Search This Blog

23.11.08

பார்ப்பனர்களுக்கு கொடுத்த வரிகள் பட்டியல் பாரீர்

நான் பிராமணர்களுக்குக் கொடுக்கும் வரிகள்

அய்யா, இப்பொழுது சொற்பதினங்களாக இத் திராவிடன் என்னும் அரிய நண்பன் ஆங்காங்கு உலாவுவதில் வெளியிற் செல்வதற்கின்றி இனத்தினுள்ளே வைத்துக் கொண்டிருந்த பல விஷயங்களைப் பிறர்க்குச் சொல்லும்படியான சமயம் வாய்த்தது. இது மிகவும் சிலாகிக்கத்தக்கதே.

நான் எடுத்த விஷயத்தைத் தொடுக்கும் முன்னமே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டி வருகிறது.

எவ்வளவு நான் முயற்சித்தாலும் சங்கம் கூடினாலும் விடுத்து நடக்கும் வழியில்லாதபடி பூர்வ பிராமணர்கள் கட்சியுள் கட்டுகள் பல எத்தனையோ ஆயிரம் வருஷங்களுக்குப் பின்னே வருகிற தன் சந்ததியாரை மதிக்கும்படியாகவும், அவர்கள் சிரமமின்றி எளிதாகச் சம்பாதிக்கும்படியாகவும் செய்துள்ள ஏற்பாடுகள் கொஞ்சமல்ல. ஆகம புராணாதிகளில் கட்டியுள்ள கட்டு மிகப் பெரிது. அளவிலடங்காத புத்தி தீட்சணியமுள்ளவர்கள் அந்தப் பிராமணர்கள். நினைக்க நினைக்க ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. எந்த ஜாதி அரசாங்கத்தாராலும் விதித்த விதியை அவர்கள் கேட்ட பின்பு தான் கொடுக்கத்தக்கதாக இக்கிறது. பிராமணர்கள் விதித்த வரியை அவர்கள் கேட்காமல் அவர்கள் காலில் விழுந்து வருந்தி வாங்கிக் கொள்ளும்படி சிபார்சின் பேரில் கொடுக்க வேண்டியிருக்கிறது.


எனக்குத் தெரிந்து முதல் வரி பிராமணர்களுக்குக் கொடுத்தது எழுத்து அறிவித்த நாள். பின்பு கலியாண ஆரம்பத்திலிருந்து முடிவு வரையில் தட்சணை வைத்து விழுந்து கும்பிட்டு பிற்பாடு என் மனைவி புஷ்பவதியானாள். அதை ஒட்டிப் பல வரி கொடுத்தேன். சாந்தி முகூர்த்தத்தன்றும் வரி; கர்ப்பமுற்றாள், 7ஆம் மாதம் 8ஆம் மாதங்களில் மலர் சூடல், சீமந்த முகூர்த்தம் வரி; குழந்தை பிறந்தவுடன் அங்காரக தோஷம், சனி தோஷம் வரி; புண்ணியாஹவசனம் எத்தனை பேர்களுக்கு வரி கொடுக்கிறது. பிறந்த நாள் வரி, இதன் மத்தியில் தாயார், தகப்பனார் மரணமானார்கள்; மாடு சொம்பு பஞ்சமாத்திரம், கொடை, செருப்பு, இவைகளெல்லாம் கும்பிட்டு வேண்டி வேண்டி வரி செலுத்தினேன். அத்துடன் போச்சுதா, அய்யோ வருஷாந்த சிரார்த்ததன்று எவ்வளவு உபசாரத்துடன் என்ன என்ன ரூமாக வரி இதுதானா? அமாவாசை மாதப் பிறப்பு முதலியவைகளுக்கு சங்கல்பவரி. குழந்தைக்குத் தலை வலித்தால் பீடை நீங்குதற்கு ஜெபம் வரி. இவ்விதம் பலவிதத்திலும் வரி செலுத்தி இருக்கிறேன். கொடுக்கும் பொழுது பிராமணனை நமஸ்காரம் செய்ய வேண்டியது என்கிறார்கள். இன்னும் இவர்கள் செய்யும் பாவனை மிகப் பெரிது. சுபம், அசுபங்களில் பிராமணர்களைத் தொன்று தொட்டுத் தொடாதவர்களாகிய கொங்கு நாட்டு வேளாளர்களையும் இப்பொழுது பிடிக்கிறார்கள்.

இம்மட்டோ! கோயில்களில் இவர்கள் செய்கிற கூத்து மிகப் பெரிது. சோமவாரம், சுக்கிரவாரம், அமாவாசை அர்ச்சனை கட்டளை செய்யும்படி பேசுகிறார்கள். அதற்கு வருடம் 1க்கு 3 ரூபா முதல் 25 ரூபா வரை தரவேண்டுமென்று திட்டமாய் விடுகிறது. மாதம் ஒருமுறை தபாலில் ஒரு சிட்டிகை பொடி அளவு விபூதி வைத்து அனுப்பிவிடுகிறார்கள். அர்ச்சனையாவதாக அவர்கள் நினைவு, அதைப் பற்றி யோசிக்கலாம். 500, 1000, 200, 300 கட்டளைக்காரர்களிருக்கிறார்கள். அமாவாசை அன்று வருகிறவர்களைக் கண்டு அர்ச்சனை செய்து பணம் சம்பாதிக்கவே பொழுதில்லையே. கட்டளைக்காரர்களுடைய பெயரைச் சொல்ல நேரமாவதுண்டா? அய்யோ பாவம் இப்படியேன் மடத்தனமாக நம்மவர்கள் காசை, சிதம்பரம், ராமேசுவரம், ஸ்ரீரங்கம், திருச்செங்கோடு, சென்னிமலையில் வெற்றிலை பாக்கும், புகையிலை போட்டுக் கொண்டு, படிப்பு என்பதே அறியாது, தேவடியாள் வீட்டை அகலாது இருக்கிற மூதேவி பார்ப்பானுக்குக் காசைக் கொடுக்க வேண்டும். ஒரு சிநேகிதர் ஒரு ஸ்தலத்துக்கு அமாவாசையன்று போனார். அர்ச்சனை கட்டளைக்காரர்களுக்கு 30 ரூபாய்க்கு கவர் வாங்கித் தபாலில் போட்டதையும், 20 ஆயிரம் பிரசாதப் பத்திரிகை அச்சிட்டு அடித்ததையும் பார்த்தவர், அய்யா, அர்ச்சகரே, இந்த அமாவாசை, பாட்டியம்மை 2 நாளும் என்னுடனேயே இருக்கிறீர்களே! உங்கள் கட்டளைக்காரர்களுக்கு எப்பொழுது அர்ச்சனை செய்தீர்கள் என்றார். ஒழிந்த நாட்களிலே செய்வோம் என்றார். இப்படித்தானே எனக்கும் செய்திருக்கிறீர்கள். இன்றுடன் கட்டளையை நிறுத்தி விடுங்கள் என்றார். இப்படி எல்லாருஞ் சொன்னால் நாங்கள் எப்படிப் பிழைப்போம், சுவாமி கோவிலுக்குப் போகாவிட்டாலும், ஆத்மார்த்த பூஜா காலத்தில் எல்லாரையும் மனதிலேயே நினைத்து விடுவேன் என்றார் அர்ச்சகர்.

அய்யா, பத்திமான்களே! உங்களுடைய பத்தியைக் கெடுக்க நீங்கள் வருஷத்தில் ஒருமுறை கோவிலுக்குப் போனாலும் உங்கள் பேரில் ஆராதனை செய்யச் சொல்லி 3 ரூபாய் கொடுத்துவிடுங்கள். நேரில் இல்லாத காலங்களில் செய்தார் என்று கொடுப்பது மெத்த அவிவேகமாகும். நேரில் செய்யச் சொன்னால் ஒரு நாளில் ஒருவன் 30 பேருக்கு அர்ச்சனை செய்ய நேரமும் இடமும் போதாதே. இப்படி ஊராரை ஏய்த்து வாங்கிய காசு தேவடியாள் வீட்டில் விளையாடுதே, சீட்டாட்டத்துக்குப் போகிறதே. உண்மையாகவே, எந்த ஸ்தலத்துக்குக் கட்டளை செய்திருக்கிறீர்களோ அந்த அர்ச்சகனை அந்த ஸ்தலத்து விசேஷங்களைக் கேட்பீர்களானால் சரிவரச் சொன்னால் கொடுக்கலாம். சொல்லவே தெரியாது! அப்படிப்பட்டவருக்கு ஏன் கொடுக்கிறீர்கள்? இப்படி எத்தனையோ வகையாக வரி கொடுக்கிறோமே. அவன் சொல்கிறது போல நாம் ஆலயத்தில் ஏன் ஸ்தோத்திரம் செய்யக்கூடாது? நான் தோத்தரித்தால் கடவுளின் அருமை வாய்ந்த செவியில் ஏறாதா?

----------- பார்ப்பன வரி கொடுப்போன் - - "திராவிடன்", 12.10.1917

0 comments: