மின்வெட்டு புதிய அரசியல் மூலதனமா?
தமிழ்நாட்டில் மின்சார வெட்டு ஏற்பட்டிருப்பதனால் பல தொழில்கள், விவசாயம், வியாபாரம் முதற்கொண்டு, வீட்டு வசதிகள் உள்பட பல வகையில் மக்களுக்கு இழப்பும் இடையூறும் ஏற்படும் என்பது உண்மை.
நவீன அறிவியல் யுகத்தில் மின்சாரம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இம்மாதிரி நெருக்கடி நேரங்களில்தான் உணர முடியும்.
பக்திமான் இந்நாட்டில் கண்டது பிரசாதம்; புத்திமான் கண்டது மின்சாரம் என்ற அறிவு மொழியின் ஆழ்ந்த பொருளை இந்த நேரங்களில் தான் நன்கு உணர முடியும்.
இப்படி அதிகமான மின்வெட்டு ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் தென் மேற்கு பருவக் காற்று தவறி மழை குறைந்ததால் நீர் மின்சாரம் உற்பத்திக் குறைவும், ஆந்திரா கிளர்ச்சியால் நிலக்கிரி வராததால் அனல் மின்சார உற்பத்திக் குறைவும் ஏற்பட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது கொஞ்சம் புரிந்துவருக்கும் தெரியாமற் போகாது.
பொதுவாகவே நாடு வளர வளர மின்சாரத்தின் தேவை பல மடங்கு முன்னைக் காட்டிலும் பெருகியே தீரும். தற்போது தமிழ்நாடு கிராமப்புறங்களுக்கு மின்சாரம் அளிப்பதில் முதல் மாநிலமாகக் காட்சி அளிக்கிறது.
மின்சாரத் தேவைகளுக்கே அதன் உற்பத்தி பெருக வேண்டும். மின்சாரத்தை மூன்று வகைகளில்தான் உற்பத்தி செய்திட முடியும்.
1. நீர் மின்சாரம் - (Hydro Electric Schemes)
2. அனல் மின்சாரம் - (Thermal Electricity)
3. அணுசக்தி மூலம் - (Atomic Energy)
தமிழ்நாட்டில் இம்மூன்று துறைகளிலும் எந்தத்துறையில் எப்படி எப்படியெல்லாம் செய்து அதிகபட்சம் உற்பத்தித் திறனைப் பெருக்க முடியுமோ அதனை அரசு செய்யாமல் இல்லை; செய்து கொண்டே தான் வந்திருக்கிறது.
பழைய ஆட்சியின்போதும் மின்சார வெட்டு கோடைக்காலங்களில் வருவது உண்டு. வந்ததே கிடையாது என்று எவரும் சத்தியம் செய்ய முடியாது. தற்போது தேவைகள் அதிகமாகிப் பெருகியதாலும் பருவமழை தவறியதும் நிலக்கரி வராமையாலும் அப்பற்றாக்குறை மிகவும் ஆழமாக ஆகியுள்ளது.
இதனை வைத்து திமுக ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்காக அரசியல்வாதிகள் இப்போதே தோள் தட்டி, தொடை தட்டி படை கூட்டிப் புறப்பட்டு விட்டனர்!
தமிழ்நாட்டில் ரிங்மாஸ்டர்களாகியுள்ள வலது கம்யூனிஸ்டு கட்சியும் சேர்ந்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போகிறார்களாம்!
அவர்களைக் கேட்கிறோம்: மின் வெட்டு என்பது தமிழ்நாட்டு சர்க்காரின் திறமை இன்மை என்பதால்தான் என்றால் கீழே உள்ள மாநிலங்களில் யார் ஆளுங்கட்சி? அங்கெல்லாம் ஏன் மின்சார வெட்டு ஏற்பட்டது?
அங்கெல்லாம் கிளர்ச்சி மறியல், பேரணி, முதலியவை உண்டா?
தமிழ்நாட்டு மக்களை ஒன்றும் தெரியாத அடிமடையர்கள் என்று இக்கட்சிகள் கருதுகின்றனவா?
கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது! என்றாலும் பற்றாக்குறை, தட்டுப்பாடு என்றால் அதற்குக் காரணம் என்ன?
கிராமப்புறங்கள் மின்சாரமயம் ஆகியதால் தான் என்பது ஒரு விவரம் தெரிந்த பேச்சல்ல. காரணம் மற்ற தேவைகளில் 1 சதவிகிதம் தான் கூடுதலாக அதற்கு, கிராமங்களில் எரியும் தெரு விளக்குகளுக்கு ஆகிறது! எனவே அதனால்தான் இவ்வளவு தட்டுப்பாடு என்பதும் பொருந்தாதவாதமாகும்.
தேவை அதிகம் வளர்ச்சியின் வேகம் அதிகம். நவீன யுகத்தில் மின்சாரம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது!
உலகம் முழுவதும் இப்பிரச்சினை இருக்கிறது. இது இந்திய உபகண்டப் பிரச்சினை மட்டுமல்ல. தமிழ்நாடு அரசு எதைச் செய்யத் தவறியது?
மந்திரத் தாயத்து மூலமோ, புட்டபர்த்தி சாயிபாபா மூலமோ வரவழைப்பதா மின்சாரம்?
இவைகளை அறியாதவர்கள் அல்ல சுற்றுக்கோள் கட்சிகளும் என்றாலும், எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்பதுதான் இவர்கள் தத்துவம் போலும்!
அரசியல் ஆதாயத்திற்காக எதையுமா விற்பது?
தமிழ்நாடே உன் கதி இப்படியா ஆக வேண்டும்? அந்தோ!
------------------- "விடுதலை" தலையங்கம் 22.2.1972
Search This Blog
16.11.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment