Search This Blog
22.11.08
ஜெயலலிதாவிற்கு திருமாவளவன் பகிரங்க மடல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் அவர்களுக்கு வணக்கம். எளிதில் சந்திக்கவியலாத தலைவர் நீங்கள். கூட்டணியில் இருந்தபோதே இயலவில்லை. இப்போது எப்படி சந்திக்க முடியும்? ஆகவேதான் இந்த மடல்.
மற்ற கட்சித் தலைவர்களிலிருந்து நீங்கள் முற்றிலும் மாறுபட்ட தலைவராக இருக்கிறீர்கள். சொந்தக் கட்சி அலுவலகத்திற்குச் செல்வதையே, பரபரப்பாக்கும் ஒரே பகட்டுத் தலைவர் நீங்கள்தான்.
எதிலும் மாறுபட்ட சிந்தனை! மாறுபட்ட அணுகுமுறை! ஈழத்தமிழர் சிக்கலிலும்கூட அப்படித்தான்! தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவருமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற பாதுகாப்புக் கோரும்போது, நீங்கள் மட்டும் உங்களுக்குப் பாதுகாப்பு கேட்டுக் குரல் எழுப்புகிறீர்கள். எல்லோருமே இந்திய அரசையும் சிங்கள அரசையும் எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பும்போது, நீங்கள் மட்டும் தி.மு.க. அரசை எதிர்த்துப் போராட்டங்களை நடத்துகிறீர்கள்! இருபத்தைந்து ஆண்டுகளாக மின்சாரமே இல்லாமல் இருட்டில் உழலும் ஈழத்தமிழர்களுக்காக, இங்கே எல்லோரும் வெளிச்சம் கேட்டு வெகுண்டெழும்போது, நீங்கள் மட்டும், இங்கே நிலவும் சில மணி நேர மின்வெட்டுக்காக கொதித்து எழுகிறீர்கள்! அரசியல் முரண்பாடுகளையெல்லாம் மறந்து, இனமான உணர்வுடன் இணைந்து மற்ற தலைவர்களெல்லாம் மழையிலே நனைந்து மனிதச் சங்கிலியாய் கைகோர்த்து நிற்கும்போது, நீங்கள் மட்டும் தேர்தல் கூட்டணிக்காக யாரோடு கைகோர்க்கலாமென்று துடியாய்த் துடிக்கிறீர்கள்!
புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில், ஈழத்தமிழினத்தையே அழித்தொழிக்கும் இந்திய - சிங்கள அரசுகளின் கூட்டணியை உடைக்க, ஒட்டுமொத்த தலைவர்களும் ஒன்றுபட்டு முயற்சிக்கும்போது, நீங்கள் மட்டும் தி.மு.க. கூட்டணியை உடைக்கவே படாதபாடு படுகிறீர்கள். சிங்கள இனவெறியர்களால் பட்டினி கிடந்து சாகும் ஈழத்தமிழர்களுக்காக, இங்குள்ள தலைவர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் தம்மால் இயன்ற நிதியைத் தாயுள்ளத்தோடு அள்ளிக் கொடுக்கும்போது, நீங்கள் மட்டும் இரக்கமே இல்லாமல் இறுக்கமாயிருக்கிறீர்கள்! கடுமையான விமர்சனங்களால் கூட்டணி உறவே முறிந்துபோன நிலையிலும், பா.ம.க.வும், இந்திய அரசோடு ஏற்பட்ட முரண்பாடுகளால் கூட்டணியிலிருந்து வெளியேறிய இடதுசாரிகளும்கூட, ஈழத்தமிழரைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தில், முதல்வரின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை அழுத்தமாக வைத்து வலுவாகக் குரலெழுப்பினர். ஆனால், நீங்களோ அந்தக் கூட்டத்திற்கு உங்கள் கட்சியிலிருந்து யாரையுமே அனுப்பாமல் புறக்கணித்துவிட்டீர்கள்.
ஒரு பீகாரியை மும்பையிலே கொன்று விட்டார்கள் என்பதற்காக, பீகார் மாநில கட்சித் தலைவர்கள் அனைவருமே எதிர் எதிர் துருவங்களிலிருந்த நிலைமாறி, ஒன்றுபட்டு நிற்கும்போது, நீங்கள் மட்டும் ஈழத்தமிழினத்தையே அழிக்கும் இனப்படுகொலையைக் கண்டும்கூட, தி.மு.க.வுடனான முரண்பாட்டையே முன்னிறுத்தி, தமிழின ஒற்றுமையைச் சிதைப்பதிலேயே குறியாக இருக்கிறீர்கள்! விடுதலைப்புலிகளால் தங்களின் உயிருக்கு ஆபத்து என்று அடிக்கடி சொல்லுகிறீர்கள்! `கருப்புப் பூனை' பாதுகாப்புக்காகவே விடுதலைப் புலிகளை எதிர்க்கிறீர்கள்!
இருந்தாலும், விடுதலைப்புலிகளைச் சாக்குவைத்து அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறீர்கள். விடுதலைப்புலிகளை தி.மு.க. ஆதரிப்பதாகப் பழி சுமத்தி, காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்கும் சிக்கலுண்டாக்கப் பார்க்கிறீர்கள்! `திருமாவளவனைக் கைது செய்' என்று வற்புறுத்தி, விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தி.மு.க.வுக்கும் இடைவெளி உண்டாக்கவும் பார்க்கிறீர்கள்! ஈழத் தமிழன் பூண்டோடு அழிந்தாலும், சிங்களவனை எதிர்ப்பதைக் காட்டிலும் தி.மு.க.வை எதிர்ப்பதுதான் உங்கள் அரசியல் என்பதை நிலைநாட்டி வருகிறீர்கள்! விடுதலைப் புலிகளை எம்.ஜி.ஆர். ஆதரித்தார்! பொருளுதவிகளைச் செய்தார்!
நீங்களும் ஆதரித்தீர்கள்! இது நாடறிந்த உண்மை! ஆனால், உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! அன்றைய நாளிலிருந்து இன்றைய நாள்வரை எப்போதாவது தி.மு.க. விடுதலைப் புலிகளை ஆதரித்ததுண்டா? தொடக்கத்திலிருந்து `டெலோ' இயக்கத்தையும், பெரியவர் அமிர்தலிங்கம் போன்றவர்களையும் தானே தி.மு.க. ஆதரித்து வந்தது! அன்றும் இன்றும் தி.மு.க. விடுதலைப்புலிகளைக் கடுமையாக விமர்சிக்கிறது என்பதுதானே உண்மை! ஆனாலும் விடுதலைப்புலிகளைக் காரணம் காட்டி, சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. அதையே இப்போதும் செய்யவேண்டுமென்பதுதானே உங்கள் ஆசை!
உங்கள் ஆசை நிறைவேற, ஈழத்தமிழனின் அழிவில்தான் அரசியல் செய்ய வேண்டுமா? தமிழர்களின் தயவால், தலைவராக வலம் வரும் நீங்கள், தமிழர்களின் வாக்குகளால் ஆட்சியதிகாரத்தைச் சுவைத்த நீங்கள், தமிழர்களைக்கொண்டே மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் நீங்கள், அதே தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி, இளிச்சவாயர்களாக்கி, தமிழினத்துக்கெதிராகவே செயல்படும் போக்கு நியாயம்தானா? இது தமிழினத்துக்கு எதிரான துரோகமென்று ஒரு நொடிப் பொழுதாவது உங்கள் நெஞ்சு உறுத்தவில்லையா? திடீரென்றா புலிகள் ஆயுதமெடுத்தார்கள்! காலம் காலமாய் சிங்களவன் செய்துவரும் கொடுமைகளுக்கு ஒரு வரம்பு உண்டா? உலகமே அறிந்திருக்கும் இந்தக் கொடூரம் உங்களுக்குத் தெரியாதா? எந்த அடிப்படையில் சிங்களவனை ஆதரிக்கும் வகையில் உங்களால் செயல்பட முடிகிறது? `செஞ்சோலை' என்னும் பள்ளியில் குண்டு போட்டு சின்னஞ்சிறு பிஞ்சுகளைக் கொன்றழித்த கொடுமையைக் கண்ட பிறகுமா, நீங்கள் சிங்களவனின் போக்கை ஆதரிக்கிறீர்கள்?
இங்கே தலைவர்கள் எல்லாம் தாயுள்ளத்தோடு பதறும்போது, நீங்கள் மட்டும் எப்படி இப்படி?
நீங்கள் இதிலும் மாறுபட்டவர்தான்! ஆனால், மாறாதவர்!
தோழமை கலந்த வேதனையுடன்... திருமாவளவன்
--------------நன்றி: "குமுதம்" 26-11-2008
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment