அண்ணா தி.மு.க.வும் - தொழில் எழுத்தாளர்களும்
அண்ணா தி.மு.க. என்ற ஒரு அரசியல் கட்சியில் அண்ணாவின் கொள்கை மருந்துக்கும் இல்லை என்பதை பல நேரங்களிலும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். தந்தை பெரியார் அவர்களின் பெயரை சம்பிரதாய ரீதியில் உச்சரித்தாலும், அய்யாவின் கொள்கைப் பக்கம் தலைவைத்துப் படுக்கக்கூட அச்சப்படுகின்ற அமைப்பாக அது உருக்குலைந்த ஒன்றாகும்.
அதுவும் அக்கட்சிக்குப் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய அம்மையார் தம்மை பச்சையாகப் பார்ப்பனப் பெண் என்று அறிவித்த நிலையில், அக்கட்சிக்கு அக்கிரகார தி.மு.க. என்று பெயரிட்டுக் கொண்டால் மிகவும் பொருத்தமானதாகவே இருக்கும்.
மண் சோறு சாப்பிடுவது வரை சென்றுவிட்டவர்களைப்பற்றி வேறு எப்படித்தான் கணிக்க முடியும்?
இந்த நிலையில், பகுத்தறிவுக் கருத்துக்களை யாரேனும் எடுத்துக் கூறினால், சமதர்மச் சிந்தனைகளை எவராது எழுதினால், அது ஏதோ வேண்டத்தகாத ஒரு பொருளாக அந்தக் கட்சியின் எழுத் தாளர்களுக்கு, பேச்சாளர்களுக்குத் தோன்றுவதாகத் தெரிகிறது.
மனிதனுக்குப் பகுத்தறிவு இருந்தும் அதனைப் பக்திப் பூட்டுப் போட்டு அழுத்தமாகப் பூட்டி வைத்திருப்பதால் பகுத்தறிவு என்பது அவர்களுக்கு ஒவ்வாமையாகவே ஆகிவிட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்,
எதற்காக நெற்றிக் குறி? நெடிய பூணூல்?
என்று முரசொலியில் (6.11.2008) உரைநடைக் கவிதை எழுதிவிட்டாராம்.
அண்ணா தி.மு.க.வின் கட்சிச் சுற்றறிக்கை போல பயன்படும் நமது எம்.ஜி.ஆர். ஏட்டில், ஒரு எழுத்தாளர் அதனைப் பிடித்துக்கொண்டு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.
பிராமணர்கள் மட்டுமா பூணூல் போடுகிறார்கள்? வேறு ஜாதியினர் போடுவதில்லையா? என்ற ஒரு கேள்வியைக் கேட்கிறார்.
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதைதான் அது. சூத்திரர்களுக்குப் பூணூல் போட இந்து மத சாத்திரத்தில் எங்குமே இடமில்லை.
இதுகுறித்து மனுதர்ம சாத்திரம் அத்தியாயம் 2; சுலோகம் 44 என்ன கூறுகிறது?
பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நாரினாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகப் பூணூல் தரிக்க வேண்டியது என்றுதான் கூறப்பட் டுள்ளதே தவிர, சூத்திரர்களுக்குச் சொல்லப்படவில்லையே!
நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் எழுதும் எழுத்தாளர் குறிப்பிடுகிறாரே, கிராமப் பகுதிகளில் யார் யார் எல்லாம் பூணூல் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று எடுத்துக்காட்டுகிறாரே, அவர் களுக்குப் பூணூல் போட அருகதையில்லை என்பது மனுதர்ம சாத்திரத்தின்மூலம் தெரிந்துகொள்வாராக!
அவர் கூறுவதை விவாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும், பூணூல் போடும் பார்ப்பானும், பூணூல் போடும் செட்டியாரும் இந்து மதத்தில் சமதகுதி உடையவர்கள்தானா?
கோயில் கருவறைக்குள் பூணூல் போடும் பார்ப்பான்தான் போக முடியுமே தவிர, பூணூல் போட்ட செட்டியாரோ, ஆசாரியாரோ செல்ல முடிவதில்லையே! இந்த வேறுபாட்டைத்தான் கலைஞர் சுட்டிக் காட்டுகிறார்? மனிதன் பிறவியில் பிறப்பின் அடிப்படையில் ஏன் இந்தப் பேதம் என்ற வினாவை எழுப்புகிறார்.
பெரியார் கொள்கையை, அண்ணா கொள்கையைத் தெரிந்து கொண்டவர்கள்தான் அ.இ.அ.தி.மு.க.வில் இருக்கவேண்டும் என்று கட்சி ஒரு நிபந்தனையை வைத்தால், இவர்கள் எல்லாம் துண்டைக் காணோம் - வேட்டியைக் காணோம் என்று ஓட்டம் பிடிக்கவேண்டியதுதான்.
காலமெல்லாம் திராவிட இயக்கத்தைத் திட்டித் தீர்த்தவர்களுக்கு அண்ணா தி.மு.க. ஒரு புகலிடமாக ஆகிவிட்டது என்பதுதான் வேதனை!
எல்லாம் கழகம்தான், அதில் பல பிரிவுகள் ஏன்? கொடிகளில் ஏன் வேறுபாடு என்று புத்திசாலித்தனமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு, கேள்வியை எழுப்பியுள்ளார்.
கட்சிகள் கொள்கைகளால், அணுகுமுறைகளால் வேறுபட்டு நிற்கின்றன? அதனால் பல பெயர்கள் - பல கொடிகள் இருக்கின்றன.
ஆனால், ஒரே இந்து மதத்துக்குள் - இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்குள் பிராமணன் பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்றும், பிரம்மா இந்த உலகத்தைப் பிராமணனுக்காகப் படைத்தான் என்றும், சூத்திரன் அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்காகப் படைக்கப்பட்டவன் என்றும் கூறப்படுகிறதே! இந்தப் பிறவி ஏற்றத் தாழ்வை ஏற்றுக்கொள்ள முடியுமா என்கிற கேள்விக்கு - கட்சிகள் பல உள்ளன, கொடிகள் பல உள்ளன என்று மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் விளக்கெண்ணெய்த் தடவி முடிச்சுப் போடப் பார்க்கலாமா?
ஒரே கட்சிக்குள் பல கொள்கைகள் - பல கொடிகள் இருக்க முடியாது; ஆனால், ஒரே இந்து மதத்துக்குள் மக்களைப் பிளவுபடுத்தும், பேதப்படுத்தும் ஏற்பாடு இருக்கிறது - இரண்டும் ஒன்றல்ல. மானமிகு கலைஞர் அவர்கள் எழுதிய கவிதையின் சாரத்தைப் புரிந்துகொண்டு எழுத்தாளர்கள் எழுத முனையட்டும்!
--------------- நன்றி: "விடுதலை" தலையங்கம் 10-11-2008
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment