Search This Blog

5.11.08

மதுவிலக்குப் பற்றி அம்பேத்கர்





மதுவிலக்குக் கொள்கையைப் பெரும் பைத்தியக்காரத்தனம் என்றுதான் சொல்லவேண்டும். அதை மேலும் விரிவுபடுத்துவதை நிறுத்துவதுடன், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். எதை நிறுத்துவதற்காக அதைக் கொண்டு வந்தோமோ அதைவிட அதிகக் கேடுகள் விளைந்துள்ளன. சாராயம் காய்ச்சுவது குடிசைத் தொழிலாகிவிட்டது, முன்பெல்லாம் ஆண்கள்தான் சாராயம் குடித்துவந்தனர். இப்பொழுது பெண்களும் சிறுவர்களும் சாராயம் குடிக்கிறார்கள். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னிலையில்தான் ஒவ்வொரு வீட்டிலும் சாராயம் காய்ச்சப்படுகிறது. குற்றங்கள் பெருகியதோடுஅல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்களின் மிகப்பெரும் ஒழுக்கக்கேட்டிற்கும் வகை செய்துள்ளது.

நிதி ஆதாரங்களை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கில் பார்த்தால் இது பெரும் இழப்புதான். 1945-46இல் ‘ஏ’ பிரிவு மாகாணங்களில் ஆயத்தீர்வை மூலம் கிடைத்த வருவாய் 51.67 கோடி ரூபாய். 1950-51ஆம் ஆண்டுகளில் இது 25.23 கோடி ரூபாயாக இருந்தது. 1951-52ல் பட்ஜெட் மதிப்பீடு 24.95 கோடி ரூபாயாக உள்ளது. 1945-46 ஆண்டுக்கான தொகையில் பிரிவினை செய்யப்படாத பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் தொகையும் அடங்கியுள்ளது. இருப்பினும், மது விலக்கினால் ‘ஏ’ பிரிவு மாகாணங்களின் இழப்பு ஆண்டிற்கு 25 கோடி ரூபாயாக உள்ளது எனக் கூறலாம். மதுவிலக்கு இல்லையென்ற நிலையில் ஆயத்தீர்வை அதிகரிக்கும் வாய்ப்பு இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

1946-47ஆம் ஆண்டுகளில் பம்பாயிலிருந்து ஆயத்தீர்வை மூலம் கிடைத்த வருமானம் 9.74 கோடியாக இருந்தது. 1950-51 ஆம் ஆண்டுகளில் அது 1.20 கோடியாக இருந்தது. பட்ஜெட் மதிப்பீட்டின் படி 1951-52 களில் அது 1.05 கோடியாக உள்ளது. தீர்வை மூலம் கிடைக்கும் வருமானத்தின் இழப்பு ஆண்டிற்கு 8.7 கோடியாகிறது. 1945-46ஆம் ஆண்டுகளில் ஆயத்தீர்வை மூலம் மெட்ராசுக்குக் கிடைத்த வருமானம் 16.80 கோடியாக இருந்தது. 1950-51இல் அது 0.50 கோடியாகக் குறைந்தது. 1951-52க்கான பட்ஜெட் மதிப்பீடு 0.36 கோடியாகும். மதுவிலக்கை அமலாக்கியதால் ஆயத் தீர்வை வருமானத்தில் ஏற்பட்ட இழப்பு 0.16 கோடியாகும்.

நடுநிலைமையிலிருந்து பார்த்தால் மதுவிலக்கை அமுல்படுத்துவதில் எந்த நியாயமும் கிடையாது. மதுவிலக்கை அமுல்படுத்தும் செலவு பொதுமக்கள் தலையில் கட்டப்படுகிறது. ஒருபோதும் திருத்தமுடியாத ஒன்றோ இரண்டோ இலட்சம் குடிகாரர்களைத் திருத்துவதற்காகப் பொதுமக்கள் ஏன் செலவைச் சுமக்க வேண்டும்? வீட்டு வசதி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்று பல துறைகளுக்கு நிதி ஆதாரம் தேவைப்படும்போது ஏன் பொது மக்கள் மதுவிலக்குச் செலவுகளை ஏற்கவேண்டும்? ஏன் அதை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது? யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், குடிகாரர்களுக்கா அல்லது பட்டினி கிடப்பவர்களுக்கா?

இந்த நியாயமான கேள்விகளுக்குப் பதில் கிடையாது, ஆணவமும் மூர்க்கத்தனமான பிடிவாதமும்தான் இதற்கெல்லாம் பதில். என்ன நேர்ந்தாலும் சரி, மதுவிலக்குக் கொள்கை திரும்பப் பெற வேண்டும். பொதுமக்கள் பணம் விரயமாவதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். இந்த நிதி ஆதாரங்கள் பொதுநல வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
மதுவிலக்குப் பற்றி அம்பேத்கர்.

-------------------அம்பேத்கர் நூல்கள் - தொகுதி 35 - பக். 511-12

-------------நன்றி: "கருஞ்சட்டைத் தமிழர்" - அக்டோபர் 2008

0 comments: