Search This Blog

14.11.08

பார்ப்பனர்களால் எந்த முன்னேற்றத்துக்கும் இடையூறுதான்!




நம்முடைய கோவை மாவட்டம், நம் இயக்கத்தைப் பொறுத்தவரையில் பிற்பட்டதாக உள்ளதை எண்ணி உண்மையில் வெட்கப்படுகிறேன். காரணம், ஒருக்கால் நான் பிறந்த ஜில்லா என்ற காரணமாகத்தான் இருக்க வேண்டும். நான் காங்கிரசில் இருக்கும்போது, காந்தியார் ஈரோட்டை எடுத்துக்காட்டித்தான் பேசுவார். சங்கரன் நாயர் அவர்கள் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திவிடும்படி காந்தியாரிடம் சொன்னபோது, ‘அது என் கையில் இல்லை; அது ஈரோட்டில் உள்ளது. அதுவும் கண்ணம்மாள், நாகம்மாள் கையில் உள்ளது' என்று சொன்னார். இது, ‘இந்து'வில் வந்தது.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அன்று அந்த நிலையில் இருந்தது. முதலில் ஒரு பெண் மறியலுக்கு வந்து கைதானார் என்றால், அது ஈரோட்டில்தான். 144 உத்தரவு போட்டு 3 நாளில் வாபஸ் பெற்றுக் கொண்டார்கள் என்றால், அதுவும் ஈரோட்டில்தான் நடந்தது. அப்படியிருந்த ஊர் இன்று இந்த நிலையில் உள்ளது.

சர்வ வல்லமையும் படைத்த பார்ப்பானை எதிர்க்க, எங்களைத் தவிர வேறு ஆளில்லை. நாங்கள் பார்ப்பானை ஒழிக்கிறவர்கள். ஒழிக்கிறோமோ இல்லையோ, ஒழிக்க வேண்டும் என்கிற உறுதியுடன் இருப்பவர்கள். அதோடு கூட நிற்பதில்லையே! பார்ப்பான் உண்டாக்கிய ராமனை எரித்தோம்; அவன் உண்டாக்கிய பிள்ளையாரை உடைத்தோம்; அவன் கடவுளை உடைத்தோம். அதற்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா, இல்லையா என்பது இதைப் பார்க்கும் போதல்லவா தெரிகிறது? யாரும் செய்யாத அந்தக் காரியத்தை நம் கழகம் செய்வதால், அது பெருமையே தவிர வேறு என்ன? எதற்கு இன்று சிறைக்குப் போகிறார்கள்? வேறு எந்த இயக்கம், ஒரே நாளில் 4000 பேரைச் சிறைக்கு அனுப்பியது?

சாதி ஒழிய வேண்டுமென்றால், ஜனநாயகத்தின் தலைவர் நேரு சொல்கிறார், ‘பிடிக்காவிட்டால் மூட்டை முடிச்சைக் கட்டு' என்கிறார். நீ யார்? உனக்கு என்ன உரிமை? என்ன உன் யோக்கியதை? உன் பரம்பரை என்ன? நீ எங்களை வெளியே போ என்றால், அதற்குப் பெயர் ஜனநாயகமா? ஜனநாயகம் என்றால், கேளேன் சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா என்றால், மக்களைக் கேளேன்! ஏனப்பா சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா என்று கேள். 100 க்கு 51 பேர் சாதி இருக்க வேண்டும் என்றால், நாங்கள் சூத்திரன், சக்கிலி, பறையன் என்று நெற்றியில் பச்சைக் குத்திக் கொள்கிறோம்; 51 பேர் ஒழிய வேண்டுமென்றால், ஒழிய வேண்டியதுதானே? அதுதானே ஜனநாயகம்? சாதி ஒழிய வேண்டும் என்றால், நாட்டைவிட்டு ஓடு என்பதா ஜனநாயகம்?...

ஒரு அதிகாரி என்னிடம் வந்து கேட்டார், ‘என்ன நீ இதில் இத்தனை வேண்டும், அதில் இத்தனை வேண்டும் என்று சப்தம் போடுகிறாயே? ஆபிசில் பார்த்தால் எல்லாம் பார்ப்பானாகவே இருக்கிறானே, எப்படி என்று கண்டுபிடித்தாயா?' என்றார். எப்படியப்பா என்றேன்? அவர் சொன்னார்: ‘ஒரு ஆபிசில் எவனையாவது லீவு எடுக்கச் சொல்லிவிட்டு, அந்த இடத்திற்குத் தற்காலிகமாக ஆள் வேண்டும் என்கிறான். அவன் தற்காலிகம் என்றால் நீயே போட்டுக்கொள் என்பான். இவன் பார்ப்பானாகவே போட்டு நிரப்பி வைப்பான்.

3 வருடம் தற்காலிகமாக வேலை பார்த்துவிட்டால், வேலை காரியமாகிவிடுகிறது.' இப்படிப் பித்தலாட்டம் செய்து நுழைக்கிறான். நீதி நிர்வாகத்தைப் பிரித்தான். என்ன ஆயிற்று? நீதியில் முழுக்கவும் பார்ப்பானே வந்து, வக்கீல் பசங்களில் பொறுக்கிப் போட்டு விடுகிறான். இப்படிப்பட்ட அக்கிரமம் நடப்பதை யார் கேட்க நாதி? இந்நாட்டுப் பத்திரிகைகள் அத்தனையும் அயோக்கியத்தனம் செய்கின்றன. நிலைமை அப்படி ஆகிவிட்டது; பார்ப்பான் தயவில்லாமல் பத்திரிகை வாழாது. ரேடியோ அவனிடம். இப்படிப் பத்திரிகை ஒரு நாட்டில் கேடாக இருந்தால், அந்த நாடு எப்படி உருப்படும்?...

நம் தமிழ் நாட்டில் ‘இது நம் நாடு' என்கிற நினைப்பே இல்லையே! எங்கோ ஓசியில் இருப்பதாகத்தானே எண்ணுகிறார்கள்? சாதி ஒழிய வேண்டுமென்று இத்தனை பேர் சிறைக்குப் போனோம்; பலர் செத்தார்கள்; யாராவது கவலைப்பட்டார்களா? நாமே கல்லுடைக்கிறோம், கக்கூஸ் எடுக்கிறோம், நமக்கு வேலையென்றால் பியூன் வேலை, போலிஸ் வேலை. நம்முடைய பிள்ளைகள் படிக்கிறார்கள். படித்த பின் மண்வெட்டி எடுக்க மாட்டான்; வேலையில்லையென்றால் அடுத்த காட்சி என்ன? சினிமாவுக்குப் போக வேண்டியதுதானா? இவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?


இப்போது மந்திரிகள், கலப்பு மணம்தான் சாதி ஒழிய வழி என்ற போது சும்மா இருந்தார்கள். காங்கிரசில் சொன்னான், சாதி ஒழிய கலப்பு மணம் வேண்டும் என்றான். அதுக்கு எழுதுகிறான் ஒரு பார்ப்பான்: ‘கலப்புமணம் செய்யலாம் என்று காங்கிரஸ் சொல்லுவது தப்பு. ரத்தம் கெட்டுப் போகும்.' இவர்கள் ரத்தம் சுத்தமான ரத்தமாம்! அது கெட்டுப்போகுமாம்! ‘கலப்பு மணம் பேசுவதற்குதான் பெருமை; காரியத்திற்கு ஆகாது. ராஜாஜி பெண்ணைக் காந்தி மகனுக்குத் தந்தார்; அது உருப்படவில்லை; நேரு எவனுக்கோ கொடுத்தார் அதுவும் உருப்படவில்லை. எனவே, கலப்பு மணம் கூடாது' என்று ‘இந்து' பத்திரிகையில் எழுதுகிறான். ஆகவே, நீங்கள் சிந்திக்க வேண்டும். பார்ப்பனர்களால் எந்த முன்னேற்றத்துக்கும் இடையூறுதான்!

---------------------ஈரோட்டில் 19.6.1958 அன்று தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு: ‘விடுதலை' 25.6.1958

0 comments: