Search This Blog

20.11.08

ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளின் அபாயகரப் போக்கு!
காலங்கடந்தாலும் மிக முக்கியமான செயலில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரகம் இறங்கியுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

ஆர்.எஸ்.எஸ். நாடு தழுவிய அளவில் ஆயிரக்கணக்கான பள்ளிகளை நடத்தி வருகிறது. சரசுவதி சிசு மந்திர், பிரகாஷன், வித்யா பாரதி போன்ற பெயர்களில் இவை நடத்தப்படுகின்றன.

இந்தக் கல்வி நிறுவனங்களில் வரலாறுகளை திரித்து, மாணவர்கள் மத்தியில் இந்துத்துவா வெறியைத் திணிக்கும் வகையிலும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்மீது வெறுப்பு நச்சு விதைகளை ஊன்றும் வகையிலும் பாடத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாற்றுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன.

இதன் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களின் பாடத் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன்சிங் ஆணை பிறப் பித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளில் ஏதோ இப்பொழுதுதான் இந்த வகையில் பாடத் திட்டங்கள் அமைந்துள்ளன என்று கருதக்கூடாது.

தொடக்க முதலே இதே வேலையைத்தான் அவர்கள் செய்து வருகிறார்கள். பல காலகட்டங்களிலும் இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்ததுண்டு.

1992 இல் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த போதே அய்ம்பது வரலாற்றுப் பேராசிரியர்கள் கையெழுத்திட்டு இந்த உண்மையை வெளிப்படுத்தினர்.

20.11.1998 நாளிட்ட ஃப்ரண்ட் லைன் ஏடு பின்வருமாறு எழுதியது:

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கல்வித் திட்டத்தில் வரலாற்றுத் தவறுகள், ஒரு பக்கம் சார்ந்த பொய்கள், மாச்சர்யங்கள் காலத்தால் உண்மைக்குப் புறம்பானவை என எடுத்து வீசப்பட்டவை, கோட்பாடுகள், கற்பனைகள் இவையெல்லாம் அப்படியே விட்டு வைக்கப்படவில்லை. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இவை அவ்வப்பொழுது அதிக பொய்களைக் கொண்டு வலுவூட்டப்படுகின்றன என்று ஃப்ரண்ட் லைன் இதழே எழுதியதே!

ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்தி யாவை ஆக்கிரமிப்புச் செய்தனர்! இந்தியாவின் பூர்வீகக் குடிமக்களான திராவிடர்களைத் தென் பகுதிக்கு விரட்டினர் என்பது பொய்; ஆரியர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகள்!

என்று பாடத் திட்டத்தில் வெளியிடப்பட்டிருந்தன.

உத்தரப்பிரதேசத்தில் சங் பரிவாரின் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளி - ஏழாம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற ஒரு விவரம்:

முலாயம்சிங் யாதவ் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்?

பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம்சிங் யாதவைச் சார்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப் பட்டனர்?

கணக்குப் பாடத்திலும்கூட இதே போக்குதான்.

10 கரசேவகர்கள் சேர்ந்து பாபர் மசூதியை இடித்தால் 15 நாள்கள் ஆகும். 20 கரசேவகர்கள் இடித்தால் எத்தனை நாள்களாகும்

என்பன போன்ற வினாக்கள்! எதிலும் இந்து நஞ்சை விதைத்து, எதிர்கால நம்பிக்கைக்குரிய சிற்பிகளை விஷ விருட்சமாக வளர்த்திட திட்டமிட்டுச் செயல்பட்டனர் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து!

அடால்ப் ஹிட்லர் பாடத் திட்டங்களில் யூதர்கள் மீதான வெறுப்பைக் கக்கும் நஞ்சுகளைத் திணித்தனர்.

ஒரு யூதன் ஒரு பசுவை 100 (மார்க்) வாங்கி 150 மார்க்குக்கு விற்றால் யூதன் பெற்ற லாபம் என்ன என்பதற்குப் பதிலாக, யூதன் அடித்த கொள்ளை எவ்வளவு?

என்று வினாக்கள் அமையும்.

இட்லரைப் பல வழிகளிலும் பின்பற்றும் கூட்டம்தானே (கொடி ஸ்வஸ்திக் முதற்கொண்டு) இந்த இந்துத்துவா பாசிசக் கும்பல்.


மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இந்தப் பிரச்சினையை தலையாயதாகக் கருதி, ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களை வன்முறை என்னும் குண்டுகளைத் தயா ரிக்கும் ஆலைகளாக மாற்றிவரும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும். தெரிந்தே, திட்டமிட்ட வகையில் இந்த மாபெரும் குற்றத்தைச் செய்யும் நிருவாகத்தின்மீது சட்டப்படியான நடவடிக் கைகளை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.


------------------------"விடுதலை" தலையங்கம் 20-11-2008

2 comments:

தேவன் மாயம் said...

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
thevanmayam.blogspot.com

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கு நன்றி தோழரே.