ஆயிரத்தில் ஒருவன் - கைதான புரோகித்
இந்து பயங்கரவாதிகளின் பின்னணி
புரோகிதப் பார்ப்பனர் சிறீகாந்த் பிரசாத் புரோகித் என்பவர் மாலேகான் குண்டு வெடிப்புச் சதிச் செயலில் ஈடுபட்டுக் கைதாகியுள்ள இந்துத்துவப் பயங்கரவாதி. தனியார் ராணுவப் பள்ளியில் 1993 இல் பயிற்சி பெற்று போர்ப்படையில் சேர்ந்து லெப்டினன்ட் கர்னல் பதவி அளவுக்கு உயர்ந்தவர். இவரைப் போன்ற பயிற்சியைப் பெற்றவர்கள் இந்தியப் போர்ப்படையின் முப்படைகளிலும் ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர் சார்ந்த அபிநவ் பாரத் அமைப்பின் தலைவி கோபால் கோட்சேயின் மகள். சவர்க்கரின் பேரன் மனைவி. இரண்டு குடும்பங்களின் பயங்கரவாத ரத்தமும் கலந்து கொடுத்த பயிற்சியைப் பெற்றவர்கள்தான் இந்துப் பயங்கரவாதிகள்.
இவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
மும்பையிலிருந்த 4 மணி நேரப் பயணத்தில் புனே நகருக்கு வந்துவிடலாம். இரண்டாவது மும்பை எனச் சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்துள்ள நகரம். மகாராட்டிரத்தின் கலாச்சார நகரம் என்றும் கல்வி நகரம் என்றும் கூறலாம்.
இந்த ஊருக்கு மற்றொரு பக்கமும் இருக்கிறது. வன்முறையாளர்களான தேசியவாதிகளாகவும் இந்துத்துவவாதிகளாகவும் பல ஆண்டுகளாக உள்ளவர்களும் இங்கே உண்டு. காந்தியாரின் கொலைக்குப் பிறகு, காங்கிரசுக் கட்சி மராட்டியர்களால் பல தொல்லைகளுக்கு ஆளான மராத்திப் பார்ப்பனக் குடும்பங்களும் பல பகுதிகளிலும் விரவிக் கிடக்கின்றன. மேற்கு இந்தியாவிலிருந்து பழைய பார்ப்பன மய்யமான புனேவுக்கு வந்து தங்கி விட்டனர். தலைமுறை தலைமுறையாக அவர்களின் கோபம் அவர்களிடம் தேங்கிக் கிடக்கிறது. அந்தப் பகைமையின் வெளிப்பாடு இந்தியாவின் கோட்பாடுகளின் மீது அய்யத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டது.
கடந்த செப்டம்பர் 29 இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பின் புனே அடிக்கடிச் செய்திகளில் அடிபடுகிறது. 6 பேர் இறப்புக்கும் 60 பேர் காயத்திற்கும் காரணமான பயங்கரச் செயல் அது. மராட்டிய மாநிலத்தின் பயங்கரவாதத் தடுப்புப் படையினரின் கவனமும் விசாரணைகளும் இந்த ஊரைச் சுற்றியே அமைந்தது. விளைவு? பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் என்று சாத்வி (பெண் சாமியார்) பிரக்யா சிங் தாக்கூர், மற்றும் சமீர் குல்கர்னி, (ஓய்வு) மேஜர் ரமேஷ் உபாத்யாயா, அபய் ரகிர்கர், ராகேஷ் தாவ்டே, பணியில் இருக்கும் லெப்டினன்ட் கர்னல் சிறீகாந்த் பிரசாத் புரோகித் ஆகியோரை புலன் விசாரணை அடையாளங் காட்டியது. இவர்கள் எல்லோரும் புனேயைச் சேர்ந்தவர்கள்; அபிநவ் பாரத் எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள். பல பத்து ஆண்டுகளுக்கு முன்பு வி.டி.சவர்க்கர் எனும் இந்துத்துவாவாதியினால் தொடங்கப்பட்ட அமைப்பு இது. 2006 இலிருந்து ஹிமானி சவர்க்கர் என்னும் பெண் இதன் தலைவராக இருக்கிறார். 61 வயதான இவர் வி.டி.சவர்க்கரின் தங்கை மகனை மணம் செய்து கொண்டவர். காந்தியாரைக் கொன்ற நாதுராம் விநாயக கேட்சேயின் தம்பி கோபால் கோட்சேயின் மகள்.
மும்பையில் பதிவு செய்யப்பட்ட இந்த அமைப்பின் செயல் பாடுகள் எல்லாம் புனேயில்தான். முக்கியப் பொறுப்பாளர்களும் இங்குதான் இருக்கின்றனர். பயங்கரவாதத்தையே இந்த அமைப்பு அடிப்படையாகக் கொண்டிருப்பதை அதன் செயல்களே தெரிவிக்கின்றன. அது வெளியிட்டுள்ள அறிக்கையில், பல நூற்றாண்டுகளாகக் கொல்லப்பட்ட இந்துக்களின் உயிர்களுக்காகப் பழி வாங்குங்கள் என்று தன் உறுப்பினர்களைத் தூண்டுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால், ராய்கன், விடிஷா மாவட்டங்களில் பல முகாம்களை நடத்தி இருக்கிறது. முசுலிம்களை இந்த முகாம்களில் தர்ம சத்ருக்கள் என்றே வருணித்துள்ளனர். இவர்கள் எப்பேர்ப்பட்ட பயங்கரவாதிகள் என்பதை அவர்களின் முழக்கம் தெளிவாகக் காட்டுகிறது: இரக்கமோ, மன்னிப்போ கிடையாது, யுத்தம்தான்; அதுவும் கடுமையான யுத்தம் என்று முழங்குகிறார்கள்.
கைது செய்யப்பட்டுள்ள (ஓய்வு) மேஜர் ரமேஷ் உபாத்யாயா இந்த அபிநவ் பாரத்தின் செயல் தலைவர். மகாராட்டிராவிலிருந்தும், மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் தொ(கு)ண்டர் களைக் கூட்டி 2006 முதல் பல பயிற்சி முகாம்களை அது நடத்தியுள்ளது. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 500 அய் நெருங்கும்போதுதான், கோட்சே குடும்பப் பெண் ஹிமானி தலைவராக வந்தார். பயங்கரவாதத்தை எதிர்த்தும் அநீதியை எதிர்த்தும் போரிடும் இயக்கம் என அறிவித்துக் கொண்டாலும் இதன் நோக்கமே வன்செயல்களிலும் பயங்கரச் செயல்களிலும் வலியப் போய் ஈடுபடுவது என்பதுதான்.
ஆகஸ்ட் 3 இல் ஜபல்பூரில் சாம்ஊமன் எனும் கிறித்துவக் குடும்பத்தைத் தாக்கியுள்ளனர். அபிநவ் பாரத் அமைப்பின் துணைத் தலைவர் ஒருவரே சாம் ஊமன் எனும் பாதிரியாரைத் தாக்கியிருக்கிறார். மாலேகான் குண்டு வெடிப்புச் சதியில் கைது செய்யப் பட்டுள்ள சிவநாராயணன்சிங் கல்சங்ரா என்பானின் சகோதரன் ராமச்சந்திர கல்சங்ரா என்பவனைக் காவல் துறை இது தொடர்பாகத் தேடுகிறது. இவனும் சாத்வி பிரக்யாவும் தொலைப்பேசியில் பேசியதைக் காவல் துறை வெளியிட்டுள்ளது.
மாலேகானுக்கு சில கி.மீ. தூரத்தில் உள்ள நாசிக் நகரில் அபிநவ் பாரத் உறுப்பினர்கள் செப்டம்பர் 16 இல் போன்சலா மிலிட்டரி பள்ளியில் கூடிப் பேசி இருக்கின்றனர். இந்தப் பள்ளியில் கூட்டம் போட அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்தது லெப்டினன்ட் கர்னல் புரோகித். இந்தப் பள்ளியின் தளபதி கர்னல் எஸ்.எஸ். ராய்கர் என்பவருடன் பணியாற்றியதால், இவருக்குக் கூட்டம் நடத்த அனுமதி தரப்பட்டதாகப் பள்ளியின் நிருவாகக் குழுச் செயலாளர் டி.கே.குல்கர்னி கூறியுள்ளார். அநீதிக்கு எதிரான போர் தொடுப்பதாக அமைப்பின் விதிகளில் இருப்பது தனக்கு நினைவிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
160 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள போன்சலா மிலிட்டரி பள்ளியின் பாடத் திட்டத்தில் மத போதனையைச் சேர்த்துள்ளது. பாரதீயப் பெருமைகளை நிலை நிறுத்தவும், ராமனின் பெருமைகளை மாணவர்கள் மத்தியில் பரப்பவும் கோருகிறது. பள்ளி வளாகத்தின் பெயரே ராமபூமி என்பது. மாணவர்கள். ராமபக்தர்கள் - மதமும் போரும் குறிக்கோள். வெடித்த துப்பாக்கிக் குண்டு களைக் கொண்டு செய்யப்பட்ட ராமன் பொம்மையைக் கும்பிடுகிறார்கள். (ராமன், எத்தனை ராமனடி). மாணவர்கள் துப்பாக்கியால் சுடக் கற்றுக் கொண்ட பயிற்சியின் போது பயன்படுத்திய தோட்டாக்களாம்.
லெப்டினன்ட் கர்னல் புரோகித் இந்தப் பள்ளியில் நன்கு அறிமுகமான ஆள். நாசிக் நகரில் ராணுவத்தில் மொழிப் பயிற்சிக்காக அவர் வந்தபோது அவரை அழைத்து இப்பள்ளியில் பேசச் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நான்கு கூட்டங்களில் சிலவற்றில் இவர் பேசியிருக்கிறார். (ஒழுக்கம் பற்றியா பேசியிருப்பார்? பயங்கரவாதத்தைத் தூண்டிப் பேசியிருப்பார்.)
இந்தப் பள்ளிக்கு தளபதி ராய்கர் வந்ததே பல கேள்விகளை எழுப்புகிறது. இவர் போர்ப்படையில் இருந்து விருப்ப ஓய்வு கேட்டார். அதிகாரிகள் ஓய்வுக்கு முன்பே வெளியே போவதை போர்ப்படை தடுக்கிறது. கருணை அடிப்படையிலோ, அல்லது பதவி உயர்வு மறுக்கப்பட்டாலோ மட்டும்தான் விருப்ப ஓய்வில் செல்லலாம் என்பது விதி. இதற்கு மாறாக இவருக்கு விருப்ப ஓய்வு தரப்பட்டது.
அதைவிட மோசம் இன்னொன்று. எதிர் நுண்ணறிவுப் பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுப் பயிற்சியை முடித்தவர் இவர். அந்தப் படிப்பையும் அறிவையும், போர்ப் படைக்குப் பயன் படுத்திக் கொள்ளாமல் இவரை அனுப்பியது மிக மோசமான முன் உதாரணம். இன்னும் ஒரு முறைகேடு. பணியில் இருக்கும்போதே இவர் இந்த மிலிட்டரிப் பள்ளியின் தலைமைப் பொறுப்புக்கான நேர்காணலில் கலந்து கொண்டார். முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். கொள்கை கொண்ட மிலிட்டரிப் பள்ளிக்குப் போகிறார் என்பதை ராணுவத் தலைமையகம் கவனிக்கவில்லை. (அல்லது கண்டும் காணாதது போல் விட்டுவிட்டது.)
மகாராட்டிரா மிலிட்டரி அமைப்பு என்ற ஒன்றை ஜெயந்த் சிட்டால் என்பவர் நடத்தி வருகிறார். இவர் லெப்டினன்ட் கர்னல் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். கைதான புரோகித் வீட்டுக்குச் சில வீடுகள் தள்ளிதான் இவருடைய பள்ளி உள்ளது. ஒராயிரம் பையன்களை நான் பயிற்சி தந்து போர்ப்படைகளின் மூன்று பிரிவுகளிலும் சேர்த்து விட்டிருக்கிறேன் என இவர் பெருமையுடன் பீற்றிக் கொள்கிறார். அவர்களுக்கு இவர் மூளைச் சாயம் ஏற்றி, தேசத்திற்காக எதையும் செய்யும் எண்ணத்தை அவர்கள் மூளையில் ஏற்றி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.
20 ஆண்டுகளாக ஒரு நோட் புத்தகத்தை அவர் காப்பாற்றி வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற அனைவரின் பெயர்களும் அதில் உள்ளன. 1993 பிப்ரவரி 20 இல் சேர்ந்து படித்தவன் சிறீ காந்த் பிரசாத் புரோகித். லெப்டினன்ட் கர்னலாக இருந்து கைது செய்யப்பட்ட முதல் குற்றவாளி என்ற பெருமைக்கு (சிறுமைக்கு) ஆளானவன். ராணுவத்தில் உரிமைகளும் கவுரவங்களும் பல் லாண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நிலையைக் கண்டு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக செய்யப்பட்ட குண்டு வெடிப்பாக இருக்கலாமோ என்கிறார் இவர்.
புரோகித் போன்ற நச்சுச் செடிகளை வளர்த்த சிட்டாலே, தற்கொலைக் கமாண்டோக்கள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட மராத்திய இளைஞர்கள் என்றெல்லாம் பெயர் வைத்து பயங்கர வாதிகளை உருவாக்கியிருக்கிறார். இதை அறிந்து கொண்டதும் ராணுவத் தலைமையினர் இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்களாம். ஏனெனில் இவரால் தயாரிக்கப்பட்டவர்களை இவர் கமுக்கமாகப் பாகிஸ்தானுக்கு அனுப்பிப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தத் திட்டமிட்டு இருந்தார். ஒன்றுக்கு அய்ந்து என்ற விகிதத்தில் எதிர்த் தாக்குதல் நடத்தப்படவேண்டும் என்பது இவர் கொள்கை.
இதையேதான் அபிநவ் பாரத்தின் தலைவி ஹிமானி சவர்க்கரும் கூறுகிறார்: "ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தைக் காட்டு என்பதை நான் ஏற்பதில்லை. நாம் திருப்பித் தாக்க வேண்டும். குண்டுக்குக் குண்டு என்பது போல, குண்டு வெடிப் புக்குக் குண்டு வெடிப்புதான் பதிலடி" என்கிறார் இந்தப் பெண் "மணி".
நன்றி :- "அவுட்லுக்", 17.11.2008
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment