Search This Blog

17.11.08

ராஜபக்சேவின் பேட்டி நயவஞ்சகமானவை !

இந்தியப் பிரதமரைச் சந்தித்த பிறகு இலங்கை அதிபர் ராஜபக்சே டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியவை நயவஞ்சகமானவை என்பதில் அய்யமில்லை.

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றும், அவர்களை அழிப்பதுதான் தங்களின் நோக்கம் என்றும், மற்றபடி தமிழ் மக்களுக்கு எவ்விதத் தொல்லையும் இருக்காது என்கிற பாணியில், கேட்பவர்களையெல்லாம் அடி முட்டாள்கள் என்கிற மமதையில் பேசியிருக்கிறார்.

பொதுவாக, இலங்கை ஆட்சியில் உள்ளவர்கள் எது கூறினாலும் அது நம்பகத்தன்மை வாய்ந்தது அல்ல என்பது இதுவரை அவர்கள் நடந்து கொண்டு வந்திருக்கிற முரண்பாடான செயல்கள் மூலம் நாடு அறியும்.

ராஜபக்சேயின் கருத்துகள் குறித்து தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் தமிழகச் சட்டப் பேரவையில் (14.11.2008) ஆற்றிய உரையில் மிகச் சரியாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

விடுதலைப்புலிகளோடு, அவர்களை அடக்க - அவர்களை செயல்படாமல் செய்ய என்ன முறைகள் வேண்டுமோ அந்த முறைகளை அவர் கையாளட்டும், அதே நேரத்திலே, தமிழர்கள் மீது ஒரு குண்டு, தமிழர்களின் வீடு மீது ஒரு குண்டு, தமிழர்களின் ஆலயங்களின் மீது, தமிழர்களின் இருப்பிடங்களின் மீது, தமிழர்களின் வீதிகளின் மீது, தமிழர்களின் ஊர்களின் மீது ஒரு குண்டு என்று இலங்கை அரசின் சார்பாக - இலங்கை இராணுவத்தின் சார்பாக விழக் கூடாது. அதற்கு ராஜபக்சே உத்திரவாதம் தரத் தயாரா என்றால், தயார் இல்லை. அவர்கள் இலங்கையிலே தமிழர்கள் மீது போடுகின்ற குண்டு விடுதலைப் புலிகளின் மீதும் போடப்படுகின்ற குண்டு தான். விடுதலைப் புலிகளின் மீது போடுகின்ற குண்டு தமிழர்களின் மீது போடப் படுகின்ற குண்டுதான். இருவரையும் ஒரு சேர அழிக்கத்தான் இந்த யுத்தத்தை ராஜபக்சே அங்கே நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குப் புரியாமல் இல்லை. அவர் ஏன் அதற்குக் கெடு கேட்கிறார் என்பதும் நமக்கு நன்றாகப் புரிகிறது. இதில் நாம் ஏமாந்து விடக் கூடாது என்று மத்திய அரசுக்கு இந்த மாமன்றத்தின் சார்பாக நான் என்னுடைய வேண்டுகோளை எடுத்துவைக்க கடமைப்பட்டிருக்கிறேன். முதல் அமைச்சர் கலைஞர் அவர்களால் சட்டப் பேரவையில் அதிகாரப்பூர்வமாக பேசப்பட்ட இந்தக் கருத்துகள் மிகவும் முக்கியமானவை, நுணுக்கமானவை - யதார்த்தமானவை; ஒரு முறைக்கு இரு முறை வேண்டுமானாலும் படித்துப் பார்க்கட்டும்; ஆனால் ஒன்று, திறந்த மனத்தோடு படிக்க வேண்டும்; அப்படிப் படித்தால் இலங்கை அதிபரின் பேச்சு தந்திரத் தன்மை வாய்ந்தது; விடுதலைப்புலிகளை அழிப்பது என்ற பேரால் தமிழர்களையும் அழிப்பது என்கிற சூழ்ச்சி அதில் இருக்கிறது என்பது தெற்றெனப் புலப்படும்.

விடுதலைப்புலிகளை அழிப்பது மட்டுமே அவர்களின் நோக்கம் என்றால் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை ரத்து செய்திருக்க மாட்டார்கள்; அந்தப் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றி இருக்க மாட்டார்கள். தமிழர்களின் கல்விக் கூடங்களை இயங்காமல் செய்திருக்கவும் மாட்டார்கள். தமிழ்க் குழந்தைகள் தங்கியிருந்த விடுதியின்மீது குண்டு மழை பெய்து கொன்று குவித்திருக்கவும் மாட்டார்கள்.

இவற்றையெல்லாம் ஒரு பக்கத்தில் திட்டமிட்டுச் செய்துவிட்டு, தமிழர்களைக் காப்பாற்றுவோம் என்று ஒருவர் சொல்வார், அதனை நாமும் நம்ப வேண்டும் என்றால் இதைவிடக் கேலிக் கூத்து ஒன்று இருக்கவே முடியாது.


விடுதலைப்புலிகளும் மக்களும் அங்கு ஒன்றே! மக்களின் ஆதரவு இல்லாமல் புலிகள் அங்கு கால் பதிக்க முடியாது என்பது சிறுபிள்ளைகளும் தெரிந்திருக்க வேண்டிய பால பாடமாகும்.

தங்கள் இனத்தின் மானம், சுயமரியாதை, வாழ்வுரிமை அனைத்தும் சிங்களக் காடையர்களால் சூறையாடப்பட்ட நேரத்தில் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து தங்களுக்குப் பாதுகாப்பு அரணாக உதித்தவர்கள்தான் அந்தப் போராளிகள் என்பது அம்மக்களுக்கு தெரியாதா? இந்தப் பாதுகாப்பு அரண் இல்லாது போயிருந்தால் இந்நேரம் தமிழினம் அங்கு பூண்டற்றுப் போயிருக்கும் என்பதிலே தமிழர்கள் அங்கு மிகத் தெளிவாகவே யிருக்கிறார்கள்.

மக்களின் ஆதரவு அவர்களுக்குக் கிட்டாது போயிருக்குமானால் போராளிகள் எவ்வளவு பலம் வாய்ந்தவர்களாக வந்தாலும், ஒரு நொடி நேரம்கூட அங்கு தாக்குப் பிடித்திருக்க முடியுமா? காட்டிக் கொடுத்திருக்க மாட்டார்களா?

அந்தப் போராளிகள் யார்? வானத்திலிருந்து ஒரு நாள் காலையில் குதித்தவர்களா? பாதிக்கப்பட்ட - சிங்கள வெறியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தமிழினக் குடும்பங்களிலிருந்து தோன்றியவர்கள்தானே அவர்கள்.

தி மர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ் என்ற ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் ஷைலக் என்ற யூதன் கடன் வசூலுக்காக ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனைப்படி அண்டோனியாவின் ஒரு பவுண்ட் சதையைக் கொடுக்க வேண்டும் என்று கேட்க, தாராளமாக எடுத்துக் கொள்; அதே நேரத்தில் ஒரு சொட்டு ரத்தம்கூட சிந்தாமல் அந்த ஒரு பவுண்ட் சதையை எடுத்துக் கொள்ள வேண்டும். நான் சதையை அளிப்பதாக ஒப்புக் கொண்டேனே தவிர, ரத்தத்தையல்ல என்று அண்டோனியா சார்பில் ஆஜரான அவரின் காதலி போர்ஷியா நீதிமன்றத்தில் கூறினாரே - அதுதான் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.

ரத்தம் இல்லாமல் எப்படி சதையில்லையோ அதுபோலவே போராளிகள் இல்லாமல் தமிழர்கள் இல்லை; ஈழத் தமிழர்கள் இல்லாமல் போராளிகள் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

இதனை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். முதல் அமைச்சர் கலைஞரின் வேண்டுகோளில் இந்த உண்மை நிச்சயமாக அடங்கியிருக்கிறது - புரிந்து கொள்வார்களா? செயல்படுவார்களா?

--------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 17-11-2008

0 comments: