இந்து மதத் தீவிரவாதம் அம்பலம்
ஆயுதப் பயிற்சி பெற்ற 54 பேரைக் காவல்துறை தேடுகிறது
மாலேகான் சதி தொடர்பாக ராம்ஜி கைது
ஆர்.எஸ்.எஸ்.- இன் தலைமையிடமான நாக்பூரில் உள்ள போர்ப்படைப் பள்ளியில் பயங்கரவாதச் செயல்களுக்கும் ஆய்தங்களைக் கையாள்வதற்கும் பயிற்சி பெற்ற 54 பேர்களைக் காவல்துறை தேடி வருகிறது. மும்பை மாலேகான் வெடி விபத்துச் சதி தொடர்பான விசாரணையில் இந்த 54 பேர் பற்றிய சேதி தெரிய வந்துள்ளது. போன்சலா மிலிட்டரி பள்ளியில் 2001 ஆம் ஆண்டிலேயே இவர்களுக்குப் பயிற்சி தரப்பட்டுள்ளது.
இவர்களில் சிலர் 2006 இல் மாலேகான் மற்றும் நான்டெட் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்டவர்கள். மாலேகானில் இந்த ஆண்டு நடந்த குண்டு வெடிப்பிலும் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது. இவர்களின் பெயர்களும் முகவரிகளும் பதிவு செய்யப்பட்ட மடிக்கணினி கைது செய்யப்பட்ட போர்ப்படை அதிகாரி சிறீகாந்த் பிரசாத் புரோகித்துக்குச் சொந்தமானதாகும். அதைக் கண்டுபிடிக்க இயலவில்லை. சதிகாரர்கள் மறைத்து வைத்திருக்கலாம் அல்லது அழித்திருக்கலாம்.
சி.பி.அய். தகவல்
மத்தியப் புலனாய்வுத் துறை இயக்குநர் அசுவினிகுமார் இது பற்றிக் கூறுகையில், தமது துறையினர், மாலேகான், நான்டெட் குண்டு வெடிப்புகளுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். மராட்டியக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்களை சி.பி.அய். விசாரிக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். நான்டெட் குண்டு வெடிப்புச் சதியில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்கள் கூறியிருக்கின்றனர்.
நாக்பூரில் உள்ள போன்சலா மிலிட்டரி பள்ளியின் இயக்குநர் சுரேஷ் ஜோக்லேகர் என்பவர் பள்ளி சம்பந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டதாகவும், 2001- இல் பஜ்ரங்தளம் நடத்திய முகாம் பற்றிய விவரங்களையும் கூறிவிட்டதாகவும் தெரிவித்தார். பஜ்ரங் தள முகாமுக்குக் கட்டடத்தை வாடகைக்கு எடுத்தவர் யார் என்பது பற்றிய விவரத்தையும், நான்டெட் பயங்கரவாதச் சதி தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் அந்த முகாமில் பயிற்சி பெற்றவர்களா என்பதையும் தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறினார்.
குஜராத்தில் சபரி பக்தன் கைது
மாலேகான் குண்டு வெடிப்புச் சதி தொடர்பாக குஜராத் மாநிலத்தில் டாங்ஸ் மாவட்டத்தில் ராம்ஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஊரில் உள்ள சபரி கோயிலில் பணியாளரான இவரைக் கோயிலில் கைது செய்தனர். சபரி என்பவள் கற்பனைக் கதாபாத்திரமான ராமனின் பணியாள் என்று கதை உள்ளது. ராமனிடம் அன்பு செலுத்திய சபரியின் பெருமையை விளக்குவதற்காக அண்மையில் இந்தக் கோயிலில் பெரிய பண்டாரப் பரதேசிகளின் கூட்டத்தை விசுவ இந்து பரிசத் கூட்டியிருந்தது. இதனால் இந்தக் கோயிலின் பக்தர்களாகப் பழங்குடி மக்களை ஆக்கிட முயற்சிகள் நடந்தன. கைதான ராம்ஜி பழங்குடியின ஆள்.
மாலேகான் பயங்கரவாதச் சதிக்குக் காரணமான பெண் சாமியாரின் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று குண்டு வைத்த ஆள் ராம்ஜி. இந்து ஜாக்ரான் மஞ்ச் எனும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அஷிமானந்தா எனும் பண்டாரத்தோடு தொடர்புடையவர். இந்த அஷிமானந்தா, கிறித்துவர்களை இந்துக்களாக மதம் மாற்றும் முயற்சியில் இருப்பவர்.
பா.ஜ.க. பித்தலாட்டம்
குண்டு வெடிப்புச் சதிக்குக் காரணமான சாமியாரிணியைக் கைது செய்தது அரசியல் சதி என்று கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது பா.ஜ.க. அக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இந்த சேதியைத் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
--------------நன்றி: "விடுதலை" 10-11-2008
Search This Blog
10.11.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment