Search This Blog

25.11.08

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக சட்டமன்றக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்தல் சரியா?

புறக்கணித்தல் சரியா?

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் சில கட்சிகள் கலந்துகொள்ளாது என்று அறிவித்துள்ளனர். அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வழக்கம்போல கீறல் விழுந்த இசைத்தட்டுபோல, கருணாநிதி அரசு பதவி விலகவேண்டும்; மத்திய அரசுக்குக் கொடுத்துவரும் ஆதரவினை விலக்கிக் கொள்ளவேண்டும் என்ற பாடலைப் பாடியிருக்கிறார்.

அவருடைய நோக்கமெல்லாம் திண்ணை காலியாகவேண்டும்; அதில் மீண்டும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டும் என்கிற பதவித் தாகம் தலைதூக்கி நிற்கிறதே தவிர, குறிப்பாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையின்மீது அவருக்குள்ள அக்கறை இல்லாத் தன்மையைத்தான் பிரதிபலிக்கிறது. பொதுவாக, பரவலாக பார்ப்பனர்களுக்கே உரித்தான மனப்பான்மை - ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் என்ன என்பதை நாடு நன்கு அறிந்தே இருக்கிறது.

வேறு சில அரசியல் கட்சிகளும், முதலமைச்சரால் கூட்டப் பெற்றுள்ள இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பது பொறுப்பான செயலாக இருக்க முடியாது.

இந்தப் பிரச்சினையில் நடுவண் அரசு பக்கமோ, மாநில அரசின் பக்கமோ குறையிருப்பதாக அவர்கள் கருதுவார்களேயானால், அதனைக்கூட அதிகாரப்பூர்வமாக நேருக்கு நேர் பதிவு செய்யலாமே! அதற்கான சரியான சந்தர்ப்பம் இதனைவிட வேறு ஒன்று இருக்கவும் முடியுமா?

மிக முக்கியமான ஒரு பிரச்சினைக்காக - அரசு கூட்டும் கூட்டத்தைப் புறக்கணிப்பது என்பது - கடமை தவறிய செயல் மட்டுமல்ல - உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றுமாகும்.

தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் பதவி விலகவில்லை? என்ற ஒரு கேள்வி பரவலாகத் தொடுக்கப்படுகிறது.

அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட அகில இந்தியக் கட்சிகள்கூட, பின்னர் அதிலிருந்து வேறுபட்டன; அகில இந்தியத் தலைமை அதற்கான அங்கீகாரத்தைக் கொடுக்கவில்லை என்ற தன்மையில் நடந்துகொண்டதை முதலமைச்சர் அவர்கள் வெளிப்படுத்தியிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டாமா?

அதேநேரத்தில், அந்தத் தீர்மானத்திற்குப் பிறகே இந்திய அரசு வழக்கமான குறட்டை விடும் தன்மையிலிருந்து விழித்து செயல்பட்டு இருக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா?

தமிழ்நாடு அரசு பதவி விலகவேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அறிக்கைமேல் அறிக்கை விட்டுக் கொண்டுள்ளார்.

அப்படி பதவி விலகுவதன் காரணமாக இலங்கையில் மகிந்த ராஜபக்சே போரை நிறுத்திவிடுவார் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கருதுகிறாரா?

இந்த ஆட்சி இருப்பதால்தான் ஈழத்தமிழர் பிரச்சினைபற்றி மேடைகளில் கருத்துகளைத் தெரிவிக்க முடிகிறது. அம்மையார் ஆட்சியில் இருந்தால் நிலைமை என்னவாக உருவெடுத்து இருக்கும் என்ற ஆராய்ச்சி தேவையில்லை. அது வெளிப்படையாகத் தெரிந்துள்ள வெள்ளையான உண்மையாகும்.

விடுதலைப்புலிகள் என்ற வார்த்தையே உச்சரித்தாலே அது சட்ட விரோதம் என்று கூறி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் உள்பட அவர்தம் கட்சியைச் சேர்ந்த தோழர்களையும், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், திராவிட இயக்கத் தமிழர்கள் பேரவையின் அமைப்பாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோரை பொடா சட்டத்தின்கீழ் சிறைச்சாலையில் தள்ளிவிடவில்லையா?

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும்கூட அவர்கள் மேடைகளில் பேசக்கூடாது என்ற வாய்ப் பூட்டுச் சட்டம் தானே அமலில் இருந்தது!

தி.மு.க. ஆட்சியில் கருத்துரிமை அளிக்கப்பட்டதால்தான் ஈழத் தமிழர் பிரச்சினைப்பற்றி மட்டுமல்ல, தி.மு.க. ஆட்சி பதவி விலகவேண்டும் என்று ஜனநாயக ரீதியான உரிமையைப் பயன்படுத்தி வாய் திறக்கவும் முடிகிறது.


இன்றைக்கு ஜெயலலிதா பக்கம் நின்று உரக்கப் பேசும் கட்சித் தலைவர்கள், வசதியாக இவற்றையெல்லாம் மறந்துவிடலாமா?

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் அம்மையார் வெளியிடும் அறிக்கைகளை இவர்கள் எப்படி சகித்துக் கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து என்பது முக்கியமான ஒன்றே!

ஆளும் கட்சியை மட்டும் கசப்பாக விமர்சனம் செய்பவர்கள் - ஜனநாயகத்தில் மற்றொரு முக்கிய கூறான அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டையும்கூட கறாராக விமர்சிக்கும் துணிவைப் பெறும்போதுதான், அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், அங்கீகாரமும் இருக்க முடியும்.

--------------நன்றி: "விடுத்லை" தலையங்கம் 25-11-2008

0 comments: