்பம் என்ற பெயரிலே எது வரினும்கூட மயங்கிடேன்! போரிடுவேன்! பெற்றால் வெற்றி மாலை, இல்லையேல் சாவு ஓலை! என்று பெரியதோர் சூள் உரைத்த சூரர்கள் கூட்டம் அது.

வழக்கமாகக் கூடி, வசீகரமாகப் பேசி, வளையாது குனியாது வாய்வீரம் காட்டி விட்டு, வாகை சூடியதாக மனப்பால் குடித்து விட்டு, தோகையர் புடைசூழப் போக பூமிக்குச் செல்லும் சுக போகிகளின் கூட்டம் அல்ல! வறுமையின் இயல்பைத் தெரிந்தவர்களின் கூட்டம்! பசியும் பட்டினியும் எப்படி இருக்கும் என்பதை அறிவார்கள்! பாட்டாளிகள்!! ஆனால் பார்ப்பனியத்தின் பாதத்தைத் தாங்கும் ஏமாளிகளல்ல; அந்தப் பார்ப்பனியத்தை மதச் சமுதாயத் துறைகளிலே முறியடிக்காமலேயே பட்டத்தரசராகி விட முடியும் என்று கருதும் கோமாளிகளல்ல; ஊருக்கு உழைத்து உருமாறிக் கிடக்கும் உத்தமர்கள் கூடினர் அன்று. உறுதியை வெளிப்படுத்தினர், ஊராள்வோரின் உளமும் உணரும் விதத்திலே. பட்டம் பதவிக்காகவே கொட்டாவி விட்டுக் கிடக்கும் கட்சி என்றிருந்த பழிச் சொல்லை அன்று துடைத்தனர். மணி மீது கிடந்த மாசு துடைக்கப்பட்டது; ஒளி வெளிவரத் தொடங்கி விட்டது. பட்டம் ஏன்? பதவி ஏன்? பரங்கியும் பார்ப்பனனும் பார்த்தா, பாராண்ட தமிழனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும்? கடல் கடந்தவன் தமிழன்! இமயத்தில் புலி பொறித்தவன் தமிழன்! கடாரத்தைக் கொண்டவன் தமிழன்! ரோம் நகருக்குப் பொன்னாடை விற்றவன் தமிழன்! இலக்கியச் சுவையைக் கண்டவன் தமிழன்! எந்நாடும் வியக்கும் வீரன் தமிழன்! ஏறு நடையுடையான் தமிழன்! பின்னல் கண்டும் புன்னகை புரிவான் தமிழன்! அவனுக்குப் பட்டம், சோப்பும் சீப்பும், கண்ணாடியும் விற்கவந்து, வின்னர் அரசாள ஆரம்பித்த துரைமார்கள் தருவதா! ஏன்? அந்த நாள் தொட்டு, ஆரியன் நமக்கு இட்ட சூத்திரன் என்ற இழிபட்டம் போக்க, சிறு விரலை அசைக்காதவருக்கு இராவ்பகதூர் எதற்கு? இந்தப் பட்டமும் பதவியும், தமது காலிலே தட்டுப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ளும் பண்பினர் பலர் உண்டு! ஒரு சிலர் உண்டு, பகலிலே அது பற்றியே பேச்சு, இரவிலே கனவு, எந்த நேரமும் அந்தச் சிந்தனையே! அவர்களின் தொகை மிகக் குறைவு! பிரிட்டனின் பாரதிதாசன் எனத்தகும் ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிஞர் கூறினது போல, அவர்கள் சிறு தொகை! நாம் மிகப்பலர்! மிகப்பலர் கூடி அவர்களை ஒன்று உமது இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள், அது இயலாது எனின், எமக்குத் தனி வாழ்வு நடாத்த வழி செய்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர், பட்டம் பதவிகளை விட்டு விடுவது என்ற தீர்மானத்தின் கருத்து அதுதான். தளபதி பாண்டியன் அவர்கள் இத்தீர்மானத்தை ஆதரித்ததுடன், அது நடைமுறைக்கு ஏற்றதாக அமைவதற்கு முக்கியமாகக் கட்சியிலே ஒழுங்கான அமைப்பு வேலை இருக்கவேண்டும் என்று கூறினார்கள். ஆம்! செய்வோம்! என்று கூறினர் அன்பர்கள். தமிழகத்தைப் பொறுத்த வரையிலே, தளபதிகள் இசைந்து விட்டனர். இந்த ஆக்க வேலைக்கு. இதற்கான ஊக்கம் அளிக்கவேண்டிய பொறுப்பு உணர்ச்சியுள்ள தோழர்களுடையது. இதைக் காரியத்திலே காட்டும் சக்தி வாலிபர்களிடம் இருக்கிறது. சிறு கிராமம் முதற்கொண்டு பெரிய நகரம் வரையிலே செல்லுங்கள், செய்தியைச் சொல்லுங்கள், திராவிடர் கழகத்திலே, ஏராளமாகத் தோழர்களைச் சேர்த்துக் காட்டுங்கள். தலைவர்கள் ஆச்சரியப்படவேண்டும், அந்த அணிவகுப்பைக் கண்டு. ஆரியம் அலற, ஆங்கிலம் உணர ஒரு அணிவகுப்புத் தேவை! விரைவாகத் தேவை! வேலை மிகுதியாக இருக்கிறது. விடுதலை முரசு கொட்டப் பட்டுவிட்டது. இன அரசுக்குப் போர், இறுதிப் போர் நடந்தாக வேண்டும். இன்றே கிளம்புக, திராவிடர் கழகங்களை நிறுவ, பலப்படுத்த!

ஆந்திரமும், கேரளமும், இந்த வேகத்தைக் காணும். நாள் தூரத்தில் இல்லை. அதற்கான வழி வகையும் நிச்சயம் வகுக்கப்படும்.

-------------------- நூல்: பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி-1

0 comments: