Search This Blog

23.11.08

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலின் வெறியாட்டம்


பாசிஸ்டுகளின் வெறியாட்டம்

பாசிஸ்டுகளான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பல் அன்றாடம் அவர்கள் நாள் குறிப்பை எழுதிக் கொண்டேயிருக்கின்றனர். இன்று முஸ்லிம்களுக்கு எதிராக இத்தனை இடங்களில் வன்முறையில் ஈடுபட்டோம்; நாளை கிறிஸ்துவர்களுக்கு எதிராக இந்த இந்த இடங்களில் வன்முறைகளில் ஈடுபடுவோம் - இப்படியாக அவர்கள் அன்றாடம் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும்; அப்படிச் செய்யாவிட்டால் அவர்களுக்குத் தெய்வ குற்றமாக ஆகிவிடும். கோவா தலைநகரமான பனாஜில் பன்னாட்டுத் திரைப்பட விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பத்து நாள்கள் இந்த விழா நடைபெறுகிறது. உலகப் புகழ் பெற்ற ஓவியரான ஓவியர் ஹுசேனின் ஆவணப் படம் ஒன்று நாளை (24.11.2008) திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து சனாதன் சன்ஸ்தா, இந்து ஜனசக்ருதி (எல்லாம் ஆர்.எஸ்.எஸ். பெற்றுப் போட்ட தெருவோரத்துக் குட்டிகள்தாம்) போன்ற இந்துத்வா சக்திகள் நேற்று பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளன.

இதற்குப் பெயர்தான் பாஸிஸ்டுகளின் குணம் என்பது; இன்று நேற்றல்ல - இவர்கள் இது போன்ற கீழ்த்தரமான அருவருப்பு நெடியேறும் இந்த வேலைகளில் ஈடுபட்டுத்தான் வருகின்றனர்.

1996 மே திங்களில் மும்பையில் ஓவியர் ஹூசேனின் ஓவிய அரங்கினை தீயிட்டுக் கொளுத்திச் சாம்பலாக்கிய நாகங்கள் இவர்கள்தான். விலை மதிக்க முடியாத ஒரு கலைஞனின் படைப்பு சாம்பல் குவியலாக ஆக்கப்பட்டபோது சிவசேனையின் தலைவரான பால்தாக்கரே என்ன சொன்னார்?

ஹூசேன் ஹிந்துஸ்தானத்துக்குள் நுழைய முடிகிறதென்றால், நாங்கள் அவர்கள் வீட்டுக்குள் நுழைய முடியாதா? என்று கேட்டாரே, இவ்வளவுக்கும் பால்தாக்கரேயும் ஒரு வகையில் கலைஞர் தான் - கார்ட்டூனிஸ்டு; ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனின் படைப்புத் திறனை மதிக்க வேண்டும் என்ற மதிகூட - மதவெறி நெருப்பின் முன் கருகிப் போய் விடுகிறதே மகா வெட்கக்கேடு?

1998 டிசம்பர் 2-இல் மும்பையிலும் மறுநாள் தலைநகர் டில்லியிலும் தீபாமேத்தாவின் ஃபயர் திரைப்படத்துக்கு எதிராக சங்பரிவார்க் கும்பலும், சிவசேனாவும் கைகோர்த்துக் கொண்டு பெரும் போரையே நடத்தினார்களே - திரையரங்குகள் சூறையாடப் பட்டனவே!

அதுபோலவே பாகிஸ்தானிலிருந்து பிரபல பாடகரான குலாம் அலி கலை நிகழ்ச்சி நடத்தவிருந்த அரங்குக்குள் புகுந்து சிவசேனா காலிகள் அட்டகாசம் செய்தனரே!
1999 செப்டம்பர் 23 உ.பி. தலைநகரான லக்னோவில் நாடகத்தை நடத்திவிட்டு, சஹ்மத் ரங்க்மஞ்ச் நாடகக் குழு திரும்பிக் கொண்டிருந்தபோது, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பல் வழிமறித்துத் தாக்கி கலைஞர்களைப் படுகாயப்படுத்தியது. உ.பி. மாநில பி.ஜே.பி. மேலவை உறுப்பினரான (எம்.எல்.சி.) அஜீத் சிங் என்பவரின் டாடா சுமோ வாகனத்தில் வந்துதான் அந்தக் காவிக் கொலைவெறிக் கும்பல் தாக்குதலைத் தொடுத்தது.
1999 மே நாளன்று கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகே ஆனெகல் என்ற இடத்தில் சமுதாய நாடகக் குழுவினர் நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது பெங்களூர் மாநகராட்சி பா.ஜ.க., உறுப்பினர் எம். நாகராஜ் தலைமையில் காவிக் கும்பலால் கலைஞர்கள் தாக்கப்பட்டனர்.

இந்தியாவில் புகழ்பெற்ற நடிகரான திலீப்குமார் - பாகிஸ்தான் அரசிடம் பெற்ற விருதைத் திருப்பித் தர வேண்டும் என்று கோரி 1999 ஜூலை 13-ஆம் நாள் தில்லியில் லெ-மெரிடின் ஓட்டலுக்குமுன் சிவசேனையினர் தீலிப்குமாரின் கொடும் பாவியைக் கொளுத்தி ஆட்டம் போட்டனர். இவ்வளவுக்கும் வாஜ்பேயி, அத்வானி ஆகியோரின் ஆசீர்வாதம், அனுமதியுடன்தான் அந்த விருதை திலீப்குமார் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகாரங்களைக் கையில் வைத்துக் கொண்டிருந்த அந்தப் பெரிய மனிதர்கள் இந்தியத் தலைநகரிலே நடைபெற்ற இந்தக் கேடுகெட்ட செயலைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை - என்னே வெட்கக்கேடு!

அவுட்லுக் இதழின் பிரபலமான கார்ட்டூனிஸ்ட் இர்பான் ஹுசேன். வகுப்புவாத வெறித்தனங்களை தமக்கே உரித்தான நுட்பத்தோடு கார்ட்டூன் மூலம் தோலுரித்துக் காட்டக் கூடியவர் - பொறுக்குமா காட்டு மனிதர்களுக்கு? குரூரமான முறையில் அந்த மாபெரும் ஓவியனைக் கொலை செய்து சாக்குப் பைக்குள் போட்டுத் தைத்து சாக்கடைக்குள் உருட்டி விட்டு விட்டனர்.

இந்தப் பாசிஸ்டுகளை அடையாளம் காண வேண்டாமா? இந்தக் கூட்டம் ஆட்சியைப் பிடித்து ஆட ஆசைப்படுகிறதே! அனுமதித்தால் - அதைவிட கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையில் சொரியும் காரியம் வேறு உண்டா? சிந்திப்பீர்!

--------------- மயிலாடன் அவர்கள் 23-11-2008 "விடுதலை" இதழில் எழுதிய கட்டுரை

0 comments: