இதுதான் புராணம்
தொண்டை நாட்டில், வெள்ளிமலை அருகில் மேற்பாட என்னுஞ் சிற்றூரை, நம்பியரசன் என்னும் வேடர் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பெண்மகவு இன்மையால் ஒரு பெண் மகப்பேறு வேண்டி மலைத்தெய்வத்தை வழிபட்டு வந்தான்.
அக்காலத்தில், சிவமுனி என்பவன், அம்மலை அருகில் அய்ம்புலனையும் அடக்கிச் சிவன் மேல் மனத்தைச் செலுத்தித் தவஞ் செய்து கொண்டிருந்தான். ஒருநாள் ஓர் அழகிய பெண் இளம் மான் அவனருகில் வந்து உலாவியது. அதைக் கண்டு அவன் கரையிறந்து காமுற்று பேரிடர்ப்பட்டான். அவன் காமக் காட்சியினால் அம்மான் கருவுற்று, உரிய காலத்தில் ஒரு பெண் மகவையீன்று, வள்ளிக்கிழங்கு அகழ்ந்த ஒரு குழியில் இட்டுச் சென்றது.
அக்குழவியைக் கண்ட நம்பியரசன் எடுத்து, வள்ளிக் கிழங்கு குழியிற் கிடந்ததுபற்றி வள்ளியென்று பெயரிட்டுத் தன் தேவியிடம் (மனைவியிடம்) கொடுத்தான். அவள் வளர்த்தாள்.
சிவ முனிவன் இளம்பிள்ளை (மானை)யைக் கண்டு மையல் கொண்டு பட்டபாட்டை,
போர்த்தொழில் கடந்த கைவேற்
புங்கவ னருளால் வந்த
சீர்த்திடு நவ்வி தன்னைச்
சிவமுனி யென்னும் தூயோன்
பார்த்தலு மீளைமைச் செல்வி
படைத்திடும் பிறனிற் கண்ட
தூர்த்தனின் மைய லெய்திக்
காமத் தாற் சுழலலுற்றான்
ஏமத்தின் வடிவஞ் சான்ற
இலங்கெழிற் பிணையின் மாட்டே
காமத்தின் வேட்கை வைத்துக் கவலையா லவல மெய்தி
மாமத்த மளைபுக் கென்ன
மனக்கருத் துடைந்து வேறா
யூமத்தம் பயன்றுய்த் தூர்டோ
லுன்மத்த னாகி யுற்றான்
கந்தபுராணம் - வள்ளி 21-2)
என்று, கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் புலவர் சிறிதும் நாணமின்றிப் பாடியிருக்கின்றார். இடக்கர் மிகுந்தனவும் இயற்கைக்கு மாறானவுமான இக்கதைகள், அகக் கரண வளர்ச்சியும், ஒழுக்கவுயர்வு மில்லாத ஒருவன் கட்டியனவாகும்.
முதலிலிருந்து முடிவு வரை, கந்தபுராணம் முற்றும் கட்டுக் கதையாகும்.
இந்தப் புளுகு கந்த புராணத்திலுமில்லையே
கந்த புராணத்தி லில்லாத புளுகு
எந்த புராணத்திலுமில்லை
என்னும் பொது மக்கள் கூற்றும் பழமொழியும் இங்குக் கவனிக்கத்தக்கது.
கந்தபுராணம் போன்றே, ஏனைப் புராணங்களும் தமிழருக்கு வேண்டுவனவும் ஏற்பனவும் அல்ல எனக் கூறி விடுக்க.
--------------------மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் "தமிழர் மதம்" என்னும் நூலில் பக்கம் 79-80
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment